!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2009/05 - 2009/06 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, May 02, 2009

மூன்றாம் ஆண்டில் தமிழ் பிரவாகம்

தமிழ் பிரவாகம் குழுமம் தொடங்கி, மே 1, 2009 அன்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதை இப்படிச் சொல்வதை விட, மே 2 அன்று மூன்றாம் ஆண்டினுள் நுழைகிறது எனலாம். தொடக்கம் எனும்போது, இன்னும் நேர்மறைத்தன்மை கூடுகிறது.

தமிழ் பிரவாகம், மே 1 அன்று வரை 571 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. 2008 மே முதல் 2009 ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 300 உறுப்பினர்கள் புதிதாக இந்தக் குழுமத்தில் சேர்ந்துள்ளனர். இவர்களுள் சுமார் 70 பேர்கள் மட்டுமே தீவிரமாக இயங்கி வருகிறார்கள். பிறர், மவுன வாசகர்கள். மொத்த உறுப்பினர்களுள் சுமார் 75 விழுக்காட்டினர், புனைபெயர்களில் உலவுகின்றனர். ஒருவரே இரு பெயர்களில் குழுமத்தினுள் நுழைவதும் நடந்துள்ளது.

பொதுவாக இந்தக் குழுமம், தமிழ்ச் சமூகம், நட்பு, இலக்கியம் ஆகியவற்றிலான இடுகைகளை அதிகம் பெற்றுள்ளது. அந்த வகையில், 'இக் குழுமம் முழுக்க முழுக்க நட்பு ரீதியிலும் இலக்கியப் பாதையிலும் மட்டும் பயணப்பட வேண்டுமென்பதே எம் நோக்கம்' என இந்தக் குழுமத்தின் அறிமுகத்தில் குறிப்பிட்டிருப்பதைக் கூர்மையாகப் பின்பற்றி வருகிறது.

ஏப்ரல் 2009 மாதத்தில் மட்டும் சுமார் 500க்கும் மேலான இடுகைகளைக் கண்டேன். ஈழம் தொடர்பான தலைப்புகள், அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடுகைகள், நடப்பு நிலவரங்களைப் பிரதிபலிக்கின்றன. அன்றாடச் செய்திகள் அல்லது சர்ச்சைக்கு உரிய செய்திகளை விவாதிக்கும் போக்கு இயல்பாக உள்ளது. கவிதை தொடர்பான இடுகைகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

தேனு தொடங்கிய கவியிழை என்ற இடுகைக்கு அதிகபட்சமாக 44 மறுமொழிகள் கண்டேன். கருத்துகளுடன் சளைக்காமல் மறுமொழிகள் இடுவதில் வல்லவர்களாக விஜி, தேனுஷா, தமிழ் வாலிபன், காமேஷ் போன்றவர்களைக் குறிப்பிடலாம். பல இடுகைகள், மறுமொழி ஏதுமின்றி உள்ளன.

மூத்த குடிமக்களான வெ.சுப்ரமணியம், சீத்தாம்மா, விசாலம்மா, தமிழ்தேனீ போன்றவர்கள் ஆன்மீகம், உலக அனுபவங்கள் பற்றிய நல்ல நல்ல பதிவுகளை எழுதியுள்ளார்கள். இவர்களோடு எல்லா வகையான பதிவுகளிலும் ஷைலஜா, ரிஷான், நிலாரசிகன் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளார்கள். அண்ணா, தம்பி, அக்கா, தங்கை, அம்மா, அய்யா என உறவுப் பெயர்களைக் கொண்டு அழைக்கிற உறுப்பினர்கள், குழுமத்திற்குள் குடும்ப உணர்வைக் கூட்டுகிறார்கள்.

பாவிலக்கணம், நிலாரசிகனின் கவிதைகள், தமிழினியன் செய்தித் தொகுப்புகள், தினம் ஒரு திருக்குறளுடன் காலை வணக்கம் போன்ற இழைகள் 2 வருடங்களாகத் தொடர்ந்து அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றன. ஈழத்துப் பிரச்சினை பற்றிய விவாதங்கள், அதிக மறுமொழிகளைப் பெற்றுள்ளன. "பொதுவாக குழுமத்தின் செயற்பாடுகள் இன்னமும் நான் எதிர்பார்த்த அளவிற்கு சூடு பிடிக்கவில்லை என்றே நினைக்கிறேன். ஆனால், தனிமனிதக் கீறல்கள் இல்லாத, நாகரிகமான விவாதங்களாயும், நட்பு ரீதியிலான பகிர்வுகளாயும் இருப்பது மனதுக்கு ஆறுதல் தருவதாய் இருக்கின்றது" என்கிறார் இந்தக் குழுமத்தின் நடத்துநர் சுவாதி.

உறுப்பினரின் பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றுக்கு வாழ்த்துரைப்பது உறவு மேம்பாட்டுக்குப் பெரிதும் உதவுகிறது. உறுப்பினர்கள், செய்திகள் பகிர்கிறார்கள்; ஐயங்களுக்குப் பதில் பெறுகிறார்கள்; அறிந்தோர், அறியாதோருக்கு வழி காட்டுகிறார்கள்; இன்பங்களின் போது கூடுதல் உவகை பெறுகிறார்கள்; துன்பங்களின் போது ஆறுதல் பெறுகிறார்கள். இவர்கள், வெவ்வேறு ஊர்களில், நாடுகளில் இருக்கிறார்கள். ஆயினும் குறிப்பிட்ட ஊருக்கு வரும்போது அங்கு நம் குழும உறுப்பினர்கள் யார் யார் இருக்கிறார்கள் எனத் தேடிப் பேசுகிறார்கள்; சந்திக்கிறார்கள்; உதவிகள் புரிகிறார்கள்.

பொதுவாக, ஒருவரே பல்வேறு குழுமங்களில் உறுப்பினராக இருப்பது இயல்பாக உள்ளது. ஒரே இடுகை, பல குழுமங்களில் வெளிவருவதையும் காண முடிகிறது. சிலர் குறிப்பிட்ட குழுமத்தினை மட்டுமே வாசிக்கிறார்கள். அதனால் ஒரே நேரத்தில் ஒரே வகையான செய்திகள், பல குழுமங்களில் இடம் பெறுகின்றன. வலைப்பதிவுகளுக்கு எப்படி ஒரு திரட்டி இருக்கிறதோ, அதே போல் அனைத்து இணையக் குழுமங்களின் இடுகைகளையும் பெறும் வகையில் ஒரு தனித் திரட்டியை உருவாக்கினால் அதற்குப் பயன் மிகுதியாய் இருக்கும்.

உறுப்பினர்கள் பலரும் தங்கள் பற்றிய சுய விவரங்களை முழுமையாகப் பகிர்ந்துகொள்வதில்லை. இதனால் யார், எவர் என முழுமையாக அறிய முடிவதில்லை. குழுமங்களின் மூலம் உறவு பலப்பட, உறுப்பினர்கள் தங்களுக்குள் நல்ல புரிதலைக் கொண்டிருக்க வேண்டும். இடுகை / மறுமொழியை இட்டவர் இன்னார் என்பது தெரியாத நிலையில் இட்டது என்ன என்பது மட்டுமே இங்கே முன்னிலை பெறுகிறது. இது, கருத்துக்கு முக்கியத்துவம் தந்து விவாதிக்கிறது என்ற வகையில் நல்லது. ஆனால், பலரும் முகமூடி அணிந்து, நம்பிக்கையின்மையுடன் உலவும் ஒரு பேட்டையாகவும் குழுமத் தளங்கள் அமைய வாய்ப்புண்டு.

குழுமங்களில் கூட்டுப் பிரார்த்தனை, ஒரு நல்ல தொடக்கம். இது, நம்பிக்கை என்ற குழுமத்தில் முதலில் தொடங்கப்பட்டது. வாரா வாரம் விஜி என்பவர் இந்த இழையைக் கொண்டு செல்கிறார். அவரே பிறகு, அதே இழையைத் தமிழ் பிரவாகம், முத்தமிழ் ஆகிய குழுமங்களிலும் தொடங்கிவிட்டார். இதன் மூலம் பலரின் உணர்வுகள், சில நிமிடங்களாவது ஒற்றை அலைவரிசையில் கூர்மையுற வாய்ப்புண்டு.

குழுமங்களில் சில விளம்பரங்களும் காணக் கிடைக்கின்றன. ஆயினும் தமிழில் அமைந்துள்ள பக்கங்களுக்கு கூகுள் ஆட்சென்ஸ் ஆதரவு இல்லை என்பதால் இதனால் பெரும் பயன் இருக்காது என்றே நினைக்கிறேன். ஆயினும் குழுமங்கள், மாற்று வழிகளில் லாபம் ஈட்டுவது குறித்தும் சிந்திக்கலாம். அதில் ஏதும் தவறில்லை. இதில் கூச்சம் இருக்குமானால், அத்தகைய லாபத்தினைப் பொதுப் பணிக்கு அளிக்கிறோம் என்றாவது கூறலாம்.

வலைப்பதிவுகளில் அரும்பியிருக்கும் வணிக முயற்சிகள், ஒற்றைக் கருப்பொருளில் கவனம், புத்தாக்க வடிவமைப்பு.... உள்ளிட்ட பலவும் குழுமங்களில் காணப்படவில்லை. ஆயினும், ஆர்குட் போன்ற சமுதாய ஊடகங்களை விட இணையக் குழுமங்கள், உறவு மேம்பாட்டுக்குப் பெரிதும் உதவுகின்றன. அன்பு என்ற நறுமணம் வீசும் பூந்தோட்டமாகக் குழுமங்கள் விளங்குகின்றன.

அத்தகைய குழுமங்களில் தமிழ் பிரவாகம், நட்புடன் சேர்த்துத் தமிழுணர்வையும் வளர்க்கிறது. தமிழரிடம் தமிழ் பேசுங்கள் என முழங்கி வருகிறது. சகலவிதமான பங்கேற்புகளையும் முழுக்க முழுக்கத் தமிழ் மொழி மூலமே கையாளும் இலக்கினை நோக்கிப் பயணிக்கிறது. மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் தமிழ் பிரவாகம், வாழ்க! வெல்க! மேலும் வளர்க!

எவ்வளவு இடுகைகள் என்பதை விட, எத்தகைய இடுகைகள் என்பது முக்கியம். அறிந்தவர், அறியாதோருக்குக் கை கொடுங்கள். தமிழ்த் தட்டச்சு கல்லாதோருக்குக் கற்பியுங்கள். தமிழில் பிழைகளைத் தவிருங்கள். கணினி / இணைய நுட்பங்கள் பரவட்டும். வலிவும் பொலிவும் மிக்க ஒரு புதிய அலை புறப்படட்டும். குடும்பம், நட்பைத் தொடர்ந்து, தொழில், வணிக, சமூக, அரசியல் உறவாகவும் வளரட்டும். தமிழ்ச் சமுதாயத்தின் மீது மகத்தான தாக்கம் செலுத்தட்டும்.

'உதவும் உள்ளங்கள்' 75ஆவது இதழுக்கு வாழ்த்து

சென்னை அம்பத்தூரிலிருந்து வெளியாகும் 'உதவும் உள்ளங்கள்' மாத இதழ், மே 2009இல் தன் 75ஆவது இதழை வெளியிடுகிறது. அதற்கு அதன் ஆசிரியர் ஆடானை சுகுமார் கேட்டுக்கொண்டதன் பேரில் நான் அனுப்பிய வாழ்த்து:

'உதவும் உள்ளங்கள்' மாத இதழ், மாணவர்களை அட்டைப்பட நாயகர்களாக வெளியிட்டு ஊக்குவிக்கிறது. மாணவ மணிகளின் ஆக்கங்களை வெளியிட்டு, புதிய படைப்பாளிகளை உருவாக்குகிறது. இந்த இதழில் பக்கத்துக்குப் பக்கம் மாணவர் மேம்பாடு குறித்த சிந்தனைகள் மிளிர்கின்றன. கல்வி, கலை, சமயம், சமூகம், இலக்கியம், அறிவியல்... எனப் பல கருப்பொருள்கள் கவனத்தை ஈர்க்கின்றன. மனிதநேயம் தொண்டு நிறுவனத்தின் நல்ல நிகழ்ச்சிகளை இந்த இதழ் ஆவணப்படுத்துகிறது. இந்த அமைப்பு நடத்தும் போட்டிகள், சிறந்த திறமைசாலிகளை அடையாளம் காண உதவுகிறது. சிறந்த அனுபவங்கள்! சான்றோர்களின் பொன்மொழிகள்! ஒவ்வொரு பெட்டிச் செய்தியும் கட்டிக் கரும்பாக இனிக்கிறது. தணியாத ஆர்வமும் சிறந்த நோக்கமும் இந்த இதழைப் பின்னிருந்து இயக்குகின்றன.

தன்னம்பிக்கை ஊட்டும் இந்த இதழ், தமிழ் மொழி நடை, மெய்ப்பு, தமிழ்ச் சொல்லாக்கம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதழின் சில பக்கங்களை மாணவர்களே தயாரிக்க வழிகாட்டலாம். 75 இதழ்களைத் தொடர்ந்து வெளிக்கொணர்ந்துள்ள ஆசிரியர் ஆடானை சுகுமாருக்கும் உடன் இயங்கும் ஆசிரியர் குழுவினருக்கும் நல்வாழ்த்துகள். புதிய விடியல் பிறக்கட்டும்! புதிய வெளிச்சம் பரவட்டும்!

'கண்ணன் பாட்டு' வலைப்பதிவின் நூறாவது இடுகைக்கு வாழ்த்து

2008 ஜூன் மாதம் கூடல் வலைப் பதிவில் வெளியான இந்த இடுகையை, ஆவணமாகக் கருதி, இங்கே மீளவும் இடுகிறேன்.

==================================================

கண்ணன் பாட்டு என்ற இந்தக் கூட்டு வலைப் பதிவு, நூறாவது இடுகையைக் கண்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எட்டு பேர்கள் இணைந்து ஒன்றரை ஆண்டில் நூறு பதிவுகள் இட்டுள்ளார்கள். கண்ணனின் அழகை, அருளை, புகழை, லீலைகளை... கண்ணன் தொடர்பான ஒவ்வொன்றையும் ரசித்து, ருசித்துத் தொகுத்துள்ளார்கள். கண்ணன் பாட்டு என்று பதிவின் பெயர் இருந்தாலும் கண்ணனுடன் சேர்த்து ராமனும் அவர்களின் அடியவர்களும் காதல் பாடல்கள் பலவும் இடம் பெற்றுள்ளன. அனைத்தையும் கண்ணனாகப் பார்ப்பது ஒரு வகை உயர்ந்த ஆன்மீகம். அதனால் தான் உலகில் 660 கோடி ஆழ்வார்கள் இருக்கிறார்கள் என இவர்களால் உறுதியாகச் சொல்ல முடிகிறது.

கோயிலில் கொசுத் தொல்லை என்பதால் அர்ச்சனைத் தட்டில் டார்ட்டாய்ஸ் கொசுவத்தி வைத்துக் கொடுக்கும் அன்பு மயமான உள்ளத்தை இங்குதான் நான் கண்டேன்.

ஒவ்வொரு பதிவாகப் பின்னால் பார்த்துக்கொண்டே சென்றேன். அழகிய பாடல்கள், அவற்றின் உரை வடிவம், இசை வடிவம், வாய்ப்பிருந்தால் வீடியோ எனப்படும் ஒளி வடிவம், எழில் சிந்தும் புகைப்படங்கள், கண்ணன் தொடர்பான செய்திகள், கேள்விகள் - விளக்கங்கள்... எனத் தேடித் தேடித் தொகுத்த ஒவ்வொன்றும் ஈர்த்தன.

திரைப் பாடல்கள், தனிப் பாடல்கள், இலக்கியப் பாடல்கள்... எனக் கண்ணன் தொடர்பான எல்லாப் பாடல்களையும் அவற்றின் வரி வடிவத்துடன் வெளியிட்டு வருவது அருமை. புகழ் பெற்ற பாடல்கள் ஒரு புறம் அணி சேர, பதிவாளர்களே சொந்தமாகப் பாட்டெழுதி அதைப் பாடியும் வெளியிட்டுள்ளது இன்னும் சிறப்பு.

கே ஆர் எஸ் எனப்படும் கண்ணபிரான் ரவிஷங்கர், வேற்று மொழிப் பாடலைத் தமிழில் தந்துள்ளதும் கவர்ந்தது. தாயாருக்குத் திருமஞ்சனம் செய்விக்கையில் அதனை ஒரு குழந்தையைக் குளிப்பாட்டுவதுடன் ஒப்பிட்டது கவித்துவமாக ஒளிர்கிறது.

ஷைலஜாவுக்குத் திருவரங்கப்ரியா என்றொரு பேர் இருப்பதை இந்த வலைப்பதிவிலிருந்து அறிந்துகொண்டேன். அவரும் நாகி நாராயணனும் இணைந்து பாடியது, செவிக்கினிமை சேர்த்தது.

இப்படியாக

* தி. ரா. ச.(T.R.C.)
* மடல்காரன்
* மலைநாடான்
* G.Ragavan
* குமரன் (Kumaran)
* ஷைலஜா
* Raghavan
* kannabiran, RAVI SHANKAR (KRS)
* dubukudisciple

ஆகிய ஒன்பது பேர்களும் ஒரு புனிதப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். ஒரு மதம் தொடர்புடைய வலைப் பதிவு என்றாலும் கூட, மதத்தைப் பிரச்சாரம் செய்யும் நோக்கம் இவர்களிடம் இல்லை. தங்களை அடியவர்களாகக் கருதி, தங்கள் இறைவனை ரசித்து, ஆழந்து பக்தியில் மூழ்கி முத்தெடுத்து வருகிறார்கள். இந்த 21ஆம் நூற்றாண்டில், பரபரப்பான இணைய வெளியில் அமைதியைப் பரப்பும் உயர்ந்த நோக்கம் இவர்களிடம் உள்ளது. அதற்காக இவர்களைத் தனித் தனியாகப் பாராட்டுகிறேன்.

வலைப் பதிவின் இடுகைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை என்றால், பல பின்னூட்டங்களும்கூட சுவையாகவே இருக்கின்றன. இந்த எட்டு பேர் அல்லாது மேலும் பலரின் பங்களிப்பும் உள்ளதை இந்த வலைப் பதிவுத் தடத்தில் கண்டேன். மதுமிதாவின் பாடலாகட்டும் வல்லிசிம்ஹனின் இசையாகட்டும் நா.கண்ணனின் சுட்டியாகட்டும் ஒவ்வொன்றும் இந்த வலைப் பதிவுக்கு வலிமை சேர்க்கின்றன.

இந்த இனிய முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் பெரிதும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.

இந்த இடத்தில் ஒரு சிறு விளக்கம். நான் இந்த வலைப்பதிவையும் அதன் உறுப்பினர்களையும் வாழ்த்தத் தகுதியுடையவன்தானா? என் பெயரில் கண்ணன் இருப்பதால் எனக்கு இதில் தொடர்பு ஏற்பட்டுவிட்டதா? நான் கண்ணனை ஒரு கடவுளாக ஏற்கிறேனா? என்ற கேள்விகள் என் முன்பு எழுகின்றன. இவை தொடர்பாக ஒரு சிறு விளக்கத்தை நான் அளிக்க வேண்டும்.

கண்ணனை ஒரு கதாபாத்திரமாக நான் மிகவும் ரசிக்கிறேன். சிறையில் பிறந்து, நதியைக் கடந்து, ஆயர்பாடியில் வளர்ந்து, காளிங்க நர்த்தனம் ஆடி, புல்லாங்குழல் இசைத்து, மாடுகள் மேய்த்து, வெண்ணெய் திருடி, சேலைகளை ஒளித்துவைத்து, கோபிகையருடன் விளையாடி, காதலில் குழைந்து, கம்சனைக் கொன்று.... என அழகான கதாநாயகனாக அவனை ஏற்கிறேன். கண்ணன் என்றில்லை; எந்தக் கடவுளையும் நம்பி, வணங்கி, துதித்து, வேண்டும் வழக்கம் என்னிடம் இல்லை.

நான் ஒரு நாத்திகனா? என்ற கேள்விக்கும் என்னிடம் தெளிவான பதில் இல்லை. கடவுள் வெளியில் இல்லை; நமக்குள் இருக்கிறார் என்ற கருத்தினை நான் ஏற்கிறேன். இதன் மூலம் நாமே கடவுளாக வாய்ப்பிருப்பதை உணர்கிறேன். யோகம், தியானத்தின் வழியே ஓர் உன்னத நிலையை அடையலாம் என்ற வழியை நான் ஏற்கிறேன். தாய்மை உணர்வு பெண்களிடம் மட்டுமின்றி, ஆண்களிடம் இருந்தாலும் அவரும் தாயே என்ற கருத்து எனக்கு உண்டு. கடவுளுக்கு உருவம் கொடுப்பதை நான் ஏற்கவில்லை. அறிவியல்பூர்வம் அல்லாத சடங்கு, சம்பிரதாயங்களில் எனக்கு ஈடுபாடில்லை. என் ஆன்மீகக் கோட்பாடு இப்படியாகச் சில புள்ளிகள் கொண்டது.

ஒரு பயணியாக நான் ஆலயங்களுக்குச் செல்வேன். சுற்றிப் பார்ப்பேன். அங்கு துளசியும் நீரும் கொடுத்தால் விருப்பத்துடன் பருகுவேன். தல விருட்சங்களின் காற்றினை ஆழ நுகர்வேன். கலைநயம் மிகு சிற்பங்களை ரசிப்பேன். விக்கிரகங்களுக்குச் செய்த அலங்காரங்களை ஆர்வத்துடன் கவனிப்பேன். மனத்தை உருக்கும் பாடல்களைக் கேட்டு அந்த இசையில் கரைவேன். ஆனால் கடவுளைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.

சுருக்கமாகச் சொன்னால் என் மதம் அறிவியல். அது ஏற்கும் எதையும் நான் ஏற்பேன். அது மறுக்கும் எதையும் நான் வெளிப்படையாக மறுக்க மாட்டேன். விடை தெரியாத பலவற்றையும் ஆய்வுக்குரியது என்ற தலைப்பிலேயே வைக்க விரும்புகிறேன்.

விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒரு புள்ளியில் சந்திக்குமானால் அங்கு தாராளமாக என்னைப் பொருத்தலாம். ஏனெனில் நிரந்தரக் கருத்து எதையும் கொண்டிருக்கவில்லை. அவ்வப்போதைய நிரூபணங்களுக்கு ஏற்ப, நெகிழ்ந்து கொடுக்கத் தயாராய் இருக்கிறேன்.

இவ்வளவு விளக்கமாக நான் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. இல்லாவிட்டால் நான் கிருஷ்ண பக்தி கொண்டவன் என்ற தவறான கருத்து ஏற்பட வாய்ப்புண்டு.

கண்ணன் பாட்டு என்ற வலைப்பதிவினைப் பாராட்டும் நான் அதை எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்துள்ளேன் என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

நண்பர்களே,

கண்ணன் பாட்டின் மூலம், இணைய தளத்தில் தமிழின் ஆன்மீகச் சாரத்தைப் பகிர்ந்து கொள்கிறீர்கள். உங்கள் முயற்சியின் மூலமாக ஆன்மீகம் வளருவது இருக்கட்டும். உறுதியாகத் தமிழ் வளர்கிறது. அதற்காக உங்களைப் பாராட்டுகிறேன்.

திரை இசை முதல் தனி இசை வரை இனிய இசையை வளர்க்கிறீர்கள். அவற்றைக் கேட்கக் கேட்க மனம் மகிழ்கிறது. அதற்காக உங்களை வாழ்த்துகிறேன்.

வலைப் பதிவில் எழுத்து, இசை ஆகியவற்றுடன் இனிய புகைப்படங்களையும் ஒளிப்படங்களையும் இணைத்து, இணையத்தின் தொழில்நுட்பத் திறனைப் பயன்படுத்துகிறீர்கள். இவற்றுக்குத் தமிழ்த் தொன்மம் என்ற அடையாளம் இருப்பதால் இதன் மூலம் தமிழரின் நம்பிக்கைகள், வழிபாடு, தத்துவம், இலக்கியம்.... ஆகிய பலவற்றையும் பாதுகாத்து இணையத்தில் சேமிக்கும் அரிய பணியில் உங்கள் கைகளையும் சேர்த்துள்ளீர்கள். இந்த நற்பணிக்காக உங்களை நாவினிக்கப் போற்றுகிறேன்.

தமிழர்கள் ஒன்றிணைந்து செயல்பட மாட்டார்கள் என்ற அவதூறு ஒன்றுண்டு. அதைப் பொய்யாக்கி, எட்டு பேர் இணைந்து ஒரு கூட்டு வலைப்பதிவை வெற்றிகரமாய், ஒரு வீணையின் தந்திகளைப் போல் நடத்துகிறீர்களே அதற்காக உங்களை வானளாவ வாழ்த்துகிறேன்.

========================

நன்றி: கூடல் வலைப் பதிவு

நட.சங்கரின் 'உள்ளத்தில் உறுதி இருந்தால்...'

நட.சங்கரின் 'உள்ளத்தில் உறுதி இருந்தால்...' என்ற கவிதைத் தொகுப்புக்கு நான் வழங்கிய அணிந்துரை இது:

கார்த்திகைத் திருநாள் அன்று ஊரெங்கும் ஒளிக் கோலம் பூண்டிருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் நூறு விளக்குகள் கண் சிமிட்டும். அவை அனைத்தும் ஒரே நேரத்தில் ஒளி பெற்றவை அல்ல. நம் குடும்ப விளக்குகள், முதலில் ஒரு விளக்கினை ஏற்றுவார்கள். அந்த விளக்கின் சுடரைக் கொண்டு, இதர விளக்குகள் அனைத்திற்கும் தீபத் திலகம் இடுவார்கள். கவிதை, எப்பொழுதுமே அந்த முதல் விளக்கினைப் போன்றது. அது, வாசிக்கும் மனங்களில் எல்லாம் நூறு தீபங்களை ஏற்றி வைக்கும்.

இதோ இங்கே சங்கர், தன்னம்பிக்கை என்னும் சுடரினைத் தன் இரு கைகளுக்குள் பொத்தி எடுத்து வருகிறார்.

அன்று
செய்தித்தாள் வினியோகித்தவர்
இன்று
முதல் பக்கத்தை அலங்கரிக்கும்
முக்கிய செய்தி

என்று குடியரசுத் தலைவர் அப்துல்கலாமைக் கொண்டாடுவதும்

முதல் உலகப் போரில்
சிப்பாயாக இருந்த
ஹிட்லர்தான்
இரண்டாம் உலகப் போரில்
ஜெர்மனியின் சர்வாதிகாரி

என வரலாற்று ஆதாரம் காட்டுவதும்

ஒரு நடத்துநர்
தன்னம்பிக்கையோடு
தடைகளைத் தாண்டி
சூப்பர் ஸ்டாராக

உயர்ந்ததை நமக்கு நினைவூட்டுவதும் நூறு தீபங்களை ஒளிர வைக்கும் முயற்சியே!

அனுபவத்தை விடச் சிறந்த ஆசான், அகிலத்தில் இல்லை என்பார்கள். சங்கரின் பல வரிகளில் பழுத்த அனுபவத்தின் சுவடுகளைக் காண முடிகிறது.

பத்தாயிரம் சேலைகளைப் பார்த்தும் வாங்க மறுக்கும் பெண்கள், சந்திரமுகி சேலை பாருங்க, எப்படியிருக்கு? எனக் கேட்டதும் கொத்திக்கொண்டு பறக்கும் எதார்த்தத்தை உடைத்துச் சொல்கிறார்.

இன்று அடிமை வேடம் போட்டால் என்ன? நாளை சிபிச் சக்கரவர்த்தி வேடம் காத்திருக்கிறது என நம்பிக்கை ஊட்டுகிறார். மேலும் பில்கேட்ஸ், கல்பனா சாவ்லா, அப்துல்கலாம் என நிகழ்காலச் சாதனையாளர்களை எடுத்துக் காட்டுகிறார்.

வெறுங்கை என்பது
மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும்
மூலதனம்

எனக் கவிஞர் தாராபாரதியின் வரிகளை மேற்கோள் காட்டுகிறார்.

'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்றார் வள்ளுவர். 'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்றார் திருமூலர். 'உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்' என்றார் பாரதி. உள்ளத்தில் ஆழ்ந்து கரை கண்டோர், நம் முன்னோர். அத்தகைய உள்ளத்தின் அருமையை உணர்த்தவே, தன் முதல் நூலுக்கு 'உள்ளத்தில் உறுதியிருந்தால்...' எனச் சங்கர் தலைப்பு இட்டுள்ளார்.

சங்கரின் படைப்புகள், நிகழ்காலத்துடன் மிகவும் நெருங்கி இருக்கின்றன. தந்தையே மகளுடன் வன்கலவி கொண்டது; கார்கில் போர்; குப்பைத் தொட்டியில் குழந்தை; வெள்ள நிவாரண நிதி வாங்கச் சென்று நெரிசலில் மாண்டவர்கள், நவீன மருத்துவத்தின் போலி முகங்கள்; இராஜஸ்தானில் அடிமைப்படுத்தப்படும் தமிழ்நாட்டுக் குழந்தைத் தொழிலாளர்கள்... என நடப்புச் சம்பவங்கள் பலவற்றையும் அவர், வரிகளுக்குள் வார்த்திருக்கிறார். இவற்றின் மூலம், செய்திக் கவிதைகள் என்ற தனி வகைக்குச் சிறந்த பங்காற்றியுள்ளார்.