!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2005 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, December 24, 2005

தவமாய் தவமிருந்து - திரை விமர்சனம்

சேரன், மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளார்.

இதுவரை குடும்பக் கதைகளை எடுத்தவர்கள், அதை ஒரு மேடை நாடகம்போல் ஆக்கியிருக்க, முதன்முறையாக ரத்தமும் சதையுமாக ஒரு கதையை நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார் சேரன்.

சிறு அச்சகம் நடத்தும் முத்தையாவாக ராஜ்கிரண்; அவர் மனைவி சாரதாவாகச் சரண்யா; இவர்களின் இரு பிள்ளைகளாக ராமநாதன்(செந்தில்), ராமýங்கம்(சேரன்). ராமýங்கத்தின் காதý வசந்தியாகப் புதுமுகம் பத்மப்ரியா. இவர்களே முக்கிய பாத்திரங்கள்.

தான் படிக்காவிட்டாலும் தன் மகன்களைப் பெரிய படிப்புப் படிக்கவைத்து, உசந்த இடத்தில் வைத்துவிட வேண்டும் என்று அல்லும் பகலும் பாடு படுகிறார் ராஜ்கிரண். அவர்களுக்குத் திருக்குறள் சொல்ýக் கொடுத்து, அவர்கள் கேட்டதை எல்லாம் கடன்பட்டேனும் வாங்கிக் கொடுத்து, அவர்களை உல்லாசப் பயணம் அழைத்துச் சென்று பெரிய கனவாளியாக ராஜ்கிரண் திகழ்கிறார். பிள்ளைகள் வளர்கிறார்கள். மூத்த மகனுக்கு வேலை வாங்கித் தந்து, திருமணமும் செய்து வைக்கிறார். அவன், வந்தவள் சொல்கேட்டு வீட்டை விட்டுப் போய்விடுகிறான்.

இளைய மகன் சேரனோ, கல்லூரியில் உடன் படித்த பத்மப்ரியாவைக் காதýக்கிறார். அதன் விளைவாய் பத்மப்ரியா கர்ப்பமாகிவிடுகிறார். வேறு வழியில்லாமல் இருவரும் ஊரை விட்டுச் சென்னைக்கு ஓடி வருகிறார்கள். அங்கு வேலை கிடைக்காத சேரன், அல்லல் படுகிறார். அவருக்குக் குழந்தை பிறந்ததும் அப்பா வந்து பார்க்கிறார். பிறகு சேரனும் பிரியாவும் ஊருக்கே சென்று விடுகிறார்கள். அதன் பிறகு நல்ல வேலை கிடைத்த சேரன், தலையெடுக்கிறார். தன் பெற்றோரைத் தன்னுடன் வைத்துக் காப்பாற்றுகிறார். குடும்பம் மீண்டும் சேருகிறது.

இதுதான் கதை. இதை ஒரு திரைக் காவியமாகச் சேரன் உருவாக்கியிருக்கிறார். 'திரையில் ஒரு நாவல்' என்று இயக்குநர் இதைக் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானதே. தமிழின் மிகச் சிறந்த எதார்த்தவியல் திரைப்படங்களின் வரிசையில் இப்படமும் சேர்ந்திருக்கிறது.

இந்த அரிய படத்திற்காக முதýல் நாம் பாராட்ட வேண்டியவர், சேரன். அவருடைய கதைத் தேர்வு, நடிகர்களின் தேர்வு, அவர்களை அவர் இயக்கிய விதம், கதைக்காக அவர் எடுத்துக்கொண்ட நில அமைப்புகள், பின்னணிகள், வசனம், இசை, ஒளிப்பதிவு... என ஒவ்வொன்றும் மிகச் சிறப்பாக உள்ளது. இவை அனைத்திற்கும் மேலாகச் சேரனின் கனவுதான் மெய்சிýர்க்க வைக்கிறது. அப்பா என்ற உறவினை மையப்படுத்தி, படம் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்கள் அப்பா, அம்மாக்களை நினைத்துப் பார்க்க வைத்துள்ளதில் இயக்குநராகச் சேரன் வெற்றி பெற்றுள்ளார். நடிகராகவும் பல இடங்களில் மின்னுகிறார்.

அடுத்த பாராட்டு, ராஜ்கிரணுக்கு. பாசமுள்ள, தன் மக்களுக்காக ஆயிரம் சுமைகளைச் சிரித்தபடி சுமக்கும் மென்மையான அப்பாவாக ராஜ்கிரண் கலக்கியிருக்கிறார். இவரைப் போல் தனக்கும் ஒரு அப்பா இல்லையே என்று படம் பார்ப்பவர்களை நினைக்க வைத்திருக்கிறார். அவருக்குத் துணையாகச் சரண்யாவும் பின்னி எடுத்திருக்கிறார். கிராமத்துச் சூழ்நிலை, பேச்சு வழக்கு, பழக்க வழக்கம் அனைத்தையும் இவர்களின் அசைவுகளில் காண முடிகிறது.

நாயகி என்றாலே உடலைக் காட்டித்தான் நடிக்கவேண்டும் என்று இல்லாமல் புதுமுகம் பத்மப்ரியா, மிகவும் அமைதியாக நடித்துள்ளார். சேரனின் அண்ணனாகப் புதுமுகம் செந்தில்(ரேடியோ மிர்ச்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்), இயல்பாக நடித்துள்ளார். அவர் மனைவியாக நடித்துள்ள புதுமுகம் மீனாள், பொறாமையும் தனிக் குடித்தனம் போகும் எண்ணமும் கொண்ட மருமகளாக விளாசியிருக்கிறார். அவருடைய ஒவ்வொரு அசைவிலும் அந்தக் குணம் வெளிப்படுவதை மெச்சத்தான் வேண்டும்.

இன்னும் படத்தில் நடித்துள்ள பலரும் சிறப்பாகவே தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். பாடல்கள் பரவாயில்லை ரகம். சேரன் எழுதிய 'என்ன பார்க்கிறாய்' என்ற பாடல், சிறப்பாக உள்ளது. இசை: சபேஷ், முரளி.

பெற்றோரைத் தவிக்கவிட்டுச் செல்லும் பிள்ளைகள், அவர்களின் கண்ணீரை உணரவேண்டும்; முதுமைக் காலத்தில் அவர்களை அன்போடும் ஆதரவோடும் அரவணைக்க வேண்டும் என்பதைப் பின்பகுதியில் வýயுறுத்தியிருக்கிறார். அது, சேரன் சொல்லும் முக்கிய செய்தி. படத்தின் நீளம் அதிகரித்த போது, எந்தப் பகுதியை வெட்டுவது என்று யோசித்த சேரன், இந்தக் காட்சிகளை வெட்டாமல் வேறு காட்சிகளை வெட்டியிருக்கிறார். இதிýருந்தே இந்தப் பகுதிக்கு அவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பது தெரிகிறது.

படம் கொஞ்சம் மெதுவாய் நகருகிறது, நீளம் அதிகமாய் இருக்கிறது என்று விமர்சகர்கள் கூறக் கூடும். ஆனால், இத்தகைய நல்ல படத்திற்காக இந்தச் சிறிய விஷயங்களைப் பெரிதுபடுத்தக் கூடாது. இந்தப் படத்திற்காகச் சேரனுக்கும் ராஜ்கிரணுக்கும் விருது நிச்சயம்.


நன்றி: தமிழ்சிஃபி

Friday, December 09, 2005

கண்ட நாள் முதல் - திரை விமர்சனம்

பிரசன்னாவுக்கும் லைலாவுக்கும் குழந்தைப் பருவத்தில் இருந்தே மோதல். அந்த வயதில் லைலா, பிரசன்னாவின் கன்னத்தைக் கடித்துக் காயப்படுத்தி விடுகிறார். அந்த மோதல், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரிப் பருவத்திலும் தொடர்கிறது. பாட்டுப் போட்டிக்கு வந்த லைலாவைத் தற்செயலாக நாய்வண்டியில் அழைத்துவருவதும் சிறப்பாகப் பாடிய அவருக்கு ஆறுதல் பரிசு தந்து வெறுப்பேற்றுவதும் சுவையான காட்சியமைப்புகள்.

பிரசன்னாவின் நண்பர் கார்த்திக் குமார், அமெரிக்காவில் பணியாற்றுகிறார். அவருக்காகப் பெண்பார்க்க வரும் பிரசன்னாவுக்கு திடீர் அதிர்ச்சி. அங்கு நின்றவர், லைலா. அந்தப் பெண் வேண்டாம் என்று பிரசன்னா வத்தி வைத்துப் பார்க்கிறார். ஆனால், அது பத்திக்கொள்ளவில்லை. கார்த்திக்கைக் கவிழ்ப்பதற்காக லைலா, சாந்த சொரூபியாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறார். அதை உடைத்து, லைலாவின் முரட்டுத்தனத்தையும் பிடிவாதக் குணத்தையும் வெளிப்படுத்த பிரசன்னா முயல்கிறார். அந்தக் காட்சிகள் அருமையாக வந்துள்ளன.

லைலாவுடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் கார்த்திக், அந்தத் திருமணம் வேண்டாம் என்று அமெரிக்கா சென்றுவிடுகிறார். இப்பவே எனக்காகச் சாந்தமாக நடிக்கும் இவள், வாழ்க்கை முழுவதும் எப்படி ஹானஸ்ட்டாக இருப்பாள்? என்ற கேள்வி கேட்டதோடு அவளுக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி இல்லை என்கிற போது, அமெரிக்க ஆணின் பிரதிநிதியாகவே கார்த்திக் நிற்கிறார்.

கார்த்திக் நகர்ந்ததும் லைலாவின் தங்கை, தன் காதலனுடன் ஓடிப் போகிறாள். அதைக் கேட்டு லைலாவின் அம்மா(ரேவதி), மயங்கி விழுகிறார். அந்த நேரத்தில் பிரசன்னா, ஓடி வந்து உற்ற வழிகளில் எல்லாம் உதவுகிறார். லைலாவின் மனத்தில் இடம் பிடிக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். ஆனால், வெளியே சொல்லிக்கொள்ளவில்லை. இருவருக்கும் ஈகோ. அவன் / அவள் முதலில் சொல்லட்டும் என்று இருவருமே நினைக்கிறார்கள்.

இந்த நேரத்தில் ஒரு திடீர் திருப்பம். கல்யாணம் வேண்டாம் என்று சென்ற கார்த்திக், திரும்பி வந்து லைலாவைப் புரிந்துகொண்டதாகவும் அவளைக் கல்யாணம் செய்துகொள்ளப் போவதாகவும் கூறுகிறார். முதலில் சண்டை போட்டுக்கொண்டு, இப்போது காதலித்துக்கொண்டிருக்கும் பிரசன்னாவும் லைலாவும் என்ன செய்கிறார்கள்? அதுதான் படத்தின் இறுதிக் கட்டம்.

படம், மிக இயல்பாக இருக்கிறது. அநாவசிய சண்டைக் காட்சிகள், நகைச்சுவைக்கு எனத் தனி டிராக், சென்டிமென்ட், என எதுவும் இல்லை. குறும்பும் கேலிப் பேச்சும் ஜாலிப் பேச்சுமாகப் படம் இளமைத் துடிப்போடு இருக்கிறது.

பிரசன்னா, ஜெயராமின் தம்பி போல் இருக்கிறார். மிகவும் பொறுப்போடு நடித்திருக்கிறார். ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் பிரகாஷ்ராஜின் நடிப்புப் பாதிப்பு தெரிகிறது. தெனாலி படத்தில் ஜெயராம், கமலை விரட்டச் செய்த முயற்சிகள் நினைவுக்கு வருகின்றன. மற்றபடி தூள் கிளப்பியிருக்கிறார். லைலாவைப் பழிவாங்க அவர் போடும் திட்டங்கள் சுவாரசியமாக உள்ளன.

லைலா, விளையாட்டுப் பெண்ணாகக் கலக்கியிருக்கிறார். பிரசன்னாவே சொல்வதுபோல் அவள் சிரிக்கும் போது விழும் கன்னக் குழி மிகவும் அழகாக இருக்கிறது. கோபத்திலும் அவர் அழகாகத்தான் இருக்கிறார்.

'கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி' என்ற தாமரையின் முதல் பாடலே, உருக்குகிறது. மென்மையான இசையால் யுவன்சங்கர் ராஜா வருடி விடுகிறார். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, படத்தோடு ஒன்றவைக்கிறது. ஈ. ராமதாசின் வசனம், தனியே துருத்திக்கொண்டு இல்லாமல் அந்தந்தப் பாத்திரங்களோடு ஒத்துப் போகிறது. தோட்டா தரணியின் கலையமைப்புகள், சிறப்பு. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர், பிரியா வி. இவரை அறிமுக இயக்குநர் என்றே சொல்ல முடியாத அளவுக்குப் படம் இயல்பாய், துடிப்பாய், இளமையாய் உள்ளது.

பிரகாஷ்ராஜ், படத்தின் தயாரிப்பாளர். இளைஞர்களின் மீதும் புதிய திறமையாளர்களின் மீதும் அவர் வைத்துள்ள நம்பிக்கை பாராட்டத்தக்கது. பொழுதுபோக்கை நோக்கமாகக் கொண்டிருந்தாலும் அதிலும் இவ்வளவு அழுத்தமான படத்தைக் கொடுத்ததற்காக அவரையும் இயக்குநரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். தான் தயாரிக்கும் படம் என்பதால் தானே நடிக்கவேண்டும் என்று நினைக்காமல் மற்றவருக்குச் சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்.

'அதிகாலை காஃபி போல அழகான சினிமா' என்ற அடைமொழியுடன் இந்தப் படம் வந்திருக்கிறது. உண்மையிலேயே காஃபி சூடாக, சுவையாக இருக்கிறது.

நன்றி: தமிழ்சிஃபி

Monday, December 05, 2005

ஏபிசிடி - திரை விமர்சனம்

ஆனந்த்(ஏ), பாரதி(பி), சந்திரா(சி), திவ்யா டெய்சி(டி) இந்த நால்வரின் ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்துகளை வைத்தே படத்திற்குத் தலைப்பு இட்டுள்ளார்கள். இந்த நாலு பேரையும் தனித்தனியே அறிமுகப்படுத்தி, இவர்கள் நால்வரும் சந்திக்கப் போகிறார்கள் என வித்தியாசமாகப் படத்தைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் ஷரவண சுப்பையா.

கதாநாயகன் ஆனந்த்தாக ஷாம் நடித்துள்ளார். இவரை பிற மூன்று பெண்களும் காதலிக்கிறார்கள். இவர்களுள் யாருடைய காதலை ஷாம் ஏற்றுக்கொள்கிறார் என்பதே கதை. இதை ரசிக்கும்படியாகச் சொல்லியிருக்கிறார்கள்.

வேலை தேடும் இளைஞன், ஷாம். இவர், பேருந்தில் ஏறும்போது தன் சான்றிதழ்களை பாரதியிடம் கொடுத்து வைத்துக்கொள்ளச் சொல்கிறார். இடையில் அந்தச் சான்றிதழ்களோடு பாரதி(நந்தனா குமார்) இறங்கிச் சென்றுவிட, அவரைத் தேடி இவர் அலைந்து, ஒரு வழியாகக் கண்டுபிடித்து... அவர்களுக்குள் தொடர்பு ஏற்படுகிறது.

ஷாம் தெருவில் நடந்து செல்லும்போது அவர் எதிரில் திவ்யா டெய்சி(அபர்ணா), ஒரு விபத்தில் அடிபட்டு விழுகிறார். அவரை மருத்துவமனையில் சேர்த்து, அவர் அறுவை சிகிச்சைக்காக உறவினரின் கையொப்பத்தை ஷாம் இடுகிறார். இப்படியாக அவர்களுக்குள் நட்பு தொடங்குகிறது.

அடுத்தவர் சந்திரா(சினேகா). ஷாம் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரின் மகள். கொடுமைப்படுத்தும் கணவனை எதிர்த்து, வெள்ளைச் சேலையோடு தனியாக இருக்கிறார். கணவன் இறந்ததும் வண்ணச் சேலையோடு தன் பெற்றோரிடம் வந்து சேர்கிறார். அங்கு மாடியில் இருக்கும் ஷாமுடன் பழக்கம் ஏற்படுகிறது.

நாளடைவில் மூவரும் ஆனந்த்தை விரும்பத் தொடங்கிவிடுகிறார்கள். இதில் ஒவ்வொரு பாத்திரமும் நன்றாக படைக்கப்பட்டுள்ளது. பத்தாம்பசலியான பெண்களாக இல்லாமல் மூவரும் வெவ்வேறு கோணங்களில் புதுமைப் பெண்களாக இருக்கிறார்கள். இதற்கு அவர்கள் பேசும் வசனங்களே சான்று.

வரதட்சிணையை எதிர்த்து வீரம் பொங்கப் பேசுகிறார், பாரதி. தேவாலயத்தில் தன் இடுப்பைக் கிள்ளியவனின் கன்னத்தில் அறைகிறார், திவ்யா டெய்சி. சந்திராவோ, கொடிய கணவன் இருக்கும்போது வெள்ளைச் சேலையும் இறந்த பிறகு வண்ணச் சேலையும் கட்டுகிறார்.

ஷாமுடன் இவர்களின் உறவு, காதலாக மலருவதை இயக்குநர் மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார். ஷாம், இவர்களைத் தோழமையுடன், கண்ணியத்துடன் அணுகிப் பழகுவதையும் நேர்த்தியாகக் காட்டியிருக்கிறார். படத்தின் தேவைக்காகக் கனவுக் காட்சியில் அவர்களை டூயட் பாடவைக்கவும் இயக்குநர் தவறவில்லை. நீச்சல் அடித்தபடி காதல் செய்யும் அந்த 'மிக்சிங்' காட்சிகள் புதுமையாக உள்ளன.

ஷாமின் நடிப்பு, மிகவும் சிறப்பாக உள்ளது. அமைதியாக, பெரிதாக உணர்ச்சிவசப்படாமல், வார்த்தைகளைப் பக்குவத்தோடு உச்சரித்து கவர்ந்திருக்கிறார். அவருடைய உடல்மொழியும் அவருக்குத் துணை சேர்த்திருக்கிறது.

வடிவேலுவின் நகைச்சுவை டிராக், படத்திலிருந்து பெரும்பாலும் தனியே பிரிந்துள்ளது. என்றாலும் ஓரிரு காட்சிகளில் பாரதியுடன் அவர் பேசுவது போல் காட்டி, அவரையும் படத்தில் ஒரு பகுதியாக்கியுள்ளனர்.

படத்தின் மிகப் பெரிய குறைபாடு, அதன் இசைதான். டி. இமான், மிகவும் முயற்சி செய்தால் நல்ல பாடகராக வரலாம். ஆனால், பாடல் காட்சிகளிலும் பின்னணி இசையிலும் அவர் டமால் டமால் என பெருத்த ஓசையுடன் எழுப்புவதற்கு இசை என்றா பெயர்? இடையிடையே கதைக்கேற்ற பாடல்களை செருகியுள்ளதும் சிறப்பாக இல்லை. எல்லாப் பாடல்களையும் இமானே பாடவேண்டுமா? அவற்றையும் இப்படி உச்சகட்டையிலா பாடவேண்டும்? மஞ்சள் முகமே, மங்கள விளக்கே பாடல், கொஞ்சம் மென்மையாக உள்ளது.

ஆயினும் கதைக்காகவும் நடிகர்களின் இயல்பான நடிப்புக்காகவும் இந்தப் படத்தைப் பார்க்கலாம். ஆங்கிலத் தலைப்புகளில் பெயர் வைக்கக்கூடாது என்று தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் போராடி வரும் வேளையில் ஏபிசிடி என்று பெயர் வைத்துள்ளார்கள். தமிழ்ப் பெயர்களின் முதல் எழுத்துகளை எடுத்து அ, ஆ, இ, ஈ(அமுதா, ஆனந்தி, இனியா, ஈசன் என்ற ஈஸ்வரன்) எனக் கூட பெயர் வைக்கலாமே. அ(ன்பே)ஆ(ருயிரே) என ஏற்கனவே ஒரு படம் அதற்குள் வந்துவிட்டது.

ஆயினும் இயல்பாகக் காதல் மலருவதைச் சிறப்பாகக் காட்டியுள்ளார்கள். வசனங்களும் யதார்த்தமாக உள்ளன. ஷாமின் நடிப்பில் நல்ல மெருகு ஏறியிருக்கிறது.

இது, வெற்றிப் படமாகும் வாய்ப்பு உண்டு.


நன்றி: தமிழ்சிஃபி

Saturday, December 03, 2005

சென்னை மழை: கண்ணீர் வடிக்கும் பயணிகள்

தொடர் மழை காரணமாக சென்னையில் எண்ணற்ற இன்னல்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றுள் போக்குவரத்தும் ஒன்று. இங்கங்கெனாதபடி அனைத்து இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நேரம் பார்த்து, சாலை விரிவாக்கத்திற்காகவும் இன்னும் பிற காரணங்களுக்காகவும் சாலையின் இரு புறமும் பள்ளம் தோண்டப்பட்ட பகுதிகள் மிகுந்த சிக்கலில் உள்ளன. எல்லா வாகனங்களும் சாலையின் மையப் பகுதியில் செல்லவே விரும்புகின்றன. நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கையில் அது சாத்தியமில்லை. எனவே, ஒரு குருட்டுத் துணிச்சலில் சாலையோரம் செல்லும் வாகனங்கள் சேற்றிலும் பள்ளத்திலும் சிக்கிக்கொள்கின்றன. பேருந்து, லாரி, கார் போன்ற பெரிய வாகனங்கள் சாலைப் பள்ளத்தில் சிக்கிக்கொள்ளும்போது சாலை மேலும் குறுகிவிடுகிறது.

சென்னையில் சாதாரண நாளிலேயே பல இடங்களில் சாலைகள் மோசம்தான். இந்த மழையால் அரிப்பு ஏற்பட்டு, சாலை ஓரங்களைப் பெரும்பாலும் காணவில்லை. சுற்றுப்புற மண்ணும் கல்லும் சரளைக் கற்களும் முட்களும் கண்ணாடித் துண்டு போன்றவையும் சாலை எங்கிலும் விரவிக் கிடக்கின்றன. இவற்றின் மேல் மழை நீர் ஓடிக்கொண்டிருப்பதால் அவை இருப்பதையும் மக்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் குண்டும் குழியும் இல்லாத சாலைகளே இல்லை எனும்படி எல்லாச் சாலைகளும் சிறிதளவேனும் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் வாகனம் ஓட்டுவது, சாகசச் செயல் என்றுதான் கூறவேண்டும். இந்த நிலையில் இரு சக்கர வாகனங்களில் வெளியே வந்தவர்கள், பரிதாபத்துக்கு உரியவர்கள். இடுப்பளவுத் தண்ணீரில் அவர்கள், வேறு வழியில்லாமல் செல்கின்றனர். இதனால் இன்ஜின் நனைந்து, உடனே வாகனம் உட்கார்ந்து விடுகிறது. நகரில் போதுமான எந்திரவியலாளர்கள் (மெக்கானிக்குகள்) இல்லை என்பதும் இருப்பவர்களும் திறமை மிகுந்தவர்கள் இல்லை என்பதும் இப்போது நிரூபணம் ஆகிவருகிறது. பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, பஞ்சர் ஆன வண்டிகளுக்குக் காற்று அடிக்கவும் முடியாத நிலை. காலால் அழுத்திக் காற்றடிக்கும் கருவி உள்ள இடத்தைத் தேடி அலையவேண்டி இருக்கிறது. வாகன ஓட்டிகள் நீண்ட தூரம் தள்ளிக்கொண்டு வந்தும் பயனில்லை.

பல இடங்களில் தானிகளும் (ஆட்டோ க்கள்) பழுதடைந்து நின்றுவிடுகின்றன. இதனால் அதில் பயணித்தவர்கள், நடு வழியில் இறங்கி நடக்கவேண்டி இருக்கிறது. தண்டவாளங்கள் நீரால் நிரம்பியுள்ளதால் தொடர்வண்டிகளும் (ரயில்) பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ரெயில் போக்குவரத்து சீராக இல்லை. பேருந்துகள் மட்டுமே நகரின் இயக்கத்திற்கு ஒரே காரணமாகத் திகழ்கின்றன.

பல்லாயிரம் மதிப்புள்ள வாகனம், இயங்காத போது, அது ஒரு பிணம் போல் கனக்கிறது. அதைத் தள்ளிக்கொண்டு செல்வது, மிகவும் கொடூரமான தண்டனையாகவும் இருக்கிறது. இந்த நிலையில் மெக்கானிக்குகளின் பணி மிகவும் முக்கியமானது. நான் கண்ட சிலர், ஏதோ அலுவல் நேரத்தில் மட்டும்தான் வேலை செய்வோம் என்பதுபோல் பேசினர். மாலை ஆறு மணி ஆனதும் இனிமே நாளைக்குத்தான் என்றனர். அவர்கள், மிகவும் அவசிய / அவசரப் பணியாளர்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும். வீட்டிலும் இல்லாமல் அலுவலகத்திலும் இல்லாமல் அந்தரத்தில் நிற்கும் பலருக்கும் எவ்வளவோ வேலைகள் இருக்கும். அவர்கள் கையறு நிலையில் நிற்கும்போது, அவர்களின் துன்பத்தைத் துடைக்கவேண்டியது, அவர்களின் பணி மட்டும் அன்று; துயர் துடைக்கும் மனிதாபிமானமும் ஆகும்.

இது பேரிடர் காலம். ஒருவருக்கு ஒருவர் உதவுவது சாலச் சிறந்தது. பேருந்துகளும் கிடைக்காமல் நடு வழியில் நிற்பவர்கள் யாரேனும் விரலை மடக்கி உங்களுக்கு முன் லிப்ட் கேட்கக்கூடும். உங்கள் சக்கரத்தில் காற்றும் இருந்து, அது ஓடவும் செய்கிறது என்றால் யாரோ செய்த புண்ணியம்தான் காரணம். எதிரில் கட்டை விரலை நீட்டும் அந்த முகம் தெரியாத மனிதரைப் பரிவுடன் பாருங்கள்.

நன்றி: தமிழ்சிஃபி

முந்தைய பதிவு: சென்னை: மழையின் பின்விளைவுகள்

Friday, November 18, 2005

நூலாக்கம்: விலையிடலும் விளைவும்


ஒரு நூலுக்கு என்ன விலை வைப்பது?

நூலின் உள்ளடக்கத்திற்கு விலை மதிப்பே கிடையாது; தட்டச்சு, மெய்ப்பு, ஓவியம் அல்லது புகைப்படம், அச்சு, கட்டுமானம், போக்குவரத்து, அஞ்சல் செலவு, விற்பனைக் கழிவு, முதலீட்டுக்கான வட்டி, இவ்வளவையும் கடந்த பிறகு பதிப்பாளர் - நூலாசிரியரின் வருவாய் ஆகியவற்றை உள்ளடக்கியதே நூலின் விலையாகிறது. நூலாசிரியருக்கு அளிக்கும் சன்மானமானது, அவரது எழுதுபொருள், படியெடுத்தல், பிற நூல் வாங்குதல், பயணம்.. என எழுத்துச் சார்ந்த செலவுகளுக்கே சரியாய் இருக்கும்; எனவே அவருக்கு அளிக்கும் தொகையும் நூலின் உள்ளடக்கத்திற்கு அளிக்கும் தொகையாகாது.

இந்த நிலையில் நல்ல நூலுக்கு எவ்வளவு விலை வைத்தாலும் அது தகும்தான். ஆனால், இங்கு நாம் வேறு சிலவற்றையும் நோக்கவேண்டும்.

பாடப் புத்தகம், அதைச் சார்ந்த வழிகாட்டிகள், துணை நூல்கள் போன்றவை என்ன விலை வைத்தாலும் மக்கள் வாங்குவர். கணினி போன்ற தொழில்நுட்பம் சார்ந்த நூல்களுக்கும் இது பொருந்தும். இவ்வாறு, 'தேவை' இல்லாத நூல்களுக்கு, குறைந்த விலை வைத்தாலும் அதிகம் விற்காது.

நுகர்வோரை நம்பிய உற்பத்தியாளர்; உற்பத்தியாளரை நம்பிய நுகர்வோர் என்ற இரு வகையினர் உள்ளனர். பெட்ரோல், உற்பத்தியாளரை நம்பிய நுகர்வோர். அதற்கு என்ன விலை வைத்தாலும் மக்கள் வாங்குவர். ஆனால், நூல்கள் போன்றவை, நுகர்வோரை நம்பியே உள்ளன.

நுகர்வுக் கலாச்சாரத்தின் பிடியில் சிக்கிய மக்கள், எல்லாவற்றுக்கும் அதிக விலை கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது, காந்திய முறைக்கு எதிரானது.

மக்கள், தாம் விரும்பும் நூல்களை எல்லாம் வாங்க முடிவதில்லை. புத்தகக் காட்சிகளில் பலர், பல நூல்களை எடுக்கின்றனர். பின்னர், அதன் விலையைப் பார்த்துவிட்டு மீண்டும் வைக்கின்றனர். ஏன்?

இன்னொன்றைப் பார்ப்போம். ஒரு நூலைக் குறைந்த செலவிலும் தயாரிக்கலாம்; அதிகச் செலவிலும் தயாரிக்கலாம். உயர்தர அச்சிலான பதிப்பும் மலிவுப் பதிப்பும் வெளிவந்துள்ள நூல்களுள் மகாத்மா காந்தியின் சத்திய சோதனை, அப்துல் கலாமின் அக்னிச் சிறகுகள், சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரி ஆகிய நூல்களும் அடங்கும். தயாரிப்பு விதம்தான் வேறே தவிர, இரண்டிற்கும் ஒரே உள்ளடக்கம்தான். இந்த இரண்டு பதிப்புகளையும் வாசகர் முன் வைப்போம். அவர் மலிவுப் பதிப்பைத் தேர்ந்தெடுப்பது ஏன்?

சிறந்த உள்ளடக்கத்தையே பேரளவு வாசகர் நாடுகின்றனர். அது, சராசரியான பதிப்பில் இருந்தாலே போதும். ஆனால் இன்று, வழுவழு தாள், பலவண்ண அச்சு, கெட்டி அட்டை, பக்கக் குறியிழை.. ஆகியவற்றைக் கொண்டு, குறைந்த பக்கங்களும் அதிக விலையும் கொண்ட நூல்கள் அதிகரித்து வருகின்றன. நூலின் உள்ளடக்கத்தால் மட்டும் அல்லாது, அதை உருவாக்கும் முறையாலும் வாசகர்களைக் கவர முடியும் என்று பதிப்பாளர் சிலர் காட்டி வருகிறார்கள். இவர்கள், தாராளமாக விலை வைக்கின்றனர்.

இந்த நாட்டில் 23 விழுக்காட்டினர், வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கின்றனர். நடுத்தர மக்களோ, வரவுக்கும் செலவுக்கும் 'உன்னைப் பிடி, என்னைப் பிடி' என்று வாழ்க்கை நடத்துகின்றனர். மிகக் குறைந்த விழுக்காட்டினரே, பண பலம் மிக்கவர்கள். அவர்களுள் பலர், வாசிப்பு ஆர்வம் குறைவானவர்கள். வாசிக்கும் வேட்கை உள்ளோர், ஓரளவு வருவாய் உள்ளோரே. அவர்களை அதிக விலை என்ற கணையால் தாக்குவது, நல்லதில்லை.

உயர்தரம் என்ற பெயரில், வாசகருக்குக் குறைந்த விலையிலான நூல்களை வாங்கும் வாய்ப்பைப் பதிப்பாளர்கள் மறுக்கக் கூடாது. உலகத் தரத்துக்கு நூல் வெளியிட விரும்புவோர், அதன் மலிவுப் பதிப்பையும் சேர்த்தே அச்சிடுவது, வாசகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

தயாரிப்புச் செலவு கூடுவது, வாசகருக்கு மட்டுமின்றி, பதிப்பாளருக்கும் கேடே. சராசரித் தரம் என்றல்லாது, அதிகச் செலவு பிடிக்கும் உயர்தர அச்சுக்குப் பதிப்பாளர் அனைவராலும் செல்ல முடியாது. இதையே பெரும்பாலோர் பின்பற்றினால் சிறு பதிப்பாளர்கள், பதிப்புத் துறையை விட்டு ஓடவேண்டியதுதான்.

பிரம்மாண்டம், பெரிய பட்ஜெட் என்று சென்றதால் இன்றைய தமிழ்த் திரையுலகம், சிறு தயாரிப்பாளர்களை இழந்தது, நம் கண் முன்னே நிழலாடும் உண்மை. அந்த நிலை, பதிப்புத் தொழிலுக்கும் ஏற்படாமல் தடுக்க வேண்டியது, பதிப்பாளர் அனைவரின் கடமை.

(தமிழ் நூல்களின் விலையை ஒவ்வொரு 16 பக்கங்களுக்கும் ரூ.5இலிருந்து ரூ.8 ஆக உயர்த்தவேண்டும்; நூல்களின் விலையைக் கூட்டினாலே பதிப்பாளருக்கும் விற்பனையாளருக்கும் வருவாய் இருக்கும்; அவர்கள் இதே தொழிலில் தொடர்ந்து இருப்பர்; பதிப்புத் தொழில் வளரும் எனப் பதிப்புத் தொழில் உலகம் - ஐப்பசி(அக்டோ பர்) 2005 இதழில் மறவன்புலவு க. சச்சிதானந்தன் கூறியிருந்தார். அதற்கு மறுமொழியே இந்தக் கட்டுரை)

நன்றி: பதிப்புத் தொழில் உலகம் - கார்த்திகை(நவம்பர்) 2005.

Wednesday, October 12, 2005

சென்னை: மழையின் பின்விளைவுகள்


கடந்த சில நாள்களாகச் சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் சில நாள்களுக்குப் பலத்த மழை பெய்யும் என்றும் அந்த அறிவிப்பு கூறுகிறது. தண்ணீர்ப் பஞ்சத்தாலும் வெய்யில் கொடுமையாலும் தவிக்கும் சென்னைக்கு இந்த மழை நல்ல வரப்பிரசாதம் என்பதில் ஐயமில்லை. ஆனால், மழையின் பின்விளைவுகளைத் தாங்கக்கூடிய சக்தி, சென்னைக்கு இல்லை என்பது மீண்டும் நிரூபணம் ஆகிவருகிறது.

இரண்டு நாள்கள்; நாளுக்கு இரண்டு மணிநேர மழை; மற்றபடி லேசான தூறல்; இதுதான் சென்னை காணும் கனமழை. இதற்கே சென்னையால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. மும்பையில் பெய்த கனமழை இங்கே பெய்தால் என்னென்ன நடக்கும் என்பதைக் கற்பனை செய்யவே கடினமாய் இருக்கிறது.

இருநாள் மழைக்கே மாநகர வீதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. குடிநீர்க் குழாய்ப் பதித்தல், பாதாள சாக்கடைப் பணிகள், சாலை அகலப்படுத்தல், சாலை சீரமைத்தல் ஆகிய பணிகளுக்காக மாநகரின் பல பகுதிகளில் சாலையைத் தோண்டி வைத்துள்ளனர். இதனால் பயன்பாட்டுக்கு உரிய சாலை, மேலும் குறுகிவிட்டது.

சாலைகளில் தோண்டிவைத்த பள்ளங்களில் மழைநீர் நிரம்பியுள்ளது. இதனால் சாலை எது, பள்ளம் எது என்ற குழப்பத்திற்கு மக்கள் ஆளாகின்றனர். வழக்கமாகப் பள்ளங்களில் நடப்படும் சிவப்பு எச்சரிக்கைக் கொடியும் இம்முறை காணப்படவில்லை.

இதனால் மக்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர். குழந்தைகள், தெரியாத்தனமாகக் கால்வைத்தால் நிகழக்கூடிய விபரீதம் சொல்லமுடியாது. வாகனங்கள், பள்ளத்தில் மாட்டிக்கொள்ளக்கூடிய ஆபத்தும் உள்ளது. நடைபாதைகள் சரிவர பராமரிக்கப்படவில்லை. பல பகுதிகள், ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன.

மக்களின் இயல்வு வாழ்க்கை, பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் சரியான நேரத்தில் வருவதில்லை. காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களின் விலைவாசியும் இதுதான் சாக்கு என்று கூடிவருகிறது. ஆட்டோக்காரர்கள், கூடுதல் கட்டணம் கேட்கிறார்கள். பல வகைகளில் மழையின் பின்விளைவுகளுக்கு மக்கள் ஆளாகின்றனர்.

குப்பைகளைச் சரிவர அள்ளாததால் பல இடங்களில் மழைநீரில் குப்பைகள் மிதந்தவண்ணம் உள்ளன. பிளாஸ்டிக் கழிவுகளும் பிற திடக் கழிவுகளும் சாக்கடைகளை அடைத்துக்கொண்டு மழைநீர் வெளியேறாவண்ணம் தடுக்கின்றன. மேலும் மனிதக் கழிவுகளும் மழைநீரில் கலக்கின்றன. இதனால் சுகாதாரச் சீர்கேடு மிகுந்துள்ளது.

மாநகராட்சி ஊழியர்களும் புறநகரத்தின் நகராட்சி ஊழியர்களும் விழிப்போடும் எச்சரிக்கையோடும் பணியாற்றவேண்டும். விபரீதங்களைத் தடுக்கத் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் மாநகராட்சி ஆணையர் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். சுகாதாரத் துறை, போக்குவரத்துத் துறை, மின்சார வாரியம், குடிநீர் வழங்கல் வாரியம், கழிவுநீர் அகற்று வாரியம் ஆகியன விரைந்து செயலாற்றவேண்டும்.

வருமுன் காப்பது நம் கடமை. வந்தபின்னாவது காக்காவிட்டால் அது மடமை.

Wednesday, September 14, 2005

தமிழ்சிஃபியில் நான்

கடந்த 8-9-05 அன்று அமுதசுரபி ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகி, 9-9-05 அன்று தமிழ்சிஃபி இணைய இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ளேன். விலகும் முன் 8-9-05 அன்று மாலை 5 மணிக்குத் திருப்பூர் கிருஷ்ணனிடம் அமுதசுரபி ஆசிரியர் பொறுப்பை ஒப்புவித்தேன்.

இனி என்னைத் தொடர்புகொள்ள விரும்புவோர், annakannanatgmaildotcom என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

- அண்ணாகண்ணன்.

Monday, September 05, 2005கவிதாயினி தாமரை

இயல் - இசை - நாடகம் என்ற இந்த மூன்றும் தனித்தனியாய் இயங்குவது குறைவு. ஒன்று பிறிதொன்றுடனோ, பலவுடனோ இணைந்துதான் பெரும்பாலும் இயங்கி வருகின்றது. ஆயினும் இயலுக்குள்ளேயே இந்தக் கலப்பு சற்று அதிகம். கதை, கவிதை, கட்டுரை என்ற இயல் வடிவங்களுள் ஒவ்வொன்றும் தனித்தனியே இயங்குவது உண்டு. ஆயினும் கதைக்குள் கவிதையும் கவிதைக்குள் கதையும் கட்டுரைக்குள் கதை - கவிதை இரண்டும் சரியாய்க் கலந்து வரும்போது அவற்றின் சுவை அதிகரிக்கிறது.

சில நேரங்களில் ஒரு விபத்து நிகழ்வது உண்டு. இருவேறு வடிவங்களைக் கலக்கும் போது, ஒன்றின் ஆதிக்கம் அதிகமாகி, இன்னொன்றின் இடத்தையே காலி செய்துவிடும். கவிதைக்குள் கதை கலக்கும்போது கதையின் ஆதிக்கம் அதிகமாகி, கவிதை காணாமல் போய்விடுவதும் உண்டு. அதே மாதிரி கதைக்குள் கட்டுரை நுழைந்து, கதையைக் காணாமல் அடித்துவிடும். கட்டுரையில் கதை கலக்கும்போது, இது கதையா, கட்டுரையா எனப் பலர் குழம்புவதும் உண்டு.

கதை, கவிதை என்ற இரண்டை மட்டும் எடுத்துக்கொள்வோம். கவிதை பெரும்பாலும் சுருக்கமாக இருக்கும்; கதைக்கோ, நீளம் அதிகம். சரி, 30 வரிகளுக்குள் ஒருவர் கதை சொல்கிறார்; அதே எண்ணிக்கையில் ஒருவர் கவிதையும் எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். வரிகள் மட்டுமில்லை; சொற்களையும் ஒரே எண்ணிக்கையில் பயன்படுத்துகிறார்கள் எனக் கொள்வோம். வாக்கியங்களை மடித்து எழுதாத நிலையில் இவை இரண்டின் வேறுபாட்டையும் ஒருவர் எடுத்த எடுப்பிலேயே புரிந்துகொள்ளவேண்டும். இது எப்படிச் சாத்தியம்?

இது, கொஞ்சம் சிக்கலானது. ஒரு குறிப்பிட்ட தளத்தில் கதையும் கவிதையும் மிகவும் நெருங்கி வருகின்றன. கதை போன்ற கவிதை; கவிதை போன்ற கதை. இந்த இரண்டையும் ஒரு மெல்லிய இழைதான் பிரிக்கிறது. காட்சிகள் இல்லாமல் கதை இல்லை. அதே காட்சி, கவிதைக்குள் இறங்கும்போது என்ன நடக்கிறது? இது ஒரு சுவையான ஆராய்ச்சி. இங்குதான் நடையும் வாக்கிய அமைப்பும் சொற்களின் கூர்மையும் வேலை செய்கின்றன.

தனி அனுபவம், பொது அனுபவம் ஆவதும் பலரின் கூட்டு அனுபவம் ஆவதும் கதை - கவிதை இரண்டிலும் சாத்தியம்தான். ஆனால், கவிதையின் உன்னதம் என்னவெனில், அதன் ஒரு சொல்லே, ஒரு கூட்டு அனுபவத்தை அளித்துவிடும். ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வோர் உயிருக்கும் ஏற்ப, ஒரே சொல்லே வெவ்வேறு தளங்களில் இயங்கும். இந்தச் சிறப்பே கவிதையின் தனித்தன்மை. இந்த உயரத்தை எட்டுவது, கவிஞர்களுக்கு மிகப் பெரிய சவால்.

தாமரையின் பல கவிதைகள், கதைத் தேரில் உலா வருகின்றன. அங்கு கதைக்கும் கவிதைக்கும் ஓட்டப் பந்தயம் நடக்கிறது. முன்னிலை மாறி மாறி வருகிறது. பல இடங்களில் கதை முந்திச் செல்கிறது. சில இடங்களில் கவிதை வெல்கிறது. இந்த இரண்டிற்கும் இடையே போட்டி நடப்பதே, ஆரோக்கியமான முயற்சிதான்.

ஏய் பல்லக்குத் தூக்கி!
கொஞ்சம் நிறுத்து...
உட்கார்ந்து உட்கார்ந்து
கால் வலிக்கிறது...

- தாமரையின் சின்னஞ்சிறு கவிதை, இது. இதற்குப் பின்புலத்தில் இருவரின் வாழ்க்கை நிலை, சமூக நிலை, தராதரம், வளம், நலம்... என மிகப் பெரும் காட்சி விரிகிறது.

இதன் மிக முக்கிய அம்சம், முதல் வரியில் உள்ளது. எடுத்தவுடன் 'ஏய்' என்கிறார். இதிலேயே அவரின் மேன்மையும் தூக்குவர்களின் அடிமை நிலையும் வெளியாகிறது.

பல்லக்குகளைப் பொதுவாக இருவரோ, நால்வரோதான் தூக்குவர். ஆனால், இங்கோ பல்லக்குத் தூக்கிகள் என்று கூறாமல் ஒருமையில் கூறுகிறார். இது ஏன்? நீங்கள் நால்வராய் இருந்தாலும் எனக்கு ஒருவர்தான் என்பது ஒரு பொருள்.

அந்த ஒருவரும் இங்கு வேலையாள், அவ்வளவே. மாடு மேய்ப்பவன், காய்கறிக்காரன், காவல்காரன், பால்காரன்... என்பது போல் அந்த வேலையைச் செய்ய ஒருவன். அவனுக்கு என்று தனி அடையாளம் எதுவும் கிடையாது. இது, அடுத்த கோணம்.

'கொஞ்சம் நிறுத்து' என்ற சொற்களும் ஆழமாகத் திகழ்கின்றன. அதாவது நீ கொஞ்சம்தான் நிறுத்தவேண்டும். சிறிது நேரத்தில் மீண்டும் தூக்கி நடந்தாகவேண்டும்.

'உட்கார்ந்து உட்கார்ந்து' என்பதில் ஓர் உட்பொருள் உண்டு. ஒரு முறை உட்கார்ந்தவர், மீண்டும் உட்கார வேண்டுமெனில் அவர் இடையில் எழுந்தால்தான் முடியும். அவர் முதலில் உட்கார்ந்தார்; எழுந்தார்; பிறகு மீண்டும் உட்கார்ந்தார். இப்படியே அவர் தொடர்ந்து செய்துவந்தார் என்பது வெளிப்படுகிறது.

கடைசி வரியிமல் கால்கள் வலிக்கின்றன என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால், இங்கும் ஒருமையைப் பயன்படுத்துகிறார். முதல் வரியிலும் கடைசி வரியிலும் உள்ள ஒருமைகளை இணைக்கவும் கவிதை வாய்ப்பு அளிக்கிறது. ஏய் - கால் இரண்டும் பேச்சு வழக்குச் சொற்கள் என்பது கவிதையின் இயல்புத் தன்மையைக் கூட்டுகிறது.

இப்படி கவிதையின் ஒவ்வொரு சொல்லும் ஆழமாக விளங்குவது, கவிஞர்கள் அனைவருக்கும் நிகழ்வது இல்லை. அதுவும் ஒருவரின் அனைத்துக் கவிதைகளும் இவ்வாறு விளங்குவதில்லை. அது, கிரிக்கெட்டில் ஒவ்வொரு பந்துக்கும் ஒவ்வொரு 'விக்கெட்' எடுப்பது போன்றது. அல்லது, ஒவ்வொரு பந்தையும் 'சிக்ஸருக்கு' அனுப்புவது மாதிரி.

ஒரு கொலை மற்றும் ஒரு தற்கொலை
இவற்றைத் தவிர்க்கும் பொருட்டு
நாம் பிரிந்தோம்
- காதலி, காதலனை நோக்கி இப்படிப் பேசத் தொடங்குகிறாள். பிரிந்த காதலி, போராடி உயர்கிறாள். அது பொறுக்காத காதலன், 'கட்டுகளற்ற வெறிநாயாய் தன் நாக்கை அவிழ்த்துவிடுகிறான்'.

வேறொரு கவிதையில் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு, இன்னொருத்தி அறிவுரை கூறுகிறாள்.

கூவி அழை, பஞ்சாயத்துக் கூட்டு,
கேள்வி கேள், உரக்கப் பேசு,
'அணைக்க' வந்தால் அடித்து விரட்டு!

பவானி!
நேற்று நான், இன்று நீ!

இன்னும் மெத்தனமாயிருந்தால்
இன்று நான், நாளை நீ!
- இதில் பாரதியின் தாக்கம் இருப்பினும் இதன் பின்னே தீவிரமான கதை ஓடிக்கொண்டிருக்கிறது.

அன்றாடப் பாலில் நீர் மிகுந்துவருவதை
தயிர் காட்டிக் கொடுத்தது

காசு கொட்டி வாங்கிய
'மினரல் வாட்டரில்' அடிவண்டல்!

அவசரம் என்று குறியிட்டு அனுப்பியும்
'குரியர்' போய்ச் சேரவில்லை!

அண்டை வீட்டுக்காரர் திருப்பித் தந்த
'அயர்ன் பாக்ஸ்' வேலை செய்யவில்லை....

இன்று மழை பெய்தது

உள்ளார் எங்கோ ஒரு
நல்லார்!
- இது காட்சிகளை அடுக்கிக்கொண்டே வந்து, அற்புதமாக முடிகிறது. தாமரையின் எழுத்தில் முதிர்ச்சி கூடியிருப்பதற்கு இந்தக் கவிதை, ஒரு சான்று.

தாமரையின் கவிதைகளுக்குள் அகதிகள், சிறைக் கைதிகள், போராளிகள்... ஆகியோர் இயல்பாக வந்து செல்கிறார்கள். ஈழச் சிக்கலைக் குறித்து அண்மைக் காலமாய்க் கவிஞர்கள் பெரும்பாலோர் எழுதுவதில்லை. எதற்கு வீண் வம்பு? என்று ஒதுங்கிவிடுவர். தாமரையோ, பலரும் தொடத் தயங்கும் கருக்களைத் துணிச்சலுடன் கையாளுகிறார்.

போருக்குப் புறப்பட்ட
வீரர்கள் போல்
சரம்சரமாய்
வந்திறங்குது மழை
என் வாசலில்
- மழையை இத்தகைய கோணத்திலும் இவரால் பார்க்க முடிகிறது.

திலீபா..!
சாவையும் வாழ்ந்தவன்
நீ மட்டுமே!
- என 11 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனைக் குறித்துப் பாடுகிறார்.

நடுங்கும் என் விரல்களை
துப்பாக்கி பிடித்துக்
காய்த்துப் போன உன்
கையோடு
கோத்துக்கொள்...
தோழி...
என்னையும் அழைத்துப் போ..
- இது, ஈழத்துக் காட்டில் குமுறும் ஒருத்தியின் வேண்டுகோள்.

அறைத் தோழியாய் வந்தவள்
என்னைவிடச் சின்னவள்
அகதிகள் ஒதுக்கீட்டில்
இடம் கிடைத்திருக்கிறது
யாழ்ப்பாணத்துக்காரியாம்!

இறுக்கி மூடிய உதட்டுக்குள்ளிருந்து
கள்ளிப்பால் போல் ஒவ்வொன்றாய்
சொட்டிய கதைகள்...
- என மிக இயல்பாக, தான் சொல்லவேண்டிய செய்திகளைச் சொல்லிவிடுகிறார்.

நடப்பது அவ்வளவு எளிதாக இல்லை.
கைப்பிடித்து அழைத்துப் போகக்
கடவுச் சீட்டும் பெருங்கருணையும்
கொண்ட அதிகாரி ஒருவர் உள்ளார்
என அறிவிக்கப்பட்டது.

தலைக்குப்பின் கொழுத்த ஒளிவட்டம்
கொண்ட அவரின் பாதங்களுக்கு
மலரஞ்சலி செய்தால்
கடவுச்சீட்டு கிடைக்கும் என்ற
நம்பிக்கையே நடையை
வேகமாக்கியது..
- இதில் உள்ள 'கொழுத்த' என்ற சொல், ஆழ்ந்த கவனிப்புக்கு உரியது.

மேகத்தை அடையாளம் வைத்து
ஆட்டுக் குட்டியை விட்டுப் போனவன்
கதையை நீ சொல்லக் கேட்டுச்
சிரித்தேன்...
அதே போலொரு மேகத்தின் கீழ்
என்னை நிற்க வைத்து நீ
பேசிக்கொண்டிருப்பதை
உணராமல்...
- என்ற வரிகளில் அழகியலையும் துயரத்தையும் மேதைமையோடு இணைக்கிறார்.

லஞ்சம் கேட்கும் பொதுஊழியனைக்
கொன்று போடத் துடிக்கும் கைகள்
அடங்கி விடுகின்றன.
இந்தியன் தாத்தாவும் ஷங்கரும்
பார்த்துக்கொள்வார்கள்
என்ற ஆறுதலில்...
- என்று தாமரை சொல்வது அவரின் துணிச்சலுக்கு ஒரு சான்று. திரைப்படப் பாடலாசிரியரான இவர், நாளையே ஷங்கரின் படத்திற்கு எழுத வேண்டிருக்கும் என்று எண்ணாது, இப்படியான விமர்சனங்களால் அந்த வாய்ப்புத் தவறலாம் என்ற முன்னெச்சரிக்கை இல்லாமல், தன் மனத்திற்குப் பட்டதைப் பேசுகிறார்.

சமூகத்தில் உள்ள முரண்பாடுகள், போலித்தனங்கள், ஏழை எளியவர்களின் பாடுகள், மூடநம்பிக்கை எதிர்ப்பு, நடப்புச் சிக்கல்கள், போர்க்குணம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் இவரின் கவிதைகள் இயங்குகின்றன. தமிழ்- தமிழர்- தமிழ்நாடு ஆகியவற்றை மையமாகக் கொண்டு செயல்புரிகிறார்.

கோவையில் பிறந்த தாமரை, எந்திரப் பொறியியல் பட்டதாரி. இவரின் தந்தை, கவிஞராகவும் நாடகாசிரியராகவும் விளங்கியுள்ளார். ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் என்ற கவிதைத் தொகுப்பை அளித்துள்ள தாமரை, சிறுகதைகளும் எழுதக் கூடியவர். சந்திரக் கற்கள், என் நாட்குறிப்பின் நடுவிலிருந்து சில பக்கங்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். இலக்கியப் படைப்புகளுக்காகத் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, சிற்பி விருது ஆகியவற்றையும் பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார்.

திரைப்படப் பாடலாசிரியராகப் பணியாற்றும் இவர், வசீகரா, அழகிய அசுரா, தவமின்றிக் கிடைத்த வரமே, இஞ்சேருங்கோ... எனப் புகழ்மிக்க பாடல்கள் உள்பட நூற்றுக்கும் மேலான பாடல்களை இயற்றியுள்ளார். இலங்கை, சிங்கப்பூர் நாடுகளுக்குப் பயணித்துள்ளார்.

தனக்கென ஒரு கொள்கை, வழிமுறை, இலக்கு ஆகியவற்றைக் கொண்ட இவர், ஆங்கிலச் சொற்களைக் கலந்து பாடல்கள் எழுதுவதில்லை என உறுதி கொண்டுள்ளார். இந்த உறுதி, தாமரையின் பொறுப்புணர்வுக்கும் தீவிரத்திற்கும் சான்றாக விளங்குகிறது.

தாமரையின் கவிதைகள் பலவும் நீண்டவையாக உள்ளன. சிறிது விரித்துரைக்கவும் முயல்கின்றன. 'நேரடியாகவும் தேவையெனில் சற்றே விளக்கமாகவும் சொல்லிப் போவது என் பாணி' என இவரே அறிவித்துள்ளார். இது, கவிதைப் பண்புக்கு உகந்தது இல்லை. 'கவிதை மின்னலுடைத்தாகுக' என்ற கூற்றைத் தாமரை நினைவில் இருத்தவேண்டும். மிகச் சிறிய, கூரிய கவிதைகளை அதிகம் எழுதிப் பார்க்கவேண்டும்.

ஆயினும் சிறிய கவிதைகளையும் தன்னால் எழுத முடியும் என்று ஓரிரு இடங்களில் காட்டியுள்ளார். அவ்வழியில் அவர் தொடர்ந்து நடப்பார் என்று நம்புவோம்.

..கண்களிலிருந்து
கனவுகளைக் கழுவியெடுத்துவிட்டு
கனலை இட்டு நிரப்பு!

வெந்து தணிந்தபின்
நம் வீதிகளில்
வெளிச்சம் மட்டுமே..
- என்கிறார்.

தண்ணீரில் இல்லை; தணலில் பூத்திருக்கிறது இந்தத் தாமரை.

Thursday, August 18, 2005

திருப்பூர் கிருஷ்ணனின் அரவிந்த அமுதம்கல்கி யில் தொடராக வெளிவந்த அரவிந்த அமுதம், நூல் வடிவம் பெற்றுள்ளது. அருள்மிகு அரவிந்தரின் வாழ்க்கை வரலாற்றைப் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு அழகுற எழுதியுள்ளார், திருப்பூர் கிருஷ்ணன்.

அரவிந்தர், 1872ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 அன்று பிறந்தது; ஐந்து வயதான போது மூத்த சகோதரர்கள் விநய பூஷன், மன்மோகன் ஆகியோரோடு டார்ஜிலிங்கில் லோரெட்டோ கான்வென்ட்டில் சேர்ந்தது; ஐரோப்பிய தாக்கம் கொண்ட அரவிந்தரின் தந்தை டாக்டர் கிருஷ்ண தனகோஷ், அரவிந்தர் உள்பட மூன்று பிள்ளைகளையும் இங்கிலாந்தில் படிக்க வைக்க அனுப்பியது; தாமரையும் குத்து வாளும் என்ற ரகசிய சங்கத்தில் உறுப்பினரானது; அரவிந்தர் தாயகம் திரும்பிய கப்பல் விபத்துக்குள்ளாகி அவர் மறைந்தார் என்ற தவறான தகவலால் அதிர்ந்து தந்தையார் இறந்தது; அதனால் தாயார் சுவர்ணலதா தேவி மனநோயாளி ஆனது;

இந்தியா திரும்பிய அரவிந்தர், பரோடா சமஸ்தானத்திலும் அரசுப் பணிகளிலும் பிரெஞ்சு, ஆங்கிலப் பேராசிரியர் ஆனது; துணை முதல்வர் ஆனது; சுதந்திரப் போரில் தீவிரமாக ஈடுபட்டது; அலிப்பூர் வழக்கு; அரவிந்தர் தம் மனைவி மிருணாளினிதேவிக்கு எழுதிய இரு கடிதங்கள்; மிருணாளினி தம் 30ஆவது வயதில் மரித்தது; சிறையிலிருந்து வெளிவந்து அரவிந்தர் ஆற்றிய உத்தர்பாராச் சொற்பொழிவு; ஷாம்சுல் ஆலம் கொலை வழக்கில் அரவிந்தர் மேல் குற்றம் சாட்டப்பட்டது; கைதாவதிலிருந்து தப்பிக்க அரவிந்தர் சந்திர நாகூருக்குத் தப்பிச் சென்றது;

1910இல் கல்கத்தாவிலிருந்து மாறுவேடத்தில் அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்தது; ஆசிரமம் அமைத்து தியானத்திலும் யோகத்திலும் ஈடுபட்டது; பாரதியாரோடு நட்புக் கொண்டது; 1914 ஆம் ஆண்டு மிர்ரா என்ற ஸ்ரீ அன்னை, புதுச்சேரி வந்தது; 1920இல் அவர் நிரந்தரமாகப் புதுச்சேரியிலேயே தங்கியது; அரவிந்தர் 'ஆர்யா' என்ற பத்திரிகையை நடத்தியது; சாவித்திரி காவியத்தைப் படைத்தது; 1926 இறுதியிலிருந்து 1930 வரை அரவிந்தர் யாருடனும் பேசாதது;

1938இல் புலித்தோலில் தடுக்கி விழுந்து அவரின் வலது கால் தொடை எலும்பு முறிந்தது; 1950 டிசம்பர் 5 அன்று அரவிந்தர் சமாதி அடைந்தது; காலமான பிறகும் நூற்றுப் பதினொரு மணிநேரம் புற உடலில் காலமானதற்கான அறிகுறிகளே தென்படாதது கண்டு பிரஞ்சு அரசின் தலைமை மருத்துவர், 'இது ஒரு அறிவியல் விந்தை' என்று சான்று உரைத்தது.... என படிப்படியாக வளர்ந்து செல்கிறது நூல்.அரவிந்தரின் ஆன்மிக சாதனைகள், அவர் கண்ட கனவுகள், கண்ணன் அவருக்குக் காட்சி அளித்தது, அதிமனம் என்ற இலக்கை நோக்கி அவர் பயணித்தது... என அரவிந்தரின் ஆன்மிக முகத்தை விரிவாகக் காட்டியுள்ளார் திருப்பூர் கிருஷ்ணன். ஒவ்வொரு அத்தியாயம் தொடங்கும்போதும் அரவிந்தர் பற்றி அறிஞர்களும் அவருடன் பழகியவர்களும் கூறிய / எழுதியவற்றிலிருந்து சில வரிகள் இடம் பெறுகின்றன. அவை, நூலின் கனத்தை மேலும் கூட்டுகின்றன.

இந்த நூல் பெயரளவில் அரவிந்தரின் வரலாற்றைக் கூறினாலும் ஆன்மிகப் பெரியோர்கள் பலரின் அனுபவங்களும் சிந்தனைகளும் நூலை அலங்கரிக்கின்றன. இராமகிருஷ்ண பரமகம்சர், விவேகானந்தர், திருமூலர், ஆதிசங்கரர், அணீமாண்டவ்யர், புத்தர், வள்ளுவர், ஏசுநாதர், சதாசிவப் பிரம்மேந்திரர், இராகவேந்திரர், சாரதா தேவி, விரஜானந்தர், பரமகம்ச யோகானந்தர்.... என நூற்றுக்கணக்கான பெரியவர்கள், நூலின் உள்ளே நடமாடுகிறார்கள்; நம் உள்ளத்திலும்கூட.

மிகவும் கடினமான பணியைச் செய்கிறோம் என்ற முன்னெச்சரிக்கை உணர்வுடன் திருப்பூர் கிருஷ்ணன், இந்த வரலாற்றைக் கையாண்டுள்ளார். கற்பனையை அதிகம் கலக்காமல், கணிப்புகளில் இறங்காமல், பெரும்பாலும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே சென்றுள்ளார். வரலாற்று ஆசிரியராக இருந்த திருப்பூர் கிருஷ்ணன், அங்கங்கே பக்தராக மாறி, அரவிந்தரைப் புகழ் பாடுகிறார். நாயகரைத் துதிப்பது, தமிழ் மரபுதான் என்றாலும் அதன் விழுக்காடு கூடும்போது நூல், வரலாற்றுத் தன்மையைக் காட்டிலும் பக்தித் தன்மை உடையதாய் ஆகிவிடுகிறது.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள விஜயா சங்கரநாராயணன், "இது மனித நிலை கடந்த அதிமனிதரைப் பற்றிய வரலாறு. அவரது கொள்கையும் கருத்துகளும் புத்தம் புதியன. 'எனது வரலாற்றை உள்ளபடியே எழுத இயலாது' என்று சொன்ன ஸ்ரீ அரவிந்தரின் வரலாறு... இது வெறும் பொழுதுபோக்குப் புத்தகமல்ல. 'இப்படியும் ஒரு மகான் இருந்தார், இன்னமும் இருக்கிறார்' என்பதைத் தமிழுலகிற்குச் சொல்லும் புனிதச் செய்தி இது" என்கிறார்.

வேதாவின் அழகிய ஓவியம், அட்டைப் படத்தை அலங்கரிக்கிறது. நூலைத் தம் தாய் திருமதி கே.ஜானகிக்கும் தந்தை அமரர் பி.எஸ்.சுப்பிரமணித்திற்கும் சமர்ப்பணம் செய்துள்ளார், திருப்பூர் கிருஷ்ணன்.
-----------------------------------------------
அரவிந்த அமுதம் : திருப்பூர் கிருஷ்ணன், பக்: 128, விலை: ரூ. 85, திருப்பூர் குமரன் பதிப்பகம், 57-பி, பத்மாவதி நகர், காமராஜ் சாலை, விருகம்பாக்கம், சென்னை - 600 092
thiruppurkrishnan@hotmail.com

Wednesday, August 17, 2005

உயர்வு நவிற்சி இலக்கியம்

தமிழ்க்கவிதை, சொல்விளையாட்டுகளைக் கடந்து வெகுகாலம் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் எதுகை-மோனை-இயைபை வைத்து ஏராளமான கவிதைகள் வெளிவரத்தான் செய்கின்றன. 


கவிஞர் நிர்மலா சுரேஷ், 'இயேசுமாகாவியம்' என்ற 700 பக்க நூலை முன்பு எழுதினார். அதன் தொடர்ச்சியாக இப்போது "தைலச் சிமிழும் தச்சன் மகனும்" வெளிவந்துள்ளது. 

அஃறிணைகள் பேசுவதுபோல் படைப்பது அதிகம் கையாளப்படும் உத்தி. இந்த நூலில் இயேசு பயன்படுத்திய அல்லது இயேசுவோடு தொடர்புடைய 50 அஃறிணைகள், இயேசுவைப் புகழ்கின்றன. 

பொதுவாக பக்தி இலக்கியங்களில் அவதாரங்களை மிகமிக உயர்த்திப் பாடுவது மரபுதான். அந்த மரபுக்கு ஏற்ப, புதுக்கவிதைகளில் இயேசுவைப் புகழ்கிறார், நிர்மலா சுரேஷ். 

'எங்களுக்கு அடியில் 
அவர் அமர்ந்தபோதெல்லாம் 
நாங்கள் நிழல்பெற்றோம்' 
 -என்கின்றன, மரங்கள். 

இயேசுவின் தலையில் இருந்த முள்முடி, 
  
'எழுத்தின் தலையை 
அழுத்திப் பார்த்தேன் 
 வழிந்தது கவிதை' -என்கிறது. 

'பொதி சுமந்த நான் 
 பூபதியைச் சுமந்து 
 கோ-ஏறு-கழுதை எனும் பெயருக்குப் பொருத்தமானேன்' 
-எனப் பெருமைப்படுகிறது கோவேறு கழுதை. 

இப்படியாக மீன், மண், செம்மறி, ஒட்டகம், படகு, மலை, கடல், தைலச் சிமிழ், கத்தி, சாட்டை, முப்பது வெள்ளிக்காசுகள், ஆணி, சிலுவை, ஈட்டி, கல்லறை, பாறை... என 50 அஃறிணைகள் இயேசுவைப் போற்றுகின்றன. 

சர்க்கரையே உணவாவதைப் போல், உணர்வு நவிற்சியாலேயே ஆன இலக்கியம் என இதைச் சொல்லலாம். 

'பொற்சாடிகளைப் புறக்கணித்து 
ற்சாடிகளைக் கவனிப்பவர் 
இந்த சொற்சாடி!' (பக்.40) 

'நான் வெறும் 
முச்சந்தி நாற்சந்திதான்! 
 அவரோ யுக சந்தி!' (பக்.65) 

இப்படிப் பல இடங்களில் சொல் விளையாட்டுகளைக் கையாண்டுள்ளார், கவிஞர். மேலோட்டமான வாசகர்களுக்கு இவை பிரமிப்பைத் தரலாம். ஆனால், கவிஞர்கள் இன்னும் ஆழமான கவிதை அனுபவத்தைத் தர முயலவேண்டும். 

 'அந்த மூன்றுநாட்களும் 
கால வாக்கியம் 
 கமாபோட்டு நின்றது!' 
-எனுமிடத்தில் கமாவிற்குப் பதில் 'காற்புள்ளி' என எழுதலாம். 

பக்-38இல் 'ஆற்றுப்படை' என்ற சொல்லை 'ஆறு ஆகிய படை' எனும் நேரடிப் பொருளில் கையாண்டுள்ளார். தமிழ்ச் சிற்றிலக்கிய மரபில் அதற்கு 'ஆற்றுப்படுத்துதல்' என்றே பொருள். 

 சில குறைகள் இருந்தாலும் எளிய கவிதைகளை வழங்கியதற்காக நூலாசிரியரைப் பாராட்டலாம். அச்சு நேர்த்தியோடும் அழகிய படங்களோடும் இருப்பது நூலுக்குச் சிறப்பு. 

------------------------------------------- 

தைலச் சிமிழும் தச்சன் மகனும் : நிர்மலா சுரேஷ் பக்:162 விலை ரூ.125/- வெளியீடு: இதயம் பதிப்பகம், பழைய எண்: 22-இ, புதிய எண்:18-இ, தெற்கு அவின்யூ, காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை - 600 041. 

 ( அமுதசுரபி, செப்டம்பர் 2003)

Sunday, August 14, 2005

இலக்கிய அமைப்புகள் என்ன செய்கின்றன?

தமிழ்நாட்டின் ஒவ்வொரு கட்சியிலும் 'இலக்கிய அணி' உண்டு. ஒவ்வொரு பள்ளியிலும் 'இலக்கிய மன்றம்' உண்டு. ஊருக்கு நான்கு இலக்கிய அமைப்புகள் உண்டு. பதிவு பெற்றவை-பெறாதவை, செயல்படுபவை-படாதவை என ஏராளமான அமைப்புகள் இலக்கியத்தின் பேரால் இருக்கின்றன.

இன்னும் தமிழகத்தில் எழுத்தினை முழுநேரத் தொழிலாக ஏற்க முடியாது. அவ்வாறு மேற்கொள்வோர் பிழைக்கத் தெரியாதவர் என்ற கருத்து நிலவுகிறது. பொதுச் சந்தையில் 1000 புத்தகங்கள் விற்பதற்கு நான்கைந்து ஆண்டுகள் ஆகின்றன. இலக்கிய இதழ்களின் விற்பனை தேய்முகத்தில் இருக்கிறது. பெரும்பாலான இலக்கியவாதிகளுக்குச் சமுதாய மதிப்பு இல்லை. இலக்கியவாதிகளிடையே குழு மனப்பான்மையும் காழ்ப்புணர்வும் அதிகரித்திருக்கின்றன. உலக இலக்கியங்கள் குறித்த அறிமுகம் தமிழ் எழுத்தாளர்க்குக் குறைவு. எது தரமான படைப்பு? ரசிப்பு? வாசிப்பு? என்ற தெளிவு குறைவு. எழுதுவோர் சொல் வேறு செயல் வேறாய் இருக்கின்றனர். தமிழ் எழுத்தாளரிடையே ஒற்றுமை இல்லை. கடுமையான உழைப்பு இல்லை.

இலக்கியத் துறைக்குப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் 'இலக்கிய அமைப்புகள் என்ன செய்கின்றன?' என்ற கேள்வி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் ஐந்து அமைப்புகள் குறித்து இங்கே:

அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்: 1950-ம் ஆண்டு கல்கி இதனைத் தொடங்கினார். ஆண்டுதோறும் ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப் பெற்றார். கல்கி இறந்தபிறகு ம.பொ.சி., தேவன், A.G.வெங்கடாச்சாரி, வெ.சாமிநாத சர்மா, மீ.ப.சோமு, கி.வா.ஜ. ஆகியோர் தலைவர்களாய் இருந்தனர். ஆண்டுதோறும் மாநாடு நடைபெற்றது. இது 1970 வரை நீடித்தது. அதன்பிறகு 1977 வரை சங்கம் செயல்படவில்லை. 1978-லிருந்து இன்றுவரை தொடர்ந்து இயங்கி வருகிறது. தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இதன் கிளைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன.

பத்திரிகைகளில் 5 படைப்புகள் வெளிவந்தவரோ, நூல் வெளியிட்டவரோ, அல்லது நூலொன்றைக் கையெழுத்துப் படியில் கொண்டவரோ இதில் உறுப்பினராகச் சேரலாம். தற்போது ஏறத்தாழ 600 உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. 'E.V.K. சம்பத் மாளிகை' என்ற அரசுக் கட்டடத்தில் இதற்கு அலுவலகம் உள்ளது.

ஒவ்வொரு மூன்றாம் சனிக்கிழமை மாலையிலும் எழுத்தாளர் சந்திப்பு நிகழ்கிறது. நூல் அறிமுகம், சிறந்த சிறுகதையைப் பற்றிப் பேசுவது, கவிதை வாசிப்பது போன்ற உருப்படிகளை இக்கூட்டம் கொண்டுள்ளது. ஆறு ஆண்டுகளாகப் பாரதியார் பிறந்த நாளில் எட்டயபுரத்திற்கு எழுத்தாளர்களை அழைத்துச் சென்று ஊர்வலம் நடத்தி, கவிதை வாசித்து விழா கொண்டாடி 'பாரதி பணிச் செல்வர்' என்ற விருதினை வழங்கி வருகிறது.

கோவையில் சென்ற ஆண்டு 'சிறுகதைப் போட்டி' கல்லூரி மாணவரிடையே நடந்துள்ளது. தொடர்ந்து இதனை எல்லா மாவட்டங்களிலும் நடத்தத் திட்டமிட்டுள்ளது. நூலகம், 850 நூல்களை வாங்கவும் பாரத்திற்கு 1 ரூபாய் 60 பைசாவிலிருந்து 2 ரூபாய் 10 பைசாவாகத் தொகை வழங்கவும் வழி வகுத்தலில் இச்சங்கத்திற்கும் பங்குண்டு. இவ்வாண்டு சிறுகதைத் தொகுதிகளையும் கவிதைத் தொகுதிகளையும் வெளியிட எண்ணியுள்ளது. எழுத்தாளர்களுக்குச் சலுகைகளைப் பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகளோடு பேச்சு நடத்தி வருகிறது.

தலைவர்: கலைமாமணி விக்கிரமன்.
--------------------------------------------------------------------------------

உரத்த சிந்தனை: 1983-ம் ஆண்டு தொடங்கி, மாதம்தோறும் கூடி கலை, இலக்கிய, சமூக நிகழ்வுகளை நடத்தி வருகிறது. வாசகர்களைப் படைப்பாளர்களாக்குவதையும், திறமைசாலிகளைக் கண்டுபிடிப்பதையும் தன் முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. கி.வி.விருது, பெருமைக்குரிய பெண்மணி விருது, சுடர் விருது, செயல்வீரர் விருது, சாதனையாளர் விருது, டாக்டர் விக்கிரமன் விருது, அறிவியல் மாமணி விருது, ஒளி விருது போன்ற பெயர்களில் விருதுகள் வழங்கி ஊக்குவிக்கிறது.

நல்லோர் வங்கி, வானொலி இளைஞர் மன்றம், உறுப்பினர் குடும்பக் குழாம் என்ற துணை அமைப்புகளைக் கொண்டிருக்கிறது. 'உரத்த சிந்தனை' என்ற பெயரிலான காலாண்டிதழை மூன்றாண்டுகள் நடத்தியது. கடற்கரையில் 'புத்தகச் சந்தை' என்ற திட்டத்தை உருவாக்கிக் 'கவிதை உறவு'டன் இணைந்து பிரபலங்களை அழைத்து நூல் வெளியிடச் செய்து அவர்களின் கைகளாலேயே நூல் விற்பனையை மேற்கொண்டது. தன் உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் நூல்களைப் பரிசாக வழங்குகிறது. எழுத்தாளர்களையும் வாசகர்களையும் சந்திக்க வைக்கும் 'நேருக்கு நேர்', கவிதைப் போட்டியில் தேர்வு பெறும் 50 கவிதைகளைக் கண்காட்சிபோல் ஓர் அரங்கில் வைத்து வாசகர்களுக்கு வாக்குச் சீட்டு அளித்துச் சிறந்த கவிதையைத் தேர்வு செய்யும் 'கவிதைத் தேர்தல்' போன்றவற்றைச் செய்து வருகிறது. கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது. 'இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்ஸர் செய்தல்' என்ற முறையை நடைமுறைப்படுத்தி வருகிறது.

தலைவர்: எஸ்.வி.ராஜசேகர்-செயலாளர்: உதயம்ராம்.
--------------------------------------------------------------------------------

கவிதை உறவு: 28 ஆண்டுகளாய் இயங்கி வருகிறது. பாரதி பரம்பரை, பாரதிதாசன் பரம்பரை என்ற பிளவை நீக்கி ஒன்றுபடுத்த உருவாக்கப்பட்டது. 15 ஆண்டுகளாய்க் 'கவிதை உறவு' என்ற இதழை நடத்தி வருகிறது. 'விக்கிரமன் விருது' நர்மதா பதிப்பகத்துடன் இணைந்து 'கண்ணதாசன் விருது' ஆகியவற்றை வழங்குகிறது. 'இல்லந்தோறும் இலக்கிய நிகழ்ச்சி' என்பதன் மூலம் கவிஞர்களின் வீடுகளில் கூடி அவர்களின் குடும்ப முன்னேற்றம் குறித்துக் கலந்துரையாடுகிறது. 'கவிதை உறவுச் சுற்றுலா' என்பதன் மூலம் கன்னியாகுமரி, மதுரை, கூரம் போன்ற இடங்களுக்குச் சென்று வந்துள்ளது. 'கிராமம்தோறும் கவியரங்கம்' என்ற முறை மூலம் கிராமங்களில் கவியரங்கங்கள் நடத்தி வருகிறது. கடந்த 8 ஆண்டுகளாக 'கவிதை இரவு' எனும் பெயரில் மாதந்தோறும் மூன்றாவது சனிக்கிழமைகளில் கவியரங்கு நடத்துகிறது. உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவம் வழங்க மருத்துவர் குழு ஒன்றினைக் கொண்டுள்ளது.

நாகர்கோவிலில் கிளையொன்றைக் கொண்டதோடு மேலும் சில மாவட்டங்களிலும் தொடங்கவுள்ளது. 'புத்தகக் கூப்பன்' திட்டத்தைச் செயற்படுத்தவுள்ளது. வாழ்த்து அட்டையோடு கூடிய கூப்பனைத் தேவையான தொகைக்குப் பெற்று விரும்புவோர்க்குப் பரிசளிக்கலாம். பெறுவோர் அந்த விலைக்கு நூல் பெறலாம். கூப்பனைப் பதிப்பகம் கவிதை உறவுக்கு அனுப்பித் தொகை பெறலாம் என்று திட்டமிட்டுள்ளது.

நிறுவனர்: கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்.
--------------------------------------------------------------------------------

தமிழ்க் கவிஞர் மன்றம்: 1962 ஜனவரி 26-ல் பாவேந்தரால் தொடங்கப்பட்டது. முதல் தலைவராகப் பாவேந்தர் தேர்ந்தெடுக்கப் பெற்றார். அவர்க்குப் பிறகு கு.மா.பா., கு.சா.கிருஷ்ணமூர்த்தி, கண்ணதாசன், சுரதா, கே.சி.எஸ்.அருணாசலம் ஆகியோர் தலைவர்களாய் இருந்துள்ளனர்.

முப்பது ஆண்டுகளாய் மாதந்தோறும் முதல் ஞாயிறு அன்று கடற்கரை-திருவள்ளுவர் சிலை பின்புறம் 'கடற்கரைக் கவியரங்கம்' நடத்தி வருகிறது. சாதி, சமய, அரசியல் காழ்ப்புணர்வற்ற போக்கில் கவிதைகள் வாசிக்கப் பெறுகின்றன.

இருபத்தெட்டு ஆண்டுகளாய்த் 'திறனாய்வரங்கம்' என்ற பெயரில் மாதந்தோறும் முதல் ஞாயிறில் படிக்கப் பெற்ற கவிதைகளைத் திறனாய்வு செய்வதும் சிறுகதை, கவிதை வாசிப்பும் நிகழ்ந்து வருகின்றன. யாப்பிலக்கணமும் கற்றுத்தரப் பெறுகிறது.

'முல்லைச்சரம்' என்ற ஏடு 35 ஆண்டுகளாக நடந்து வருகிறது. 'அலைகள் ஆயிரம்' என்ற தலைப்பில் கடற்கரையில் படிக்கப்பெற்ற கவிதைகள் நூலாக வந்துள்ளன.

பூங்காக் கவியரங்கம், மலைச்சாரல் கவியரங்கம், ஓடை, மலைக்கோட்டை, ஆற்றங்கரை, குளத்தங்கரைக் கவியரங்கங்கள் இதன் கிளைகள் சார்பாக நடந்து வருகின்றன.

பொதுச் செயலாளர்: கவிஞர் பொன்னடியான்.
--------------------------------------------------------------------------------

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்: 1977-ல் தொடங்கியது. உலகளாவிய தமிழ் இலக்கியம், பண்பாடு, கலாசாரம் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிறமொழிக் கவிஞர்களின் மாநாடுகளில் கலந்துகொண்டு அவர்களைப் பற்றி அறிந்து தமிழ்க் கவிஞர்களைப் பற்றித் தெரிவித்தும் வருகிறது. உலகு தழுவி 4 மாநாடுகளை நடத்தி இருக்கிறது. அவற்றுள் இரண்டு, ஜெர்மனியிலும் தாய்லாந்திலும் நடந்துள்ளன.

முப்பத்திமூன்று ஆண்டுகளாகத் 'தமிழ்ப்பணி' என்ற மாத இதழை நடத்தி வருகிறது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழ்நடைப் பயணம் மேற்கொண்டுள்ளது. மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளிலும் இதற்குக் கிளைகள் உண்டு. அமெரிக்காவின் பல நகரங்களிலும் கிளைகள் உண்டு. தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கிளைகள் உள்ளன.

ஒரு போராட்ட இயக்கமாகவும் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறது. தமிழ்வழிக் கல்வி அரசாணை செல்லாது என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பின் நகல் எரிப்புப் போராட்டத்தில் தமிழகப் புலவர் குழுவுடன் இணைந்து இயங்குகிறது.

தமிழ்க் கவிதையின் தரம் தாழ்ந்திருக்கிறது என்ற கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஒரு லட்சம் கவிதைகளை எழுதிப் பதிப்பித்ததாகவும் இயலாது என்ற குரல்களுக்கு மத்தியில் தன்னம்பிக்கையை வளர்க்கும் வண்ணம் நோபல் பரிசு பெறுவதே தனது நோக்கம் என்றும் இதன் நிறுவனர் தெரிவிக்கிறார்.

நிறுவனர்: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்.

(நன்றி : அம்பலம் மின்னிதழ் / 11-6-2000)

Thursday, August 04, 2005

கத்தி வணிகர்களும் கணியனும்


ஊர்ப்புறத்தில் உழவன் ஒருவன் இருந்தான். அவனிடம் தங்க வாத்து ஒன்று இருந்தது. அது ஒவ்வொரு நாளும் ஒரு தங்க முட்டை இட்டது. அந்த உழவன் அதை விற்று, வளமாக வாழ முடிந்தது. இருந்தாலும் உள்ளுக்குள் அவனுக்கு ஓர் அரிப்பு. 'இப்படித் தினம் தினம் ஒவ்வொரு முட்டையாக எடுத்துக்கொண்டே இருந்தால் எப்படி? இந்த வாத்தின் வயிற்றிலிருந்துதானே தங்க முட்டைகள் கிடைக்கின்றன. அதை வெட்டினால், ஒரே நாளில் எல்லா முட்டைகளையும் எடுத்துவிடலாம் இல்லையா?' என்று நினைத்தான்.

உடனே கத்தியைத் தேடினான். அச்சமயம் அவனிடம் சரியான கத்தி இல்லை. கடைத் தெருவுக்குச் சென்றான். அங்கு உள்ளூர் வியாபாரிகள், கத்திக்கு அதிக விலை சொன்னார்கள். வேறு எங்கே மலிவாகக் கிடைக்கும் என விசாரித்தான். வெளியூரிலிருந்து வந்த சிலர், போட்டிக் கடை வைத்தார்கள். உள்ளூருக்கும் வெளியூருக்கும் கடும் போட்டி. இப்போது, கொள்ளை மலிவுக்குக் கத்திகள் கிடைத்தன. நல்ல கூரிய கத்தி; விலை இறங்கிக்கொண்டே வந்தது. சிலர், 'நீங்க எடுத்துட்டுப் போங்க; அப்புறம் காசு வாங்கிக்கிறோம்' என்றனர். அவன் பளபளவென மின்னும், நல்ல கைப்பிடி உள்ள, அழகான கத்தியை வாங்கி வந்தான்.

அதைக் கொண்டு, "பெரிய பணக்காரன் ஆகப் போகிறேன்" என்று கூறிக்கொண்டே வந்தான். அவன் முழக்கத்தைக் கேட்ட இதர உழவர்களும் கத்தி வாங்கச் சென்றனர். இதிலென்ன வேடிக்கை என்றால், அவர்களுள் பலரிடம் தங்க வாத்து எதுவும் இல்லை. சாதாரண வாத்துதான் இருந்தது. அவர்களுள்ளும் சிலரிடம் வாத்தே இல்லை. அவர்களும் கத்தி வாங்கச் சென்றனர். அடுத்த சில மணிநேரங்களில் அனைவர் கையிலும் கத்தி இருந்தது.

தங்க வாத்து உழவன், தன் கூரிய கத்தியை எடுத்தான். ஒரே வெட்டு. தங்க வாத்து செத்து விழுந்தது. அதன் வயிற்றிலிருந்து ஒரு முட்டைகூட கிடைக்கவில்லை. 'அய்யோ! உள்ளதும் போச்சே நொள்ளைக் கண்ணா!' எனக் கூக்குரல் இட்டான். இதை அவன் எதிர்பார்க்கவில்லை. உடனே, தட்டைத் திருப்பினான். "இது, கத்தி விற்றவர்களின் சதி; அவர்கள் மட்டும் கத்தியை விற்காமல் இருந்திருந்தால் நான் என் தங்க வாத்தை இழந்திருக்க மாட்டேன்" எனக் குற்றம் சாட்டினான்.

கத்தியை வாங்கிய இதர உழவர்களும் அவர்கள் வீட்டில் இருந்ததை வெட்டினார்கள். சிலர் சாதாரண வாத்தை; சிலர், ஆடு-கோழிகளை; சிலர், தங்கள் நிழல் தரும் மரங்களை; சிலர், எதை வெட்டுவது என்று தெரியாமல் வெட்டினார்கள்; சிலர், நகம் வெட்டப் பயன்படுத்திக் கைகளைக் காயப்படுத்திக்கொண்டார்கள். இப்படி எவருமே கத்தியைச் சிறப்பாகப் பயன்படுத்தவில்லை. அதை உருப்படியான வேலைக்குப் பயன்படுத்தவில்லை. ஒவ்வொருவரும் தங்க வாத்து உழவனைப் போல், கத்தி விற்றவர்களையே குற்றம் சொன்னார்கள்.

"நீங்கள், விற்றிருக்காவிட்டால், இப்படி நடந்திருக்காது. நீங்கள்தான் எங்களை இந்தச் செயலுக்குத் தூண்டினீர்கள். இந்தச் செயல்களுக்கு நீங்களே பொறுப்பாளி; எங்களுக்கு எதுவும் தெரியாது.

"அந்தக் காலத்தில் நாங்கள் எவ்வளவு சிறப்பாக வாழ்ந்தோம்! இப்போது இந்த ரத்தக் களரியில் வாடுகிறோம். காயத்தினால் வந்த புண், சீழ்பிடித்துவிட்டதே! இவையெல்லாம் கத்தி விற்பவர்கள், ஊருக்குள் வந்ததால்தானே! அவர்களை இந்த அரசியல்வாதிகள், இலஞ்சம் வாங்கிக்கொண்டு நுழைய அனுமதித்து விட்டார்கள். வெளிநாட்டுக் கத்தி வணிகர்களை விரட்டுவோம்" எனக் கூக்குரல் எழுப்பினார்கள்.

இதைத் தொடர்ந்து, உள்ளூர்க் கத்தி வியாபாரிகள் சாப்பாட்டில் மண் விழுந்தது. மேல்நோக்கி இருந்த கத்தி விலை, இப்போது மிகவும் சல்லிசாகக் கிடைத்தது. கூர்மையும் அதிகமாய் இருந்தது. தங்கள் கத்திகளின் தரம் குறைவு; விலை அதிகம் என்ற நிலையை உள்ளூர்க்காரர்கள் ஒப்புக்கொள்ளத் தயாரில்லை. 'வெளியூர்க்காரன் வந்ததால்தான் நம் பிழைப்பு போயிற்று. அவர்கள் வெளியேற வேண்டும்' என்று முழங்கினார்கள்.

இந்தக் கதை, நம் நாட்டுக் கதைதான். உலகமயமாக்கலின் விளைவாக, நம் வளங்கள் அழிகின்றன என்று குமுறும் விவசாயிகளுக்கு மட்டுமில்லை; அனைத்துத் தொழிலாளிகளுக்கும் அனைத்துத் தொழில்களுக்கும் இந்தக் கதை பொருந்தும்.

நம் மக்களின் பேராசைக்கு அளவில்லை. குறைந்த உழைப்பில், குறைந்த நாள்களில் முன்னேறிவிட வேண்டும் என்ற உந்துதலால்தான் அவர்கள், குறுக்கு வழிகளில் செல்லத் தொடங்கினார்கள். அவர்கள் மட்டும்தான் அவ்வாறு குறுக்கு வழிகளில் செல்லவேண்டுமா, என்ன? வியாபாரிகளும் குறுக்கு வழியில் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் விடுவார்களா? மனச்சான்றின்படி அவர்கள் பதில் சொல்வார்களா? எங்கேனும் அதிசயமாக அப்படி ஓரிருவர் இருக்கலாம். நியாயம், நீதி ஆகியவற்றோடு வணிகத்தில் உள்ளவர்கள், அரிய பிறவிகள்; விதிவிலக்குகள்.

இந்த விதையைப் பயன்படுத்தினால், அதிக மகசூல் கிடைக்கும்; இந்த உரத்தைப் போட்டால், பயிர் மூன்று பங்கு விளையும் என்ற பிரச்சாரத்தில் மயங்கினார்கள். இயற்கையான கோமியமும் சாணமும் போட்டால், முக்கால் பங்கு விளைந்தாலே அதிகம் என்ற உண்மை நிலையை உணர்ந்தார்கள். எல்லாரும் 'உஜாலாவுக்கு' மாறினார்கள். வருகிற எதுவும் தன் நிழலையும் சுமந்தே வரும் என்ற உண்மையை மறந்தார்கள். விளைநிலங்கள் பல மலடானமைக்குக் காரணம், விதையையும் உரத்தையும் விற்ற வணிகர்களா? அவற்றை வாங்கிப் பயன்படுத்திய உழவர்களா?

அதிகத் தண்ணீரை உறிஞ்ச மோட்டார்; விரைந்து விதைக்க, அறுக்க டிராக்டர்; நெல் பிரிக்க எந்திரம் என எல்லாவற்றிலும் மாறினார்கள். வசதிதான். வேலை, விரைவில் முடிந்துவிடுகிறது. ஆனால், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டது என்ற கூக்குரலுக்கு என்ன பதில்? இந்த வசதிகளைப் பயன்படுத்துவோரை, யாரும் அவர்கள் கையைப் பிடித்துத் தரதரவென இழுத்து வந்து, இந்த எந்திரங்களை அவர்கள் தலையில் கட்டவில்லை. அவர்களாகத்தான் போனார்கள். பேராசையினால் எந்திரங்களுக்கும் செயற்கை வழிகளுக்கும் மாறினார்கள். இன்று அவற்றின் பின்விளைவுகளைத் தாங்க முடியாமல் குமுறுகிறார்கள்.

இவர்கள் என்ன பச்சைப் பிள்ளைகளா? ஒன்றுமே தெரியாதவர்களா? இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணின் மைந்தர்களாய் இருந்தவர்கள், இன்று வேற்று மண்ணின் கைதிகளாய் நிற்கிறார்கள். நல்லதையும் தீயதையும் ஆராய்ந்து உணரும் பகுத்தறிவை எங்கே தொலைத்தார்கள்?

யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பி விட்டார்களா, என்ன? காந்தி எவ்வளவோ நல்ல வழிகளைத்தானே காட்டினார். அதை நம் மக்கள், இக்காலத்திற்குப் பொருந்தாது என்று கைகழுவி ஆயிற்று. எவர் சொன்னதையும் ஏற்பவராய் இருந்தால் காந்தி சொன்னதை ஏற்றிருக்க வேண்டுமே! இல்லையே! அப்படி என்றால் நேற்று வந்த எந்திர வியாபாரிகளின் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துக் கேட்கும் மக்கள், காந்தியின் - நம் சித்தர்களின் - மூதாதையர்களின் (இயற்கைசார் வாழ்வை வலியுறுத்தும்) சொற்களைக் கேட்கத் தயாரில்லை.

ஆனால், வியாபாரிகளின் பேச்சைக் கேட்கத் தயாராய் இருக்கிறார்கள். உலகின் எந்த நாட்டு வியாபாரிகளும் அப்படித்தான் தேனொழுகப் பேசுவார்கள். தங்கள் பொருளை வாங்கினால், அடுத்த நாள் அதிகாலை அற்புதம் நடந்துவிடும் என்று திருப்பித் திருப்பிச் சொல்லத்தான் செய்வார்கள். அவர்கள், தங்கள் பொருளை விற்க, எதுவும் செய்யத் தயாராய் இருப்பார்கள்தாம். யாரும் பொதுச்சேவை செய்ய, வியாபார உலகுக்கு வரவில்லை. இலாபம் சம்பாதிக்கத்தான் வருகிறார்கள். அவர்கள், ஆடுகிற மாட்டை ஆடியும் பாடுகிற மாட்டைப் பாடியும்தான் பால் கறப்பார்கள். உள்ளூர் வியாபாரிகள் ஒன்றும் நூறு விழுக்காடு, உத்தமர்கள் இல்லை. இவர்களும் எல்லாத் தந்திரங்களும் உள்ளவர்களே. வியாபாரிகள் எங்கும் ஒரே தரத்தவர்களே. அவர்களைப் புரிந்துகொண்டு, நாம்தாம் விழிப்போடு இருக்கவேண்டும்.

விழிப்போடு இல்லையென்றால் அனுபவிக்க வேண்டியதுதான். இந்த எந்திரமயமான உலகின் பின்விளைவுகளுக்கு மேற்கத்திய நாடுகளைக் கைகாட்டிவிட்டுத் தப்பிக்க முடியாது, நண்பர்களே! இந்த நிலைக்கு நாமே காரணம்.

உள்ளூர் வியாபாரிகள், எந்தெந்தப் பொருளுக்கு என்னென்ன இலாப விழுக்காடு வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள். அதிகத் தேவை உள்ள பொருளுக்கே அதிக இலாப விழுக்காடு வைத்திருப்பார்கள். அண்மையில் மாம்பழப் பருவம் முடிவடையும் நிலையில் மாம்பழங்களின் விலை, கிடுகிடுவென ஏறியது. முதலில் ஐந்து ரூபாய்க்கு 2 பழங்கள்கூட கிடைத்தன. மாம்பழ வரத்து குறைந்ததும் அண்மையில் விலை விசாரித்தேன். 4 பழங்கள், 50 ரூபாய் என்று விலை சொன்னார்கள். மும்பையில் வெள்ளத்தால் அடிப்படைப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், எல்லாம் யானை விலை, குதிரை விலை விற்கின்றன. விற்போர், வெளிநாட்டு வியாபாரிகள் அல்லர்.

மாறாக, குறைவான தேவை உள்ளவற்றுக்குக் குறைவான இலாபமே கிடைக்கும். எனவே அதிகத் தேவையை ஏற்படுத்த வியாபாரிகள் முயலத்தான் செய்வார்கள். அதற்கு எலும்புத் துண்டாக, கேரட்டாக, இலவசப் பொருள்களை வழங்கத்தான் செய்வார்கள். கழிவும் அதிரடித் தள்ளுபடியும் கொடுக்கத்தான் செய்வார்கள். கலப்படமும் எடைக்குறைப்பும் செய்யத்தான் செய்வார்கள். வெளிநாட்டு வியாபாரிகள் சிலரைப் போல் அவர்கள் கொள்ளை இலாபம் அடிக்கவில்லை என்பது போல் தெரியும். அதற்குக் காரணம், அவர்களின் நல்ல இயல்பு இல்லை. அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அவ்வளவுதான்.

அறிஞர் அண்ணா சொன்னார்: வெளிநாட்டுத் தேன் குடித்தால் அது இனிக்காமல் போகாது; உள்நாட்டுத் தேள் கடித்தால் அது கடுக்காமல் போகாது.

கிடைத்த வாய்ப்பில் கொள்ளை இலாபம் அடித்துச் சொத்து சேர்க்கும் ஆட்கள் நம்மிடம் இருக்கத்தானே செய்கிறார்கள். காடுகளை அழித்தது; வறண்ட நீர்நிலைகளை வீட்டு மனைகளாக்கியது; சுற்றுச் சூழலை மாசுபடுத்தியது... என எண்ணற்ற குற்றச்சாட்டுகளை நம் மீது நாமே கூறவேண்டிய நிலையில் இருக்கிறோம். இவை அனைத்திற்கும் மேற்கத்திய நாடுகளைக் குற்றம் சொல்லி விடலாமா?

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனப் புறநானூற்றுப் புலவன் கணியன் பூங்குன்றன் கூறியதை வெறும் சொற்களாகத்தான் நாம் கூறுகிறோம். அப்படி என்றால், உலகமயமாக்கலின் தத்துவமும் 'யாதும் ஊரே' என்பதும் ஒன்றுதானே! அதை ஏன் நாம் எதிர்க்கிறோம்?

வெளிநாட்டிலிருந்துதான் இங்கு பலவும் வந்துள்ளன. இரயில் பாதை முதற்கொண்டு, மின்சாரம், தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, கணினி, மகிழுந்து, விமானம்..... என மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள பெரும்பாலானவற்றின் தொழில்நுட்பங்கள், வெளிநாட்டிலிருந்து வந்துள்ளன.

நல்லவற்றை வெளிநாட்டிலிருந்து ஏற்றுக்கொள்ளும் திறந்த மனம் உள்ள நாம், அல்லவற்றை எதிர்க்கவேண்டியது, கட்டாயம்தான். அந்த அல்லவை, உள்ளூரிலும் இருக்கலாம்; வெளிநாட்டிலும் இருக்கலாம். தொலைநோக்கோடு இரண்டையும் தரம்பார்த்துப் பிரித்தறிந்து, நல்லதைத் தேர்ந்தெடுக்கும் அடிப்படை அலகுகள் நம்மிடம் உள்ளனவா?

நமக்கு உண்மையை எதிர்கொள்ளும் துணிவு இல்லை; அதை ஒப்புக்கொள்ளும் நேர்மை கூட இல்லை. எல்லாப் பழியையும் இன்னொருவன் தலையில் போட்டுவிடப் பார்க்கிறோம். இதை எதிர்பார்த்துத்தான் கணியன் அன்றே சொன்னான்: 'தீதும் நன்றும் பிறர்தர வாரா'.

இந்தக் குறுகிய காலப் பின்விளைவுக்கே இப்படி அலறினால் எப்படி? இன்னும் ஓரிரண்டு நூற்றாண்டுகளில் என்னென்ன நடக்கும்? அதற்கு நம் உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் தயாராக இருக்கிறார்களா? பேராசைக்கும் குறுக்கு வழிகளுக்கும் நாம் விலை கொடுக்கவேண்டாமா?

தவறான வழிகளில் சென்று, பிள்ளைகளுக்குப் பலர் சொத்து சேர்க்கிறார்கள்! அந்தோ பரிதாபம்! நம் இன்றைய தவறுகளுக்கு நாம் தண்ணீர்ப் பஞ்சம் போல ஓரளவுதான் சிரமப்படுகிறோம். நம் தவறுகளுக்காக, நம் சந்ததியினருக்குப் பல மடங்குகள் அதிகத் தண்டனை காத்திருக்கிறது. நேரடியாக எந்தத் தவறும் செய்யாமல் நம்மிடம் வந்து பிறந்ததற்காகவே நம் சந்ததி, தண்டனைக்கு உள்ளாகப் போகிறது. செய்த குற்றத்திற்கு 'அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்று சொன்ன தமிழே, நீ பின்தங்குகிறாய். குற்றம் செய்யவே வேண்டாம்; ஆனால், தண்டனைகள் காத்திருக்கின்றன என்ற காலம் நெருங்குகிறது.

இருநூறு ஆண்டு கடுங்காவல் என்று தண்டனைகள் விதிக்கும் போது எல்லாம் சிரித்துக்கொள்வேன். மனிதன் அவ்வளவு காலம் உயிரோடு இருந்தால்தானே என்று. ஆனால், இன்றைய மனிதன், பல்லாயிரம் ஆண்டுக் கடுங்காவல் தண்டனைக்கு உரிய குற்றங்களைச் செய்கிறான். அவன் நூறு ஆண்டுகளுக்குள் மரித்தாலும் எஞ்சிய தண்டனைகளை அவன் சந்ததி சுமக்கவேண்டும். இதுதான் நம் சாதனை.

Monday, August 01, 2005

கவிதாயினி மதுமிதா
விக்கிரமாதித்யனின் அதிசய சிம்மாசனம் ஒரு நிலத்தில் புதைந்திருந்தது; காவலன் ஒருவன், அதன் மேல் நின்றான். அவனிடம் பரிவும் விருந்தோம்பலும் இன்னபிற நற்குணங்களும் நிறைந்திருந்தன. அந்தப் பீடத்திலிருந்து இறங்கினான்; மறுநொடி அந்த நற்குணங்கள் யாவும் அவனை விட்டு நீங்கின. இப்படி ஒரு கதை உண்டு. அது, உண்மையோ? பொய்யோ? இங்கே அதை ஒரு தொன்மக் குறியீடாய்க் கொள்வோம்.

ஒரு வகையில் காதலும் அந்தச் சிம்மாசனம் போலத்தான். காதலின் மேல் நிற்கும்போது நிற்பவர், இந்த உலகையே மறந்துவிடுவார். நல்லவராகவும் வல்லவராகவும் மாறிவிடுவார். குறிப்பிட்ட இருவர் மட்டுமே நிறைந்த, முற்றிலும் ஏகாந்தமான உலகம் ஒன்றிற்குள் நுழைந்துவிடுவார்கள். பிரபஞ்சப் பொருட்கள் யாவும் அவர்களின் ஏவலுக்குக் காத்திருக்கும். ஈருயிர் ஓருயிராகும் பரிணாமத்தில் கூடலும் ஊடலும் கனவும் கற்பனையும் மெளனமும் பிதற்றலுமாய் ஒரு பித்து நிலையில் சஞ்சரிப்பார்கள். அது, ஒரு வகை அதீத உலகம். அங்கே எதுவும் இயல்பாய் இருக்காது. பனித்துளிக்குள் பிரபஞ்சத்தையே காண்பது போல் களிகூத்து நிகழ்த்துவார்கள்.

காதல் கவிதைகளுக்குள் சில பொதுவான இயல்புகள் உண்டு. 'கடைக்கண்ணால் பார்; மரணத்தை வெல்கிறேன்', 'கிளுகிளுவெனச் சிரி; கிழக்குடன் போட்டியிடுகிறேன்', 'பார்வையால் என்னைக் கொல்கிறாய்', 'பசி இல்லை', 'துயில் இல்லை', 'உன்னைக் காணாமல் (வளையல்/ கைக்கடிகாரம் கழலும் அளவுக்கு) இளைக்கிறேன்', 'உடனே உன்னைப் பார்க்காவிட்டால் உயிர் உடலை விட்டுப் போய்விடும்',

'என் மனம் என்னிடம் இல்லை, உன்னிடம் வந்துவிட்டது', 'விலகாதே! எப்போதும் என் பக்கத்திலேயே இரு', 'விலகியிருக்கிறாய், தனிமையின் வெப்பம் தகிக்கிறது', 'என் துணையே, உனக்குத் துயரா? தொல்லைசெய்யும் ஆளைக் காட்டு, கீசிடுறேன்', 'உனக்காக எதுவும் செய்வேன், உயிரும் கொடுப்பேன்'....... எனக் காதலர்களின் ஒவ்வோர் அசைவையும் கவனியுங்கள். அவை, ஒரு தனித்த தளத்தில் இருந்தே எழுகின்றன. காதலர்கள் பெரும்பாலும் தரையில் நிற்பதில்லை; மிதக்கிறார்கள். அந்த மனோ நிலையைத் தக்க வைப்பதே, காதல் கவிதைகளின் பணியாய் இருக்கிறது.

இவை அல்லாமல், வருணனைகளும் காதல் கவிதைகளின் பெரும்பகுதியைப் பிடித்து வைத்துள்ளன. உறுப்பு வருணனைகள், குரல்- நிழல்- பண்பு, நிமிர்ந்தது, குனிந்தது, நடந்தது ... என எதையும் விடாமல் வருணிக்கிறார்கள். புற வாழ்வில் அழுக்கு என்றும் குப்பை என்றும் கருதப்பெறும் பலவும் காதலர் உலகில் விலைமதிக்க முடியாதவை ஆகின்றன. காதலியின் ஒற்றை முடி, நகத் துண்டு ஆகியவற்றைக் காதலன் போற்றிப் பாதுகாக்கிறான். காதலன் சூட்டிய பூ காய்ந்து சருகானாலும் காதலி அதைத் தூக்கி எறிவதில்லை. இந்தப் பொருள்களையே இப்படிப் பாதுகாத்தால் பரிசுப் பொருள்களை எப்படிப் பாதுகாப்பார்கள்!

இவையெல்லாம் உயிரோடு இருக்கும் காதலுக்குப் பொருந்தும். இணையில் ஒருவர் மறைந்தாலோ, பிரிந்தாலோ, தொலைந்தாலோ, அந்த இன்னொருவர், கொடுந்துன்பத்திற்கு உள்ளாவார். மகிழ்வின் உச்சத்தில் இருந்த நிலை மாறி, இப்போது அதற்கு நேர் எதிராய்த் துன்ப சாகரத்தின் ஆழத்தைத் தொட்டுவிடுவார். துணையின் ஒருவர் பிரிந்தால், இன்னொருவருக்கு உலகமே தலைகீழாக மாறிவிடுகிறது. ஒருதலைக் காதலும் இந்த வரிசையில் வைக்கத் தக்கதே. துன்பியல் காதல் கவிதைகளில் மரணம் என்ற சொல் உறுதியாக இருக்கும். சொல் மட்டுமா?

இப்படிக் காதலின் இயல்புகளையும் அறிகுறிகளையும் சொல்லக் காரணம் என்ன? தமிழில் வெளிவந்திருக்கும் இலட்சக்கணக்கான காதல் கவிதைகளின் சாரமே, இவை. இத்தகைய கூறுகள் இல்லாமல் எந்தக் கவிதையும் இல்லை. இந்த உணர்வுகளைத்தான் காதல் கவிஞர்கள், வெவ்வேறு சொற்களில், வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு கோணங்களில், வெவ்வேறு ஆட்களின் முன் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

சங்க காலத்திலிருந்து வெவ்வேறு அலைவரிசைகளில் தொடரும் இந்த மரபு, இன்று வரை இடைவெளி இல்லாமல் நீடித்து வருகிறது. அந்த மரபில் வருகிறார், மதுமிதா (41).

சற்றே தலை சாய்ப்பாய்
முடிக்கற்றை நெற்றியில் வந்து
அழகாய் அழகு சேர்க்கும்

லேசாக ஒதுக்குவாய்
கையை எடுக்கும் முன்பே
அதே இடத்தில் அரைநொடியில்
அசைந்தாடி வந்து நிற்கும் அழகு முடி

என்னை நலம் விசாரிக்க

- என அழகியலோடு கவிதை பாடத் தெரிந்திருக்கிறது, இவருக்கு.

மனமெனும் சாதனத்தை
என் செய்வேன்
முடியைக் கட்டி
மலையை இழுப்பதாய்
உன்னில் பிணைத்துள்ளேன்

- என அற்புதமாக வடித்துள்ளார்.

விழியால்
முழுதாய்
விழுங்கி விட்டேன்.

செரிக்க இயலவில்லை
உன் நினைவை

- என்கிற போதும்

சற்றே தலைசாய்த்து
சிறு பார்வை பார்த்தாய்
மனம்
பெரு வெள்ளத்தில்
அடித்துச் செல்லப்பட்டு விட்டது

- என்கிற போதும்

"பேச வேண்டாம்"
என சொல்லிவிட்டு
ஒருநாள் முடிவதற்குள்
பரிதவித்து
"ஒரு வருடம் ஆனது போலிருக்கிறது"
என நான் சொல்ல
அருகில் ஒன்று சேர்த்து
"இல்லை 11 வருடம் போலிருக்கிறது"
என நீ சொல்ல
அனலில் விழுந்த புழுபோல் துடித்ததாக
இருவரும் உணர்ந்தோமே
ஞாபகம் இருக்கிறதா???

- என்கிற போதும் காதலின் அதீத மனோநிலையை அடையாளம் காணலாம்.

காதல், உடல் சார்ந்ததா? மனம் சார்ந்ததா? இது, நெடுங்காலமாக நிலவும் ஒரு கேள்வி. உடல் சார்ந்ததைக் காமம் என இக்காலத்தில் அழைக்கிறோம். உடல் சார்ந்ததாய் இருப்பது தரக் குறைவு என்றும் பலர் கருதுகின்றனர். இது, அவர்களின் சொந்தக் கருத்து அன்று. இந்தச் சமுதாயமும் ஊடகங்களும் அந்தக் கருத்தை ஆழமாக விதைத்துள்ளன. காதல், மனம் சார்ந்தது என்பது பெரும்பாலோர் கருத்து. அப்படியானால் மனம் மட்டுமே சார்ந்ததா? அவ்விதம் இல்லை. மனத்திற்கும் உடலுக்கும் காதலில் சரிசமமான இடம் உண்டு.

பார்வையாலோ, உடலாலோ தீண்டுதல், காதலுக்குத் தூண்டுதல் ஆகிவிடுகிறது. தொலைதூரத்தில் இருக்கிற, பார்க்காத இருவரிடையே காதல் சாத்தியமே. அவர்கள் தொலைபேசியில் குரல்வழியே, காதலைப் பகிரலாம். அந்த வசதியும் இல்லாதோர், கடிதம் மூலம் பகிர்கிறார்கள். இங்கும் கடிதத்தின் சொற்கள், குரலாக மாறி மனத்தில் ஒலிக்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். எப்போது குரல் ஒலிக்கிறதோ, அப்போதே அது உடலோடு தொடர்பு உடையதாகி விடுகிறது. புகைப்படமோ, ஓவியமோ கூட உருவத்தை எடுத்துச் செல்லும் ஊடகங்களே.

பார்வையற்றவர்களிடையே கூட குரலும் தீண்டுதலும் முக்கிய இடம் பெறுகின்றன. செவிப்புலனும் பார்வையும் ஒரே நேரத்தில் இழந்தவர்களும் தீண்டுதலால் காதலைப் பரிமாறுகின்றனர். தொலைதூரத்தில் இருந்து கடிதம் கூட எழுதிக்கொள்ளாமல், எந்தத் தூதுவரும் இல்லாமல் இருவர் காதலிக்க முடியுமா? ஒரே நேரத்தில் ஒரே மாதிரி இருவர் சிந்தித்து உள்ளனர்; உரையாடியும் உள்ளனர். இதை டெலிபதி என்கின்றனர். அப்படிப்பட்ட காதலர் யாரேனும் உண்டா என்கிற தகவல் இல்லை. அப்படி இருந்தால் அது, மனம் மட்டுமே தொடர்புடைய காதல் என ஏற்கலாம்.

இதிலிருந்து நமக்குத் தெரிவது, உடலின் பங்கு சிறிதளவேனும் இல்லாமல் காதல் சாத்தியமில்லை என்பதே. ஆயினும் நம் மக்களின் புற மனத்தில் முத்தமிடுதல், தீண்டுதல், அணைத்தல் உள்ளிட்ட காதற் செயல்பாடுகள், தவறு என்று பதிந்துள்ளன. அவை இல்லாமல் காதல் சுவைக்காது.

என்
இடது கன்னம் உணர்வது
குளிர் தென்றலா
பனித்துளியா
உன் இதழா என்பதை
அறியும் முன்னே

விடைபெறும் கணம்
முடிந்து விட்டது

- என்ற வரிகளிலும்

செவ்விதழ்கள் பரிசளித்த ஒற்றைவரி
இப்போது விழிகளில் பார்
எத்தனை செவ்வரிகள்

- என்ற வரிகளிலும் தீண்டுதலின் பங்கு வெளிப்பட்டுள்ளது.

எத்தனை ஓசைகள்
இருந்தாலும்

உனது
சுவாசத்தின் சப்த
அலைவரிசை மாற்றம்
அறிந்து

உன் உணர்வின்
லயத்தைத்
தெரிந்து கொள்வேன்

- என்ற கவிதையும் தனியே குறிப்பிடத்தக்கது. மதுமிதாவின் பல கவிதைகளிலும் தனிமை, முக்கிய இடம் வகிக்கிறது.

தவிக்கத் தவிக்க
தனியே விட்டுச் சென்றாய்
கொடிது கொடிது
தனிமை கொடிது
அதனினும் கொடிது
இளமையில் தனிமை

- என்ற வரிகளும்

சிறிதும் இரக்கமின்றி
எதிர்வரும் தனிமை,
கழுத்தை நெரிக்கும்
ஆவேசத்துடன்

- என்ற வரிகளும் எதை உணர்த்துகின்றன என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். நினைவுகளின் ஊசலாட்டம், சுமை, தீவிரம் ஆகியவற்றைப் பல கவிதைகள் படம் பிடித்துள்ளன.

முரண்டு செய்து
அடம் பிடித்து
விடாமல் உன்னினைவைப்
பிடிவாதமாய் பற்றிக் கொண்டு

நேரம் காலம் புரியாது
தலை கீழாய்த்
தொங்குகிறது
வௌவால் மனசு

- என்றும்

மனம் ஒரு உடும்புதான்
விடாமல் உன்னையே
இறுகப் பற்றிக் கொண்டுள்ளதே...!

- என்றும் அது வெளிப்பட்டுள்ளது.

காதல் கவிதைகளை நூற்றுக் கணக்கில் எழுதித் தள்ளியிருக்கிறார், மதுமிதா. இன்றைய திரைப்படப் பாடலாசிரியர்கள் இதற்கென இரவும் பகலுமாய் உழைத்துக்கொண்டிருக்க, இங்கு இவர் தனியே ஆலாபனை செய்து வருகிறார்.

பொதுவாக ஒரு மென்மையான தொனியில், வலிக்காத வார்த்தைகளில், பொங்கிவரும் உணர்வலைகள் பதிவாகியுள்ளன. நல்ல கவிதைகள் பல இருந்தாலும் கூட, வெறும் சம்பவங்களும் விவரிப்புகளும் மிகுந்துள்ளன. நடையில் உரைநடை இழையோடுகிறது. அதீத உணர்வுகளைப் பேசும் போது கவிதை, தனித்த நடையைக் கையாளுவது நல்லது.

நட்பினும் பெரிது
காமம் கடந்தது
காதலும் அன்று

அன்பே
என்ன பெயர் வைக்கலாம்
நமதன்பிற்கு

- என்கிற கவிதையில், 'நமதன்பிற்கு' என்ற சொற்களைவிட 'இதற்கு' என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம்.

அறுபத்தி ஐந்து ஆண்கள்
இருபத்தி இரண்டு பெண்கள்
பதிமூன்று சிறுவர்கள்
ஐந்து நாய்
ஏழு காகம்
இரண்டு நண்டு
மூன்று குதிரை
கடந்து சென்ற
இவற்றைக் கேள்
காத்திருந்த
நேரம் முழுவதும்
உன்னை வாழ்த்தியதை
அவையேனும்
உனக்குச் சொல்லட்டும்

- என்று ஒன்றை எழுதியுள்ளார். இதில் அடிப்படைப் பிழை ஒன்று உள்ளது. காதலன் (என்று வைத்துக்கொள்வோம்); சொன்னபடி வரவில்லை, காத்திருக்க வைத்துவிட்டான்; அதற்காக அவனைக் காதலி திட்டவில்லை, வாழ்த்துகிறாள்; சரி அவள் திட்டவே முடியாத அளவுக்கு நேசம் வைத்திருக்கிறாள் என்றே இருக்கட்டும். படைப்பில் உள்ள 'நேரம் முழுவதும்' என்ற சொற்கள் உண்மையானவை இல்லை. ஏனெனில், தெருவில் கடந்துசென்றவற்றைத் துல்லியமாய்க் கணக்கெடுக்கிற காதலி, கணக்கெடுக்கும் நேரத்தில் காதலனை வாழ்த்தவில்லை. வாழ்த்திக்கொண்டே கணக்கு எடுத்திருந்தால் கணக்கு துல்லியமானது இல்லை. இரண்டு வேலைகளை அவள் ஒரே நேரத்தில் செய்ய வல்லவள் எனக் கொண்டாலும், முழு மனத்தையும் காதலனிடம் அவள் செலுத்தவில்லை எனப் புலனாகிறது. எனவே, 'நேரம் முழுவதும்' என்ற சொற்கள், அவளுக்கு எதிராக இயங்குகின்றன. அதிலும் காதலனுக்குக் காதலி மேல் நம்பிக்கை இல்லையா, என்ன? கடந்து சென்றவற்றிடம் எதற்காகக் கேட்கவேண்டும்?

கவிதை, உணர்வுத் தளத்திலிருந்து அறிவுத் தளத்திற்குச் செல்லும்போது இத்தகைய சிக்கல்கள் வருவது இயல்பு. இவற்றை மதுமிதா, கவனிக்கவேண்டும்.

காதல் கவிதைகளைத் தவிர, மதுமிதா, பொதுக் கவிதைகளும் பல இயற்றியுள்ளார்.

கேட்ட கடைகளில் எல்லாமே
சில்லரை இல்லை என
ஒரே பதில்தான் கிடைக்கிறது

குறைந்த பட்சம்
ஒரு ரூபாய்க்கான சாக்லேட்டாவது
வாங்காதவரை

- என்றும்

எந்த வெளிச்சத்தில்
எந்தக் கோணத்தில்
எடுத்தாலும்

கண்ணாடியில்
தோன்றும் அழகை
எப்போதும்
பிரதிபலிப்பதில்லை

கேமெரா பிடித்துத் தள்ளும்
எந்தப் புகைப்படமும்

- என்றும்

கோடி புண்ணியம்
கோபுர தரிசனம்

காலம் காலமாய்
சந்ததிகளுக்கான இடங்களைப்
பாதுகாத்தவண்ணம்
வரிசைகளில்
ஒரு தலைமுறையினர்
தட்டுக்களை ஏந்தியபடி
கோபுர வாசலில்

கோபுர தரிசனம்
கோடி புண்ணியம்

- என்றும்

வேப்பம் பூவின் வாசம் சேர்த்து
தடதடத்தவண்ணம்
ஓடும் லாரியின் ஓசையைச் சுமந்து
செல்லும் காற்றின்
அதிர்வுடன் ஒத்திசைந்து ஆடும்
திரைச் சீலை

எதனைக் காட்டலாம்
எதனை மறைக்கலாம்
என்னும் பரிதவிப்புடன்...

- என்றும்

காற்று வருடிவிடுகிறது
பெயர் பொறிக்கப்பட்ட
மரத்தின் வடுவை

- என்றும் அழகிய, பொருள் உள்ள கவிதைகளை இயற்றியுள்ளார்.

மதுமிதா, சுதந்தரப் போராட்டத் தியாகி அரங்கசாமி ராஜாவின் பெயர்த்தி. தென்காசியில் பிறந்து, இராஜபாளையத்தில் வாழ்ந்து, சென்னையில் வசிக்கிறார். மெளனமாய் உன்முன்னே... என்ற கவிதை நூலைப் படைத்துள்ளார். பர்த்ருஹரியாரின் தத்துவங்களைச் சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். அது, நீதி சதகம் என்ற நூலாக வெளிவந்துள்ளது. இவர், சமூகப் பணிகளிலும் ஈடுபாடுள்ளவர்.

பொறுமை பழகிட
கோவிலில்
அடிப் பிரதட்சணம்
செய்திட வேண்டாம்

நகரச் சாலையில்
சிக்னலில்
காத்திருந்தால் போதும்

-என்கிறார் மதுமிதா.

பச்சை விளக்கு எரிகிறது. பயணத்தைத் தொடருங்கள்.

Sunday, July 31, 2005

இ.வி.சிங்கன் காரைக்குடிப் பயண அனுபவங்கள்- ஒரு பார்வை
(1999ஆம் ஆண்டு மறவன்புலவு க. சச்சிதானந்தன், இ.வி.சிங்கனின் காரைக்குடி பயண அனுபவங்கள் என்ற நூலை என்னிடம் அளித்தார். அதற்கு ஒரு மதிப்புரை வழங்கக் கேட்டார். எழுதிக் கொடுத்தேன். இவ்வாறு பத்து மதிப்புரைகளை இ.வி.சிங்கன் பெற்றார். அவற்றை, 'புத்தகத்தை மதிப்புரை திறனாய்வு செய்வது எப்படி?' என்ற தலைப்பில் 2000ஆம் ஆண்டு ஒரு நூலாகவே வெளியிட்டார். அதில், என் மதிப்புரையைத் தவிர, மா.வழித்துணைவன், முனைவர் சுப.திண்ணப்பன், செ.ப.பன்னீர்செல்வம், இரா. அன்பழகன், பாத்தேறல் இளமாறன், முனைவர் லெட்சுமி மீனாட்சி சுந்தரம், முனைவர் ந.சுப்புரெட்டியார், முனைவர் எம். முத்துராமன் ஆகியோரின் மதிப்புரைகளும் இடம்பெற்றுள்ளன. அந்த நூல் குறித்தான என் மதிப்புரையை இங்கு தருகிறேன்.)

இந்நூல், இரண்டு நூல்களின் தொகுப்பாக அமைந்திருக்கிறது. சிங்கப்பூர் வாழ்த் தமிழரான இ.வி.சிங்கன், காரைக்குடி, காட்மாண்டு ஆகிய நகரங்களுக்குத் தான் மேற்கொண்ட பயணத்தைப் பற்றி, அங்குலம் அங்குலமாக விவரித்திருக்கிறார். முதற்பகுதியான காரைக்குடிப் பயணம், பக்கங்களின் இயல்பாக 1,2,3 எனத் தொடங்கி, 45இல் முடிகிறது. இரண்டாம் பகுதியான காட்மாண்டுப் பயணம், உருது, அரபு, பாரசீக மொழிகளின் இயல்பைப் போலக் கடைசிப் பக்கத்தில் இருந்து தொடங்கி, உள்ளே வந்து முடிகிறது. அதை அவர் முதல் பகுதி முடிந்தவுடன், முறையாக ஒரு தாள் விட்டு, 1,2,3 எனத் தொடங்கியிருந்தால், தமிழ் வாசகர்கள் அவர் எழுத்தை எளிதாகத் தொடர்வதற்கு வசதியாய் இருந்திருக்கும். இது நூலின் பக்க அமைப்பைப் பற்றிய கருத்து.

ஆசிரியருக்கு மிகவும் இயல்பான எழுத்து நடை கைவந்திருக்கிறது. படிப்பதற்கும் அது சுவையாக இருக்கிறது. காரைக்குடிப் பகுதிக்கு வருவதற்கு, அவருக்குக் குழந்தைப் பருவம் முதலே ஆர்வம் இருந்தது என்பதை அழகாக விவரிக்கிறார். அவர் எழுதுகிறார்:

"எங்கள் வீட்டில் செட்டிநாட்டில் இருந்து வந்த ஒரு சமையல்காரன் இருந்தான். அவனுடன் ஆடு, மாடுகளைப் பற்றி அடிக்கடி பேசுவதில் தணியாத ஆர்வம், எனக்கு இருந்து வந்தது.

மாடுகள், வெள்ளை, கறுப்பு, சாம்பல் போன்ற நிறங்களில் இருந்தன. "சிவப்பு, பச்சை, நீல நிறங்களில் மாடுகள் இருக்கின்றனவா?" என்று நான் சமையல்காரனைக் கேட்டேன்.

அவன் பரபரப்பாகச் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த போதும், மிகுந்த உற்சாகத்துடன், "எங்கள் ஊரில் இருக்கின்றன" என்று அடித்துச் சொன்னான். அது எனக்குத் திகைப்பூட்டியது."

காரைக்குடியில் உள்ள இராமசாமி தமிழ்க் கல்லூரியில் திரு. இ.வி.சிங்கன் ஆற்றிய உரை, அதற்கான எதிர்வினைகள், கடிதங்கள், கல்லூரியின் பார்வையாளர் பதிவேட்டில் அவர் எழுதிய கருத்துரை உட்பட அனைத்தையும் பதிப்பித்துள்ளார்.

திருக்குறள் வகுப்பை எப்படி நடத்துவது, திருக்குறள் மூலம் எப்படித் தொண்டு செய்வது, அவை குறித்தான 10 கட்டளைகள் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை.

இரண்டாம் பகுதியான நேபாளத் தலைநகர் காட்மாண்டுப் பயணமும் சுவையாகவே உள்ளது. ஆப்ரிக்க, ஆசியப் புத்தகப் பதிப்பாளர் மாநாட்டில், சிங்கப்பூர் சார்பாக இ.வி.சிங்கன் கலந்துகொண்டதை இப்பகுதி விவரிக்கிறது.

ஆசிரியர், சிங்கப்பூரிலிருந்து பாங்காக் சென்று, பின்னர் காட்மாண்டு செல்லும்போது, விமானத்தில் தாய்லாந்து நாட்டுப் பத்திரிகைகளைப் படித்திருக்கிறார். அதில் இந்திய உள்துறை அமைச்சர் அத்வானி, அண்மையில் சாரநாத்தில் நடந்த உலகப் புத்தர் மாநாட்டில் 'இந்திய ஆரிய நாகரிகங்களின் பழங்கொள்கைகளையே புத்தர் ஒரு புதிய அழுத்தத்துடன் மறுபடியும் சொன்னார்' என்றும், 'பகவத் கீதையின் தத்துவத்தை அடியொற்றியே, புத்தரின் செயல்கள் இருந்தன' என்றும் கூறியிருந்த செய்தியும் அதைப் பல அறிஞர்கள் மறுத்த செய்தியும் வெளியாகி இருந்தன. அதைப் படித்த இ.வி.சிங்கன், பின்வருமாறு அதை விமர்சிக்கிறார்:

'ஒரு பெரிய மாநாட்டில், ஒரு பொறுப்புள்ள அமைச்சர், வரலாற்று ஆதாரம் இல்லாத கருத்துகளைக் கூறி இருப்பது, தேவையில்லாத கிளர்ச்சி உருவாகத்தான் உதவி செய்யும். புத்த சமயமும் சீக்கிய சமயமும் ஆரியர்களின் கொள்கைகளை எதிர்த்து உருவான சமயங்கள் என்பதே அறிஞர்களின் கருத்து. புத்த மதம், இந்து மதத்தின் அடிப்படை என்று சுருக்கமாகச் சொல்லாமல், 'புத்த சமயம்தான் என்னுடைய சமயமும்' என்று அவர் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். புத்தரையே வழிகாட்டியாகக் கொண்டு, பொருளாதாரத்திலும் உற்பத்தியிலும் முன்னேறிய நாடுகளின் அந்தக் கருத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கும்.'

பதிப்பாளர் மாநாட்டில் இ.வி.சிங்கன் ஆற்றிய ஆங்கில உரைகளைப் பதிப்பித்துள்ளார். அவை தலைப்பை விட்டுச் சிறிதே விலகிச் செல்வதுபோல் தெரிகின்றது.

நூல் வணிக நோக்கில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். நூலின் பின் அட்டையில் 'Welcome to Nepal' என்ற விளம்பரம் உள்ளது. நேபாளத்தைப் பற்றிய தகவல்கள், நேபாளம், காட்மாண்டு ஆகியவற்றின் வரைபடங்கள், நேபாளியப் பழமொழிகள், Tamil way of Food Preparation Yesterday and Today, Napalese way of Food Preparation ஆகியவையும் நூலில் இடம்பெற்றுள்ளன. சிங்கப்பூரில் உள்ள ராயல் நேபாளீஸ் கன்சுலேட் ஜெனரல் அலுவலகத்தில், கன்சுலேட் ஜெனரலாக இருக்கும் திரு.எம்.என்.சுவாமி, திரு.இ.வி.சிங்கனின் முப்பதாண்டுக் கால நண்பர் என்றும் குறித்திருக்கிறார். அனைத்தையும் இணைத்துப் பார்க்கும்போது நமக்குள் ஒரு செய்தி, பாயத்தான் செய்கிறது.

பூணூலை அறுத்த பாரதியை ஆசிரியர், 'பிராமணக் கவிஞன்' என்று குறிப்பிடுவதும் தம் ஆங்கில உரைகளில் பிராமணர்களை அதிகம் பேசுவதும், சிங்கப்பூரில் மலையாளிகள், தெலுங்கர்கள், பிராமணர்கள் ஆகியோர் தமிழ் ஆசிரியர்களாக வருகிறார்கள் என்று வருந்துவதும் அவருடைய மனோ நிலையை விளக்குகின்றன.

'Status of the Author in Singapore' என்ற தலைப்பில் பேச வேண்டிய இ.வி.சிங்கன்,

'Authors are of two kinds book publishing.
1. The Tamil people
2. The Tamil Speaking people
The Tamil Speaking People are non-Tamils. Their roots are different'
-என்று பேசுகிறார். மேலும் தொடர்ந்து,

'These authors are mostly Brahmins in Tamilnadu. They write books mixing plenty of Sanskrit words. Their novels consist of plots taken from European fictions in London, Paris, Frankfurt, Rome and America and are reconstructed as Delhi, Mumbai, Calcutta and Chennai and what not?'

- என்று பேசியிருக்கிறார். இவர் கருத்தை முழுவதும் ஒப்புக்கொள்வதற்கில்லை. ஏனெனில் ஆசிரியர் குறிப்பிடுவது போல, எல்லாத் தமிழரல்லாத எழுத்தாளர்களும் ஐரோப்பியக் கருத்துருவில் கதை புனைவதில்லை. சமஸ்கிருதச் சொற்களை ஏராளமாகக் கலக்கிறார்கள் என்றும் வருந்துகிறார். அது தவறுதான். ஆனால், ஆசிரியர் குறிப்பிடும் 'தமிழ் எழுத்தாளர்கள்' எவ்வளவு தூய்மையாக எழுதுகிறார்கள் என்பதை அவர் குறிப்பிடாமல் விட்டுவிட்டார். தமிழ்வேர் கொண்டோரே வெள்ளம் போன்ற ஆங்கில வார்த்தைகளில் தமிழை மிதக்க விடுவதை அவர் குறிப்பிடாமல் விட்டது, ஒருதலைப்பட்சமானது.

இப்படித் தமிழர், தமிழரல்லாதோர் என்று பிரிவினை வாதம் பேசுவது, காழ்ப்புணர்வைத் தூண்டுமேயல்லாது வேறெதையும் தூண்டாது. 'தமிழ்பேசும் அனைவரும் தமிழரே' என்ற ரஜனிகாந்த்தின் கருத்தைக் கலைஞர் கருணாநிதி வரவேற்றிருப்பதை நினைவுகூர வேண்டியது என் கடமை.

நூலில் எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் மலிந்திருக்கின்றன. நல்ல உயர்தரமான தாளில் பளிச்சென்ற படங்களுடன் அருமையாக அச்சாகியுள்ள நூலில் ஒரு குறை, இது.

நேபாளியப் பழமொழிகளுக்கும் தமிழ்ப் பழமொழிகளுக்கும் சில இடங்களில் ஒற்றுமை இருக்கிறது.

1. He who spits at the sky gets it full in his face.
2. One hundred lies are required to hide one lie.

1. வானத்தில் துப்பினால் அவன் முகத்திலேயே அது விழும்.
2. ஒரு பொய்யை மறைக்க நூறு பொய்களைச் சொல்லவேண்டி வரும்.

ஒரு பயண அறிக்கை போல இந்நூல் இருந்தாலும், அனைத்து நடவடிக்கைகளையும் பதிய வேண்டும் என்ற முயற்சி பாராட்டுக்குரியது. அதனால் இது, வரலாற்று முக்கியத்துவமும் பெறுகிறது.

இன்னும் 10 நாள்களே பாக்கி

நகைச்சுவைக் கட்டுரையாளர்கள் கவனத்திற்கு, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த சரியான வாய்ப்பு. அமுதசுரபி யும் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை யும் இணைந்து நடத்தும் அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டிக்கு இன்னும் 10 நாள்களே பாக்கி. முந்துங்கள். கடைசி நேரத்தில் அவசரப்படாமல் முன்னதாகவே எழுதி அனுப்புங்கள்.

மேலும் விவரங்களுக்கு இங்கு பாருங்கள்.

Saturday, July 30, 2005

சுரதா நேர்காணல்

(படத்திற்காக நன்றி: இன்தாம்)


'கவிதை பிடிச்சிருக்கா... காசு போடுங்க சாமீ!' என்ற தலைப்பில், சரவணா ஸ்டோர்ஸ் இதயம் பேசுகிறது (இப்போது நின்றுவிட்டது) இதழில் 11-2-2001 அன்று வெளியான நேர்காணல், இது.

'அமுதும் தேனும் எதற்கு?', 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா' போன்ற திரைப்படப் பாடல்களை எழுதியவரும் பாவேந்தர் விருது, இராஜராஜன் விருது, ஆதித்தனார் விருது, கலைஞர் விருது... போன்ற பல விருதுகளைப் பெற்றவரும் 'உவமைக் கவிஞர்' என்ற பட்டத்தை உடையவருமான சுரதா அவர்கள், தன் எண்பதாவது வயதினை எட்டியுள்ளார். முத்துவிழா கொண்டாடி வரும் அவரைச் சந்தித்தோம்.

நீங்கள், அவன் இவன் என்ற ஏக வசனத்தில் பேசுவது ஏன்?

எல்லாருமே இப்படிப் பேசறவங்கதான். பாரதி வந்தான். வள்ளுவன் போனான் என்று இலக்கியத்திலேயே எழுதுவாங்க. ஆளு எதிர்ல இருக்கறப்ப 'அய்யா... சாரே' என்று பேசிட்டு, அவன் அந்தாண்ட போனதும் 'மட்டிப்பய' என்று சொல்லுவானுங்க. நான் மறைஞ்சு நின்னு சொல்லலை. நேராவே சொல்றேன். இதுக்கு என்னோட வயசும் ஒரு காரணம்.

யாரைப் பார்த்தாலும் அவருடைய சாதி என்ன என்று கேட்கிறீர்களாமே?

சாதி என்பது ஒரு குழு. அந்த ஆளைப் பத்தித் தெரியணும்னா அவனோட சாதி பத்தியும் தெரியணும். நான் சாதியை வளர்க்கலை. சாதி ஒழியாது. ஒருத்தன் வழிவழியா ஒரே சாதியில இருக்கறதை என்னால ஏத்துக்க முடியாது. மிட்டாய் விக்கிறவன்கிட்ட உன் சாதி என்ன என்றால், நெசவாளர் சாதி என்கிறான். அந்தத் தொழிலைச் செய்யாட்டி அவன் அந்தச் சாதி இல்லேங்கறேன். அதனாலதான் நான் சாதியையும் கேப்பேன். தொழிலையும் கேப்பேன். இன்னிக்கு முஸ்லீமும் கிறிஸ்தவனும் புனைப்பெயர் வச்சுக்கிட்டுத் தன்னோட சாதியையும் மதத்தையும் மறைக்கப் பாக்கறான். போலித்தனம் எதுக்கு? நிஜத்தைச் சொல்லு.

சாதிக்கு அடுத்ததா ஊர்ப் பெயர் கேக்கறீங்களே ஏன்?

ஒரு ஆளுக்கு எப்படி பேர் வந்தது என்று பார்க்கிறதை விட, ஊருக்கு இந்தப் பெயர் எப்படி வந்ததுன்னு தெரிஞ்சுக்கணும். ரா.பி. சேதுப்பிள்ளை 'ஊரும் பேரும்' என்றே புத்தகம் எழுதி இருக்கார்.


(1996இல் நடந்த ஒரு கவியரங்கில் எனக்குப் பரிசளிக்கிறார், சுரதா.)

பிரபலமானவங்க பிறந்த இடத்துலேர்ந்து மண் எடுத்துச் சேர்க்கறீங்களே... ஏன்?

மலேசியாவுல ஒரு கார்ல போய்க்கிட்டிருந்தப்ப, இங்கதான் ராசேந்திர சோழன் முகாம் போட்டிருந்தான்னு பக்கத்துல உள்ளவர் சொன்னார். உடனே காரை நிறுத்தி அங்கிருந்து கொஞ்சம் மண் எடுத்துக்கிட்டேன். அது அப்படியே தொடர்ந்துச்சு. ஒட்டக்கூத்தர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாரதி, பாரதிதாசன், பரிதிமாற்கலைஞர் என்று இருநூத்துச் சொச்சம் பேரோட பிறந்த ஊர்லேர்ந்து மண் எடுத்தேன். நேதாஜி இங்க தங்கினார், காந்தி இங்கதான் டீ குடிச்சார்னு சொல்றதில்லையா? அது போலத்தான் இது. இந்த வேட்டியை அவர் கட்டினார், இந்தப் பேனாவால எழுதினார் என்று சொல்றாப்லதான்! ஆட்டோகிராப் வாங்குகிறோம் இல்ல. அது ஏன் வாங்குறோம்? ஒரு ஞாபகத்துக்குத்தான். இதுவும் அது மாதிரிதான். யார் யார் எங்க எங்க மண் எடுத்தாங்கன்னு ஒரு புத்தகம் வரப்போவுது.

ஒரு ஊர்ல ஒருத்தர்தான் பிறந்தார்னு இல்லியே. பாரதியைத் தவிரவும் நிறைய பேரு எட்டயபுரத்துல பொறந்திருப்பாங்களே?

மத்தவனுக்கெல்லாம் மார்க்கெட் இல்லை. அவ்வளவுதான்.

நல்ல தலைப்பு சொன்னா ஒரு ரூபா பரிசு கொடுன்னு சொன்னீங்க. கவியரங்கத்துல கவிதை பாடறதுக்கு முன்ன தரையில ஒரு துணியை விரிச்சுட்டு வந்து பாடுங்கன்னு சொன்னீங்க. கவிதையைக் கேக்கறவங்க அந்தத் துணியில பணம்... காசு போடணும்னு சொன்னீங்க... ஏன்?

சும்மா கைதட்டிட்டு நல்லா இருக்கு என்பான். நல்லா இருக்குல்ல. அப்ப காசு போடுன்னு சொன்னேன். கச்சேரிக்கு, சினிமாவுக்குப் போனா டிக்கெட் வாங்குறே இல்ல. கவியரங்கம் மட்டும் ஓசியா? துண்டுல விழற காசு, பாடுற கவிஞனுக்கும் கிடைக்கும்தானே. அது மாதிரி நல்ல தமிழ்ல பேரு வச்சிருந்தா, நல்ல கருத்துச் சொன்னா ஒரு ரூபாயாவது கொடுத்துப் பாராட்டுன்னு சொன்னேன்.

படகுக் கவியரங்கம், விமானக் கவியரங்கம், அஞ்சல் வழிக் கவியரங்கம், மலைச்சாரல் கவியரங்கம், வீட்டுக்கு வீடு கவியரங்கம்... என்றெல்லாம் செய்தது ஏன்? கக்கூஸ் கவியரங்கம், பாத்ரூம் கவியரங்கம் கூட வைப்பார் என்று உங்களைக் கேலி செய்கிறார்களே?

சொல்றவன் சொல்லிட்டுத்தான் இருப்பான். இதெல்லாம் கவிதையை வளர்க்கிற வழி. கவிதையை மக்கள் கிட்ட கொண்டு போற வழி. நாலு சுவத்துக்குள்ள, அந்த வாழ்த்து, இந்த வாழ்த்து என்று பாடுவதைவிட இப்படிக் கவியரங்கம் நடத்துவது ரொம்ப சிறப்பானது.

'கவிதையை ஒழிக்கவேண்டும். இலக்கியங்களால் ஆபத்துதான் உண்டு' என்று சொன்னீங்களே, ஏன்?

மிகைப்படுத்திச் சொல்றது கவிதைன்னு ஆயிடுச்சு. மிகைப்படுத்தல் வந்தால் பொய் வந்திடும். உண்மை இருக்கவேண்டிய இடத்துல தந்திரம் இருக்குது. பேச்சு வழக்கிலேயே உலகை ஆண்டு விடலாம். இலக்கிய வழக்கு வந்ததால்தான் ஜாதி, மதம் வந்தது. இலக்கியங்களைக் கொளுத்திவிட்டால் நல்லது.

சந்திப்பு: அண்ணாகண்ணன்.

இன்னும் 11 நாள்களே பாக்கி

நகைச்சுவைக் கட்டுரையாளர்கள் கவனத்திற்கு, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த சரியான வாய்ப்பு. அமுதசுரபி யும் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை யும் இணைந்து நடத்தும் அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டிக்கு இன்னும் 11 நாள்களே பாக்கி. முந்துங்கள். கடைசி நேரத்தில் அவசரப்படாமல் முன்னதாகவே எழுதி அனுப்புங்கள்.

மேலும் விவரங்களுக்கு இங்கு பாருங்கள்.

Friday, July 29, 2005

இன்னும் 12 நாள்களே பாக்கி

நகைச்சுவைக் கட்டுரையாளர்கள் கவனத்திற்கு, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த சரியான வாய்ப்பு. அமுதசுரபியும் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டிக்கு இன்னும் 12 நாள்களே பாக்கி. முந்துங்கள். கடைசி நேரத்தில் அவசரப்படாமல் முன்னதாகவே எழுதி அனுப்புங்கள்.

மேலும் விவரங்களுக்கு http://www.amudhasurabi-ithazh.blogspot.com/2005/07/blog-post.html பாருங்கள்.

Thursday, July 28, 2005

இன்னும் 13 நாள்களே பாக்கி

நகைச்சுவைக் கட்டுரையாளர்கள் கவனத்திற்கு, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த சரியான வாய்ப்பு. அமுதசுரபியும் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டிக்கு இன்னும் 13 நாள்களே பாக்கி. முந்துங்கள். கடைசி நேரத்தில் அவசரப்படாமல் முன்னதாகவே எழுதி அனுப்புங்கள். மேலும் விவரங்களுக்கு http://amudhasurabi-ithazh.blogspot.com/2005/07/blog-post.html பாருங்கள்.

Tuesday, July 05, 2005

கவிதாயினி தேன்மொழி

Image hosted by Photobucket.com
பூ, செடியில் பூக்கிறது. ஆனால், அது பூத்ததற்குச் செடி மட்டுமே காரணமில்லை. அது நிற்கும் நிலம், அங்கு நிலவும் தட்பவெப்பம், கிடைக்கும் நீர், சூரிய ஒளி, பாதுகாப்பு வேலி... எனப் பலவற்றின் துணையுடன்தான் ஒரு பூ மலருகிறது. இவை, புறக் காரணிகள். அந்தப் பூவின் வண்ணம், மணம், அளவு, அடுக்கு, வாழ்நாள்... எனப் பல இயல்புகளை அதன் மரபணு தீர்மானிக்கிறது. இவை அகக் காரணிகள். இந்த அகக் காரணிகளும் புறக் காரணிகளும் சரியான விகிதத்தில் இணைந்தால்தான் ஒரு பூ பிறக்கமுடியும்.

இதே இலக்கணத்தை நாம் கவிதைக்கும் பொருத்தமுடியும். ஒரு கவிதை பிறக்கிறது. அதற்கு, முழுக்க முழுக்க அந்தக் கவிஞர் மட்டுமே காரணமில்லை. அவர் வாழும் இடம், வளர்ந்த முறை, பயணித்த இடங்கள், உணவு, உறவுகள், மனநிலை, கல்வி, அறிந்த மொழிகள், வாசிப்பு, அவரின் மொழி ஆளுமை, அனுபவம், கண்ணோட்டம், எழுதும் நேரம், எழுதுபொருள்கள், சுற்றுப்புற ஒலி-ஒளிகள், நோக்கம், நெருக்கடிகள்.... எனப் பலவும் சேர்ந்துதான் ஒரு கவிதை உருவாகிறது.

அதிகம் கவிதை எழுதப்பட்டது எப்பொழுது? போர்க் காலங்களிலா? இயல்பான காலங்களிலா?

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நிலப்பகுதிகளில் எந்தப் பகுதியில் அதிகமாகக் கவிதைகள் எழுதப்படுகின்றன?

எந்த நேரத்தில் அதிகம் எழுதுகிறார்கள்? காலையிலா? இரவிலா?

கேட்டு எழுதப்பெற்றது அதிகமா? தானாகவே எழுதப்பெற்றது அதிகமா?

தனிமை, கவிதைக்கு எவ்வளவு தூரம் முக்கியம்?

குறிப்பிட்ட மணம், மது, உணவு போன்றவை, படைப்பாளியிடம் கவிதை உணர்வைத் தூண்டுகின்றனவா?

தமிழ்ப் பெருமக்கள், மேலே குறிப்பிட்டுள்ள கருப்பொருள்களில் ஆராய்ச்சி செய்யப் புகுந்தால் புறக் காரணிகளின் தாக்கம் எவ்வளவு என்று தெரியும்.

இதனால்தான் புதியவற்றை எழுத விரும்புவோர், வெளியூருக்குச் சென்று எழுத விரும்புகிறார்கள். சிறைக் கைதியாக இருந்த பலர், சிறையிலேயே பல நூல்களை எழுதியுள்ளார்கள். காரணம், அவருக்குச் சிறை என்பது, புதிய இடம்.

எந்தப் புதிய இடமும் ஒருவருக்குக் கவிதையைத் தந்துவிடுமா? ஒரு புதிய இடம், எவ்வளவு காலத்தில் ஒருவருக்குப் பழைய இடம் ஆகும்? இந்த வாழ்விடங்கள், கவிதையை எவ்வாறு இயக்குகின்றன? இப்படிப் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன.

ஆனால், பிறந்த ஊர் என்பது, பலருக்குப் பெரும்ஊற்றாய்க் கவிதையை வழங்கிக்கொண்டே இருக்கிறது. அதிலும் பிறந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்து, வெளியூரில் வாழ நேர்ந்தவர்களுக்கு ஊர் நினைவுகள், அற்புதமாகிவிடுகின்றன; அவை, கவிதைச் சுடரின் ஒளியை வானளாவ வளர்க்கின்றன. அவ்வகையில் தேன்மொழியின் கவிதைகளை அவரின் ஊர்ப்புலமான மலைப் பகுதி, ஆட்சி புரிகிறது. தாவரங்கள், விலங்கினங்கள், நீர்நிலைகள், மலைகள், இயற்கையின் பன்முகக் காட்சிகள் ஆகியவை, தேன்மொழியின் கவிதைகளுக்குத் தனித்துவம் சேர்க்கின்றன.

குளத்தின் உச்சியில்
கழுகின் நிழல்
வட்டமடித்து நீந்திக் குளித்து
வெயில் காய்கையில்
காட்டுக் கோழிச் சிறகுகள் பதறும்
அடைக்கல ஓசையோடு

நம் காலடி அதிர்வுகள் கேட்டு
உடலிலிருந்து ஈட்டி பாய்ச்சி
புதருக்குள் பதுங்கும் முள்ளம்பன்றி
கூரானைக் குறிவைக்கும்

மரம் வெட்டுகையில் அது
வீழ்வதற்கான கடைசி முறிவில்
மிளா மான்கள் மிரளும்
மலையிலிருந்து சமதளம் நோக்கி
கிளைகள் உருட்டுகையில்
கேளையாடுகள் சிதறும்

விறகு தூக்கும் சதம்பலுக்குள்
மர அணில்கள் விளையாடும்
முயல் குட்டிகள் மிதிபடும்....
- என வரையாட்டு மொட்டை என்ற மலையின் காட்சிகளைத் தேன்மொழி விவரிக்கையில், நமக்குள் ஒரு புதிய உலகமே விரிகிறது.

மலைப் பிரதேசத்துக் காலைகள்
மூடுபனியின் ஊடே
பல்லாயிரம் தேயிலைப் பூக்களின்
வாசனையோடுதான் விடியும்...
- என வாசனைகளை விவரிக்கிறார்.

...இன்னும்
அந்த ஒற்றைப் பேருந்து
வானவூர்தி மாதிரி
என் ஊர்ப்பிள்ளைகளை
கைதட்ட வைத்துக்கொண்டுதான்
இருக்கிறது
- என்கிறபோது, அந்த ஊரின் நிலைமை நன்கு தெரிகிறது.

தோட்டத்தை இடுப்பிலே
தூக்கிக்கொள்வேன்
விடுமுறைகளில்

மண்வெட்டியால் வெட்டியிருக்கிறேன்
மண்உளிப் பாம்பை
புரட்டிப் புரட்டிப் பார்த்தும்
வரைய முடியாத ஓவியம் அது
- என்றும்

நேசமானவள்
சலிப்பைக் கொலுசென
மாட்டி நடப்பாள்
- என்றும்

வெட்டுக்கிளி
இலைவெட்டித் தின்கையில்
இலையின் உள்நரம்புகள் துடிக்குமோ
- என்றும்

உன் சுவாசக் காற்றைப்
பார்க்க ஆசையா
மூடுபனியின் ஊடே பாடு
- என்றும்

பாவாடையில் காற்றைப் பிடித்து
ஆற்றின் இக்கரையிலிருந்து
அக்கரைக்கு மிதந்து போ
- என்றும்

மான் தின்ற மலைப் பாம்பு
மரம் சுற்றி நெரிவது மாதிரி
என் உணர்வுகளை
எனக்குள்ளேயே
சடசடக்க விடுகிறேன்
- என்றும்

உன்னைப் பற்றி
நான் சிந்திக்கையில்
குக் குக் குக்கென
ஏதோ ஒரு பறவை
குரல் கொடுக்கிறது
- என்றும்
மூச்சோரம் முத்தமிட்டாய்
அக்கணம் கண்டேன்

பியானோவின்
வெள்ளைக் கட்டையும்
கருப்புக் கட்டையுமாய்
கிறங்கி இசைத்துக்கொண்டிருந்த
உன் கண்களை
- என்றும்

மல்லாந்த நெஞ்சில்
ஏந்திய புத்தகம்
இதயத் துடிப்பில்
அதிர்வது மாதிரி

மௌனத்தின் அடர்த்தியை
கோதிக் கோதி
வெளிக் கிளம்புகிறது
உன் நினைவு
- என்றும்

என் கல்லறைக்கான வாசகம்
தேடவேண்டியதில்லை

நட்டு வையுங்கள் என் மீது
ஒரு பூமரத்து நாற்றை
- என்றும்

சாயங்காலம் முற்றத்தில் தெளிக்கும்
தண்ணீர்த் திவலை மிதித்து
படியேறும் தனிமை

மெழுகுதிரி வெளிச்சத்தினடியில்
கருமையாய் தேங்கி நிற்கிறது..
- என்றும்

எழுதுகின்ற நிழல்
விரலுக்குப் பக்கத்தில் இருள்மரமாய்
ஊர்ந்து வருவதை
உணர்ந்தபடி எழுதுகிறேன்
யாருமில்லை
- என்றும்

நான் வாழ்வதற்கான இடம்
இருக்கிறது

வாழ்ந்துகொண்டிருக்கிற இடம் அல்ல அது
- என்றும்

புருவத்து ரோமங்கள்
ஆயிரங்கால் பூச்சி போல்
நெற்றியில் படுத்துக் கிடந்தன
- என்றும்

பள்ளத்தாக்குகளை
பயமின்றிக் கடக்கும் அந்தப்
பறவை

கூடடைகையில்
நடுங்கிக் குறுகுகிறது
- என்றும்

முத்தத்தின் ஓடுடைத்துப் பறந்த
பறவைகளின் சிறகு ஒலி

- என்றும் தேன்மொழியின் கவிதை வெளிக்குள் எண்ணற்ற முத்துகளைக் காண முடிகிறது. இவர் கவிதைகளில் புறப் பொருள்களும் அகப் பொருள்களும் தேர்ந்த முறையில் ஒன்றிணைந்துள்ளன. வளமான மண்ணில் பிறந்து, அரிய காட்சிகளைக் கண்டு, அவற்றை நமக்கு அறிமுகப்படுத்தி வருகிறார். பலரும் தவற விடுகிற சாதாரண காட்சிகள், இவரின் கவிதைகளுக்குள் வலிமையோடு இடம் பிடிக்கின்றன. மூடு மந்திரம், ஜால வித்தை ஏதும் இல்லை; எளிய சொற்களில் ஒரு குழந்தைகூட கவிதைக்குள் நுழைய வாய்ப்பளித்து, வாழ்வின் பிழிவாய் - பதிவாய் இவரின் கவிதைகள், விளங்குகின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலையின் மணலாறு என்ற தேயிலைத் தோட்டத்தில் 4-1-1976 அன்று பிறந்த தேன்மொழி, 8 வயது வரை அங்கு வாழ்ந்துள்ளார். அதன் பிறகு அதே தேனி மாவட்டத்திலேயே உத்தமபாளையம், ராயப்பன்பட்டி ஆகிய இடங்களிலும் மதுரையிலும் வசித்துவிட்டு, கடந்த பத்து ஆண்டுகளாகச் சென்னையில் வசிக்கிறார். ஆனால், அவர் எட்டு வயது வரை வாழ்ந்த பகுதிதான், அவரின் கவிதைகளில் எல்லாம் அழுத்தமாகப் பதிவாகி வருகின்றது. ஏழு வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கிய இவர், இயற்கையை ஆராதிக்கும், அதற்காக ஏங்கும் மனத்தவர்.

இவரின் முதல் தொகுதியான இசையில்லாத இலையில்லை என்ற நூல், தேவமகள் அறக்கட்டளை விருது, 'சிற்பி' பாலசுப்பிரமணியன் இலக்கியப் பரிசு, திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றப் பரிசு ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளது. அதை அடுத்து, அநாதி காலம் என்ற கவிதைத் தொகுதியைப் படைத்துள்ள தேன்மொழி, திரைப்படப் பாடல்களும் எழுதி வருகிறார். இயற்பெயர் : ரோஸ்லீன் ஜெயசுதா.

முதன்முதலாக, பாரதிராஜா இயக்கத்தில் ஈர நிலம் என்ற திரைப்படத்தில் பாடலாசிரியர், வசனகர்த்தா, உதவி இயக்குநர் ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ளார். சிறுகதைகளும் எழுதி வருகிறார். தமிழ்த்திரைத் தொலைக்காட்சிக்காக, நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கிவரும் இவர், திரைப்பட இயக்குநராகும் முயற்சியில் உள்ளார்.

இவருடைய கவிதைகளில் குறிப்பிடவேண்டிய ஒன்று: பற்பல மலர்கள், மரங்கள், தாவரங்கள், விலங்கினங்கள் ஆகியவற்றின் பெயர்களைக் கவிதைக்குள் பதிவு செய்துள்ளார். அவற்றுள் பலவும் நாம் அறியாதவை; ஆனால், அறிய வேண்டியவை. அவற்றை வெறும் பட்டியலாகவோ, பெயர்களாகவோ பதியாமல், கவித்துவத்துடன் இயல்பாக, கவிதை என நம்பும்படியாகப் பதிந்துள்ளமை, போற்றத் தகுந்த செயல்.

தேன்மொழியின் படைப்புகள், படிப்படியாகச் சுருக்கமும் கூர்மையும் பெற்று வருகின்றன. நம் உணர்வுகளைத் தம் வயமாக்கும் வலிமை, அவற்றுக்கு உண்டு.

நேற்று ஒரு காட்டுப்
பூவுக்குப்
பெயரிட்டேன்
'காஞ்சனி'
என்று
- என்கிறார், ஒரு கவிதையில்.

யாரேனும் பெயரில்லாத காட்டுப் பூவைக் காண நேர்ந்தால், தேன்மொழி என்ற பெயரைப் பரிசீலியுங்கள்.

Friday, July 01, 2005

திருவாசகம் - சிம்பொனி - இளையராஜாதிருவாசகம் - சிம்பொனி - இளையராஜா

நேற்று (30-6-05) மாலை சென்னை மியூசிக் அகாதெமி அரங்கில் இளையராஜாவின் சிம்பொனி இசையில் திருவாசகம் வெளியானது. மத்திய செய்தி-ஒலிபரப்பு & கலாசார அமைச்சர் மாண்புமிகு ஜெய்பால் ரெட்டி வெளியிட, பாலமுரளி கிருஷ்ணா முதல் பேழையைப் பெற்றுக்கொண்டார். கிறித்தவர்களால் நடத்தப்பெறும் தமிழ் மையம் என்ற அமைப்பும் இளையராஜா மரபிசை, கலை, பண்பாட்டு அறக்கட்டளையும் இணைந்து இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

அழைப்பிதழில் பெயர் இல்லாத போதும் ரஜனிகாந்த், நிகழ்ச்சிக்கு வந்திருந்து கடைசி வரை(இரவு 10.40) இருந்தார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மிக அற்புதமான சொற்பொழிவை நிகழ்த்தினார். கமலகாசன், பாரதிராஜா, பீட்டர் அல்போன்ஸ், என். ராம், இளையராஜாவின் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள், தமிழ் மையத்தைச் சேர்ந்த அருட்திரு ஜெகத் கஸ்பார், அருட்திரு வின்சென்ட் சின்னதுரை, அருட்திரு ஆனந்தம் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர்.

6 மணிக்கு விழா தொடங்கும் எனப் போட்டிருந்தார்கள். நான் 5.50க்குச் சென்றேன். அப்போதே அரங்கு நிரம்பி, வெளியில் நூற்றுக்கணக்கானோர் நின்றிருந்தார்கள். பின்னர் ஒரு வழியாக உள்ளே சென்று, இடம் பிடித்து, உட்கார்ந்தேன். சுமார் 6.30க்குத்தான் விழா தொடங்கியது. மத்திய அமைச்சர், (29-6-05)முந்தைய நாள் மாலை இதே அரங்கில் அகில இந்திய வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். பின்னர் மத்திய அமைச்சரவையின் திடீர் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்று, இரண்டு பண்பலை வானொலி அலைவரிசைகளைத் தொடங்கும் முடிவை எடுத்து, அதைப் பத்திரிகையாளர்களுக்கு அறிவித்துவிட்டு, மும்பை வழியாக மீண்டும் சென்னை வந்தார்.

"சமூகத்தின் அடிநிலையிலிருந்து வந்து, இசையின் சிகரத்தைத் தொட்டிருக்கிறார். இசையின் ராஜா இளையராஜா" என்றெல்லாம் பாராட்டிய பின்னர் தன் உரையை முடித்துவிட்டு இருக்கைக்குத் திரும்பும் முன், மீண்டும் ஒலிவாங்கிக்கு வந்தார். "அடுத்து, பெங்களூர் செல்கிறேன். 12 மணியில் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர் என நான்கு மெட்ரோபாலிட்டன் மாநகரங்களைக் காண்கிறேன்" என நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

சிம்பொனி ஓரட்டோரியோ(தெய்வீக அருளிசை) என்ற வடிவில், திருவாசகத்தின் ஆறு பாடல்களை இளையராஜா வழங்கியுள்ளார். அந்தக் குறுந்தட்டிலிருந்து ஒரு பாடலை அரங்கில் அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு, சுழலவிட்டனர். "பொல்லா வினையேன்" என்று தொடங்கி, திருவாசகத்தின் வரிகளைப் புதுமையான முறையில் தந்துள்ளார். இடையிடையே ஆங்கிலத்தில் அதன் பொருளைப் பாடலாகத் தந்துள்ளமை, நல்ல கலவை. கிறித்தவத் தன்மை உள்ள பின்னணி இசையை வெளிநாட்டவர் இசைக்க, பல்வேறு நிலைகளில் இழைந்தும் குழைந்தும் இளையராஜாவின் குரல், ஒரு பெரும் அனுபவத்தை அளிக்கிறது.

திருவாசகத்தின் ஒரு பாடலை எடுத்துக்கொண்டு சென்னையைச் சேர்ந்த இசைக் குழுவினர், நடனமாக ஆடிக் காட்டினர். திருவாசகத்தின் வேறொரு பாடலை பள்ளிக்கூட மாணவியர் பலர், பியானோ இசைப் பின்னணியில் பாடினர். தமிழகம் முழுவதும் நடத்தப்பெற்ற திருவாசகப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கினர்.

பாலமுரளி கிருஷ்ணா, "இது தெய்வீக இசை. இறைவன் இசை வடிவமானவன்" என்றார்.

பீட்டர் அல்போன்ஸ், "இளையராஜா இந்தப் பணியை ஏன் கத்தோலிக்க பாதிரிமார்கள் நடத்தும் தமிழ் மையத்திடம் கொடுத்தார்? தமிழ்நாட்டின் எவ்வளவோ அமைப்புகள், தமிழும் சைவமும் வளர்க்கும் திருமடங்கள், திரைத் துறை வித்தகர்கள் ஆகியோரிடம் கொடுக்காமல் தமிழ் மையத்திடம் கொடுத்ததற்குக் காரணம், சமய நல்லிணக்கமே" என்றார்.

"இதை யாரும் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யாதீர்கள். திருட்டுத்தனமாய்க் கேட்காதீர்கள். காசு கொடுத்து வாங்கிக் கேளுங்கள்" என்று இந்து பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் என். ராம் கூறினார்.

"இறைப்பற்று இல்லாதோரையும் ஈர்க்கும் இசை, இது. இதை ஆக்கும் திறமை, இளையராஜாவுக்கு 25,30 ஆண்டுகளுக்கு முன்பே உண்டு. இப்போது தாமதமாக வெளிப்பட்டுள்ளது" என்றார் கமலகாசன்.

"இளையராஜா, ஒரு வகையில் என் குரு. அவர்தான் எனக்கு ரமண மகரிஷியையும் திருவண்ணாமலையையும் அறிமுகப்படுத்தினார்" என்றார் ரஜனிகாந்த்.

"கும்பினியர்கள் ஆண்ட மண், இது. அந்த வெள்ளைக்காரர்களை உன் இசையை வாசிக்கச் செய்திருக்கிறாய். நீ பாடும்போது நானே பாடுவதுபோல் இருக்கிறது. நீ புகழ் பெறுவது நானே புகழ் பெறுவது. வைகை ஆற்றுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் நன்றி. இளையராஜா, பல முறைகள், இனி எனக்குப் பிறவி இல்லை. என் பிறவியின் நோக்கம் நிறைவடைந்துவிட்டது என்கிறான். அது தவறு. நீ ஆயிரமாயிரம் முறை மீண்டும் மீண்டும் பிறந்து வந்து, இசையை வழங்கிக்கொண்டே இருக்கவேண்டும். உனக்கு இறப்பே கிடையாது. பிறப்பு மட்டுமே உண்டு" என்றார் பாரதிராஜா.

இறுதியாகப் பேசவந்த வைகோ, மிகவும் சிறப்பாகப் பேசினார். ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களிடம் 14 வகை யாழ்க் கருவிகள் இருந்தன. பிரமிடில் யாழ்க் கருவி காணப்படுகிறது. மெசப்படோமியா-மொகஞ்சதாரோ அகழ்வில் யாழ்ச்சின்னங்கள் கிடைத்துள்ளன... எனத் தொடங்கியவர், தமிழிசையின் வரலாற்றை அடுத்துத் திருமுறைகளுக்கு வந்தார்.

பன்னிரு திருமுறைகள் எவை? முதலாம் திருமுறை முதல் பன்னிரண்டாம் திருமுறை வரை ஒவ்வொரு திருமுறையிலும் இடம்பெறும் நாயன்மார்கள் யார் யார்? என்றெல்லாம் கடகடவெனச் சொல்லிக்கொண்டே வந்த அவர், எட்டாம் திருமுறையான திருவாசகத்திற்கு வந்தார்.

திருவாசகத்தில் எத்தனை பதிகங்கள் உள்ளன? ஒவ்வொரு பதிகத்தின் பெயர் என்ன? மாணிக்கவாசகரின் பின்னணி என்ன? குதிரை வாங்குவதற்காக அரசன் தந்த பணத்தில் சைவப் பணி செய்தது, பின் அரசன் கேட்டபோது, இறைவன் கட்டளைப்படி, குதிரைகள் பின்னால் வருகின்றன என ஓலை அனுப்பியது, நரிகள், பரிகளாக(குதிரைகளாக) மாறி, லாயத்தில் அடைக்கப்பெற்றது, இரவில் அனைத்தும் மீண்டும் நரிகளாக மாறி ஊளையிட்டு அறுத்துக்கொண்டு ஓடியது, இதற்காக அரசன், மாணிக்கவாசகரைச் சினந்தது, மதுரையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது, இறைவன் பிட்டுக்கு மண் சுமக்க வந்தது, பிட்டை வாங்கிக்கொண்டு மண்ணை அடைக்காமல் நீரில் விளையாடியது, அதைக் கண்ட காவலர்கள் இறைவன் முதுகில் பிரம்பால் அடித்தது, இறைவன் மீது பட்ட அடி எல்லோர் மீதும் பட்டது, அதன் பிறகு மாணிக்கவாசகர் ஊர் ஊராகச் சென்று பாடியது... எனத் திருவாசகத்தின் பின்னணி, வரலாறு, நோக்கம் என அனைத்தையும் விளக்கமாக எடுத்துக் கூறினார்.

இங்கு எந்த இடத்திலும் பார்த்துப் படிக்கவோ, தடுமாறவோ, மறந்துவிடவோ செய்யாமல் ஆற்றொழுக்காக வைகோ, மடை திறந்தார். இளையராஜாவின் பெருமைகள், இந்தத் திருவாசகத்தில் இளையராஜா எந்த ஆறு பாடல்களை எடுத்துக்கொண்டார்? ஏன் அவற்றை எடுத்துக்கொண்டார்? அவற்றின் பொருள் என்ன? என அவர் பேசப் பேச, அரங்கமே அதிசயித்தது. இளையராஜாவும் ரஜனியும் பிரமித்தார்கள். ரஜனி பேசும்போது, "வைகோவின் கர்ஜனையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றுதான் கேட்கவிருக்கிறேன்" என்றார். வைகோ பேசப் பேச, ரஜனியின் புருவம் ஏறியே இருந்தது.

பின்னர் பேச வந்த இளையராஜா, வைகோவை, "அரசியலை விட்டுவிட்டு ஆன்மீகத்திற்கு வந்துவிடுங்கள். சைவ சித்தாந்த உரையைக் கேட்டதுபோல் இருந்தது" என்றார். பாரதிராஜாவிற்குப் பதில் அளித்த அவர், "நீ வேண்டுமானால் பிறந்துகொள். நான் பிறக்க விரும்பவில்லை. வள்ளுவரே
தோன்றிற் புகழோடு தோன்றுக அ·திலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
என்று கூறியிருக்கிறார். பிறப்பதோ, புகழ் பெறுவதோ நம் கையில் இல்லை" என்றார். அவருக்கு முன் நன்றியுரை கூறிய அருட்திரு ஆனந்தம், "சிம்பொனி ஓரட்டோரியோவை முடித்து, பிரசவ வேதனையில் இருப்பார். அதைப் பற்றி அவர் கூறக்கூடும்" என்று கூறியிருந்தார். அதற்குப் பதில் அளித்த இளையராஜா, "தாயைக் கொச்சைப்படுத்தாதீர்கள். பிரசவ வலிக்கு உலகின் எந்த வலியும் ஈடானதில்லை" என்றார்.

"ஒரு பாட்டுப் பாடு தலைவா", என ரசிகர் ஒருவர் குரல் கொடுத்தார். "என்ன பாட்டு வேணும் தலைவா?" என்ற இளையராஜா, 'என் ஊரு சிவபுரம்' எனத் தொடங்கும் பாடலைப் பாடினார்.

இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அருட்திரு ஜெகத் கஸ்பார், தமிழ் / ஆங்கிலம் இரண்டிலும் சிறப்பான ஆளுமையுடன் பேசினார். கணீர் என்ற குரல், நல்ல சிந்தனைகள், அவையை ஆளும் திறம் எனப் பலவிதங்களில் பரிமளித்தார். அவர் நிர்வாக இயக்குநராக உள்ள தமிழ் மையம்தான் இந்தத் திருவாசகத் திட்டத்தை முன்நின்று நிறைவேற்றியுள்ளது. சமய நல்லிணக்கம் செழித்தோங்கவும் தமிழிசையும் தமிழும் வளரவும் இந்தத் திருவாசகம் தொண்டாற்றும். "இன்னும் 24 மாதங்களில் கிராமி விருது பெறும் முதல் தமிழர் என்ற பெருமையை இளையராஜா பெறுவார்" என ஜெகத் கஸ்பார் நம்பிக்கை தெரிவித்தார்.

"இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் இதுவரை ஒரு கோடி கடன் உள்ளது. மக்கள் நினைத்தால் இதை ஒரே வாரத்தில் தீர்த்துவிடலாம்" என்றார் ஜெகத்.

மக்கள் நினைப்பார்களா?

(தொடர்பு கொள்ள : தமிழ் மையம், 153, லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004. தொலைபேசி : 91-044-2499 3380, 2499 3390)