!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2005/11 - 2005/12 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, November 18, 2005

நூலாக்கம்: விலையிடலும் விளைவும்


ஒரு நூலுக்கு என்ன விலை வைப்பது?

நூலின் உள்ளடக்கத்திற்கு விலை மதிப்பே கிடையாது; தட்டச்சு, மெய்ப்பு, ஓவியம் அல்லது புகைப்படம், அச்சு, கட்டுமானம், போக்குவரத்து, அஞ்சல் செலவு, விற்பனைக் கழிவு, முதலீட்டுக்கான வட்டி, இவ்வளவையும் கடந்த பிறகு பதிப்பாளர் - நூலாசிரியரின் வருவாய் ஆகியவற்றை உள்ளடக்கியதே நூலின் விலையாகிறது. நூலாசிரியருக்கு அளிக்கும் சன்மானமானது, அவரது எழுதுபொருள், படியெடுத்தல், பிற நூல் வாங்குதல், பயணம்.. என எழுத்துச் சார்ந்த செலவுகளுக்கே சரியாய் இருக்கும்; எனவே அவருக்கு அளிக்கும் தொகையும் நூலின் உள்ளடக்கத்திற்கு அளிக்கும் தொகையாகாது.

இந்த நிலையில் நல்ல நூலுக்கு எவ்வளவு விலை வைத்தாலும் அது தகும்தான். ஆனால், இங்கு நாம் வேறு சிலவற்றையும் நோக்கவேண்டும்.

பாடப் புத்தகம், அதைச் சார்ந்த வழிகாட்டிகள், துணை நூல்கள் போன்றவை என்ன விலை வைத்தாலும் மக்கள் வாங்குவர். கணினி போன்ற தொழில்நுட்பம் சார்ந்த நூல்களுக்கும் இது பொருந்தும். இவ்வாறு, 'தேவை' இல்லாத நூல்களுக்கு, குறைந்த விலை வைத்தாலும் அதிகம் விற்காது.

நுகர்வோரை நம்பிய உற்பத்தியாளர்; உற்பத்தியாளரை நம்பிய நுகர்வோர் என்ற இரு வகையினர் உள்ளனர். பெட்ரோல், உற்பத்தியாளரை நம்பிய நுகர்வோர். அதற்கு என்ன விலை வைத்தாலும் மக்கள் வாங்குவர். ஆனால், நூல்கள் போன்றவை, நுகர்வோரை நம்பியே உள்ளன.

நுகர்வுக் கலாச்சாரத்தின் பிடியில் சிக்கிய மக்கள், எல்லாவற்றுக்கும் அதிக விலை கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது, காந்திய முறைக்கு எதிரானது.

மக்கள், தாம் விரும்பும் நூல்களை எல்லாம் வாங்க முடிவதில்லை. புத்தகக் காட்சிகளில் பலர், பல நூல்களை எடுக்கின்றனர். பின்னர், அதன் விலையைப் பார்த்துவிட்டு மீண்டும் வைக்கின்றனர். ஏன்?

இன்னொன்றைப் பார்ப்போம். ஒரு நூலைக் குறைந்த செலவிலும் தயாரிக்கலாம்; அதிகச் செலவிலும் தயாரிக்கலாம். உயர்தர அச்சிலான பதிப்பும் மலிவுப் பதிப்பும் வெளிவந்துள்ள நூல்களுள் மகாத்மா காந்தியின் சத்திய சோதனை, அப்துல் கலாமின் அக்னிச் சிறகுகள், சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரி ஆகிய நூல்களும் அடங்கும். தயாரிப்பு விதம்தான் வேறே தவிர, இரண்டிற்கும் ஒரே உள்ளடக்கம்தான். இந்த இரண்டு பதிப்புகளையும் வாசகர் முன் வைப்போம். அவர் மலிவுப் பதிப்பைத் தேர்ந்தெடுப்பது ஏன்?

சிறந்த உள்ளடக்கத்தையே பேரளவு வாசகர் நாடுகின்றனர். அது, சராசரியான பதிப்பில் இருந்தாலே போதும். ஆனால் இன்று, வழுவழு தாள், பலவண்ண அச்சு, கெட்டி அட்டை, பக்கக் குறியிழை.. ஆகியவற்றைக் கொண்டு, குறைந்த பக்கங்களும் அதிக விலையும் கொண்ட நூல்கள் அதிகரித்து வருகின்றன. நூலின் உள்ளடக்கத்தால் மட்டும் அல்லாது, அதை உருவாக்கும் முறையாலும் வாசகர்களைக் கவர முடியும் என்று பதிப்பாளர் சிலர் காட்டி வருகிறார்கள். இவர்கள், தாராளமாக விலை வைக்கின்றனர்.

இந்த நாட்டில் 23 விழுக்காட்டினர், வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கின்றனர். நடுத்தர மக்களோ, வரவுக்கும் செலவுக்கும் 'உன்னைப் பிடி, என்னைப் பிடி' என்று வாழ்க்கை நடத்துகின்றனர். மிகக் குறைந்த விழுக்காட்டினரே, பண பலம் மிக்கவர்கள். அவர்களுள் பலர், வாசிப்பு ஆர்வம் குறைவானவர்கள். வாசிக்கும் வேட்கை உள்ளோர், ஓரளவு வருவாய் உள்ளோரே. அவர்களை அதிக விலை என்ற கணையால் தாக்குவது, நல்லதில்லை.

உயர்தரம் என்ற பெயரில், வாசகருக்குக் குறைந்த விலையிலான நூல்களை வாங்கும் வாய்ப்பைப் பதிப்பாளர்கள் மறுக்கக் கூடாது. உலகத் தரத்துக்கு நூல் வெளியிட விரும்புவோர், அதன் மலிவுப் பதிப்பையும் சேர்த்தே அச்சிடுவது, வாசகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

தயாரிப்புச் செலவு கூடுவது, வாசகருக்கு மட்டுமின்றி, பதிப்பாளருக்கும் கேடே. சராசரித் தரம் என்றல்லாது, அதிகச் செலவு பிடிக்கும் உயர்தர அச்சுக்குப் பதிப்பாளர் அனைவராலும் செல்ல முடியாது. இதையே பெரும்பாலோர் பின்பற்றினால் சிறு பதிப்பாளர்கள், பதிப்புத் துறையை விட்டு ஓடவேண்டியதுதான்.

பிரம்மாண்டம், பெரிய பட்ஜெட் என்று சென்றதால் இன்றைய தமிழ்த் திரையுலகம், சிறு தயாரிப்பாளர்களை இழந்தது, நம் கண் முன்னே நிழலாடும் உண்மை. அந்த நிலை, பதிப்புத் தொழிலுக்கும் ஏற்படாமல் தடுக்க வேண்டியது, பதிப்பாளர் அனைவரின் கடமை.

(தமிழ் நூல்களின் விலையை ஒவ்வொரு 16 பக்கங்களுக்கும் ரூ.5இலிருந்து ரூ.8 ஆக உயர்த்தவேண்டும்; நூல்களின் விலையைக் கூட்டினாலே பதிப்பாளருக்கும் விற்பனையாளருக்கும் வருவாய் இருக்கும்; அவர்கள் இதே தொழிலில் தொடர்ந்து இருப்பர்; பதிப்புத் தொழில் வளரும் எனப் பதிப்புத் தொழில் உலகம் - ஐப்பசி(அக்டோ பர்) 2005 இதழில் மறவன்புலவு க. சச்சிதானந்தன் கூறியிருந்தார். அதற்கு மறுமொழியே இந்தக் கட்டுரை)

நன்றி: பதிப்புத் தொழில் உலகம் - கார்த்திகை(நவம்பர்) 2005.