!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2020/10 - 2020/11 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, October 30, 2020

நலவாழ்வுக்கு யோக முத்திரைகள் | Mudras (hand gestures) for Wellbeing

நம் மரபுவழி யோக முத்திரைகள், பல நோய்களை, வலிகளை, சிக்கல்களைத் தீர்க்க வல்லவை. இடர்கள் வராமலும் காக்க வல்லவை. உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும்  வலிமை சேர்க்கும் முத்திரைகள் உண்டு. தலைவலி தீர, மாதவிடாய்க் காலத்து வலி நீங்க, மூட்டுவலி அகல, இடுப்பு வலி விலக, இன்னும் கண் நலத்துக்கு, காதுக்கு, பல்லுக்கு, புருவத்துக்கு, தோலுக்கு, தொண்டைக்கு, சக்திக்கு, நினைவாற்றலுக்கு, நுரையீரலுக்கு நலம் புரியும் முத்திரைகள் உண்டு. மேலும் ஒவ்வாமை, மூச்சிரைப்பு, நெஞ்சுக்கட்டு ஆகியவை சரியாகவும் முத்திரைகள் உண்டு. 

பணம் வர வேண்டுமா? அதற்கும் ஒரு முத்திரை உண்டு. தலைமுடி உதிராமல் இருக்கவும் மேற்கொண்டு நன்றாக வளரவும் முத்திரை உண்டு. இவை அனைத்தையும் நமக்குச் செய்து காட்டுகிறார், நிர்மலா ராகவன். 

மலேசியாவில் வாழும் எழுத்தாளரும் பரத நாட்டியக் கலைஞருமான இவர், இந்த முத்திரைகளைப் பல்லாண்டுகளாகப் பயின்று பலன் பெற்று வருகிறார். இவரிடமிருந்து கற்றுக்கொண்ட பலருக்கும் நல்ல பலன்கள் கிடைத்துள்ளன. இந்த அரிய முத்திரைகளை நம் நேயர்களுக்காக நிர்மலா ராகவன் செய்து காட்டுகிறார். இவற்றைப் பார்த்து நீங்களும் பயன் பெறுங்கள். உங்களுக்கு எத்தகைய பயன்கள் கிடைத்தன என்று உங்கள் அனுபவத்தை, பின்னூட்டத்தில் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

உச்சியிலே உச்சி வெயிலிலே

உச்சியிலே உச்சி வெயிலிலே இந்த ஓணான் எட்டிப் பார்ப்பது என்ன?

சுழலும் இலை | Rotating leaf

இன்று காலையில் இதைக் கண்டேன். மரத்திலிருந்து ஏதோ ஒரு சிலந்தியின் இழையில் ஒற்றை இலை சுழன்றுகொண்டிருந்தது. நம் வாழ்க்கையும் இப்படித்தானே!

Thursday, October 29, 2020

கொக்கு, குருவி, அணில்

இரட்டைவால் குருவி ஒன்று. அதன் முன்னே சில உண்ணிக் கொக்குகள். நடுவே அணில்பிள்ளை ஒன்று. இவை உலாவும் இடத்தில் நான். இதிலிருந்து நான் உங்களுக்கு என்ன செய்தி சொல்ல முடியும், இயல்பாக இருங்கள் என்பதைத் தவிர.

இங்கிலாந்தில் இலையுதிர்காலம் | Autumn season in United Kingdom

இங்கிலாந்தில் வசிக்கும் நண்பர் சக்தி சக்திதாசன், என் வேண்டுகோளை ஏற்று, இங்கிலாந்தின் இலையுதிர்காலக் காட்சிகளை நம் அலைவரிசைக்காகப் படம் எடுத்து அனுப்பியுள்ளார். அவருடைய இனிய வர்ணனை, நாம் அதை நேரில் காண்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இருந்த இடத்திலிருந்தே இங்கிலாந்தின் வனப்பைக் காண்போம், வாருங்கள்.

Wednesday, October 28, 2020

Factcheck: இந்து சமய அறநிலையத் துறையின் வலைத்தளத்தில் Church என்ற சொல் உள்ளதா?

இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் முத்தாரம்மன் கோவில், மாரியம்மன் கோவில் ஆகியவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பாக Mutharamman Church, Mariamman Church என வருகின்றது. இது மதமாற்ற முயற்சி, இந்து சமய அடையாளங்களை அபகரிக்கும் முயற்சி என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் உண்மைத் தன்மை என்ன என்பதை இந்தப் பதிவில் சான்றுகளுடன் பாருங்கள்.

மீள்பயன்பாடு - சுதா மாதவன் குறிப்புகள்

இதோ தீபாவளி நெருங்கிவிட்டது. கம்பி மத்தாப்பைக் கொளுத்திய பிறகு அந்தக் கம்பியைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா? உங்கள் எரிவாயு உருளையை (சிலிண்டரை) என்றைக்குப் பயன்படுத்தத் தொடங்கினீர்கள்? அது எவ்வளவு நாளைக்கு வருகிறது என்று உங்களால் துல்லியமாகச் சொல்ல முடியுமா? இன்னும் பல பயனுள்ள குறிப்புகளை நமக்கு வழங்குகிறார், சுதா மாதவன்.

Tuesday, October 27, 2020

ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெறுவது எப்படி? - 2

குடியுரிமை பெற மிக எளிய வழி எது? தங்கக் கடவுச்சீட்டு என்றால் என்ன? இரட்டைக் குடியுரிமை பெற முடியுமா? ஐரோப்பாவில் பிறந்தாலே குடியுரிமை உண்டா? வீடு வாங்குவதன் மூலமாகக் குடியுரிமை பெற முடியுமா?  ஊழியர் ஒருவர், தன்னைச் சார்ந்துள்ளோர் என யார் யாரை அழைக்கலாம்? யாரை அழைக்க இயலாது? ஐரோப்பாவில் எவ்வளவு வருமான வரி கட்ட வேண்டும்? அதிகக் குழந்தைகள் பெற்றவர்களுக்கு அதிகப் பயன்கள் உள்ளன எனில், மக்கள் ஏன் அதிகக் குழந்தைகள் பெறுவதில்லை? இப்படிப் பல கேள்விகளுக்குப் பெல்ஜியத்திலிருந்து மாதவன் இளங்கோ விரிவாகப் பதில் அளித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெறுவது தொடர்பான உரையாடலின் இந்த இரண்டாம் பகுதியைப் பாருங்கள். 

ஐரோப்பியக் குடியுரிமை தொடர்பாக உங்களுக்கு ஏதும் கேள்விகள் இருந்தால், பின்னூட்டத்தில் எழுப்புங்கள். மாதவன் இளங்கோ அவற்றுக்குப் பதில் அளிப்பார்.

Monday, October 26, 2020

பெல்ஜியத்தில் ஒரு தாரகை, அம்ருத சாய் | Amrita Sai, a star in Belgium

பெல்ஜியத்தில் வாழும் எழுத்தாளர் மாதவன் இளங்கோ - தேவிப்பிரியா தம்பதியரின் மகன் அம்ருத சாய், பல துறைகளில் ஒரு தாரகையாக உருவாகி வருகிறார். 11 வயதுடைய இவர், தமிழ், ஆங்கிலத்துடன் டச்சு மொழியிலும் வல்லவர். அம்ருத பாலி என்ற கற்பனை உலகத்தைப் படைத்து, அதற்கு அரசனாக விளங்குகிறார். இதன் அடிப்படையில், ஆறு பாகங்கள் உள்ள ஒரு பெரிய நாவலை ஆங்கிலத்தில் எழுதி வருகிறார். ஒவ்வொரு நாளும் 100 பக்கங்கள் படித்து வருகிறார். இரண்டு யூடியூப் சானல்களை நடத்தி வருகிறார். கீபோர்டு, பியானோ, மேற்கத்திய இசை ஆகியவற்றைப் பயின்று வருகிறார். கேமிங் விளையாட்டுகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். நிரலாக்க மொழிகளையும் கற்று வருகிறார். இவ்வளவு துறைகளைக் கற்கும் போதும், ஒவ்வொன்றுக்கும் நேரம் ஒதுக்கி, சிறப்பாக மேலாண்மை செய்து வருகிறார். தமிழுக்கும் இந்தியாவுக்கும் பெல்ஜியத்துக்கும் மட்டுமில்லை, உலகிற்கே ஒரு தாரகையாக இவர் உருவாகி வருகிறார். இந்த நேர்காணலில் அம்ருத சாய், தனது பல்வேறு ஆக்கங்களையும் முயற்சிகளையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மழலைக் குரலில் விரியும் அவரது புதிய உலகத்தை இங்கே கண்டு மகிழுங்கள்.

Saturday, October 24, 2020

கொலு 2020: ஐஷ்வர்யா அகத்திலிருந்து | Kolu from Aishwarya's residence

சென்னை, மேற்கு மாம்பலத்தில் வசிக்கும், ஐந்தாம் வகுப்பு மாணவி ஐஷ்வர்யா, தங்கள் வீட்டுக் கொலுவை நமக்கு நயமுற, அழகுற எடுத்துரைக்கிறார்.  பொம்மைகளை நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியது மட்டுமின்றி, சில பொம்மைகளைத் தாமே உருவாக்கியும் இருக்கிறார். பெருமாள் ஊர்வலம், தசாவதாரம், கல்யாணம், செட்டியார், ஐயப்பன், வீடு, பூங்கா.. என அணி அணியாகப் பொம்மைகள், இந்தக் கொலுவை அலங்கரிக்கின்றன. 30 ஆண்டுகளுக்கு முந்தைய பொம்மைகளையும் பாரம்பரியமாக வைத்து வருகிறார்கள். இந்தப் பதிவின் இறுதியில் இனிய பாடலையும் பாடி மகிழ்விக்கிறார். விழிக்கும் செவிக்கும் விருந்து படைக்கும் குமாரி ஐஷ்வர்யாவும் அவர் குடும்பத்தினரும், அன்னையின் அருளால் சகல ஐஸ்வர்யங்களையும் பெறுக! பொன்மழை எந்நாளும் பொழிக!

மழை தரிசனம் | Snippets of Rain

இன்றைய மழையின் எழில் மிளிரும் தரிசனங்கள்!

Friday, October 23, 2020

சகஸ்ரா அஜய் பாடல் | A song by Sagasra Ajai

2020 நவராத்திரியை முன்னிட்டு, சுதா மாதவன் அவர்களின் பெயர்த்தி சகஸ்ரா அஜய் குரலில் இந்த இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள். இவரது ஆற்றல் மேலும் வளர்ந்து, மேன்மைகள் சிறக்க, தேவி பராசக்தி அருள் புரிக.

கொலு 2020 - சுதா மாதவன் வீட்டிலிருந்து | Kolu 2020 from Sudha Madhavan's...

சென்னையில் வசிக்கும் சுதா மாதவன் தம் வீட்டில் வைத்துள்ள கொலுவை நமக்காகப் பதிவு செய்து அனுப்பியுள்ளார். ஒவ்வொரு பொம்மையின் பின்புலத்தையும் வயதையும் பெருமைகளையும் அவர் எடுத்துரைக்கும் விதம் அழகு. அதிலும் 32 ஆண்டுகள் வயதுடைய பொம்மைகளைப் பார்க்கையில், அந்தக் காலத்தையே கண்முன் காண்கின்றோம். மேலும், மாற்றுத் திறனாளிகளாக உள்ள குழந்தைகள் உருவாக்கிய கலைப் படைப்பும் நம்மை ஈர்க்கின்றது. இந்த அழகிய, எளிய, சீரிய கொலுவைக் கண்டு மகிழுங்கள்.

உங்கள் வீட்டுக் கொலுவையும் இவ்வாறு பதிவு செய்து அனுப்புங்கள். நம் யூடியூப் அலைவரிசையின் வழியே உலகின் முன் படைப்போம்.

Thursday, October 22, 2020

கதை பிறந்த கதை - 2: நிர்மலா ராகவன் நேர்காணல்

மலேசிய எழுத்தாளர் நிர்மலா ராகவன், தமது எழுத்துலக அனுபவங்களைத் தொடர்ந்து பகிர்கின்றார். கதைகளுக்கான கரு எங்கிருந்து கிடைக்கிறது? கதைகளில் உண்மையும் கற்பனையும் எவ்வாறு கலக்கின்றன? எந்த விகிதத்தில் கலக்கின்றன? எவ்வளவு காலம் கழித்து ஒரு சம்பவம் கதையாகிறது? உள்ளிட்ட பலவற்றைச் சில எடுத்துக்காட்டுகளுடன் நமக்கு விளக்குகிறார்.

கருவில் குழந்தை இருக்கும்போது, அதன் தாயின் மீது விதவிதமான ஆண்கள் பலரும் கட்டைக் குரலில் பேசியபடி வந்து, படுத்து அமுக்குகிறார்கள். கருவில் இருக்கும் குழந்தைக்கும் உடலெங்கும் வலிக்கிறது. வலி தாங்காமல் அது புரண்டு படுக்கிறது. தாயும் குழந்தையைத் திட்டுகிறாள். அந்தக் குழந்தை, எதிர்காலத்தில் என்னவாக ஆகிறது? வித்தியாசமான கருவில் அமைந்த தனது கதைகள் குறித்து நிர்மலா ராகவன் விவரிக்கிறார். 

மேலும், யோக முத்திரைகள் சிலவற்றை நமக்காகப் பிடித்துக் காட்டியுள்ளார். மயக்கமா? குழப்பமா? மனதிலே நடுக்கமா? இந்த யோக முத்திரையைப் பிடித்தால் போதும். உங்கள் குழப்பம் தீர்ந்து, தெளிவு கிடைக்கும். இது என்ன முத்திரை என்று தெரிந்துகொள்ள, இந்த நேர்காணலைப் பாருங்கள்.

பெருமுகிலும் கனமழையும் | Huge clouds and Heavy rain

சென்னை, தாம்பரத்தில் இப்போது மிகப் பெரிய அளவில், விரிவில், அடர்த்தியில் கருமேகங்கள் கூடியுள்ளன. இதைத் தொடர்ந்து இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்தக் குளிர்ச்சியான காட்சி, இதோ சுடச்சுட.

Wednesday, October 21, 2020

ஆங்கிலத்தில் எழுதுவது ஏன்? - ஜெயந்தி சங்கர் நேர்காணல்

இனி நான் தமிழில் எழுதப் போவதில்லை. ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப் போகிறேன் என அறிவித்த சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் Dangling Gandhi என்ற நூல் 2019இல் வெளியானது. அது 2020ஆம் ஆண்டுக்கான சர்வதேச புத்தக விருதினை அமெரிக்காவில் வென்றதோடு (International book award by American Book Fest) மேலும் பல்வேறு சர்வதேச விருதுகளையும் (Literary Titan Silver book award by USA based awarding body Literary Titan) வென்றது. முதல் புத்தகத்திலேயே சர்வதேச கவனத்தை ஈர்த்த ஜெயந்தி சங்கரின் Misplaced Heads என்ற ஆங்கில நாவல், 2020ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. 

இந்த நேர்காணலில் ஜெயந்தி சங்கர், ஆங்கிலத்தில் எழுதுவதற்கான காரணம், தமிழ் எழுத்துலகிற்கும் ஆங்கில எழுத்துலகிற்குமான வேறுபாடு, இந்த இரண்டு மொழிகள் தரும் வசதி, சுதந்திரம், இந்த மொழிகளில் உள்ள புத்தகச் சந்தை, வாசகப் பரப்பு உள்ளிட்ட பலவற்றையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். 

விருதுகளில் உள்ள வெளிப்படைத்தன்மை, புதிய வாசகர்கள் ஆங்கிலத்தில் அதிகம் இருப்பது, ஆங்கிலத்தின் முன்னணிப் பதிப்பாளர்கள், ஆங்கில எழுத்துலகில் உள்ள இலக்கிய முகவர்கள் (Literary Agents) எனப் பலவற்றையும் நமக்கு அறியத் தருகிறார். தமிழிலும் மிகச் சிறப்பாக எழுதுகிறார்கள் எனக் குறிப்பிடும் இவர், லக்ஷ்மி சரவணக்குமாரின் சிறுகதைகளைச் சிலாகிக்கிறார்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த நேர்காணலைப் பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

Tuesday, October 20, 2020

புடலைப் பூ | Snake gourd flower | Trichosanthes cucumerina

புடலைப் பூவை இன்றுதான் முதன்முறையாகப் பார்த்தேன். இது புதுவித வடிவில், அழகில் இருப்பதைக் கவனித்தீர்களா?

Monday, October 19, 2020

ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெறுவது எப்படி?

ஐரோப்பிய நாடுகளில் சமூகப் பாதுகாப்பு என்ற அமைப்பு (Social Security System) உள்ளது. அங்கே குடியுரிமை பெற்றால், உயர்தரத்தில் அமைந்த கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைகள் பலவற்றையும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரும் செலவே இல்லாமல் பெறலாம். குழந்தை பிறந்தால் தாய்க்கு உதவித்தொகை, படிக்கும் மாணவருக்கு உதவித்தொகை, வேலையிழந்தால் உதவித்தொகை, திறன்வளர்ப்புப் பயிற்சிகள் எனப் பலவற்றையும் அரசே வழங்குகிறது. தன் குடிமக்கள் அனைவருக்கும் சமவாய்ப்பும் வாழ்க்கைத் தரமும் இருக்க வேண்டும் என்பதில் அரசுகள் முனைப்புடன் இருக்கின்றன. இத்தகைய ஒரு நாட்டில் வாழும் வாய்ப்பினை நாமும் பெற முடியும். அந்த நாடுகளில் பணியாற்றுவது எப்படி? எந்தெந்தத் துறைகளில் வேலைவாய்ப்பு இருக்கிறது? அங்கே குடியுரிமை பெறுவது எப்படி? அதற்கு என்னென்ன வழிகள் உள்ளன? குடியுரிமை பெறுவதால் நமக்குக் கிடைக்கும் பயன்கள் என்னென்ன? இவை அனைத்தையும் நமக்கு விளக்குகிறார், மாதவன் இளங்கோ.

பெல்ஜியத்தில் குடியுரிமை பெற்று வாழும் மாதவன் இளங்கோ, தலைமைப்பண்புப் பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார். இவர், வல்லமை மின்னிதழின் வல்லமையாளர் விருது பெற்றவர். இவருடைய சிறுகதையை வெங்கட் சாமிநாதன் உள்ளிட்ட பெரியோர்கள் பாராட்டியுள்ளனர். அம்மாவின் தேன்குழல் என்ற தலைப்பிலான இவரது சிறுகதைத் தொகுப்பினை அகநாழிகை வெளியிட்டுள்ளது. இந்த மிக முக்கியமான நேர்காணலைப் பாருங்கள். 

Sunday, October 18, 2020

நம்ம வீட்டுக் கொலு 2020 | Kolu 2020

நம்ம வீட்டுக் கொலுவை உங்களுக்கு நித்திலா அறிமுகப்படுத்தி, சிறு பாடலும் பாடுகிறார். வாருங்கள், படிப் படியாய் முன்னேறுவோம்.

Saturday, October 17, 2020

கொலுக் கலசத்தில் எழுந்தருளும் அம்பிகை | Ambal Avahanam on Kolu Kalasam

நவராத்திரியின்போது, கொலுப் படிக்கட்டில் பொம்மைகளை வைப்பதற்கு முன், முதலில் கலசம் வைத்து, அதில் அம்பிகையை எழுந்தருளச் செய்வது மரபு. நம் இல்லத்தில் எழுந்தருளி, அருள்பாலிக்கும் அம்பிகையின் திருக்கோலம் இங்கே.



 

கொலுப் படி கட்டுவது எப்படி? | How to assemble Kolu steps? | Kolu Padi

How to assemble Kolu stand? Here is a tutorial.



கொலுப் படிக்கட்டு (செட்டு) வாங்கிய பலருக்கும் அதை எப்படிக் கட்டுவது என்று ஒரு குழப்பம் இருக்கலாம். இதோ ஒரு செய்முறை விளக்கம்.



 

Friday, October 16, 2020

என் நண்பர் குஷ்வந்த் சிங் - பகுதி 2 | My Friend Khushwant Singh - Part 2

குஷ்வந்த் சிங் ஜோக்ஸ் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வந்துள்ளது. மிகுந்த நகைச்சுவை உணர்வு உள்ள குஷ்வந்த் சிங் ரசித்த ஜோக்ஸ் பல உண்டு. அதில் சர்தார்ஜி ஜோக் ஒன்றும் உண்டு.



 ஒரு பெண் தன் உடைகளை எல்லாம் கழற்றி எறிந்துவிட்டு, என்ன வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்கிறார். சர்தார்ஜி உடனே அவளது காரை எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறார். இதைக் கேட்ட அவரது நண்பரான இன்னொரு சர்தார்ஜி, நீ செய்தது சரிதான். அவளது உடைகள் உனக்குச் சரியாக இருக்காதே என்றாராம். கெட்டிக்கார சர்தார்ஜிகள்.



 நேற்று இரவு முழுவதும் உங்களையே நினைத்துக்கொண்டிருந்தேன் எனக் குஷ்வந்த் சிங், நிர்மலாவிடம் சொன்னது ஏன்? குஷ்வந்த் சிங்கின் Indecent habit எது? நிர்மலாவைப் பற்றிக் குஷ்வந்த் சிங் என்ன எழுதினார்? தில்லியில் குஷ்வந்த் சிங்கின் வீட்டுக்கு நிர்மலா சென்றபோது, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் வி.எஸ்.நைபால் அங்கே இருந்தார். அவர் நிர்மலாவிடம் கேட்ட கேள்வி என்ன? இவற்றுக்கான விடைகளை அறிய, இந்த நேர்காணலைப் பாருங்கள்.



 

Thursday, October 15, 2020

அழகு மலர்கள் - 2 | Beautiful Flowers - 2

இன்று காலையில் நான் கண்ட மலர்கள்.



 

Wednesday, October 14, 2020

எருமை மீது கொக்கு உலா | A free ride on buffalo | Cattle Egret| Bubulcus ...

உண்ணிக் கொக்குகள், நீண்டு வளைந்த கொம்புகள் கொண்ட எருமையின் மீது உல்லாசச் சவாரி செய்துவிட்டு, வெண்சிறகை விரித்துப் பறக்கின்றன.



 

Sunset at Chennai - 19

This is a special Sunset with Red-vented Bulbuls and Dragonflies.



 இன்றைய சூரிய அஸ்தமனம், ஓர் அற்புத அனுபவம். பளிச்சென ஓர் ஓவியம்போல் சூரியன் எழிற்கோலம் கொண்டிருந்தது. அந்திச் செவ்வானத்தில் சின்னான் குருவிகளும் தும்பிகளும் குறுக்கும் நெடுக்கும் பறப்பதைக் கண்ணாரக் காணலாம். அவற்றின் பாடல்களைக் காதாரக் கேட்கலாம்.



 

5 உண்ணிக் கொக்குகள் | Unni kokku | Cattle Egret| Bubulcus ibis

உச்சி வெயிலில் 5 உண்ணிக் கொக்குகள்!



 

Butterfly - 34 | வண்ணத்துப்பூச்சி - 34

The flutter of a butterfly's wing can ultimately cause a typhoon halfway around the world.



வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பு, உலகின் வேறு ஒரு புள்ளியில் ஒரு புயலை உருவாக்கலாம்.



 

Tuesday, October 13, 2020

என் நண்பர் குஷ்வந்த் சிங் - நிர்மலா ராகவன் | My Friend Khushwant Singh -...

மலேசியாவுக்கு வந்த எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கை நிர்மலா ராகவன் ஒரு நேர்காணலுக்காகச் சந்தித்தார். ஆனால், அதற்கு முன்னதாகக் குஷ்வந்த் சிங், நிர்மலா ராகவனை ஒரு மணிநேரம் நேர்காணல் செய்தார். இந்தியர்களுக்குத் தங்கள் தாய்மொழியை விட, ஆங்கிலமே நன்றாக வரும் எனக் குஷ்வந்த் சிங் மேடையில் சொல்ல, நிர்மலா ராகவனும் மேடைக்குச் சென்று, நானும் இந்தியாவிலிருந்து வந்தவள்தான். எனக்கு ஆங்கிலத்தை விட, தமிழே நன்றாக வரும் எனக் கூறினார். மறு பிறவி இல்லை என்று குஷ்வந்த் சிங் சொல்ல,
அப்படியானால் ஒருவர் ஏழையாகவும் இன்னொருவர் பணக்காரராகவும் பிறப்பது எப்படி? கர்ம வினைதானே அதற்குக் காரணம்? எனக் கேட்டுள்ளார்.



எழுத்தாளர் குஷ்வந்த் சிங் உடனான தம் உரையாடல்கள், அவருடன் மேற்கொண்ட பயணம், குஷ்வந்த் சிங் பகிர்ந்துகொண்ட பல்வேறு சுவாரசியமான அனுபவங்கள் ஆகியவற்றை நிர்மலா ராகவன், இந்த அமர்வில் நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.



 


விழுந்தாலும் எழு!

Rise again, even you fall!



விழுவது இயல்பு; புழுதியைத் தட்டிவிட்டு எழுவது உயர்வு!



 

Monday, October 12, 2020

மீள்பயன்பாடு - சுதா மாதவன் நேர்காணல் | Sudha Madhavan interview on Reuse

அண்மையில் மீள்பயன்பாடு குறித்த என் தாயாரின் நேர்காணலை வெளியிட்டிருந்தேன். அதைக் கண்ணுற்ற திருமதி சுதா மாதவன், தம் தாயாரும் இப்படிப் பல உத்திகளைப் பின்பற்றியதாகக் கூறினார். எந்தெந்தப் பொருள்களை எப்படியெல்லாம் மீண்டும் பயன்படுத்தலாம்? என்று தமது வாழ்க்கையிலிருந்தே சில எடுத்துக்காட்டுகளை முன்வைத்துள்ளார். இந்தப் பயனுள்ள உரையாடலைக் கேளுங்கள்.



 

உண்ணிக் கொக்கு - 2 | Cattle Egret - 2| Bubulcus ibis

உண்ணிக் கொக்கு, எருமை மீது உலாப் போகிறது. ஓர் எருமையிலிருந்து இன்னோர் எருமைக்குத் தாவுகிறது. புல்வெளியில் நடை பழகுகிறது. எருமையுடன் ஜோடியாக நடக்கிறது.



 

உண்ணிக் கொக்கு | Cattle Egret | Bubulcus ibis

நம் வீட்டுக்குப் பின்னுள்ள புல்வெளியில், முன்பு நிறையப் பறவைகள் வந்தமரும். சிறு வேடந்தாங்கலாகவே இது இருந்தது. இப்போது சற்றுக் குறைவு எனினும் அவ்வப்போது சிற்சில வருவதுண்டு. இன்று காலை, மூன்று உண்ணிக் கொக்குகளைக் கண்டேன். மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகளால் புல்லிலிருந்து கிளறி விடப்படும் பூச்சிகளை உண்ணும் கொக்கு என்பதால் இது உண்ணிக் கொக்கு எனப்படுகிறது. எருமையின் மீது அமர்ந்து எதையோ கொத்திக் கொத்தித் தின்றது. ஒரு முறை, வாயை அகலத் திறந்து சிரித்தது.



 

Sunday, October 11, 2020

பண்டிதர் அயோத்திதாசர் சிலை | Pandit Iyothee Thass statue

சென்னை, தாம்பரம், தேசிய சித்த மருத்துவ நிறுவன வளாகத்தில், அயோத்திதாசப் பண்டிதர் மருத்துவமனையும் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள மூலிகைத் தோட்டத்தில், பண்டிதர் அயோத்திதாசருக்கு அழகிய சிலையை அமைத்துள்ளார்கள். அயோத்திதாசர், ஒரு பைசாத் தமிழன் என்ற இதழை நடத்தியதோடு, வேறு 25 நூல்களை எழுதியுள்ளார். திருக்குறளுக்குப் பகுதியளவு உரை வரைந்துள்ளார். ஆதி திராவிடர் முன்னேற்றத்துக்காகப் பல்வேறு சமூக, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். சித்த மருத்துவராகவும் விளங்கியுள்ளார். தம் குருவின் மீது கொண்ட மதிப்பால் காத்தவராயன் என்ற தமது பெயரை அயோத்திதாசர் என மாற்றிக்கொண்டுள்ளார். 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், தமது சிந்தனைகளாலும் துணிவான செயல்களாலும் 21ஆம் நூற்றாண்டிலும் எழுந்து நிற்கிறார்.



 

Saturday, October 10, 2020

பட்டாம்பூச்சியை லபக் செய்த பல்லி | Lizard caught Butterfly

இந்தப் பெரிய பட்டாம்பூச்சி, விட்டில் பூச்சியைப் போல் குழல்விளக்கின் அருகிலேயே இருக்க, ஊர்ந்து வந்த பல்லி, அதை லபக் செய்துவிட்டது. இந்தப் பயங்கரமான காட்சியை இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்.



 

வளைந்த மூங்கிலை நிமிர்த்துவது எப்படி? | How to straighten a Bamboo?

பொதுவாக மூங்கில் சற்றே வளைந்திருக்கும். ஆனால், கூரை வேய, பந்தல் கட்ட, இன்னும் பல்வேறு தேவைகளுக்கும் நேராக நிமிர்ந்த மூங்கிலே தேவை. வளைந்த மூங்கிலை எப்படி நிமிர்த்துவது? இதோ கதிர்வேலு விளக்குகிறார்.



 

திருமூலர் திருக்கோவில் | Tirumular temple

சென்னை, தாம்பரம், தேசிய சித்த மருத்துவ நிறுவன வளாகத்தில் திருமூலர் திருக்கோவிலை இன்று கண்டு, பெருமகிழ்ச்சி அடைந்தேன். அதற்குள் ஒரு சிறு உலா சென்று வந்தேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.



 

ஆசிரியர் அ.மா.சாமி

ராணி ஆசிரியராக அ.மா.சாமி அவர்கள் இருந்தபோது, 2001-03 காலக்கட்டத்தில், அவருடன் உதவி ஆசிரியராகப் பணியாற்றினேன். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, தினந்தோறும் அவரைச் சந்தித்து, இதழ்ப் பணிகளை முன்னெடுத்தேன். அவருடனான என் அனுபவங்கள் சிலவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன். ஆசிரியர் அ.மா.சாமி அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.



 

Friday, October 09, 2020

வண்ணத்துப்பூச்சியின் சாகசங்கள் | The Adventures of a butterfly

வெட்டுக்காயப் பூண்டு, கிணற்றுப்பாசான், தாத்தாப்பூ எனப் பலவாறாக அழைக்கப்படும் இந்தச் சிறு பூ, வண்டுகளுக்கும் வண்ணத்துப்பூச்சிகளுக்கும் மிகப் பிடித்தமானது. இங்கே இந்தப் பூக்களில் வண்ணத்துப்பூச்சி செய்யும் சாகசங்களைப் பாருங்கள்.



 

செம்பருத்தி இலையில் செங்குளவி | Ropalidia marginata | Red Paper Wasp

நம் வீட்டைச் சுற்றிலும் பல்வேறு பூச்செடிகளிலும் செங்குளவிகள் சுறுசுறுப்பாக வலம் வருகின்றன. எந்தச் செடியையும் நெருங்கவே அச்சமாக இருக்கிறது. அண்மையில்தான் பக்கத்தில் ஒருவரின் இரு கைகளிலும் செங்குளவி கொட்டியது. நான்கு நாள்கள் வலியால் துடித்தார். இப்படிக் குளவி கொட்டினால் வெங்காயச் சாறு அல்லது சுண்ணாம்பைப் பூச வேண்டும் என்று கற்றுக்கொண்டோம். இங்கே செம்பருத்தி இலையில் இரு செங்குளவிகள் நடமாடுவதைப் பாருங்கள்.



 

மழையில் நனைந்த குயில் | Cuckoo after the rain

சற்றுமுன் சென்னை, தாம்பரத்தில், தொடர்ச்சியான பலத்த இடியுடன் சிறிது நேரம் மழை பெய்தது. இந்த மழையில் நனைந்த குயில் ஒன்று, எங்கள் ஜன்னலோர வேப்ப மரத்தில் இளைப்பாறியது.



 

மயில் மாணிக்கம் கொடி | Ipomoea quamoclit creeper

நம் வீட்டு மதிற்சுவரில் மயில் மாணிக்கம் கொடி படர்ந்து, தவழ்ந்து, கமழ்ந்துகொண்டிருக்கிறது. சிறு தீபச் சுடர் போல் இந்தப் பூக்கள், இந்த நாளையே அழகாக்கிவிடுகின்றன.



 

Thursday, October 08, 2020

வழி தவறிய வண்ணத்துப்பூச்சி

இரவு எட்டு மணி இருக்கும். நம் வீட்டு வாசலில் ஒரு வண்ணத்துப்பூச்சி, சுவரின் மீது படபடத்தது. வழி தவறியது போலும். இருளில் செல்வதற்குத் தெரியாமல், குழல் விளக்கின் அருகில் அலைபாய்ந்தது. பின்னர், ஒரு பையின் பின்னே அடைக்கலம் புகுந்தது. சற்றே நெருங்கிப் பார்த்தேன். அதன் மேனி, ஒரு புது வகை அழகுடன் இருந்தது.



 

மண்ணெண்ணெய் ஒரு மருந்து | Kerosene is a medicine

எரிபொருளாகவே பெரும்பாலும் பயன்படும் மண்ணெண்ணெய்க்கு வேறு பயன்களும் உண்டு. இதைக் காயங்களுக்கு மருந்தாக என் தாயார் சௌந்திரவல்லி, 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தி வருகிறார். மண்ணெண்ணெயின் இந்த இன்னொரு முகம் குறித்து, அவருடன் ஒரு நேர்காணல்.



 

குதிக்கும் பறவைகள் | Jumping birds

குதித்துக் குதித்துச் செல்லும் தவிட்டுக் குருவிகள்



 

Wednesday, October 07, 2020

கருங்குயில் | Black Cuckoo

அக்டோபர் 2 முதல் 8 வரை காட்டுயிர் வாரம். நான் காட்டுயிருக்கு எங்கே போக? எனக்குக் கிடைத்ததெல்லாம் இந்தக் கருங்குயில்தான். வாயைத் திறந்து வைத்து, யாருக்காக இது காத்திருக்கிறது?



 

வண்ணத்துப்பூச்சிகளின் காதல் - 3 | Love making of butterflies - 3

வண்ணத்துப்பூச்சிகளின் காதல் ஏட்டில் ஒரு புதிய அத்தியாயம்.



 

சிரிப்பு யோகா | Laughter Yoga | Laughter Therapy | ஹாஹோ சிரிப்பானந்தா நே...

சிரிப்பு யோகா பயிற்றுநர் ஹாஹோ சிரிப்பானந்தா, தமிழில் சிரிப்பு யோகாவை அறிமுகப்படுத்தி நிலைநிறுத்தியவர். சிரிப்பு யோகா என்றால் என்ன? அதை எப்படிச் செய்ய வேண்டும்? அதை யார் யார், எங்கெங்கே செய்யலாம்? இதயம் பலவீனமானவர்கள், ஆஸ்துமா உள்ளவர்கள், திக்குவாய் உள்ளவர்கள், முதியவர்கள்... இன்ன பிறரும் சிரிப்பு யோகா செய்யலாமா? சிரிப்பு யோகா தருகின்ற பயன்கள் என்னென்ன? உள்ளிட்ட நமது பல்வேறு கேள்விகளுக்கும் அழகாக, அட்டகாசமான சிரிப்புடன் பதில் அளித்துள்ளார். இதைப் பார்த்தால் மனசு லேசாகி, நீங்கள் வாய்விட்டுச் சிரிப்பீர்கள் என்பது உறுதி.

சிறப்பு மிகுந்த சிரிப்பு யோகா, இதோ.



 

Tuesday, October 06, 2020

சிறகை விரி, எழு! | Stretch your wings, fly!

Even with broken wings, this butterfly is able to fly. Why not we?



தனது சிறகு சேதமுற்றாலும் உற்சாகமாகப் பறக்கும் வண்ணத்துப்பூச்சி ஒன்றை இன்று கண்டேன். மனத்தில் உறுதி இருந்தால், எந்தத் தடையையும் எந்த இடரையும் வெல்ல முடியும் என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு.



 

Sunset at Chennai - 18

இன்றைய மாலைச் சூரியன், முழு வட்டமாய், ஒரு நெருப்புப் பழமாக ஒளிர்ந்தது. மூன்று நிமிடப் பதிவில் முதல் ஒரு நிமிடம் முழுச் சூரியனைக் காணலாம். அடுத்த இரண்டே நிமிடத்தில், அந்த முழுச் சூரியனும் சடுதியில் மறைவதை நீங்கள் பார்க்கலாம்.



 

கதை பிறந்த கதை - நிர்மலா ராகவன் நேர்காணல் | Story behind the story - Int...

மலேசியத் தமிழ் எழுத்தாளர் நிர்மலா ராகவன், தம் எழுத்துலக அனுபவங்களை நம்முடன் தொடர்ந்து பகிர்ந்துகொள்கிறார். இந்த இரண்டாவது பகுதியில், தமது கதைகளுக்கான கரு எவ்வாறு கிடைத்தது என எடுத்துரைக்கிறார்.



 ஆணைப் பெண்ணாக மாற்றிய மருத்துவர், பெண்ணாக மாறிய அந்த ஆண் நடந்துகொண்ட விதம், ஒருவரை ஒருவர் கொல்வதற்காக அரிவாள் வாங்கி வைத்துக்கொண்ட கணவன்-மனைவி, வாடகைத் தாய், இன்னோர் ஆணின் விந்தைப் பெற்றுத் தன் கருப்பையில் வைத்த மனைவி, அதைக் கணவன் எதிர்கொண்ட விதம், கற்பழிக்கப்பட்ட பெண், திருமணம் குறித்த இளைஞர்களின் - இளம் பெண்களின் எதிர்பார்ப்புகள், நெற்றிப் பொட்டு இட்டுக்கொண்டு வந்ததற்காகத் தமிழ்ப் பெண்களின் கன்னத்தில் அறைந்த கன்னியாஸ்திரீகள், திருமணம் ஆன ஒரே நாளில் நடந்த விவாகரத்து உள்ளிட்ட பலவற்றையும் விவரித்துள்ளார். அவருடைய கதை பிறந்த கதையை இந்தப் பதிவில் பாருங்கள்.



 

Monday, October 05, 2020

90's மிட்டாய் கடையின் உள்ளே ஓர் உலா | A visit to 90's Mittai Kadai

1980களில், 1990களில் பிறந்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. உங்கள் இளமைப் பருவத்தை மீண்டும் வாழ்ந்து பார்க்க வேண்டுமா? 90's மிட்டாய் கடையின் உள்ளே ஒரு முறை சென்று பாருங்கள். நீங்கள் சாப்பிட்ட தின்பண்டங்களும் விளையாடிய பொம்மைகளும் கருவிகளும் பயன்படுத்திய பொருள்களுமாக, உங்களை அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்லும்.



 

பெருஞ்சித்திரனாரும் வள்ளலாரும் - பேராசிரியர் அரசேந்திரன் நேர்காணல் | Pro...

இன்று வள்ளலாரின் பிறந்த நாள். வள்ளலாரும் பெருஞ்சித்திரனாரும் என் வழிகாட்டிகள் எனக் கூறும் பேராசிரியர் அரசேந்திரன், அவர்களை ஏற்றுக்கொண்டது ஏன் என்று இங்கே விவரிக்கிறார். அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என முழங்கிய வள்ளற்பெருமானின் நினைவைப் போற்றுவோம்.



 

Sunday, October 04, 2020

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் சேவைகள் | MEDICAL SERVICES OF NATIONAL...

சென்னை, தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம், என்னென்ன சேவைகளை வழங்கி வருகின்றது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். மிகக் குறைந்த கட்டணத்தில் இங்கே சிகிச்சை பெறலாம். முதல் முறை பதிவு செய்ய, ரூ.20 மட்டுமே கட்டணம். அடுத்தடுத்த முறைகளுக்கு ரூ.10 மட்டுமே கட்டணம். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எந்தக் கட்டணமும் கிடையாது. எல்லோருக்கும் இலவசமாக மருந்துகளை வழங்குகிறார்கள். இதில் வழங்கப்படும் சேவைகள், செயல்படும் நாள், நேரம், கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இந்தப் பதிவில் பாருங்கள்.



 

Indian Red Bug | Probergrothius sanguinolens

Red Indian bug mating pair in Chennai!


இரண்டுதலைப் பூச்சியென்று முதலில் நினைத்தேன். உண்மையில், இது இரண்டு பூச்சிகள் காதல் கொள்ளும் காட்சி. தெளிவுபடுத்திய நண்பர்கள் சுந்தர் லெட்சுமணன், கார்கில் ஜெய் ஆகியோருக்கு நன்றி.


Saturday, October 03, 2020

சரவணா ஸ்டோரில் சாயி இல்லம் | Shirdi Saibaba in Super Saravana Stores

சென்னை, குரோம்பேட்டையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோரின் வாயிலில் சீரடி சாயிபாபாவின் இல்லம், தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளே சாயிபாபாவின் அருள் திகழும் திருவதனம், நேரில் காண்பது போலவே அமைந்துள்ளது. இன்று தற்செயலாக அந்தப் பேரங்காடிக்குச் சென்றபோது இதைக் கண்ணுற்றோம்.



சீரடி சாயிபாபாவின் அமுத மொழிகள் பலவற்றையும் அங்கே காட்சிக்கு வைத்து, சாயி அன்பர்களின் இல்லங்களில் மகிழ்ச்சி பெருகட்டும் என வேண்டியுள்ளார்கள்.
சூப்பர் சரவணா ஸ்டோருக்கும் வாடிக்கையாளர்களுக்குமான பந்தம், இறைவன் அருளால் நிகழ்ந்தது. இணையற்ற அன்பால் மலர்ந்தது என எழுதியுள்ளார்கள். இந்த வாசகம், வழக்கமான வியாபாரம் என்ற நிலையிலிருந்து, நெருக்கமான உறவாக வாடிக்கையாளர்களை மாற்றும் வலிமை உடையது.



சாயிபாபா கோவிலுக்குப் போய் நீண்ட காலமாகிறது. விரைவில் அங்கே போக வேண்டும் என நேற்றுதான் என் மனைவி என்னிடம் கூறினார். இன்று சாயிபாபாவே நாங்கள் சென்ற கடைக்கு வந்து தரிசனம் தந்துவிட்டார்.



அந்த அழகிய சாயி இல்லத்தை இங்கே காணுங்கள்.



 

Butterfly - 33 | வண்ணத்துப்பூச்சி - 33

பொலிவு மிகுந்த இந்த அழகிய வண்ணத்துப்பூச்சியின் பொன்னெழில், கண்களுக்கும் மனத்துக்கும் இன்பம் ஊட்டுவது உறுதி.



 

Friday, October 02, 2020

மயில்மாணிக்கம் - மூன்று மலர்கள் | Ipomoea quamoclit - Three flowers

ஒரே மயில்மாணிக்கம் செடியில், ஒரே கிளையில் அருகருகே மும்மணிகளாய் மூன்று மலர்கள் சிரிக்கும் காட்சி. இது உங்களுக்கு இதமும் மகிழ்வும் அளிக்கக்கூடும்.



 

வண்ணத்துப்பூச்சிகளின் காதல் | Love making of butterflies

Exclusive: Love making of butterflies



வண்ணத்துப்பூச்சிகள் ஒன்றை ஒன்று நெருங்கி, முத்தமிட்டு, கூடி, நிழல்போல் இணைந்து, பறந்து பறந்து காதலிக்கும் அரிய காட்சி இதோ. இதில் ஒரு கட்டத்தில் இரண்டு வண்ணத்துப்பூச்சிகளுடன் மூன்றாவதாக ஒன்றும் சேர்ந்துகொண்டது.



 

மகராசர் காமராசர் - மூன்று மெட்டுகளில் ஷைலஜாவின் குரலிசை

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவுநாள் இன்று. தமக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த அந்த அற்புத மனிதரின் நினைவைப் போற்றுவோம்.



 மகராசர் காமராசர் என்ற தலைப்பில் நான் எழுதிய பாடலை, பெங்களூரில் வசிக்கும் எழுத்தாளர் ஷைலஜா, மூன்று மெட்டுகளில் பாடியுள்ளார். அதை இன்று கேட்டு மகிழுங்கள்.



 

காந்தி ஜெயந்தி - சௌந்திரவல்லி நேர்காணல்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மறுபயன்பாட்டை ஊக்குவிக்க, என் தாயார் சௌந்திரவல்லி அவர்களுடன் ஒரு நேர்காணல்.



 

Thursday, October 01, 2020

சிவப்புக் கீரை | Red greens

கண்ணுக்குக் குளிர்ச்சியாக, நம் வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்து வரும் சிவப்புக் கீரை, மாலை வெயிலில் மின்னுகிறது.



 

நண்டுக் கூட்டில் ஓவியம் - 2 | Natural art in the Crab shell - 2

நம் வீட்டுத் தோட்டத்தில் இன்று இன்னொரு நண்டுக் கூட்டையும் கண்டேன். இது ஒரு செடியின் மீது கிடந்தது. காக்கையோ, பூனையோ கொண்டு வந்து போட்டிருக்கும் என நினைக்கிறேன். இந்த நண்டுக் கூட்டின் பின்புறத்தில் முக்கண் போல் மூன்று சிவப்புப் புள்ளிகள் இருந்தன. நெற்றிக் கண்ணோ!



 

நண்டுக் கூட்டில் ஓவியம் - 1 | Natural art in the Crab shell - 1

நம் வீட்டுத் தோட்டத்தில் இன்று காலை இந்த நண்டுக் கூட்டினைக் கண்டேன். காக்கை கொண்டு வந்து போட்டிருக்கும் என நினைக்கிறேன். இதில் ஒருவர் கோட்டு அணிந்து அமர்ந்திருப்பது போல் தெரிகிறது. ஆங்கிலேய நீதிபதி போலும் தெரிகிறது. உங்களுக்கு இது எப்படிக் காட்சி தருகிறது?