!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2020/11 - 2020/12 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, November 30, 2020

Sunset at Chennai - 21

சென்னையில் இன்று செஞ்சூரியன் அஸ்தமிக்கும் காட்சி. இதில் குறுக்கும் நெடுக்கும் பறக்கும் பறவையின் பெயர், யாருக்காவது தெரியுமா?

வண்ணத்துப்பூச்சியின் நாக்கு | Butterfly Tongue

வண்ணத்துப்பூச்சி நடந்து செல்வதை இன்றுதான் பார்த்தேன். மேலும் அதன் நீண்ட குழல் போன்ற நாக்கையும் அதைக் கொண்டு அது உறிஞ்சி உண்பதையும் இன்றுதான் கண்டேன். இதன் இறக்கைகள், இரும்புக் கவச உடை போல் அமைந்து, எந்திரப் பூச்சி போல் நகர்ந்தது, புதுமையாக இருந்தது.

புதிய கோணத்தில் இரட்டைவால் குருவி | Drongo in a new angle

இன்று கண்ட இரட்டைவால் குருவி (கரிச்சான்), என் தலைக்கு மேல் இருந்த கிளையில் அமர்ந்தது. இதனால் அதைப் புதிய கோணத்தில் காண முடிந்தது. அது கூரிய அலகால் சிறகைக் குடைந்தது. வெயிலில் சிறகு விரித்துக் காய வைத்தது. காலால் தலையை நறநறவென்று சொறிந்துகொண்டது. இத்தனையும் இரண்டே நிமிடத்தில்.

Sunday, November 29, 2020

திருக்கார்த்திகை விளக்கீடு | Karthigai Deepam | கார்த்திகை தீபம்

திருக்கார்த்திகையை முன்னிட்டு, இன்று நம் இல்லத்தில் தீபங்கள் ஏற்றி வழிபட்டோம். எல்லோர் வாழ்வும் ஒளிரட்டும்! 

அந்தக் காலத் தொலைநோக்கி | Antique Old Binacular

அந்தக் காலத் தொலைநோக்கி வழியே அந்தக் காலத்தையே பார்க்கலாம்.

அந்தக் காலத் தொலைபேசி | Antique Old Phone

இன்று நம் செல்பேசிகள், உள்ளங்கைக்குள், கைக்கடிகாரத்தில், மோதிரத்தில் சுருங்கிவிட்டன. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பேசுவதற்கும் கேட்பதற்கும் தனித் தனியே இரண்டு பாகங்களைப் பிடித்துக்கொண்டு பயன்படுத்தினோம். இன்று நம் செல்பேசிகள், உள்ளங்கைக்குள், கைக்கடிகாரத்தில், மோதிரத்தில் சுருங்கிவிட்டன. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பேசுவதற்கும் கேட்பதற்கும் தனித் தனியே இரண்டு பாகங்களைப் பிடித்துக்கொண்டு பயன்படுத்தினோம். அப்படியான ஒரு தொலைபேசி, சென்னை, சிட்லபாக்கத்தில் உள்ள பேக் டு த 90ஸ் மிட்டாய் கடையில் உள்ளது. அந்தத் தொலைபேசியை இன்று பார்ப்போம்.

கிராமபோனில் பாட்டு கேட்பது எப்படி? | How to operate a Gramophone?

கிராமபோன் என்ற இசைக்கருவியை நாம் பழைய திரைப்படங்களில் பார்த்திருப்போம். இன்று ஒரு காட்சிப் பொருளாகவே மாறிவிட்டது. ஆனால், 100 ஆண்டுகள் பழைமையான ஒரு கிராமபோன், இன்றும் இயங்குகிறது. சென்னை, சிட்லபாக்கத்தில் உள்ள பேக் டு த 90ஸ் மிட்டாய் கடையில் உள்ளது. இதைக் கொண்டு, கிராமபோன் எப்படி இயங்குகிறது? அதில் எப்படிப் பாட்டுக் கேட்பது என்று பாருங்கள்.

Saturday, November 28, 2020

இரு மடையான்கள் | Indian Pond Herons

புயல், மழைக்குப் பிறகு நேற்று நம் வீட்டு மதிலுக்குள் இறங்கிய இரண்டு மடையான்கள் (இந்தியக் குளத்துக் கொக்கு) என்ன செய்கின்றன என்று பாருங்கள்.

செர்ரி தக்காளி | Cherry Tomato

நம் வீட்டு மாடித் தோட்டத்தில் விளைந்துள்ள செர்ரி தக்காளிகளை இன்று அறுவடை செய்தோம்.

ஆள்காட்டிப் பறவையின் குரல் | Voice of Lapwing | Did-he-do-it?

இன்று காலை எழுந்தவுடன், ஆள்காட்டிப் பறவையின் உரத்த பாடலைக் கேட்டேன்.

கணந்துள்–ஆள்காட்டி (Lapwing) என்ற தலைப்பில் சற்குணா பாக்கியராஜ், வல்லமை மின்னிதழில் எழுதிய கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

பறவையியலாளர்கள் ஆள்காட்டியின் குரலை, ”loud and penetrating” என்று குறிப்பிடுகின்றனர். பறவைகளின் தந்தை என்று போற்றப்படும் முனைவர் சலீம் அலி, இந்தப் பறவைகளின் குரலை வர்ணிக்கும் போது,  “மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, இரட்டை அசையில், “twit, twit” என்று இரண்டு வினாடிக்கொரு தடவையும், இடைஇடையே, மிகவும் உயர்ந்த குரலில் “twit-twit-twit-twit”,  என்று இரக்கமான குரலும் கொடுக்கும், சிவப்பு மூக்கு ஆள்காட்டி, சூழ்நிலைக்கேற்றவாறு, குரலை உயர்த்தியோ, தாழ்த்தியோ, “Did-he-do-it?” என்று வருத்தம் தோய்ந்த குரல் கொடுக்கும்” என்கிறார் (The Book of Indian Birds, Salim Ali.  p.139-140).

இந்தக் காணொலியில் உள்ளது எந்த ஆள்காட்டிப் பறவையின் குரல் என்பதை நீங்களே கண்டுகொள்ளுங்கள்.

Friday, November 27, 2020

கனமழையில் இரு பறவைகள் | Two birds in heavy rain

நிவர் புயல் விர்ரென வீசிய நவம்பர் 25ஆம் தேதி கனமழையும் பிளந்து கட்டியது. அப்போது நம் வீட்டருகே உள்ள மதிலில் இரு பறவைகள் நடை பயின்றன. நத்தை குத்தி நாரையும் உண்ணிக் கொக்கும் நெருங்கி வந்து என்ன பேசியிருக்கும்?

தாம்பரத்தில் தண்ணீர் வடிகின்றது!

மேற்குத் தாம்பரத்தில் பல பகுதிகளில் நேற்று வெள்ளம் சூழ்ந்திருந்தது. ஆயினும் படிப்படியாக இப்போது குறைந்து வருகின்றது. ஆயினும் குப்பைகளும் பாம்புகளும் இறந்த உயிரினங்களின் சடலங்களும் ஆங்காங்கே சூழ்ந்துள்ளன. மரங்களும் மரக்கிளைகளும் விழுந்து கிடக்கின்றன. தேங்கியுள்ள நீரிலிருந்து குபுகுபுவென குமிழ்கள் வெளிவருகின்றன. இதோ, களத்திலிருந்து நேரடிக் காட்சிகள்.

Thursday, November 26, 2020

Alert: தாம்பரத்தில் வெள்ளம் ஏறுகிறது

சென்னை, மேற்குத் தாம்பரத்தில் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அது மட்டுமின்றி, அதன் நீர்மட்டம் ஏறுகிறது. வீடுகளிலிருந்து சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு, தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் பெயர்ந்து வருகிறார்கள். தண்ணீர் வடியும் என்று பலரும் காத்திருக்கிறார்கள். களத்திலிருந்து நேரடிக் காட்சிகள்.

தண்ணீரில் தத்தளிக்கும் மேற்குத் தாம்பரம் | Waterlogging in West Tambaram

சென்னை, மேற்குத் தாம்பரத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. சாலைகளே தெரியாத அளவு தண்ணீர் நிறைந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதோ ஒரு நேரடிக் காட்சித் தொகுப்பு.

நிவர் புயலின் தாண்டவம் | Power of Nivar

நிவர் புயலின் தாண்டவத்தால் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை, தாம்பரத்தில் நம் பகுதியில் ஒரு சிறு உலா வந்தபோது கண்ட பாதிப்புகள் இங்கே.

நிவர் புயலின் சீற்றம் - 3 | The furious cyclone Nivar - 3

நிவர் புயல் கரை கடந்தாலும் காற்றின் வேகம் கிடுகிடுக்க வைக்கிறது. இதோ நம் வீட்டைச் சுற்றிலும் அடித்துத் தூள் கிளப்பும் நிவர் புயல்.

Wednesday, November 25, 2020

நிவர் புயலின் சீற்றம் - 2 | The furious cyclone Nivar - 2

காற்றின் உறுமல், நிவர் புயலின் சீற்றம், இரண்டாம் பகுதி.

நிவர் புயலின் சீற்றம் | The furious cyclone Nivar

நிவர் புயலின் சீற்றத்தைப் பாருங்கள்.

நிவர் புயலால் தீவிர கனமழை | 25.11.2020 | Heavy rain due to Cyclone Nivar

நிவர் புயல் காரணமாக, இடி மின்னலுடன் தீவிர கனமழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வருகின்றது. சென்னை தாம்பரத்தில் இன்று பதிவு செய்த காட்சி இதோ.

மழையில் நனையும் பெண்குயில் | Female Cuckoo in rain

அடாது பொழியும் அடை மழையில் நனையும் ஒரு பெண்குயில்!

சிறகு உலர்த்தும் பெண்குயில் | Female Cuckoo

மழையில் நனைந்த பெண்குயில், மழைவிட்ட இடைவெளியில், நம் வீட்டு வேப்பமரத்தில் அமர்ந்து சிறகுகளை உலர்த்தும் காட்சி.

Tuesday, November 24, 2020

நிவர் புயலின் நகர்வு அறிய | To Track Cyclone Nivar

நிவர் புயல் மையம் கொண்டுள்ள இடம், நகர்ந்து வருகின்ற இடம், காற்றோட்டத்தின் திசை, காற்று வீச்சு அதிகமுள்ள இடங்கள், நிவல் புயலின் பயணப் பாதை உள்ளிட்ட பலவற்றையும் எளிதில் காண, இதோ ஒரு வழி.

நிவர் புயல் | Cyclone Nivar

Trees in tune to Cyclone Nivar.


நிவர் புயலுக்கு மரங்கள் நடனம் ஆடும் காட்சி.


நிவர் புயல் கனமழை | Heavy rain with Cyclone Nivar

நிவர் புயல் காரணமாகக் கனமழை தொடங்கியது. சென்னை, தாம்பரத்தில் தண்ணீரில் அலையெழுப்பியபடி மழை பொழிவதைப் பாருங்கள்.

டிரோன் மூலம் டெலிவரி

அத்தியாவசியப் பொருள்களை டிரோன் மூலம் டெலிவரி செய்ய முயலலாம். புயல், மழை, வெள்ளம் போன்ற நேரங்களில், மனிதர்களால் செய்ய முடியாத பணிகளை டிரோன் போன்ற எந்திரங்களால் செய்ய முடியும்.

ஹெலிகாப்டர் அல்லது விமானத்திலிருந்து உணவுப் பொட்டலங்களை வீசி எறிவதை விட, விமானத்திலிருந்து டிரோன்கள் பறந்து பயனாளிகள் கையில் சேர்ப்பது போல் செய்தால் இன்னும் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் இருக்கும்.

டிரோன்களைப் பொருள் விநியோகத்திற்கு மட்டுமின்றி, இருளான பகுதிகளில் ஒரு தற்காலிக நகரும் மின்விளக்காகவும் தொலைபேசி, இணையம் ஆகியவற்றை வழங்கும் ஒரு நகரும் கோபுரமாகவும் பயன்படுத்த முடியும்.

பொருள்களைக் கொண்டு சேர்ப்பதுடன், அவரவர் வீட்டிலிருந்து குப்பைகளைத் திரட்டிக்கொண்டு வந்து சேர்க்கும் பணிகளிலும் இவற்றை ஈடுபடுத்தலாம். சற்றே பெரிய டிரோன்களைத் தனி வாகனமாகவும் பொது வாகனமாகவும் பயன்படுத்தும் முயற்சிகளும் தொடங்கியுள்ளன. எனவே, விமானப் போக்குவரத்தைக் கண்காணித்து ஒழுங்குமுறைப்படுத்துவது போல், டிரோன் போக்குவரத்தையும் கண்காணித்து ஒழுங்குபடுத்தும் தேவை உள்ளது. இதற்கெனத் தனி ஆணையத்தை உருவாக்க வேண்டும்.

Monday, November 23, 2020

உவமைக் கவிஞர் சுரதாவுடன் நான்


உவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு தொடங்கியுள்ளது. அவருடன் பற்பல கவியரங்குகளில் நான் கலந்துகொண்டுள்ளேன். மனத்தில் தோன்றியதை ஒளிவுமறைவு இல்லாமல் பேசுவார். ஒருமுறை என்னைப் பார்த்து, நீங்க அழகா இருக்கீங்க, நடிக்கப் போலாமே என்றார். உ.வே.சா. கவியரங்கில் நான் கவிதை படித்த பிறகு, தன் பையிலிருந்து ஒரு ரூபாய் கொடுத்துப் பாராட்டினார். சும்மா பாராட்டக் கூடாது, ஒரு ரூபாயாவது கொடுத்துப் பாராட்டணும் என்பார். அவரை ஒரு முறை பேட்டி கண்டேன். அதை இங்கே படிக்கலாம். http://annakannan.blogspot.com/2005/07/blog-post_30.html

இந்தப் படத்தில் சுரதா, 1996ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 24 மணி நேரத் தொடர் கவியரங்கில் நான் பங்கேற்றதைப் பாராட்டிச் சான்றிதழ் வழங்குகிறார்.

இன்று கண்ட குயில் | Cuckoo

இன்று கண்ட குயில்!

மாட்டுக் கொக்குகள் | Cattle Egrets

கருப்புப் பூனைப் படை சூழ வலம் வரும் தலைவரைப் போல, உண்ணிக் கொக்குகள் சூழ இந்த எருமை வலம் வருகிறது. இதனால்தான் இந்தக் கொக்கிற்கு மாட்டுக்கொக்கு, மாடு மேய்ச்சான் என்ற பெயர்களும் வழக்கில் உள்ளன.

சின்னான் என்கிற செங்குதக் கொண்டைக்குருவி | Red-vented Bulbul

சின்னான் (செம்புழைக் கொண்டைக்குருவி; Red-vented Bulbul, Pycnonotus cafer), மரங்களில் அடையும் பறவைகளுள் ஒன்றாகும். இது கொண்டைக்குருவி, கொண்டைக்கிளாறு போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

செம்மீசைக் கொண்டைக்குருவி, செங்குதக் கொண்டைக்குருவி என இரு வகைகள் உண்டு. இவற்றுள் செங்குதக் கொண்டைக்குருவி என்று அழைக்கப்படும் சின்னானின் கொண்டை சற்றே சிறியது. இதைச் சமவெளிகளிலும் வீடுகளுக்கு அருகிலும் சிறு குன்றங்களிலும் காணலாம். இவ்விருவகைக் குருவிகளுக்கும் கொண்டை கருத்து, உடல் கபில நிறத்தில் இருக்கும்; வாலடி இரத்தச் சிவப்பாக இருக்கும். உற்சாகமான குரலில் பரபரப்புடன் இவை கூவும். செங்குதக் கொண்டைக்குருவியை நம் வீட்டருகே அடிக்கடி காண்கிறேன். இன்று காலையில் நம் வீட்டுக் கொய்யா மரத்தில் அமர்ந்த சின்னான் பாடுவதைக் கேளுங்கள்.

Sunday, November 22, 2020

மாலை நேரப் பறவைகள் - 4 | Evening birds - 4

விதவிதமான குரல்களுடன், இன்றைய மாலை நேரப் பறவைகள்.

இந்தியக் குளத்துக் கொக்கு -2 | Indian Pond Heron - 2

குளத்துக் கொக்கின் முதுகுப் புறத்தில் செவ்வரியோடிய மர வண்ணத்தில் இறகுகள் இருந்தாலும், கீழ்ப்பகுதி முழுதும் வெண்ணிறமாகவே தோன்றும். பறக்கும் போது இதன் வெண்ணிறச் சிறகுகளைப் பார்க்கலாம். இந்தப் பதிவில், இது நடப்பதையும் பறப்பதையும் பார்க்கலாம்.

நத்தை குத்தி நாரை - 2 | Asian openbill stork - 2

எல்லைக்கல் மீது எழுந்தருளிய நத்தை குத்தி நாரை.

நம் வீட்டுக்குப் பின்னே இன்று காலையில் கண்ட காட்சி.

Saturday, November 21, 2020

இந்தியக் குளத்துக் கொக்கு அல்லது மடையான் | Indian pond heron

நம் வீட்டுக்குப் பின்னுள்ள வெளியில் இந்தப் பறவையை அடிக்கடி பார்க்கிறேன். இதன் பெயர், இந்தியக் குளத்துக் கொக்கு. இது, அளவில் சிறிய ஒரு கொக்கினம். இப்பறவை குருட்டுக் கொக்கு, மடையான், குள நாரை என்றும் அழைக்கப்படுகிறது. தன்னை வேட்டையாடும் இரையாடிகள் அருகே நெருங்கும் வரை அசையாமலிருந்து, திடீரெனப் பறப்பதால், இவை "அசமஞ்சம்" என்னும் பொருள்படும் மடையான் என்ற பெயர் பெற்றுள்ளன. 

இப்பறவையின் கழுத்து குறுகிக் காணப்படும். குட்டையான வலிமையான அலகுகளைக் கொண்டிருக்கும். முதுகுப் புறத்தில் செவ்வரியோடிய மர வண்ணத்தில் இறகுகள் இருந்தாலும், கீழ்ப்பகுதி முழுதும் வெண்ணிறமாகவே தோன்றும். பறக்கும் போது இதன் வெண்ணிறச் சிறகுகளைப் பார்க்கலாம். நான் பல முறைகள் பார்த்திருக்கிறேன்.

நீர் நிலையில் அசையாமல் நின்று கொண்டும், மூழ்கியும், நீருக்கு மேல் பறந்தும், துரத்தியும், மீன்கள், தலைக்காலிகள், கணுக்காலிகள், பூச்சிகள், தட்டான், தேனீ, வண்டு, அட்டைகளைப் பிடித்துத் தின்னும். இது தென் ஈரானில் இருந்து கிழக்கில் இந்தியா, பர்மா, வங்கதேசம், இலங்கை வரை வாழ்கிறது. இது பரவலாகக் காணப்படும் பறவைகளுள் ஒன்றாக இருப்பினும் அவற்றின் நிறத்தின் காரணமாக எளிதாக கண்ணுக்குப் புலப்படாது.

சௌந்திரவல்லி குப்புசாமி பாடல்கள் - 2

என் தாயார் சௌந்திரவல்லி அவர்களின் குரலில் பழைய திரைப்படப் பாடல்கள் சிலவற்றின் சில வரிகள். 

Friday, November 20, 2020

முத்தைத்தரு பாடல் - சுதா மாதவன் குரலில்

அருணகிரிநாதர் அருளிய 'முத்தைத்தரு பத்தித் திருநகை' பாடலைச் சுதா மாதவன் குரலில் கேளுங்கள்.

என்முகம் பாரய்யா, சண்முகனே - சுப்புலட்சுமி மோகன் பாட்டு

என்முகம் பாரய்யா, சண்முகனே - தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வுபெற்ற திருமதி சுப்புலட்சுமி மோகன் அவர்களின் உருக்கமான பாடல்.

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2020-21 | வேதா கோபாலன் | Gurupeyarchi Palan | ...

திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி இன்று குருப்பெயர்ச்சி.. உங்க ராசிக்கான பலன்களைப் பாருங்கள்.

Thursday, November 19, 2020

மணத்தக்காளி என்கிற மணித்தக்காளி அறுவடை

நம் வீட்டுத் தோட்டத்தில் மருத்துவக் குணம் வாய்ந்த மணித்தக்காளியை அறுவடை செய்தோம். 

#Shorts: Nithila's sparkler dance | நித்திலாவின் மத்தாப்பு நடனம்

தீபாவளியன்று நித்திலா ஆடிய மத்தாப்பு நடனம்!

Wednesday, November 18, 2020

உருசியத் தமிழறிஞர் அலெக்சாந்தர் துபியான்ஸ்கி மறைந்தார் | Alexander Dubiansky passes away

 

உருசியத் தமிழறிஞர், பேராசிரியர் அலெக்சாந்தர் துபியான்ஸ்கி (Алекса́ндр Миха́йлович Дубя́нский, Alexander Dubyansky) (வயது 80), மாஸ்கோவில் இன்று மறைந்தார். கொரோனா தொற்றின் தாக்கத்தால் அவர் உயிரிழந்தார்.  அவரது மறைவுக்கு வல்லமை மின்னிதழ், வாசகர்கள் சார்பிலும் தமிழ்கூறு நல்லுலகு சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

சென்னையில் பேராசிரியர் அலெக்சாந்தர் துபியன்சுக்கி அவர்களும் எழுத்தாளர் செயகாந்தன் அவர்களும். படம் கே. பிச்சுமணி, இந்து ஆங்கில நாளிதழ் (சூன் 22, 2010) (The Hindu, June 22, 2010, Picture: K. Pichumani)

மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் இந்திய இலக்கியப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த இவர், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகளை உரையாடி வந்தார். தமிழில் சரளமாகப் பேசவும் கற்றவர். இவர் தொல்காப்பியத்தைப் பற்றியும் சிலப்பதிகாரத்தைப் பற்றியும் உருசிய மொழியில் கட்டுரைகள் எழுதியுள்ளார். ஏறத்தாழ 110 ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவருடைய பணியைப் போற்றி இவருக்குத் தென் ஆசிய கல்விக்கான குமுகத்தின் (The South Asian Studies Association) தலைசிறந்த கல்வியாளர் விருது (Exemplar Academic Awards) 2013இல் வழங்கப்பெற்றது.

1998ஆம் ஆண்டு சென்னையில் நடந்த உலகளாவிய முருகன் மாநாட்டில் பேரா.அலெக்சாந்தர் துபியான்ஸ்கி அவர்களைச் சந்தித்து உரையாடியுள்ளேன். தமிழ்ச் செவ்விலக்கியங்களின் பெருமைகளை உலக சமூகத்தின் பார்வைக்கு எடுத்துச் சென்றதில் இவருக்குக் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு.

இவரது 75ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, வல்லமையாளர் விருதினை வழங்கி மகிழ்ந்தோம். இது தொடர்பான பேரா.செ.இரா.செல்வக்குமார் அவர்களின் அறிவிப்பு இங்கே: https://www.vallamai.com/?p=69166

துபியான்ஸ்கி அவர்களின் மறைவு குறித்து, ழான் லூக் செவியார் (Jean-Luc Chevillard), வல்லமைக் குழுமத்தில் பகிர்ந்துள்ள செய்தி இங்கே:

Dear Vallamai list members,

It is with great sadness that I have to announce that our dear colleague
and friend Alexander Dubiansky (b. 1941) died in Moscow this morning
because of Covid.

We shall miss him very much.

I include a picture taken in Paris on 28th september 2019 during the 4th
European Tamil conference. This was the last occasion for Eva and me to
meet with him face to face.

— Jean-Luc Chevillard (in Müssen)

போற்றுதலுக்கு உரிய பணிகள் புரிந்த துபியான்ஸ்கி அவர்களின் மறைவு, தமிழுலகிற்கும் மொழியியலுக்கும் பேரிழப்பு. தமிழின் தகுதிகளை, தமிழிலக்கியத்தின் சிறப்புகளை உலக அரங்கில் ஓயாமல் உரைத்த தமிழறிஞர், அறிவியல் பார்வையும் நம்பகத்தன்மையும் கொண்டவர், உவந்தேற்று மதிக்கப்பெற்ற அறிஞர் துபியான்ஸ்கியின் மறைவுக்குப் பெரிதும் வருந்துகிறோம். அவர் நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.

படத்துக்கு நன்றி: https://www.ldcil.org,

                                  The Hindu, June 22, 2010, Picture: K. Pichumani

நன்றி: https://www.vallamai.com/?p=99886

Tuesday, November 17, 2020

மழையில் நனைந்த கல்வாழைப் பூ | Canna Indica flower

இன்று காலையிலிருந்து மழை பெய்யவில்லை. ஆனால், முத்தத்தின் சுவடு, கன்னத்தில் ஒட்டியிருப்பது போல், மழையின் சுவடுகளை இலைகளிலும் பூக்களிலும் பார்க்கின்றேன். அந்தக் கிறுகிறுப்பில் தானோ, இவை இப்படி ஆடுகின்றன!

#Shorts: Butterfly - 36 | வண்ணத்துப்பூச்சி - 36

கல்வாழை இலை மீது ஒரு வண்ணத்துப்பூச்சி!

அஞ்சலி: க்ரியா ராமகிருஷ்ணன்

அண்ணாகண்ணன்

தமிழ்ப் பதிப்பியலை, அகராதியியலை நவீன கண்ணோட்டத்துடன் அணுகி, தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப, புதிய பரிமாணங்களுடன் மிளிரச் செய்த க்ரியா ராமகிருஷ்ணன், இன்று (17.11.2020) மறைந்த செய்தி அறிந்து வருந்துகிறேன்.

க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களை நான் ஓரிரு முறைகள் சந்தித்துப் பேசியிருக்கிறேன். முதல் முறை, 2004 காலக்கட்டத்தில் அமுதசுரபியில் நான் பொறுப்பில் இருந்தபோது, வெங்கட் சாமிநாதனின் கட்டுரைகளைத் தொடர்ந்து பதிப்பித்தேன். அப்போது ஒரு கூட்டத்தில் அவர், க்ரியா ராமகிருஷ்ணனை எனக்கு அறிமுகம் செய்வித்தார். க்ரியா என மெய்யெழுத்தில் தொடங்குமாறு ஏன் வைத்தீர்கள் எனக் கேட்டேன். அதுதான் அதன் உச்சரிப்பு என்றார். அப்படியானால், ராமக்ருஷ்ணன் என்றுதானே எழுத வேண்டும். அங்கு மட்டும் ஏன் கிருஷ்ணன் என எழுதுகிறீர்கள் எனக் கேட்டதாக ஞாபகம்.

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் சைக்கிள் உள்ளிட்ட பிறமொழிச் சொற்கள் எப்படி இடம்பெற்றன? என அதன் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய பேராசிரியர் இ.அண்ணாமலை அவர்களிடம் கேட்டேன். ஆனால், பிறகு இதற்கான தேவையைப் புரிந்துகொண்டேன். தமிழர் நாவில் புழங்கும் சொற்கள் அனைத்தையும் திரட்டித் தொகுக்கும் முயற்சியில் ராமகிருஷ்ணன், ஒரு முன்னோடி.

க்ரியா வலைத்தளத்தையும் (https://www.crea.in) செயலியையும் அவர் உருவாக்கியிருந்தார். தமிழில் அதிக அளவு சொற்களைத் திரட்டி, சொல்வங்கி ஒன்றை அவர் வைத்திருந்தார். தமிழில் மென்பொருள் கருவிகளை உருவாக்கும் நண்பர்கள், சொற்றொகுதிகள் தேவை எனக் கேட்டபோது, விக்கிப்பீடியாவையும் க்ரியாவையும் பரிந்துரைத்துள்ளேன்.

க்ரியா ஆண்ட்ராய்டு செயலியைத் தரவிறக்கினால் 10 முறைகள் மட்டுமே இலவசமாகத் தேட முடியும்; அதற்கு மேல் தேடுவதானால், ரூ.199 கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிட்டிருந்தார். இதற்காக அந்தச் செயலிக்கு மிகக் குறைவான மதிப்பீடு அளித்து, அவரை வசைமாரி பொழிந்திருப்பதைக் காணும்போது வருத்தமாக உள்ளது. தமிழ் மென்பொருள்கள், தமிழ்ச் செயலிகள், தமிழுக்காக உருவாகும் தொழில்நுட்பக் கருவிகளின் வணிகச் சந்தை, மிக பலவீனமாக இருக்கிறது. இந்த இடர்களை எதிர்கொண்டே, கடந்தே தமிழுக்கும் தமிழ்கூறு நல்லுலகிற்கும் தொண்டாற்ற வேண்டியிருக்கிறது.

புதிய சிந்தனை, புதிய ஆக்கங்கள், சமரசம் இல்லாத தரம், செம்மை ஆகியவற்றை முன்னிறுத்தி, 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொய்வின்றி உழைத்த க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களின் மறைவு, தமிழுலகிற்குப் பேரிழப்பு. அவர் என்றென்றும் நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.

அவரது முக்கியமான ஒரு நேர்காணல் இங்கே – https://tamil.asiavillenews.com

படத்துக்கு நன்றி: ஆசியாவில்லி


https://www.vallamai.com/?p=99881

நத்தை குத்தி நாரை | அகலவாயன் | Asian openbill stork | Anastomus oscitans

நம் வீட்டுக்குப் பின்னுள்ள வெளியில் இன்று காலை நத்தை குத்தி நாரை, இரை தேடிய காட்சி.

Monday, November 16, 2020

மத்தாப்பு நடனம் | Sparkler Dance

தீபாவளியன்று சென்னை, தாம்பரத்தில் உள்ள நம் தெருவில் சிறுவர்களின் மத்தாப்பு நடனம், களை கட்டியது. பார்த்து மகிழுங்கள்.

கரிச்சான் குருவிகளின் பாடல் | Song of Drongo

இன்று விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இரு மழைக்கு இடையிலான இடைவெளியில், வீட்டை விட்டு வெளியே வந்தால், அசோக மரத்தின் உச்சியிலே இரு கரிச்சான் குருவிகள் ஜோடியாக அமர்ந்து உரக்கப் பாடிக்கொண்டிருந்தன. அதன் பிறகு ஒரு கரிச்சான், நம் வீட்டுக் கிறிஸ்துமஸ் மரத்தில் அமர்ந்து, அங்கிருந்த காக்கையை விரட்டியது. 

கற்பூரத்தின் இன்னொரு பயன்

தீபாவளி இனிப்புகள், பலகாரங்களை, உணவுப் பொருள்களை எறும்புகள், பூச்சிகள் வராமல் காப்பதற்குக் கற்பூரம் பயன்படும் என இன்று தெரிந்துகொண்டேன். இது குறித்து என் மனைவி ஹேமமாலினி உடன் ஒரு நேர்காணல்.

Sunday, November 15, 2020

இலண்டனில் காலை நடை | A Morning Walk in London

இலண்டனில் வசிக்கும் என் தங்கை ஜனனி, எனது வேண்டுகோளை ஏற்று, தனது நடைப் பயிற்சியின்போது எடுத்த காட்சிகளை அனுப்பியிருக்கிறார். இலையுதிர்காலத்து வசீகரமும் இலண்டனின் வனப்பும் பசுமையும் பச்சைக் கிளிகளின் பாடலும் நமக்கு மகிழ்வையும் மனத்துக்கு அமைதியையும் அளிக்கின்றன. பார்த்து மகிழுங்கள்.

கைமுறுக்கு சுற்றுவது எப்படி? | KaiMurukku

ஆண்களாலும் சிறப்பாகச் சமைக்க முடியும் என்பதற்கு, நைஜீரியாவில் வசிக்கும் என் தம்பி பிரசன்னா, ஓர் எடுத்துக்காட்டு. அழகாக, வட்டமாகக் கைமுறுக்கு சுற்றுவது எப்படி என்பதை இந்தப் பதிவில் காட்டுகிறார்.

தீபாவளி மழை | Rain after Deepavali

தீபாவளி அன்று பெய்யாத மழை, தீபாவளி முடிந்த மறுநாளே பெய்கின்றது. இதனால், முந்தைய நாள் வெடி, வாண வேடிக்கைகளால் எழுந்த புகை அடங்கியிருக்கும். சற்றுமுன் சென்னையில் பெய்த கனமழையும் அதில் பறந்த கிளிக்கூட்டமும் இங்கே நம் பார்வைக்கு.

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2020-21 | வேதா கோபாலன் | Gurupeyarchi Palan | ...

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி, இன்று இரவு 10 மணியளவில் குருப்பெயர்ச்சி நடைபெற்றது. குரு பகவான், தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ந்தார். ஜோதிடத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஜோதிடர் வேதா கோபாலன், 12 ராசிகளுக்கும் விரிவான பலன்களை உரிய பரிகாரங்களுடன் கணித்து வழங்கியுள்ளார். உங்கள் ராசிக்கு என்ன பலன் என்று பாருங்கள்.

Saturday, November 14, 2020

கேதார கௌரி விரதத்தின் தாத்பர்யம் | Kethara Gowri Viratham

கண்டியூர் இராமன் அவர்கள், தஞ்சைக்கு அருகில் உள்ள கண்டியூரில் ஆஞ்சநேயருக்குக் கோவில் எழுப்பி, தினசரி பூஜைகள் செய்து வருகிறார். இந்த அமர்வில் கேதார கௌரி விரதத்தின் தாத்பர்யம் குறித்து நமக்கு விளக்குகிறார்.

தீபாவளி நல்வாழ்த்துகள் | Happy Deepavali

என் வேண்டுகோளை ஏற்று, தங்கள் தீபாவளி வாழ்த்துகளை எனக்கு அனுப்பிய அனைவருக்கும் நன்றி. இதோ உங்கள் உற்சாக வாழ்த்துகளின் தொகுப்பு.

ஒளி பரவட்டும். களி வளரட்டும்.
துளி பெருகட்டும். வெளி விரியட்டும்.
உளி நகரட்டும். சிலை தெரியட்டும்.
உளம் தெளியட்டும் உயிர் மிளிரட்டும்.

Friday, November 13, 2020

தீபாவளி லேகியம் | தீபாவளி மருந்து செய்வது எப்படி?

தீபாவளியை முன்னிட்டு நாம் உண்ணும் இனிப்புகள், பலகாரங்கள், உணவுகள் அனைத்தையும் செரித்து, நம்மைத் துடிப்புடன் செயல்பட வைப்பது தீபாவளி மருந்து. மரபுவழியாக ஒவ்வொரு குடும்பத்திலும் இது இன்றிமையாத  இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தத் தீபாவளி மருந்தைச் செய்வது எப்படி? பெங்களூருவிலிருந்து வைஷ்ணவி அஜய், நமக்காகச் செய்து காட்டுகிறார். பார்த்துப் பயன் பெறுங்கள்.

Wednesday, November 11, 2020

FactCheck: தமிழ்நாடு வடிவத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டடம் உள்ளதா?

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டடங்கள், தமிழ்நாடு என்ற எழுத்துகளின் வடிவத்தில் உள்ளதாக இன்று ஒரு படத்தைப் பார்த்தேன். அது உண்மையா? இதோ ஓர் அலசல்.

தீபாவளி பலகாரங்களுக்கு ஸ்ரீ காமதேனு ஸ்டோர்ஸ்

சென்னை, மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ காமதேனு ஸ்டோர்ஸ் என்ற புதிய கடையைத் தொடங்கியுள்ளார்கள். இதில் தீபாவளி இனிப்புகள், பட்சணங்கள் ஆகியவற்றுடன், சுவையான, ஆரோக்கியமான பல்வேறு பலகாரங்களை, நொறுக்குத் தீனிகளை, சிற்றுணவுகளை விற்கிறார்கள். 

தீபாவளி லேகியத்தில் தொடங்கி, மனோகரம், கைமுறுக்கு, முள்ளு முறுக்கு, தேன்குழல், லட்டு, மைசூர் பாகு, பாதுஷா, ஜாங்கிரி, ரவா லாடு, ராகி லாடு.. எனப் பற்பல இனிப்பு வகைகள் அணிவகுத்து நிற்கின்றன. மைதா இல்லாமல் சிறுதானியத்தில், சீனி இல்லாமல் நாட்டுச் சர்க்கரையில், பனை வெல்லத்தில் தயாரிக்கப்பட்டவை. 

மேலும் 11 வகையான வடகம், வற்றல், விதவிதமான அப்பளம், தொக்கு (பிரண்டைத் தொக்கு), ஊறுகாய், வடுமாங்காய், சூப்பு தயாரிப்பதற்கான பொடி, பல்வகைப் பொடிகள்... என நூற்றுக்கணக்கான வகைகள் இங்கே விற்பனைக்கு உள்ளன. 

ஸ்ரீரங்கத்தில் காவிரியாற்று நீரைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் இந்தப் பலகார வகைகள், பண்டிகைக் காலத்திற்கு மட்டுமின்றி அன்றாட நாட்களுக்கும் நமக்குத் தேவையாக இருக்கும். தரம், சுவை, சுகாதாரம் என்பதை இலக்காகக் கொண்டிருக்கும் ஸ்ரீ காமதேனு ஸ்டோர்ஸ் கடைக்குள் சுதா மாதவனின் உலா இங்கே.

விரலழுத்த மருத்துவம் | Reflexology | நிர்மலா ராகவன் நேர்காணல்

விரலழுத்த மருத்துவம் (Reflexology) என்பது 3,000 ஆண்டுகளுக்கு முன்னர், எகிப்து நாட்டு மருத்துவ முறைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது என மருத்துவர் ஒருவரின் கல்லறையில் காணப்படும் சித்திரங்களிலிருந்து அறிய முடிகிறது. வாய்வழியாக அதைப் பரப்பியிருக்க வேண்டும். இந்தியாவிலும் சீனாவிலும் புத்தருடைய பாதங்களில் இம்முறை வைத்தியம் காணப்படுகிறது.

மருத்துவர்கள் மட்டுமில்லாமல் இதை யார் வேண்டுமானாலும் எளிதாகக் கற்கலாம், நோயாளிகளுக்கு மட்டும்தான் இம்முறை பயன்படும் என்பதில்லை, உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க, பிறருக்கும் உதவி செய்ய முடியும் என்று டாக்டர் வில்லியம் பிட்ஸ்ஜெரால்டு (Dr.William Fitzgerald) என்பவர் 20ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார்.

கை அல்லது கால் விரல் ஒன்றின் நுனியை இரு விரல்களால் அழுத்தினால், அதனுடன் தொடர்புள்ள வேறொரு பாகத்தில் சில விநாடிகள் சொரணை போய்விடும் – மயக்க மருந்து கொடுத்தாற்போல். 

இதே உத்தியைப் பயன்படுத்தி, உடலில் எந்தப் பாகத்தில் சிக்கல் இருக்கிறது என்று கண்டறியலாம். அதே போல்,  அந்தச் சிக்கலை ஒரு குறிப்பிட்ட பாகத்தில் அழுத்துவதன் மூலம் சரி செய்யலாம். எந்தெந்தப் பாகத்தில் விரல்களால் அழுத்தினால் எந்தெந்தச் சிக்கல்களைச் சரி செய்யலாம் என்பதை இந்த அமர்வில் நிர்மலா ராகவன் விளக்குகிறார். அத்துடன் படுப்பதற்கான நிலைகள், சவாசனம் செய்யும் முறை, நீண்ட நேர விமானப் பயணத்தில் தூங்குவதற்கான வழிமுறை ஆகியவற்றையும் எடுத்துரைக்கிறார். விரலழுத்த மருத்துவத்தை மற்றவர்களுக்குச் செய்த பிறகு நமக்கு அது தொற்றாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

பயனுள்ள இந்த நேர்காணலைப் பாருங்கள்.

Tuesday, November 10, 2020

Butterfly - 35 | வண்ணத்துப்பூச்சி - 35

வண்ணத்துப்பூச்சி, வாழைப்பழம் சாப்பிடும் என்று அறிந்துகொண்ட நாள், இது. கனிந்த வாழைப்பழம் ஒன்று, சாலையில் நசுங்கிய நிலையில் கிடந்தது. அதை இந்த வண்ணத்துப்பூச்சி பொறுமையாக உண்ணுகிறது.

நீலவால் பஞ்சுருட்டான் | Blue tailed bee eater | Merops philippinus

இன்று காலை இந்தப் பறவையைப் பார்த்தேன். கூரிய அலகுடன் தலையைத் திருப்பிக்கொண்டே இருந்தது. முதலில் மீன்கொத்தியைப் போன்று இருந்தது. பிறகுதான் தெரிந்தது, இதன் பெயர், நீலவால் பஞ்சுருட்டான். இது, ஒருவகைப் ஈப்பிடிப்பான் பறவை. குளம் குட்டை போன்றவற்றின் கரைகளில் காணப்படும். நான் பார்த்தபோது இது, மூங்கில் கழியில் அமர்ந்திருந்தது.

Sunday, November 08, 2020

Sunset at Chennai - 20

இன்றைய சூரிய அஸ்தமனம், எனது வர்ணனையுடன்.

Saturday, November 07, 2020

வானவில் | Rainbow

சென்னையில் இப்போது வானத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கும் வானவில், இதோ உங்கள் கண்களுக்கு விருந்தாக.

'வாழ்நாள் சாதனையாளர்' சுபாஷிணி திருமலை | 'Lifetime Achiever' Subashini Tirumalai

எழுத்தாளர் சுபாஷிணி திருமலை அவர்களுக்குத் திருவள்ளுவர் நற்பணி மன்றம், வாழ்நாள் சாதனையாளர் விருதினை 08.11.2020 அன்று வழங்குகிறது. வல்லமை மின்னிதழில் நூற்றுக்கும் மேலான படைப்புகளை வழங்கிய, 14 நூல்களை இயற்றிய சுபாஷிணி அவர்களுடனான என் அனுபவங்கள், நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். 

Friday, November 06, 2020

நலவாழ்வுக்கு யோக முத்திரைகள் - 2 | Mudras (hand gestures) for Wellbeing - 2

சக்தி வாய்ந்த யோக முத்திரைகளின் இரண்டாம் பாகம் இங்கே. உடலின் ஒவ்வோர் உறுப்புகளுக்கும் உரிய தனித் தனி முத்திரைகளைப் பார்த்து வருகிறோம். இந்த அமர்வில், இதய நலனுக்கான முத்திரைகள், வயிறு, செரிமானம், வயிற்றின் உள் உறுப்புகள் அனைத்திற்குமான முத்திரைகள், மலச்சிக்கலைப் போக்கும் முத்திரை உள்ளிட்ட பலவற்றையும் நிர்மலா ராகவன் விவரித்துள்ளார். 

பணம் வருவதற்கான முத்திரையைத் தொடர்ந்து, நினைத்தது நடப்பதற்கான முத்திரையையும் போட்டியில் வெல்வதற்கான முத்திரையையும் செய்து காட்டியுள்ளார். பூமியிலிருந்து சக்தியைப் பெறுவதற்கான முத்திரை, கால்கள் வலிமை பெறுவதற்கான முத்திரை, தியான முத்திரை, உடலைத் தளர்த்தும் முத்திரை, மன அமைதி தரும் முத்திரை, மன்னிப்புக் கேட்பதற்கான முத்திரை ஆகியவற்றையும் விளக்கியுள்ளார். 

நெற்றியில் பொட்டுவைப்பதற்குப் பின்னுள்ள காரணத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். அசைவ உணவு உண்ணும்போது எட்ட முடியாத தியான நிலைகளைச்  சைவ உணவு உண்ணும்போது எட்ட முடிந்ததை உதாரணத்துடன் கூறியுள்ளார். மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் தலைவலி, வயிற்றுவலியைப் போக்குவதற்கான மருந்தையும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நேர்காணலைப் பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Wednesday, November 04, 2020

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2020-21 | வேதா கோபாலன் | Gurupeyarchi Palan | ...

2020-21ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் இதோ. ஜோதிடத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களின் கணிப்பில், 12 ராசிகளுக்கும் விரிவான பலன்கள், உரிய பரிகாரங்களுடன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் உற்றார், சுற்றாருக்கும் பகிருங்கள். குரு பகவான் அருளைப் பெறுங்கள்.

Sunday, November 01, 2020

Factcheck: நாடார் குலத்தை யுனெஸ்கோ பாராட்டியுள்ளதா?

உலகின் தொன்மையான மற்றும் நம்பிக்கையான இனமாக நாடார் குலத்தைப் பாராட்டி, யுனெஸ்கோ சான்றிதழ் வழங்கியுள்ளதாக, ஒரு படச்செய்தி உலவி வருகின்றது. இதன் உண்மைத்தன்மை என்ன? இதோ ஓர் அலசல்.

வல்லூறு | வைரி | Shikra | Falcon | Accipiter badius

நம் வீட்டு வேப்ப மரத்தில் வந்து அமர்ந்த வல்லூறு, இறகுகளைக் கோதியதுடன், சிறு கொட்டாவியும் விட்டது (வல்லூறு கொட்டாவி விட்டுப் பார்த்திருக்கிறீர்களா?)

வல்லூறு, என்பது உருவில் சற்று சிறிய ஒரு கழுகு இனம். இது மிகவும் விரைவாகப் பறக்க வல்லது. கீழே பாய்ந்து இரையைக் கொல்லும் பொழுது மணிக்கு 290 கி.மீ விரைவிலே பறக்க வல்லது. விலங்கு உலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை இந்த வல்லூறுதான். வல்லூறு வலுவாக பறந்துகொண்டே தன்னைக் காட்டிலும் உருவில் பெரிய பிற பறவைகளைக் கொல்ல வல்லது. மிக விரைவாக உயரப் பறந்து செல்லும்; வாத்து, புறாவினங்களை இது மிக எளிதாகத் தாக்கிக் கொல்லும். இப்பறவை இனம் வைரி, வில்லேத்திரன் குருவி, பறப்பிடியன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது (தரவுகளுக்கு நன்றி விக்கிப்பீடியா). இந்தப் பறவையை அடையாளம் காண உதவிய மறவன்புலவு க.சச்சிதானந்தன், சுந்தர் லெட்சுமணன் ஆகிேயாருக்கு நன்றி.