!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2021/01 - 2021/02 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, January 31, 2021

Marina Pigeons | மெரினா புறாக்கள்

மெரினா கடற்கரையில் புறாக்கள் பறந்து பறந்து செய்யும் சாகசங்களைப் பாருங்கள்.

#Shorts: Merry-go-round

மெரினா கடற்கரையில் கண்ட குடை ராட்டினம்.

Saturday, January 30, 2021

#Shorts: Horse Ride at Marina Beach

இன்று மெரினா கடற்கரையில் கண்ட குதிரை உலா.

முருகப் பெருமான் பாட்டுப் போட்டி

 நேயர்களுக்கு ஒரு போட்டி. முருகப் பெருமான் மீது 18 வரிகளுக்குள் ஒரு பாட்டு எழுதுங்கள். உங்கள் சொந்தப் பாடலாக, வேறு எங்கும் வெளிவராத, புதிய பாடலாக இருக்க வேண்டும். உங்கள் பாடல்களை annakannan@gmail.com என்ற முகவரிக்கு பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் அனுப்புங்கள். முதலிடம் பெறுபவருக்கு ஓவியர் ஸ்யாம் வரைந்த முருகப் பெருமான் ஓவியம், பரிசாக வழங்கப்படும். படைவீடுகள் கொண்ட பாட்டுடைத் தலைவன் மீது பாட்டு எழுதுங்கள். பட்டையைக் கிளப்புங்கள். இந்த ஓவியத்தை நம் கண்முன்னே ஸ்யாம் வரையும் அழகை இந்தப் பதிவின் இறுதியில் பாருங்கள். https://youtu.be/A9-aW2zdUyU

பஞ்சகவ்ய விளக்குகள் | Panjakavya Lamps

பஞ்சகவ்ய விளக்குகளை எவ்வாறு தயாரிக்கிறார்கள், அவற்றை எப்படி ஏற்ற வேண்டும், இந்த விளக்குகள் தரும் பலன்கள் என்னென்ன? இதோ விளக்குகிறார், நாமக்கல் பாலமூர்த்தி.

Friday, January 29, 2021

Cute Kitten Fight | பூனைக்குட்டிகளின் செல்லச் சண்டை

இன்று மாலை நடந்த, பூனைக்குட்டிகளின் செல்லச் சண்டை.

How to cut the Iron rod? | இரும்புக் கம்பியை வெட்டுவது எப்படி?

இரும்புக் கம்பியை வெட்டும் தொழில்நுட்பம்!

Thursday, January 28, 2021

என் தெய்வீக அனுபவங்கள் - ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் - 5 | Artist Shyam Interview - 5

தைப்பூசத்தை முன்னிட்டு, ஓவியர் ஸ்யாம் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, அவரது தெய்வீக அனுபவங்களைப் பகிர வேண்டினோம். சிவன் கண்சிமிட்டியதில் இருந்து, காசியில் கஞ்சா அடித்துச் சிவனைக் காண முயன்றது வரை பற்பல அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார். பேட்டியின் இறுதியில் நமக்காக முருகன் ஓவியம் ஒன்றை, நம் கண்முன்னே சில நிமிடங்களில் வரைந்து அளித்தார். நேயர்களுக்கு இந்த ஓவியத்தைப் பரிசாக வழங்க உள்ளோம். இதற்கென போட்டி ஒன்றை அறிவித்துள்ளோம். மேலும் விவரங்களைப் பேட்டியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். வெற்றிவேல், வீரவேல்.

அதோ தெரியுதே - பிரேமா நாராயணஸ்வாமி பாடல்

திருமதி பிரேமா நாராயணஸ்வாமி அவர்கள், தமிழ்க் கடவுளாம் முருகன் மீது அளவிலா அன்பு பூண்டவர். முருகு வருகுதே, தமிழ்க் குமர மாலை எனும் நூல்களைப் பக்தி மணம் கமழப் படைத்தவர். இந்தப் பதிவில், முருகன் மீது எளிமையும் அழகும் சுவையும் உயிர்ப்பும் நிறைந்த ஒரு பாடலை இயற்றி, அதற்கு இசையமைத்துப் பாடுகிறார். தேனாக இனிக்கும் அவரது குரலில் இந்தப் பாடலைக் கேளுங்கள்.

என்ன கவி பாடினாலும் - கிருஷ்ணகுமார் குரலில் | Enna Kavi Paadinalum

'என்ன கவி பாடினாலும்'

வங்கி மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற கிருஷ்ணகுமார், தபோவனம் சுவாமி ஞானானந்தா அவர்களைப் பாடி, இரண்டு குறுவட்டுகளை வெளியிட்டுள்ளார். இவருடைய தாயார் திருமதி மங்களம் சங்கரநாராயணன், புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. அகில இந்திய வானொலி நிலையக் கலைஞர். இவரது மரபணுக்களிலேயே இசை மரபு வளமாக உள்ளது. இந்தப் பதிவில், மதுரை சோமு பாடிப் புகழ்பெற்ற 'என்ன கவி பாடினாலும்' என்ற உருக்கமான பாடலைக் கிருஷ்ணகுமாரின் குரலில் கேட்டு மகிழுங்கள்.

திருப்புகழ் | முத்தைத்தரு | நேத்ரா ஜெயராமன் | Thiruppugazh | Nethra Jayaraman

அருணகிரிநாதர் அருளிய, திக்கெட்டும் புகழ் படைத்த திருப்புகழின் முத்தைத்தரு பாடலைச் செல்வி நேத்ரா ஜெயராமனின் தித்திக்கும் குரலில் கேட்டு மகிழுங்கள். இந்த இனிய பாடலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Wednesday, January 27, 2021

#Shorts: Black Drongo on a branch

இந்தக் காட்சியே ஓர் ஓவியம் போல் தெரிகிறதே!

#Shorts: Cuckoo spits Neem nut

வேப்பங்கொட்டையைத் துப்பும் குயில். இன்று காலையில் தற்செயலாகக் கண்ட காட்சி.

Tuesday, January 26, 2021

நாமக்கல் பாலமூர்த்தியின் வீட்டுத் தோட்டம் - 2

நம்மாழ்வாரின் மாணவர் நாமக்கல் பாலமூர்த்தி, தம் வீட்டுத் தோட்டத்தில் உள்ள, மருத்துவக் குணமுடைய மரங்கள், செடிகள், மூலிகைகள் ஆகியவற்றையும் அவற்றின் பயன்களையும் நமக்கு விளக்குகிறார்.

#Shorts: Yellow Butterfly on flower

Yellow Butterfly on flower

மாம்பூ | Mampoo | Mango Flowers

மாம்பூவே மைனாவே என இனிப் பாடலாம். நம் வீட்டு மாமரத்தை மாம்பூக்கள் அலங்கரிக்கின்றன.

Monday, January 25, 2021

நாமக்கல் பாலமூர்த்தியின் வீட்டுத் தோட்டம்

நம்மாழ்வாரின் மாணவர்களுள் ஒருவரான நாமக்கல் பாலமூர்த்தி, தம் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மூலிகைச் செடிகளையும் அவற்றின் பயன்களையும் நமக்கு விளக்குகிறார். மூலிகைச் செடிகள் தேவையுள்ளோர், அவரை அணுகலாம்.

வண்ணத்துப்பூச்சிகளின் காதல் - 4 | Love making of butterflies - 4

வண்ணத்துப்பூச்சிகளின் காதல்

Love making of butterflies

#Shorts: Flying Butterfly

Never settle. Keep on searching.

Sunday, January 24, 2021

Snowfall in England | இங்கிலாந்தில் பனிமழை

இங்கிலாந்தில் இன்று பனிமழை, பட்டையைக் கிளப்பி வருகிறது. இதைப் படமெடுத்து அனுப்பியதோடு, தமிழில் வர்ணனையும் செய்துள்ளார், நண்பர் சக்தி சக்திதாசன். 

அத்துடன் சுடச்சுட ஒரு கவிதையும் படைத்து அனுப்பியுள்ளார்.

திரண்டு சூழும் கருமேகங்கள்
பொழிவதெல்லாம் மழைநீரல்ல
கனமாய்ப் வெள்ளைத் துகள்களாய்
கம்பளமாய் விரியுது பனிப்பாயது
சோபையிழந்த குளிர்காலச் செடிகளில்
சோபனமளிக்கும் வெள்ளைப் பூக்களாய்
சேருமந்த பனித்துகள்கள் எமக்குச்
சொல்லும் கதைகள் பற்பலவே!
இயற்கையன்னை தீட்டுமிந்த
ஈடில்லா வனப்பு ஓவியங்களனைத்தும்
இதயத்தின் ஓரங்களை ஈரமாக்கிடும்
சொற்களிலடங்கா இகத்தின் அதிசயம்
சொல்லிடத் துடிக்கும் ஆனந்த ஆர்வம்
மெல்லெனப் பொழியும் பனிமழை
மேகத்தின் உணர்வுகள் குளிர்ந்திடலே!
இயற்கையின் அதிசயங்களை ஆராதித்து
இனியேனும் இயற்கையைப் பாதுகாப்போம்!

பனியில் நனைந்தபடியே கவிதையைப் பருகுங்கள்.

#Shorts: New leaves

புதிய இலைகள், புதிய மலர்ச்சி, புதிய தொடக்கம்...

Saturday, January 23, 2021

நம் வீட்டு வெற்றிலைக் கொடி | Betel | Vetrilai

நம் வீட்டுத் தோட்டத்தில் பற்றிப் படரும் வெற்றிலைக் கொடி, தொட்டுத் தொடரும் பந்தம்.

#Shorts: Amazing Thailand

தாய்லாந்து, அழகும் வளமும் மரபும் செழுமையும் கொண்டது. தொன்மையும் தொடர்ச்சியும் ஒருசேர அமைந்தது. தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு உடையது. ஆண்டாளின் திருப்பாவையை இன்றும் தாய்லாந்தில் பாடுகிறார்கள். இந்த நாட்டின் எழில்மிகு காட்சிகள் சிலவற்றை இங்கே பாருங்கள்.

படங்களுக்கு நன்றி - ஓவியர் ஸ்யாம்

Friday, January 22, 2021

#Shorts: Kitten Kiss

இரண்டு பூனைக் குட்டிகள் எப்படி முத்தம் கொடுக்கும், தெரியுமா?

#Shorts: Butterfly - 37 | வண்ணத்துப்பூச்சி - 37

இன்று கண்ட ஒரு வண்ணத்துப்பூச்சி.

#Shorts: Panju Mittai Seller

நம் தெருவுக்குத் தினமும் வருகின்ற பஞ்சு மிட்டாய் விற்பனையாளர். யாரும் வாங்காவிட்டாலும் தினமும் வருகின்றார். விடா முயற்சி.

Cuckoo on Guava Tree | கொய்யா மரத்துக் குயில்

இன்று கண்ட குயில்.

A Ride into Ohio

அமெரிக்காவின் ஓஹையோ மாநகருக்குள் ஓர் உலாப் போகலாம், வாருங்கள். பனி போர்த்திய வீடுகள், மகிழுந்துகள், சாலைகள், அலையடிக்கும் ஏரி, அதில் நீந்தும் பறவைகள், நீருக்குள் தலையை அமிழ்த்தி அவை பேசும் ரகசியங்கள்... இவையனைத்தையும் பார்த்து மகிழுங்கள். படமெடுத்து அனுப்பிய நண்பர் திலகா சுந்தருக்கு நன்றிகள்.

Thursday, January 21, 2021

ஆனந்தம் விளையாடும் வீடு | Stress Buster

This is a stress buster.

இதை ஒரு முறை பார்த்தால், கேட்டால் போதும், உங்கள் கவலைகள் எல்லாம் பறந்தே போகும்.

அபிராமி அந்தாதி | அபிராமி பதிகம் | பிரேமா நாராயணஸ்வாமி | Abhirami Anthadhi

திருமதி பிரேமா நாராயணஸ்வாமி அவர்கள், கலைப் பன்முகர். நல்ல ரசனையாளர். இயற்கையை நேசிப்பவர். திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர். இயல்பாகவே நல்ல குரல் வளம் மிக்கவர். அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி, அபிராமி பதிகம் ஆகிய இரண்டையும் 100 ராகங்களில், நூற்றுக்கும் மேற்பட்டோருக்குப் பயிற்றுவித்துள்ளார். இப்போதும் பலருக்குப் பயிற்றுவித்து வருகிறார். ஆதி சங்கர பகவத் பாதாளின் சௌந்தர்ய லஹரியையும் இவ்வாறே மூன்று பாடல்களுக்கு ஒரு ராகமென, 33 ராகங்களில் கற்றுக் கொடுத்து வருகிறார். இவரது இல்லம், எப்போதும் தெய்வீக மனத்துடன், அங்கு வருபவர்களுக்குத் தெய்வீக மனத்தையும் அருளையும் வாரி வழங்கும். 

இவர் கவிதாயினி. ஸ்ரீ இராமர் குறித்து, ஸ்ரீ இராமாயண கீதமாலை எனும் அருங்காவியத்தை இயற்றியுள்ளார். அழகான, எளிமையான தமிழில், படிப்போரின் இதயத்தை இராமரின் மேல் பக்தி மையலுறச் செய்யும் வகையில் படைத்துள்ளார். தமிழ்க் கடவுளாம் முருகன் மீது அளவிலா அன்பு பூண்டு, முருகு வருகுதே, தமிழ்க் குமர மாலை எனும் நூல்களைப் பக்தி மணம் கமழ, பாங்குடனே படைத்து அளித்துள்ளார். செல்வத் திருமகளாம் இலக்குமியின் பூஜா முறைகளை எளிய தமிழில் செம்மையாக வழங்கியுள்ளார். இவரை நமக்கு அறிமுகம் செய்த சுதா மாதவன் அவர்களுக்கு மிக்க நன்றி.

77 வயதில் அபாரமான குரல் வளத்துடன் பாடும் இவரது அற்புத கானங்களைக் கேட்டு மகிழுங்கள். 

Wednesday, January 20, 2021

#Shorts: Snowfall in New Jersey

Enjoy the lovely snowfall in New Jersey. Thanks to Lakshmi.


நியூ ஜெர்சியில் பூத்தூறலாய்ப் பனிப் பொழிவு. 


படமெடுத்து அனுப்பிய திருமதி லட்சுமிக்கு நன்றி.


#Shorts: Kalyana Kolu | Wedding Kolu

அண்மையில் சென்றுவந்த திருமண விழா ஒன்றில், இந்தக் கொலுவைக் கண்டோம். திருமணம் என்ற கருப்பொருளில் பொம்மைகள் அணிவகுத்திருந்தன. இதை ஏற்பாடு செய்த சமையல் ஏற்பாட்டாளர், தன் முகவரி அட்டையை அங்கே வைத்திருந்தார். இது திருமணத்துக்கு அழகு சேர்த்த அதே வேளையில், சமையல் கலைஞரையும் கவனிக்க வைத்தது. புத்திசாலித்தனமான முயற்சி (Branding). 

உண்மைச் சம்பவம் 3 - மும்பைப் பேருந்தில்

மும்பைப் பேருந்தில் எனக்கு நேர்ந்த ஓர் அனுபவத்தை இங்கே பகிர்ந்துள்ளேன். பார்த்து உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

Saturday, January 16, 2021

மால்பே கடற்கரை | Malpe Beach

கர்நாடக மாநிலம், உடுப்பியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள மால்பே கடற்கரையில் ஓர் உலா. படகுப் பயணம், பாராசூட் பயணம் உள்ளிட்ட பலவற்றையும் இங்கே கண்டு களிக்கலாம். இந்த இயல்பான காட்சிகளை நமக்காக எடுத்து வந்திருப்பவர், காயத்ரி சேஷா. 

Grandma at Gym

என் அம்மா சௌந்திரவல்லி (74 வயது), நேற்று உடற்பயிற்சி நிலையத்துக்குச் சென்றபோது...

Friday, January 15, 2021

கணுப் பொங்கல் கொண்டாட்டம் | Kanu Pongal Celebration

இன்று நம் இல்லத்தில் நடைபெற்ற கணுப் பொங்கல் கொண்டாட்டத்தின் சில காட்சிகள், இங்கே.

Thursday, January 14, 2021

பொங்கல் கோலங்கள் | Pongal Kolangal

மார்கழிக் கோலங்களை அடுத்து, பொலிவுமிகு பொங்கல் கோலங்களின் அணிவரிசையைப் பாருங்கள். கோலம் என்பது கலை வெளிப்பாடு மட்டுமில்லை. அது ஒரு ஊடகமும் கூட. அதன் வழியே கருத்துகளையும் செய்திகளையும் நம் வாழ்த்துகளையும் கூடத் தெரிவிக்கலாம். தெரிந்தவர்களுக்கு மட்டுமில்லை, நம் வாசலைக் கடந்து செல்லும் அத்தனை பேருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக்கலாம். பொங்கலோ பொங்கல்.

திருப்பாவை - 30 | வங்கக் கடல்கடைந்த | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai - 30

பாற்கடலைக் கடைந்த பரந்தாமனுக்காகத் தமிழ்ப் பாக்கடலைக் கடைந்து, திருப்பாவை எனும் அமுதம் தந்தவர் ஆண்டாள். தாமரைப் பூவிதழ்களால் பூமாலை தொடுத்து, அரங்கனுக்குச் சாற்றியவர் பட்டர்பிரான். இன்னமுதச் சொற்களால், பாசுரப் பாமாலை தொடுத்து, அரங்கன் உள்ளத்தில் இடம்பெற்றவர் கோதை. 

இந்தச் சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே பாடுவோர் எங்கும் என்றும் இன்புறுவர். செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால், நம்மை என்றும் காக்கட்டும். 

இந்த முப்பது பாடல்களையும் தம் இனிய குரலால் பாடிய செல்வி ஸ்வேதா அவர்களுக்கு என் சார்பிலும் வல்லமை வளர்தமிழ் மையத்தின் சார்பிலும் நன்றிகள், வாழ்த்துகள். தமிழ்கூறு நல்லுலகம், இவரைத் தக்க வகையில் பயன்படுத்த வேண்டும். திருப்பாவையின் இந்த நிறைவுப் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேட்டு மகிழுங்கள்.

மேன்மைகள் சூழ்க!

மேன்மைகள் சூழ்க! மெய்ப்பொருள் காண்க!
வாய்மை வெல்க! வல்லமை திகழ்க!
உண்மை ஒளிர்க! ஒருமை கூர்க!
வண்ணம் பொலிக! வாழ்க வாழ்க!

பாடல் இயற்றியவர் - அண்ணாகண்ணன்
பாடியவர் - கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியன்

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

Wednesday, January 13, 2021

திருப்பாவை - 29 | சிற்றஞ் சிறுகாலே | ஸ்வேதா குரலில் | ஆண்டாள்

கோவிந்தா, சிற்றஞ்சிறு காலையிலே வந்து உன்னைச் சேவிக்கின்றோம். உன் பொற்றாமரை அடியைப் போற்றுகின்றோம். உனக்குச் சேவகம் செய்யும் வாய்ப்பை வழங்கு. இந்தப் பிறவியில் மட்டுமின்றி என்றைக்கும், எழுகின்ற ஒவ்வொரு பிறப்பிலும் உன்னுடனே இருக்க வேண்டும். உனக்கு உரியவராய் இருக்க வேண்டும். நீயே எங்களை ஆட்கொள்ள வேண்டும். இதைத் தவிர வேறு விஷயங்களில் கவனம் செல்லாதவாறு நீயே எம்மைக் காத்தருள வேண்டும் எனப் பாவையர்கள் வேண்டுகிறார்கள். 

விடியலைச் சிற்றஞ்சிறு காலே என அழைக்கும்போதே செல்லம் கொஞ்சும் தொனி வந்துவிடுகிறது. குற்றேவல் எனச் சொல்லும்போது அதில் ஒரு குறும்பும் வெளிப்படுகிறது. எங்கள் கவனம் உன் மீதன்றி, வேறு பக்கம் போகக் கூடாது, அதற்கும் நீயே பொறுப்பு என உரிமையுடன் கேட்கும்போது இன்னும் நெருக்கம் அதிகமாகிறது. 

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்னுடனே இருக்க வேண்டும் என்றதால், மீண்டும் மீண்டும் பிறந்து இதேபோன்று இன்புற்று இருக்க வேண்டும் என்ற குறிப்பும் வெளிப்படுகிறது. கோதைப் பிராட்டி மீண்டும் தமிழ் மண்ணில் பிறந்து, இனிய கவிதைகள் யாக்க வேண்டும். உலகம் அதில் தோய வேண்டும். இதோ, இந்த 29ஆம் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

Tuesday, January 12, 2021

Coin Collection: World Tour thru Coins | நாணயங்கள் சேகரிப்பு

நாணயங்கள் வழியாகவே உலகம் சுற்றலாம். ஒவ்வொரு நாட்டையும் காணலாம், அந்த நாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். இதோ, உங்கள் முன்னால் எட்டு நாடுகள்.

நென்மேலி குரங்குகள் | Nenmeli Monkeys

இன்று அனுமனின் பிறந்த நாளில், நென்மேலி குரங்குகளைத் தரிசியுங்கள்.

#Shorts: Arise! Awake!

"Arise, awake, and stop not till the goal is reached" - Swami Vivekananda.

"எழுமின், விழிமின். கருதிய காரியம் கைகூடும் வரை உழைமின் உழைமின்" - சுவாமி விவேகானந்தர்

திருப்பாவை - 28 | கறவைகள் பின்சென்று | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai - 28

மாலே, நெடுமாலே, மணிவண்ணா, ஆழி மழைக்கண்ணா, பூவைப் பூவண்ணா, மலர்மார்பா, கோவிந்தா... எனத் திருப்பாவை முழுவதும் கண்ணனை ஏக வசனத்தில் ஆண்டாள் அழைக்கிறார். அது, உரிமை தந்த நெருக்கம். அதேபோன்று ஆயர்பாடியில் உள்ள பாவையர்களும் அழைக்கிறார்கள். அவளைப் போல் நாங்களும் உரிமையுடன் அழைக்கிறோம் என மகிழ்ச்சி இருந்தாலும், சிறு தயக்கம் அவர்களுக்கு. அப்பா, குறையொன்றும் இல்லாத கோவிந்தா, சிறுபேர் இட்டு அழைத்ததற்காகக் கோபிக்காதே என்கிறார்கள். Nick name என்பதைச் சுருக்கப் பெயர், செல்லப் பெயர் என இன்று அழைக்கிறோம். இதைச் சிறுபேர் என ஆண்டாள் வழங்குகிறார். நல்லதொரு சொல்லாக்கம். சிறுச்சிறிதே என முன்பே மொழிந்ததையும் இங்கே நினைவுகூரலாம்.

சீறாதே எனச் சொல்லாமல் சீறி அருளாதே என்கிறார். ஏனெனில், அவன் சீறினால், கோபித்தால், அதுவும் அவனது அருளே. நடப்பது அனைத்தும் அவனது ஆசீர்வாதம் என ஏற்கும் பக்குவம் பெற்ற உள்ளம், அது.

இந்தப் பாடலில் அறிவொன்றும் இல்லாத என்றும் அறியாத பிள்ளைகள் என்றும் சிறுபேர் அழைத்தனம் என மூன்று விதமாகச் சொல்கிறார். அறிவொன்றும் இல்லாத என்பதற்கு, உன்னைப் புரிந்துகொள்ளும் அறிவொன்றும் இல்லாத எனப் பொருள்கொள்ளலாம். கறவைகள் மேய்ப்போம், அவற்றின் பின்னே காட்டுக்குள் செல்வோம், எல்லோரும் சேர்ந்து உண்போம். இவற்றைத் தவிர வேறொன்றும் தெரியாது எனச் சொல்வதாகவும் கொள்ளலாம். இது ஒருவகை அவையடக்கம். 

அறிவொன்றும் இல்லாத எங்கள் குலத்தில் நீ பிறப்பதற்கு என்ன புண்ணியம் செய்துவிட்டோம் எனக் கண்ணனை நோக்கி ஆண்டாள் பாடுகிறார். அதையே ஆண்டாளை நோக்கி நாமும் பாடலாம். எங்கள் தமிழ்க்குலத்தில் நீ பிறப்பதற்கு என்ன புண்ணியம் செய்தோமோ. கோதை நாச்சியாரைக் கொண்டாடி, அவர் பின்செல்வோம். கறவைகள் பின்சென்று கானத்தைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள். 

Monday, January 11, 2021

A Trip to Koodlu Falls | கூட்லு அருவி | கூட்லு தீர்த்தம்

கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கூட்லு அருவியை இன்று காண்கின்றோம். கூட்லு தீர்த்தம் என அழைக்கப்படுகிற இந்த அருவி, உடுப்பியிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ளது. அடர்த்தியான கூட்லு காட்டுக்குள், கரடு முரடான பாதை வழியே சென்றால், இந்த அருவியைக் காணலாம். 300 அடி உயரத்திலிருந்து தண்ணீர் செங்குத்தாக விழுகின்றது. இந்தத் தண்ணீர் ஆறாக ஓடும் இடத்தில் படகிலும் செல்லலாம். இந்த வசீகர அருவியை நமக்காகப் படமெடுத்து வந்திருக்கிறார், காயத்ரி சேஷா. 

Sunday, January 10, 2021

திருப்பாவை - 26 | மாலே மணிவண்ணா | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai - 26

திருப்பாவையின் முந்தைய பாடலில், வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ என்றும் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் என்றும் சங்கொடு சக்கரம் ஏந்திய தடக்கையன் என்றும் பாடியவர் ஆண்டாள்.

கண்ணனுக்காகக் கட்டிய மாலையைத் தான் அணிந்து அழகு பார்த்து, அதன் பிறகுக் கோவிலுக்கு அனுப்பியவர் ஆண்டாள்.  

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே

என நாச்சியார் திருமொழியில் சங்கிடம் கேட்டவர் ஆண்டாள்.

பாவை நோன்புக்குச் சங்கு வேண்டும் என்றதும், பால்வண்ணத்தில் இருக்கும் உன் பாஞ்சசன்னியத்தைப் போல் சங்குகள் வேண்டும் என்கிறார். அதுவும் ஞாலத்தை எல்லாம் நடுங்கச் செய்யும் சங்கு. ஓம் என்ற நாதத்தின் விஸ்வரூபத்தைப் போல், ஓங்கி ஒலிக்கும் அந்தச் சங்கு. உறங்கிக் கிடந்த சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்தது போல், நமக்கு அறிவூட்டி விழிப்பூட்டும் அந்தச் சங்கு. அதன் பேரரவம் ஒலிக்கட்டும். மாலே மணிவண்ணனைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

இலண்டனில் காலை நடை - 3 | A Morning Walk in London - 3

இலண்டன் விம்பிள்டன் பகுதியில் உள்ள பிரமாண்டமான கார்ஃபீல்டு பூங்காவில் இன்று பயணிக்கிறோம். என் தங்கை ஜனனி, தன் மகன் அனிருத் உடன் நடந்தவாறு, வனம்போல் அடர்ந்த, இயற்கை எழில் சூழ்ந்த, அழகு செறிந்த இந்தப் பூங்காவை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். இதன் எல்லையில், தேம்ஸ்லிங்க் ரெயில்கள் ஓடுகின்றன. சட்டை அணிந்தும் முதுகுப் பையில் அமர்ந்தும்  ஜம்மென்று நாய்க்குட்டிகள் உலா வருகின்றன. அணில்களும் கிளிகளும் விரைகின்றன. மிடுக்காக மக்கள் நடக்கிறார்கள். மிதிவண்டியில் பலரும் பேசிச் சிரித்தவாறு செல்கிறார்கள். குழந்தைகள் விளையாட, ஏராளமான இடங்கள் உள்ளன. இதைப் பார்த்தால், கயிற்றிலும் நடக்க முடியும் என நம்புவீர்கள். வாருங்கள், ஜனனியுடன் இணைந்து நடப்போம்.

Saturday, January 09, 2021

திருப்பாவை - 25 | ஒருத்தி மகனாய் | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai - 25

உன்னைக் கொல்ல ஒருவன் பிறந்திருக்கிறான் என்ற செய்தியைக் கேட்டதும் கம்சன் வயிறு பற்றி எரிந்திருக்கிறது. இதைத்தான் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே என ஆண்டாள் வர்ணிக்கிறார். அடுத்தொரு பாடலில், பகைவருக்கு வெப்பம் கொடுக்கும் விமலா எனவும் பாடினார். அதே நேரம் பக்தர்கள் இந்தத் தாமோதரனை வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, அவர்கள் தீவினைகள் யாவும் தீயினில் தூசாகும் என்று முன்னரே பாடியிருக்கிறார். ஒரே தீ, பகைவரிடத்தில் ஒரு விதமாகவும் பக்தர்களிடையே ஒரு விதமாகவும் செயல்புரிகிறது. நம் வருத்தம் தீர்ந்து மகிழ்வதற்கு, இந்த நெடுமாலைச் சரண்புகுவோம். ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்தவனைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

நான் 'கமர்சியல் ஆர்டிஸ்ட்' தான் - ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் - 4 | Artist Shyam Interview - 4

"நான் 'கமர்சியல் ஆர்டிஸ்ட்' தான். வரலாற்றில் எனக்கு எந்த இடம் கிடைத்தாலும் சரிதான். மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமே என் குறிக்கோள்" என்பதை அழுத்தமாகச் சொல்கிறார் ஓவியர் ஸ்யாம். சமகால ஓவியர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், ரசிகர்கள், பேஸ்புக் நண்பர்கள் ஆகியோருடனான அனுபவங்களையும் மனம் திறந்து பேசுகிறார். டிஜிட்டல் ஓவியங்கள், பேஸ் ஆப், வரையும் கருவிகள் உள்பட ஓவியத் துறையில் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்த தன் பார்வையையும் பகிர்ந்துகொள்கிறார். எங்கள் வாழ்க்கையை உங்கள் ஓவியங்களில் காண்கிறோம் எனக் கசிந்துருகும் பல்லாயிரம் ரசிகர்களைப் பெற்ற ஸ்யாம், இதோ நம் முன்னே.

மார்கழிக் கோலம் - 4 | Margazhi Kolam - 4

கோலங்கள், நம் பண்பாட்டு அடையாளங்கள். நம் எழிலார்ந்த, தனித்துவம் மிக்க மரபின் சாட்சிகள். நம் ரசனையின், அழகியலின் துளிகள். நாம் இடும் ஒவ்வொரு புள்ளியும் நம் முன்னோர் இட்ட புள்ளியின் தொடர்ச்சி. நம் கைகளின் வழியே நம் பாட்டிகளும் பூட்டிகளும் கோலம் இடுகிறார்கள். இந்த வண்ணங்களும் வளைவுகளும் நூற்றாண்டுகளைக் கடந்து பயணிக்கின்றன. இங்கே அவற்றை ஆவணப்படுத்துகிறோம். இதோ, கோலமிகு தமிழகத்தின் கோலாகலக் கோலங்கள். கண்டு மகிழுங்கள். உங்கள் கோலங்களையும் எமக்கு அனுப்புங்கள்.

Friday, January 08, 2021

திருப்பாவை - 24 | அன்று இவ்வுலகம் | ஸ்வேதா குரலில் | ஆண்டாள்

கண்ணனின் அடிபோற்றி, திறல்போற்றி, புகழ்போற்றி, கழல்போற்றி வந்த ஆண்டாள், குன்று குடையாய் எடுத்ததைச் சொல்லும்போது குணம்போற்றி என்கிறார். வேலெடுத்து வென்று பகைகெடுக்கும் நிகழ்வுகள் அனைத்தும் வேண்டிய இடத்தில் காட்டும் வீரச் செயல்கள். ஆனால், அவனது உண்மையான குணம், பக்தர்களைக் காப்பது. மலையளவு இடர் வரினும் சுண்டு விரலின் நுனியில் அதைக் களைபவன் கண்ணன். 

ஒரு சிக்கலைப் பல வகைகளில் தீர்க்க முடியும் எனினும் எவரும் எதிர்பாராத விதத்தில், முற்றிலும் புதுமையான முறையில் அதைத் தீர்ப்பவன் கண்ணன். இத்தகைய வீறு படைத்த அதிவீரன் கண்ணனுக்கு என்றென்றும் சேவகம் புரிய அருள வேண்டும் என்பதைக் குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது என்ற வரிகளுடன் இணைத்துப் பார்க்கலாம். அன்று இவ்வுலகம் அளந்தவனைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் இன்று கேளுங்கள்.

இலண்டனில் காலை நடை - 2 | A Morning Walk in London - 2

தென்மேற்கு இலண்டனில் உள்ள கோலியர்ஸ் வுட் என்ற பகுதியில், வாண்டல் என்ற சிற்றாறு ஓடுகிறது. இது தேம்ஸ் நதியின் துணை நதியாகும். பார்க்க, நம்மூர் ஆறு போலவே இருக்கிறது.  இலண்டனில் வசிக்கும் என் தங்கை ஜனனி, இந்த அழகிய காட்சியைப் படமெடுத்து நமக்காக அனுப்பியுள்ளார். பார்த்து மகிழுங்கள்.

கூடு கட்டும் தாழைக் கோழி | Common Moorhen Nest

தாழைக் கோழி ஒன்று, தனது கூட்டினை எப்படிக் கட்டுகிறது என்று பாருங்கள்.

Asian Openbill Storks - 3 | நத்தைகுத்தி நாரைகள் - 3

நம் வீட்டின் பின்னால், வழக்கத்தை விட அதிகம் நெருங்கி வந்த நத்தைகுத்தி நாரைகளை இங்கே பார்க்கலாம். இந்தப் பதிவில் நாரைகள், மடையான், குயில் ஆகியவை பறக்கின்ற காட்சியையும் நீங்கள் கண்டு களிக்கலாம்.

Thursday, January 07, 2021

திருப்பாவை - 23 | மாரி மலைமுழைஞ்சில் | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai - 23

மழைக்காலத்தில் மலைக்குகையில் கிடந்துறங்கும் சிங்கம், உணர்வுற்று, தீயென விழித்து, மேனி உதறி, பிடரி சிலிர்த்து, தலை நிமிர்ந்து, மலையதிரக் கர்ச்சித்து கம்பீரமாக நடப்பது போல், நீல வண்ணக் கண்ணா, உன் கோயிலிலிருந்து கிளம்பி இந்தச் சிறப்பு மிக்க சிங்காசனத்தில் எழுந்தருளி, எமது தேவைகளைக் கேட்டு ஆராய்ந்து அருள வேண்டும் எனப் பாவையர்கள் வேண்டுகின்றார்கள்.

இதில் அறிவுற்றுத் தீவிழித்து என்பதை நாம் கவனிக்க வேண்டும். நல்லறிவை உற்று (அனுபவித்து) உணர்ந்தால், அஞ்ஞான இருளில் உறங்கும் நம் அகம் விழிக்கும். அதன் பிறகு நாம் சிங்கம்போல் தலைநிமிர்ந்து நடக்கலாம். நம் காரியம் யாவும் நிறைவேறும் என்பது உட்பொருள். ஆண்டாள் ஆராய்ந்து அருளிய இப்பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.


எனக்குப் பிடித்த பெண்கள் - ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் - 3 | Artist Shyam Interview - 3

ஓவியர் ஸ்யாம், இந்த அமர்வில் தனக்குப் பிடித்த பெண்கள், ஈர்த்த நடிகைகள், கவர்ந்த பேரழகிகள் ஆகியோரைப் பற்றி விவரிக்கிறார். தனது ஓவியங்களில் இடம்பெறும் பெண்கள் யார் யார்? வரையத் தூண்டும் முகங்கள் எவை? பெண்களின் சாமுத்ரிகா லட்சணங்கள், இராஜபாளையத்துத் தேவதைகள், அவர்களின் உடல்வாகு, நிர்வாண மேனிகளின் மீது சாக்லெட்டால் தான் வரைந்த 'பாடி பெயின்டிங்' உள்ளிட்ட பலவற்றையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

Wednesday, January 06, 2021

திருப்பாவை - 22 | அங்கண்மா ஞாலத்து | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppav...

தாங்கள் பெரியவர்கள் எனக் கருதிய பேரரசர்கள், நீயே உலகின் தலைவன் எனப் புரிந்து உன் காலடியில் பணிந்து நிற்கின்றார்கள். தோழிமார்கள் நாங்களும் கூட்டமாக வந்து வணங்கி நிற்கின்றோம். உறக்கத்திலிருந்து மெல்ல மெல்ல நீ விழி திறந்து பார்ப்பதைக் கண்ணாரக் காணக் காத்திருக்கிறோம். சூரிய சந்திரனைப் போன்ற உன் இரண்டு கண்களால் எங்களைச் சற்றே நோக்கினால், எங்கள் மேல் உள்ள சாபம் அனைத்தும் நீங்கிவிடுமே எனப் பாவையர்கள் பாடுகிறார்கள். 

தாமரைப்பூப் போன்ற சிவந்த கண்கள் என்ற ஆண்டாள், அடுத்த அடியிலேயே சூரியனைப் போலவும் சந்திரனைப் போலவும் இரு கண்களால் எம்மை நோக்கு என்கிறார். தாமரைப்பூ, கண்களின் வடிவிற்கு உவமையாக வந்தது. திங்களும் ஆதித்தியனும் பார்வையின் தன்மைக்கு உவமைகளாக வந்தன. அன்பர்களிடம் கனிவுடனும் பகைவர்களிடம் கடுமையாகவும் பார்ப்பது ஒரு பொருள். ஒரே நபரிடமே சூழலுக்கு ஏற்ப, கடுமையாகவும் கனிவுடனும் பார்ப்பது இன்னொரு பொருள். அன்பர் மேல் உள்ள சாபத்தைக் கடுமையால் நீக்கி, அருட்பார்வையால் வரங்கள் தருவான் கண்ணன். 

சலங்கையின் கிண்கிணிப் பரல்போல் கண்களைத் திறக்க வேண்டுகிறாள் ஆண்டாள். பரலுக்குள் இருக்கும் மணியும் விழிக்குள் இருக்கும் கருமணியும் ஒப்பிடத்தக்கவை. அந்தச் சிறு இடைவெளியில் மணி ஒலிக்கின்றது. கண்களும் சிறிது திறந்த நிலையிலும் அருள் பொழிகின்றன. கிண்கிணியின் பரலானது, எப்போதும் (சிறிது மட்டும்) திறந்திருப்பது. ஒருபோதும் மூடப்படாதது. கண்ணனின் உறக்கமும் அறிதுயிலே. உறக்கத்திலும் கூட அவன் கண்கள் மூடியது போலத் திறந்திருக்கும். கீற்றுப் போல அவனது பார்வை வெளிப்படும். இந்தக் கீற்று நிலையிலிருந்து தாமரைப் பூப்போல் தன் கண்களைப் பூரணமாகத் திறப்பான். சட்டென்று திறந்துவிடமாட்டான். மெல்ல மெல்லத் திறப்பான். இதைத்தான் சிறுச்சிறிதே என்கிறார் ஆண்டாள். சிறிது சிறிதாக என்பதை விட, சிறிதினும் சிறிதாக என இதற்குப் பொருள் கொள்ளலாம். ஆண்டாள் கண்ணுற்ற அந்த அருட்பார்வை, நம் மீதும் சற்றே சேரட்டும். நம் மீதுள்ள சாபங்கள் யாவும் நீங்கட்டும்.

இந்த இனிய பாடலைச் செல்வி ஸ்வேதாவின் கிண்கிணிக் குரலில் கேளுங்கள்.

மார்கழிக் கோலம் - 3 | Margazhi Kolam - 3

மார்கழிக் கோலங்களின் அடுத்த அணிவரிசை இதோ.
தொகுப்பு - சுதா மாதவன்

எருமைச் செல்வம் | Buffalo

நேற்று மாலை கடைக்குச் சென்றபோது, வழியில் இந்த எருமைகளைப் பார்த்தேன். எருமை சிறுவீடு என்றும் கனைத்து இளம் கற்றெருமை என்றும் எருமைகளைக் கொண்டாடிய ஆண்டாளை நினைத்துக்கொண்டேன். இதில் ஓர் எருமைக் கன்று துள்ளிக் குதித்து ஓடியது, மிக அழகு. பார்த்து மகிழுங்கள்.

மூன்று குயில்கள் | Three Cuckoos

இன்று காலையில் ஜன்னலைத் திறக்கும் முன், ஜன்னலை ஒட்டினாற்போல் குயில் ஒன்று அமர்ந்திருந்தது. சூரிய ஒளியில் அதன் மேனி மின்னியது. சிவந்த கண்ணோ, மாணிக்கமாய் மின்னியது. ஜன்னலைத் திறந்தால் பறந்துவிடும் என்பதால், கண்ணாடிக்கு உள்ளிருந்தே படம் பிடித்தேன். சற்று நேரத்தில் இன்னொரு குயில் வந்தது. இவையிரண்டையும் விரட்டிவிட்டு, மூன்றாவது குயிலும் அங்கு வந்து அமர்ந்தது. இவற்றின் அசைவுகள் தனி அழகு. பார்த்து மகிழுங்கள்.

Tuesday, January 05, 2021

திருப்பாவை - 21 | ஏற்ற கலங்கள் | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai - 21

திருப்பாவையின் 3ஆவது பாடலில் வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் என அழைத்த ஆண்டாள், 21ஆவது பாடலில் மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் என்கிறார். பசுவை நினைக்கும்போதே அதன் வள்ளல் தன்மை, ஆண்டாள் நினைவில் எழுகிறது. ஒவ்வொரு முறையும் வள்ளல் பெரும்பசுக்கள் எனப் போற்றுகிறார். இங்கே பெரும்பசுக்கள் என்பதற்கு, அளவில் பெரிய பசுக்கள் எனப் பொருள் இல்லை. பெருமை மிக்க, பேருள்ளம் படைத்த பசுக்கள் எனப் பொருள். 

முந்தைய பாடலில் வாங்கக் குடம்நிறைக்கும் என்றார். பெரும் குடத்தையே நீட்டினாலும் அதை நிறைக்கின்றது அந்தப் பசு. அது ஒரு வகை வள்ளல் தன்மை. 21ஆவது பாடலில் சிறியது, பெரியது என எந்தக் கலத்தை வைத்தாலும் நிறைப்பதோடு நிறுத்தாமல் வழிய வழியப் பாலைச் சொரிகின்றது. இது இன்னொரு வகை வள்ளல்தன்மை. பக்தர்கள் எத்தகையவராய் இருந்தாலும் அவர்களுக்கு அருள்பொழிகின்ற கண்ணனின் உள்ளத்தை ஆண்டாள் குறிப்பால் உணர்த்துகிறார். தமிழமுதை வாரி வழங்குகின்ற வள்ளல் கோதையின் 21ஆவது பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

One day at Coorg | கூர்க்கில் ஒரு நாள்

கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில், 2021 புத்தாண்டின் முதல் நாள் அன்று சுற்றுலா சென்று வந்த செல்வி காயத்ரி சேஷா, அங்கே சில காட்சிகளை நமக்கு விவரிக்கிறார்.

திருவெம்பாவை - 20 | போற்றி அருளுக | ஸ்ருதி நடராஜன் குரலில் | Thiruvembav...

திருவெம்பாவை - 20

மாணிக்கவாசகர்

பாடியவர் - ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ்

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.

பொழிப்புரை:

எப்பொருளுக்கும் முதலாயுள்ள உன் திருவடி மலருக்கு வணக்கம். எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகளுக்கு வணக்கம்; எல்லாவுயிர்களுக்கும் தோன்றுதற்குக் காரணமாகிய பொன்போன்ற திருவடிகளுக்கு வணக்கம், எல்லாவுயிர் களுக்கும் நிலைபெறுதற்குரிய பாதுகாப்பாகிய அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் முடிவு எய்துதற்குக் காரணமாகிய திருவடிகள் இரண்டிற்கும் வணக்கம். திருமாலும், பிரமனும், காணமுடியாத திருவடித் தாமரை மலருக்கு வணக்கம். நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற தாமரை மலர்போலும் திருவடி களுக்கு வணக்கம். இங்ஙனம் கூறிப் போற்றி இறைவனை வணங்கி, நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக.

உரைக்கு நன்றி - தேவாரம் தளம் (Thevaaram dot org)
படத்திற்கு நன்றி - விக்கிப்பீடியா

Monday, January 04, 2021

திருவெம்பாவை - 19 | உங்கையிற் பிள்ளை | ஸ்ருதி நடராஜன் குரலில் | Thiruvembavai - 19

திருவெம்பாவை - 19

மாணிக்கவாசகர்

பாடியவர் - ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ்

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

பொழிப்புரை:

எங்கள் தலைவனே! உன் கையில், என் குழந்தை அடைக்கலப் பொருளாகும் என்று வழங்கிவரும் அப்பழமொழியைப் புதுப்பிக்கின்றோம் என்று அஞ்சி, உனக்கு ஒரு விண்ணப்பத்தைச் செய்கின்றோம். கேட்டருள்வாயாக. எங்கள் தனங்கள் உன்னடியவர் அல்லாதார் தோள்களைத் தழுவாதிருக்க; எம் கைகள் உனக்கன்றிப் பிறதேவர்க்கு எவ்வகையான தொண்டும் செய்யாதிருக்க; இரவும், பகலும், எம் கண்கள் உன்னையன்றி வேறு எந்தப் பொருளையும் காணாதிருக்க; இந்நிலவுலகில் இம்முறையே எங்கள் தலைவனே! நீ எங்களுக்கு அருளுவாயாயின், சூரியன் எத்திக்கில் உதித்தால் எங்களுக்கு என்ன?

உரைக்கு நன்றி - தேவாரம் தளம் (Thevaaram dot org)
படத்திற்கு நன்றி - விக்கிப்பீடியா

திருப்பாவை - 20 | முப்பத்து மூவர் | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai - 20

முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையில் நப்பின்னையை மூன்று இடங்களில் ஆண்டாள் பெயர் குறிப்பிட்டுப் பாடுகிறார். அதுவும் அடுத்தடுத்த மூன்று பாடல்களில் நப்பின்னை தோன்றுகிறார். நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய் (பாசுரம் 18) என்றும் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை (பாசுரம் 19) என்றும் நப்பின்னை நங்காய் திருவே (பாசுரம் 20) என்றும் வாயாரப் பாடுகிறார். கந்தம் கமழும் குழலி, மைத்தடம் கண்ணினாய், செப்பென்ன மென்முலைச் செவ்வாய் என்றெல்லாம் வர்ணிக்கிறார். 

திருமகளே துயிலெழு, உன் மைத்துனன் பேர்பாடு, உன் மணாளனை எழுப்பு, செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிக்கக் கதவைத் திற என்றெல்லாம் வேண்டுகிறார். இந்தப் பாடலில் விசிறியும் கண்ணாடியும் தருக என்றும் கேட்கிறார். திருவே துயிலெழாய் என உருக்கம் கொண்டாடுகிறார். இதன்வழியே திருப்பாவையின் திருவே நப்பின்னை என்றும் உளம் கொள்ளலாம். தமிழ்க்குலத்தின் திருவாய் விளங்கும் ஆண்டாளின் 20ஆம் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

நான் ஏன் ஓடிப் போனேன்? - ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் - 2 | Artist Shyam Interview - 2

ஓவியர் ஸ்யாம், யாரிடமும் சொல்லாமல் 15 வயதில், கால்சட்டை அணிந்த சிறுவனாக, ஊரிலிருந்து சென்னைக்கு ஓடிவந்தார். ஏன் வந்தார்? சென்னையில் யாரையெல்லாம் சந்தித்தார்? எங்கே தங்கினார்? இதே போன்று பல முறைகள் அவர், சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போயிருக்கிறார். அப்போது என்ன நடந்தது? 12 வயதில் காஷ்மீருக்குச் சென்றது ஏன்? அங்கே அவருக்கு ஏற்பட்ட திடீர்த் திருப்பங்கள் என்னென்ன? இந்த அனுபவங்களை எல்லாம் இந்த அமர்வில் ஸ்யாம் மிகச் சுவையாக விவரிக்கிறார். 

Sunday, January 03, 2021

திருப்பாவை - 19 | குத்து விளக்கெரிய | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai - 19

திரைக்கதை எழுதும்போது, காட்சியை அணு அணுவாக விவரிப்பார்கள். எழுத்திலும் குறிப்பார்கள். அந்தக் காட்சியில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், பேசும் வசனம், அவர்கள் அணிந்திருக்கும் உடை, அந்தக் காட்சியில் இடம்பெறும் இதர பொருட்கள் என ஒவ்வொன்றையும் வர்ணித்து, காட்சியை நம் கண்முன் கொண்டு வருவார்கள். இவ்வாறு திரைக்கதை எழுதுவதில் ஆண்டாள், ஒரு முன்னோடி. சங்க இலக்கியத்திலும் இப்படியான வர்ணனைகள், பல உண்டு. 

திருப்பாவையின் 19ஆவது பாடலில் ஆண்டாள் இப்படியாக விவரிக்கிறார். அழகு துலங்கும் குத்து விளக்கு எரிகிறது. அதன் சுடரொளி, அறையைப் பேரழகாய் ஆக்குகிறது. எதிரே ஓர் அழகிய கட்டில். அதன் கால்கள், தந்தத்தால் செய்யப்பட்டுள்ளன. கட்டில் மீது மெத்தென்ற படுக்கை. அதன் மீது நப்பின்னை படுத்திருக்கிறாள். அவள் கூந்தலில் கொத்தாக மலர்ந்த வண்ண மலர்கள். அவற்றிலிருந்து நறுமணம் கமழ்கின்றது. அவள் மார்பின் மீது கண்ணன் தலைசாய்த்து, வாய்மூடி லயிக்கிறான். அவன் மார்பில் மலர்மாலைகளைச் சூடியிருக்கிறான். நப்பின்னையின் கூந்தல் மலர்களும் அவன் மார்பில் உதிர்ந்து கிடக்கின்றன.  

நப்பின்னையின் கண்களோ, மையால் வரைந்த தடம் கொண்டவை. வாயிலில் தோழிகள் வந்து எழுப்புகிறார்கள். அவளது மை வரைந்த கண்ணைத் திறந்து பார்க்கிறாள். ஆனால், மார்பில் தலைசாய்த்து உறங்கும் கண்ணனை எழுப்பினால், அவன் பிரிந்து சென்றுவிடுவான். எனவே நப்பின்னை அவனை எழுப்ப மறுக்கிறாள். மூச்சையே மெல்ல விடுகிறாள். அவளது மூச்சுக்கு ஏற்ப, அவன் முகம் ஏறி இறங்குகிறது. 'உனது நலனுக்காகக் கண்ணனை எழுப்பாமல் இருப்பதா? இது நியாயம் இல்லை. உன் இயல்பும் இல்லை' எனத் தோழிகள் செல்லமாகக் கோபிக்கிறார்கள்.

இந்த அழகிய பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

திருவெம்பாவை - 18 | அண்ணா மலையான் | ஸ்ருதி நடராஜன் குரலில் | Thiruvembavai - 18

திருவெம்பாவை - 18

மாணிக்கவாசகர்

பாடியவர் - ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ்

அண்ணா மலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம்அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

பொழிப்புரை:

தோழியே! திரு அண்ணாமலை அண்ணலது திருவடித் தாமரையைப் போய் வணங்குகின்ற தேவர்களது முடியிலுள்ள இரத்தினங்களின் தொகுதி, ஒளி இழந்தாற்போல கண்களுக்கு நிறையும் சூரியன் தனது கிரணங்களுடன் தோன்றினமையால், இருளானது மறைய நட்சத்திரங்கள் குளிர்ச்சி பொருந்திய ஒளி குன்றி ஒழிய அப்போழ்தில், பெண்ணாகியும், ஆணாகியும், அலியாகியும், விளங்குகின்ற ஒளி பொருந்திய ஆகாயமாகியும் பூமியாகியும் இத்தனைக்கும் வேறுபட்டும் கண்ணால் பருகப்படுகின்ற அமுதமாய் நின்றவனாகிய இறைவனது திருவடியைப் பாடி இப்புது நீரில் வீழ்ந்து ஆடுவாயாக.

உரைக்கு நன்றி - தேவாரம் தளம் (Thevaaram dot org)
படத்திற்கு நன்றி - விக்கிப்பீடியா

15 வயதில் வீடு வாங்கினேன் - ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் - 1 | Artist Shyam Interview - 1

ஸ்யாம், ஓவிய உலகின் சச்சின் டெண்டுல்கர். மிக அழகான, இயல்பான, நேர்த்தியான ஓவியங்களை மிக வேகமாக வரையக்கூடியவர். ஒரே நாளில் 50 - 100 என வரையக்கூடிய ஆற்றல் படைத்தவர். இதுவரை இலட்சக்கணக்கான  ஓவியங்களை வரைந்திருப்பவர். தமிழ்ப் பத்திரிகை உலகில், பதிப்புலகில் அழுத்தமான முத்திரை பதித்தவர். ஆயினும் வெற்றி என்ற சொல்லையே பொருட்படுத்தாமல் பயணிப்பவர். 

15 வயதில் இராஜபாளையத்திலிருந்து சென்னைக்கு ஓடிவந்தவர். வந்த மூன்றாவது நாளே குமுதத்திற்குப் படம் போட்டவர். வந்த மூன்றாவது மாதமே சென்னையில் வீடு வாங்கியவர். இவையெல்லாம் திட்டமிடாமல், தற்செயலாக நடந்தவை. இப்போது நினைத்தாலும் உத்வேகம் கொள்ள வைக்கும் அந்தச் சம்பவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவருடனான உற்சாக உரையாடலைப் பாருங்கள்.

Saturday, January 02, 2021

திருப்பாவை - 18 | உந்து மதகளிற்றன் | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai - 18

கண்ணனுக்கு ஆண்டாள் வழங்கிய அடைமொழிகள் தனித்த அழகுடையவை. கூர்வேல் கொடுந்தொழிலன், யசோதை இளஞ்சிங்கம், கதிர்மதியம் போல்முகத்தான், ஓங்கி உலகளந்த உத்தமன், ஆழி மழைக்கண்ணா!, ஊழி முதல்வன், மாயன், மாமாயன், வடமதுரை மைந்தன், யமுனைத் துறைவன், மாவாய் பிளந்தான், மல்லரை மாட்டிய தேவாதி தேவன், முகில்வண்ணன், மனத்துக்கு இனியான், புள்ளின் வாய் கீண்டான், பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான், சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன், பங்கயக் கண்ணான், வல்லானை கொன்றான், உம்பர் கோமான்... எனப் பலவாறாகக் கண்ணனைப் பாடிய ஆண்டாள், இந்த 18ஆம் பாடலில், உந்து மதகளிற்றன், ஓடாத தோள்வலியன் என அடுத்து எடுத்துப் பாடுகிறார். எண்ணி எண்ணி மகிழத்தக்க இனிய இப்பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

Friday, January 01, 2021

திருவெம்பாவை - 17 | செங்கண் அவன்பால் | ஸ்ருதி நடராஜன் குரலில் | Thiruvembavai - 17

திருவெம்பாவை - 17

மாணிக்கவாசகர்

பாடியவர் - ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ்

செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

பொழிப்புரை:

மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முக னிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, ஒப்பற்ற ஆனந்தம் நம்மிடத்து ஆகும்படி, நம்மைப் பெருமைப் படுத்தி, இவ்வுலகிலே நம் வீடுகள் தோறும் எழுந்தருளி வந்து, செந்தாமரை போன்ற அழகிய திருவடியைக் கொடுத்தருளு கின்ற வீரனை, அழகிய கருணை நோக்குடைய மன்னனை, அடிமை களாகிய நமக்கு அமுதம் போல்வானை, நம் தலைவனைப் புகழ்ந்து பாடி, நன்மைகள் பெருக, தாமரை மலர் நிறைந்த நீரில் குதித்து ஆடுவாயாக.

உரைக்கு நன்றி - தேவாரம் தளம் (Thevaaram dot org)
படத்திற்கு நன்றி - விக்கிப்பீடியா

Elephant Bath | யானைக் குளியல்

கர்நாடக மாநிலம், கூர்க் பகுதியில் சபாரி யானைகள் குளிக்கும் அழகிய, அரிய காட்சி இதோ. 

வர்ணனை - காயத்ரி சேஷா.