!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2009 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, December 14, 2009

திரிசக்தி பதிப்பகத்தின் 27 நூல்கள் வெளியீட்டு விழா

திரிசக்தி பதிப்பகத்தின் 27 நூல்கள் வெளியீட்டு விழா, சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் 20.12.2009 அன்று மாலை நடைபெறுகிறது. இதில் நம் நண்பர்கள் விக்கிரமன், வெங்கட் சாமிநாதன், ரமணன், ஹரிகிருஷ்ணன், மரபின் மைந்தன் முத்தையா, விழியன், நிலாரசிகன், சைதை முரளி ஆகியோரின் நூல்களும் வெளியாகின்றன. இந்தப் புதிய பதிப்பகத்தின் தலைமை ஆசிரியராக ரமணன் பணியாற்றுகிறார்.

இந்த விழாவின் அழைப்பிதழ் வருமாறு:
திரிசக்தி பதிப்பகத்திற்கும் நூலாசிரியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

Sunday, December 13, 2009

கவிக்கோ ஞானச்செல்வன் அகவை 70 நிறைவு விழா


கவிக்கோ ஞானச்செல்வனின் அகவை 70 நிறைவு விழாவும் அவரின் இரு நூல்கள் வெளியீட்டு விழாவும் 28.11.2009 அன்று சென்னை, தேவநேயப் பாவாணர் அரங்கத்தில் நடைபெற்றன. உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

பேச்சாளரும் எழுத்தாளருமான கவிக்கோ ஞானச்செல்வன், 'தமிழ் பேசு தங்கக் காசு' நிகழ்ச்சிக்கு நடுவராக வீற்றிருக்கிறார். மேலும் மக்கள் தொலைக்காட்சியில் தவறின்றித் தமிழ் பேசுவது, எழுதுவது தொடர்பான நிகழ்ச்சிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணன் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. மலர்மாமணி புலவர் இளஞ்செழியன் வரவேற்புரை ஆற்றினார்.

விழாவுக்கு முன்னாள் அமைச்சர் அருளாளர் இராம.வீரப்பன் தலைமை தாங்கினார். 'ஞானச்செல்வன் கவிதைகள்', 'அர்த்தமுள்ள அரங்குகள்' ஆகிய நூல்களைக் கவிஞர் வைரமுத்து வெளியிட்டார். மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி, தொழிலதிபர்கள் மாம்பலம் சந்திரசேகர், கிருத்திவாசன், அழ,ஆறுமுகம், கவிஞர் புரட்சிதாசன் ஆகியோர் நூல்களைப் பெற்றுக்கொண்டனர்.

பேராசிரியர் முனைவர் தி.இராசகோபாலன், அமுதசுரபி ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் நூல் திறனாய்வுரை நிகழ்த்தினர். கவிஞர் முத்துலிங்கம் வாழ்த்திப் பேசினார். கவிஞர் மானா பாஸ்கரன் நன்றியுரை நிகழ்த்தினார். கவிஞர் எஸ்.இராஜகுமாரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பல ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்த ஞானச்செல்வனின் மாணவர்கள், நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அந்த மாணவர்களுள் நானும் ஒருவன்; 1992-93 ஆண்டுகளில் ஞானச்செல்வன் எனக்கு வகுப்பாசிரியராகவும் தமிழாசிரியராகவும் அமைந்தார். இலக்கிய மன்றத் தொடக்க விழாவில் கவிப் பட்டிமன்றம் ஒன்றை உருவாக்கி, அதற்கு என்னை நடுவராக அமர்த்தினார். சில போட்டிகளில் கலந்துகொள்ளவும் என்னை ஊக்குவித்தார். அந்தப் போட்டிகளில் பெற்ற வெற்றிகள் எனக்கு ஊக்கத்தை அளித்தன. அந்த வகையில் என் வளர்ச்சியில் ஞானச்செல்வனுக்குப் பங்குண்டு. அவருக்கு என் நன்றிகள். அவர் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

Thursday, December 03, 2009

மறவன்புலவு க.சச்சிதானந்தன் பிறந்த நாள்தமிழுக்கும் தமிழருக்கும் நாளும் பொழுதும் வலிவும் பொலிவும் சேர்க்கும் மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்கள், கார்த்திகை 17ஆம் நாள், மிருகசீரிட நடத்திரத்து அன்று (டிசம்பர் 3ஆம் தேதி) பிறந்த நாள் காண்கிறார். ஆங்கில நாட்காட்டியின்படி இவர் பிறந்த நாள், டிசம்பர் 5ஆம் நாள் என்றாலும் தமிழ் நாட்காட்டியின்படி இவர் பிறந்த நாள், டிசம்பர் 3ஆம் தேதியே.

நுண்மாண் நுழைபுலம் மிக்க ஈழத் தமிழறிஞர்; ஐ.நா. உணவு - வேளாண் கழக முன்னாள் ஆலோசகர்; காந்தளகம் பதிப்பகத் தலைவர்; தனித்துவம் மிக்க தமிழ்நூல்.காம் (http://www.tamilnool.com), தேவாரம்.ஆர்க் (http://thevaaram.org) தளங்களின் நிறுவனர் - வழிகாட்டி - காப்பாளர்; அண்மையில் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்குத் தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கிட முக்கிய காரணர்களுள் ஒருவர்....... எனப் பற்பல பெருமைகளுக்கு உரியவர், நம் சச்சிதானந்தன்.

ஆஸ்திரேலியாவில் பொங்கல் திருநாள் அன்று சச்சியை உரையாற்ற அழைத்தார்கள். புலம்பெயர் இளையோர் நிறைந்த அந்த அவையில் இவர் ஆற்றிய உரையின் தலைப்பு:
The Photosynthesis Day என்பதாகும். இத்தகைய அறிவியல் கண்ணோட்டம் கொண்டவர், இவர்.

தமிழில் காசோலைகளை எழுதி, அதை ஏற்காத வங்கிகளுடன் சட்டபூர்வ - தனி நபர் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

ஒளி அச்சுக் கோப்பு, நிலவரை என்ற கலைச் சொற்களைப் புதிய பொருளுடன் அறிமுகப்படுத்தியவர்; 60 நாடுகளுக்கும் மேல் பயணித்துள்ளவர்; இலங்கை அரசியல் நிகழ்வுகளின் நோக்கர்; சேது சமுத்திரத் திட்டம் என்கிற தமிழன் கால்வாய்த் திட்டத்தைப் பல முனைகளுக்கும் எடுத்துச் சென்ற கடலியல் வல்லுநர்; தமிழால் அனைத்தும் முடியும் என்பதை நிலைநாட்டும் வண்ணம் செயலாற்றி வருகிறார். தமிழையும் சைவத்தையும் தம் இரு கண்களாகக் கொண்டவர்.

எதையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகுவதில் இவர், சிறந்த முன்மாதிரி. புதிய சிந்தனைகள், ஆக்கபூர்வ செயல்திட்டங்கள், பொருள் செறிந்த நுணுக்கமான மொழி நடை..... ஆகியவற்றுடன் மகத்தான ஆளுமையாக நம் முன் நிற்கிறார்.

மனிதன், மரணத்தை வெல்லும் நாள் நெருங்கி வருவதால், ஒரு நூற்றாண்டு வாழ்க என்பதே கூட சுருக்கமாக வாழ்த்தாகலாம். எனவே சச்சிதானந்தன், காலத்தை வென்று வாழ்க என வாழ்த்துகிறேன்.

(சச்சியைப் பற்றி மேலும் அறிய:
http://sachithananthan.blogspot.com/2005/09/kanapathipillai-sachithananthan.html)

Wednesday, November 18, 2009

தமிழக முதல்வருடன் ஒரு சந்திப்புநவம்பர் 11, 2009 நாளிட்ட இந்தியா டுடே வார இதழில் பொன்.மகாலிங்கம் எழுதிய 'இருள் படிந்த கூடாரங்கள்' என்ற கட்டுரை வெளியானது. அதில் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களின் இப்பொழுதைய நிலை குறித்துப் படம் பிடித்துக் காட்டியிருந்தார். அதில் 'இலங்கையில் முகாமிலும் வெளியிலும் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் பெரும்பாலான முகாம்கள் தரமானதாக இல்லை. ஆனால், பாதுகாப்பு உண்டு. என்றாலும் இங்கு மனித உரிமைகள் இல்லாமல் நடைப் பிணங்களாகத்தான் வாழ்கிறார்கள்' என்று மறவன்புலவு க.சச்சிதானந்தன் கருத்துத் தெரிவித்திருந்தார். அத்துடன் 'இந்தியக் குடியுரிமை எங்களுக்குத் தேவையில்லை. நிலையான வாழ்வுரிமைதான் தேவை' என்றும் கூறியிருந்தார்.

இந்தியா டுடே கட்டுரை இதோ:

முதல்வர் கருணாநிதி மனதை கரைந்த கட்டுரை.. இதோ!

இந்தக் கட்டுரையைப் படித்து, அத்துடன் வெளியாகியிருந்த புகைப்படங்களையும் பார்த்த தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, அதிர்ந்தார்; மிக வருந்தினார்; கண்ணீர் பெருகுவதாக எழுதினார். உடனே தமிழக அமைச்சர்களின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அதற்கு முன்னதாக மறவன்புலவு சச்சிதானந்தனை அழைத்து, இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும் எனக் குறிப்புகள் வழங்குமாறு கோரினார். அதை அடுத்து சச்சிதானந்தன், சுமார் 20 கோரிக்கைகள் அடங்கிய வரைவினை உருவாக்கினார். அதனைத் தமிழக முதல்வரிடம் சேர்க்கும் முன்னதாக என்னிடம் அனுப்பி, வாக்கிய அமைப்புகளைச் சரி பார்க்குமாறும் மேலும் சேர்க்க வேண்டியவை இருப்பின் அவற்றைச் சேர்க்குமாறும் கூறினார். அவ்வாறே என் குறிப்புகளையும் சேர்த்து இறுதி வரைவினை உருவாக்கினார்.

அந்த வரைவு இதோ:

தமிழக முகாம்களில் சிறந்த பாதுகாப்புடன் நலிந்து வாழும் ஈழத் தமிழருக்கு என்னென்ன செய்யவேண்டும்?

அந்த வரைவினைப் பெரிய எழுத்துகளில் படியெடுத்தார். தமிழக முதல்வரிடம் அளித்தார். ஒவ்வொரு குறிப்பினையும் முதல்வரிடம் நேரில் விளக்கினார். அவற்றை எடுத்துக்கொண்டு சட்டப் பேரவைக்குச் சென்ற முதல்வர், உடனடியாக ரூ.12 கோடி நிதியுதவியினை அறிவித்தார். அத்துடன் தமிழகம் முழுதும் உள்ள அகதிகள் முகாம்களுக்குத் தமிழக அமைச்சர்களை நேரில் செல்லப் பணித்தார். அகதிகள் முகாம்களின் நிலை குறித்து நவம்பர் 10ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தமிழக அமைச்சர்களும் அனைத்து முகாம்களுக்கும் சென்றனர். நிலைமையை ஆராய்ந்தனர். தங்கள் அறிக்கைகளை முதல்வரிடம் வழங்கினர். அதைத் தொடர்ந்து 12.11.2009 அன்று மீண்டும் அமைச்சரவையைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் மறுவாழ்வுக்காக ரூ.100 கோடியினை ஒதுக்குவதாக அறிவித்தார்.

அந்த அறிவிப்பு இதோ:

இலங்கை அகதிகள் மறுவாழ்வுக்கு ரூ.100 கோடி: கருணாநிதி அறிவிப்பு

இலங்கைத் தமிழ் அகதிகளின் நலவாழ்விற்காக மறவன்புலவு சச்சிதானந்தன் விடுத்த கோரிக்கைகளுள் பெரும்பாலானவற்றை முதல்வர் அப்படியே ஏற்றுக்கொண்டார். மேலும், உடனே நடவடிக்கை எடுத்தார். ரூ.100 கோடியினை ஒதுக்கினார். இதற்காகத் தமிழக முதல்வருக்கு நன்றி கூற, 13.11.2009 அன்று காலை சச்சிதானந்தன் முதல்வரில்லம் சென்றார். வரைவினை உருவாக்க உதவிய என்னையும் உடன் வருமாறு அழைத்தார். இருவரும் அங்கு சென்றதும் முதல்வரிடம் விவரம் தெரிவித்தனர்.

என் இனிய நண்பரும் கவிஞர் சேவற்கொடியோனின் மகனும் இதழாளராய் இருந்து, தமிழக அரசின் செய்தித் துறையில் மக்கள் தொடர்பாளராய் இருப்பவருமான கோவலனை அங்கு கண்டேன். தற்போது, முதல்வருடனே இருந்து, செய்திப் பணி ஆற்றி வருகிறார்.

எம்மைக் கண்ட முதல்வரின் உதவியாளர் சண்முகநாதன், "நீங்கள் கேட்ட அனைத்தையும் முதல்வர் கொடுத்துள்ளார்.. பார்த்தீர்களா?" என்றார்.

நியமனம் பெற்றுப் பார்க்க வந்தவர்களைப் பார்த்த பின்னர், நாங்கள் இருவரும் முதல்வரிடம் சென்றோம். படப்பிடிப்பாளர் எம்மை முந்தி விரைந்தார்.நாங்கள் இருவரும் அவரைச் சந்தித்து, நன்றிகளைத் தெரிவித்தோம். சச்சிதானந்தன் பூச்செண்டு அளித்து நன்றி தெரிவித்தார். கவிநாயகர் கந்தவனம் எழுதிய நூல்களை முதல்வரிடம் அளித்தார். 1994இல் முரசொலியில் ஈழத் தமிழர் தொடர்பாகச் சச்சிதானந்தன் எழுதிய நீண்ட கட்டுரை வெளியாகியிருந்தது. அதன் படியினையும் அளித்தார். அதில் உள்ள விவரங்கள் முதல்வருக்குப் பயனாகும் எனச் சச்சிதானந்தன் கூறினார்.

தமிழக முதல்வருடன் 10 படங்கள்

கந்தவனம் குறித்து "இவர் ஸ்காலரா?" என விசாரித்த முதல்வர், "இவரை உலகச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ளச் சொல்லுங்கள்" என்றார். 'அத்தாணி அழகர்' என முதல்வரைப் பற்றி விவரித்த கந்தவனத்தின் கட்டுரையைச் சச்சிதானந்தன் காட்டினார். அந்தப் பக்கங்களை முதல்வர் ஆர்வத்துடன் பார்த்தார்.

"இவர் ஐநா சபையில் பணியாற்றியவர். இலங்கை அரசிலும் பணியாற்றியவர். பண்டாரவன்னியன் எழுதியபோது, பல விவரங்களை அளித்து உதவியவர். அது எங்கே இருக்கிறது, இது எங்கே இருக்கிறது எனப் பலவற்றையும் இவரிடம் கேட்டு எழுதினேன்" என அருகில் இருந்த அமைச்சர்கள் பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோரிடம் சச்சிதானந்தனை அறிமுகப்படுத்தினார்.

"பதிப்பகம் (காந்தளகம்) எப்படி நடக்கிறது?" என முதல்வர் கேட்டார். "குறையில்லை" என்றார் சச்சி.

ஈழத் தமிழருக்கு முதல்வர் பெரும் உதவிகளைச் செய்ததற்காகச் சச்சிதானந்தன் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் மாணாக்கர்களாக ஈழத் தமிழர் இருந்ததை நினைவுகூர்ந்த அவர், இன்று தமிழகப் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், பொறியியல் துறைகளுக்கு ஈழத்து மாணவர் சேர இயலாத நிலை இருப்பது குறித்து வருந்தினார். இதற்குப் பதில் அளித்த பொன்முடி, "இலங்கைத் தமிழர்களுக்கான இட ஒதுக்கீடு, மத்திய அரசின் பொறுப்பிற்குச் சென்றுள்ளது. மற்றபடி ஈழத் தமிழர்கள், தமிழகக் கல்வி நிறுவனங்களில் சேருவதில் தடையில்லை" என்றார்.

தமிழக முதல்வருடன் 10 படங்கள்

இலங்கையில் முள்வேலி முகாம்களிலிருந்து ஓர் இலட்சத்து இருபதினாயிரம் தமிழர்கள், சொந்த வாழ்விடங்களுக்கு மீண்டுள்ளதாக இலங்கை அமைச்சர் தொண்டமான் தன்னிடம் தெரிவித்துள்ளதாக முதல்வர் தெரிவித்தார். "இலங்கை அரசு கூறும் செய்தியையே தொண்டமான் கூறுவார்" எனச் சச்சிதானந்தன் கூறினார். "தொண்டமான் சரியானதையே சொல்லுவார்" என முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.

"சேதுக் கால்வாய்த் திட்டத்தில் தடைகள் நீங்குமா?" எனச் சச்சிதானந்தன் வினவினார். "அதுதான் தடை பட்டு நிற்கிறதே!" என முதல்வர் வருந்தினார். "ஈழத் தமிழர்களாகிய எங்களுக்கு இதுவும் பின்னடைவாக இருக்கிறது" எனச் சச்சிதானந்தன் துயருடன் கூறினார்.

"கவிஞர் காசி ஆனந்தன் எப்படி இருக்கிறார்?" என முதல்வர் வினவினார். "நலமுடன் இருக்கிறார். தன் மகள் திருமணத்திற்கு உங்களை அழைக்க இங்கு வந்தார்" என்றார். "அவருக்குத் திருமண அழைப்பு வைக்கும்போதுதான் என் நினைவு வந்ததா?" என முதல்வர் சிரித்தபடி கேட்டார். "காசி ஆனந்தன் இங்கு உங்களிடம் வந்தபோது, அவரால் உள்ளே வரமுடியவில்லை; எனவே உங்கள் மகள் கனிமொழியிடம் அழைப்பிதழை அளித்தார்; இங்கு வந்த போதும் உங்கள் மகளிடம் போனபோதும் நான் அவருடன் இருந்தேன்" எனச் சச்சி கூறினார்.

சச்சிதானந்தன், என்னை முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தார். "இவர் கவிஞர் அண்ணாகண்ணன். திருவாரூரில் நீங்கள் படித்த பள்ளியில் படித்தவர்" என்றார். "அப்படியா? அண்ணாகண்ணனா உங்கள் பெயர்?" என என்னைப் பார்த்து விசாரித்தார். "ஆம், வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான் ஐந்து ஆண்டுகள் படித்தேன்" என்று தெரிவித்தேன்.

தமிழக முதல்வருடன் 10 படங்கள்

"இணையத்தில் குறிப்பிடத் தகுந்த வகையில் பணியாற்றி வருகிறார். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்" என்றார் சச்சிதானந்தன்.

உடனே அடுத்த இணைய மாநாட்டினையும் உலகச் செம்மொழி மாநாட்டுடன் நடத்துவதாக அறிவித்திருப்பதை முதல்வர் குறிப்பிட்டார். "ஆம், அந்த அறிவிப்பை நானும் படித்தேன். நல்ல முயற்சி" என்றேன்.

நான் எனது தமிழில் இணைய இதழ்கள், உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு ஆகிய நூல்களை அளித்தேன். இக்காலத் தமிழின் தேவைகள் என்னென்ன? என்ற கட்டுரை, சென்னை டைஜஸ்ட் வார இதழில் வெளியாகியிருந்தது. அதன் படியினையும் வழங்கினேன். தமிழக அரசின் தளங்களை ஒருங்குறிக்கு (யுனிகோடுக்கு) மாற்ற வேண்டும் என்றும் கோரினேன். செய்வோம் எனப் பொன்முடி தலையசைத்தார்.

அங்கு அமைச்சர்கள் பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர். "இவர்தான் உயர்கல்வி அமைச்சர்" எனப் பொன்முடியை எனக்கு அறிமுகம் செய்வித்த தமிழக முதல்வர், அவரை என்னுடன் தொடர்பு வைத்துக்கொள்ளுமாறு கூறினார். பொன்முடி, "உலகச் செம்மொழி மாநாட்டில் ஒரு கட்டுரை வாசியுங்கள்" என்று என்னிடம் கூறினார். என் முகவரி அட்டையையும் பெற்றுக்கொண்டார்.

முதல் மாடியிலிருந்து கீழே தரைத் தளத்திற்கு நாங்கள் வந்தோம். எம்மை அடுத்து வந்த அமைச்சர் பொன்முடி, "உங்களைப் பார்த்த பின் இன்று தலைவர் மிகவும் உற்சாகத்துடன் இருக்கிறார்" என எங்களிடம் தெரிவித்தார்.

முதல்வர் உதவியாளர்களின் கணினியில் ஒருங்குறி எழுத்துகள் தெரியவில்லை என்ற சிக்கல் இருந்தது. சச்சிதானந்தனின் குறிப்பின்படி என்எச்எம் ரைட்டர், என்எச்எம் கன்வர்ட்டர் (NHM Writer, NHM Converter) ஆகியவற்றைத் தரவிறக்கி, அந்தக் கணினியில் நிறுவினேன்.

அவ்வமயம், தரைத்தளம் வந்த முதல்வர், மீண்டும் சச்சிதானந்தனை அழைத்துக் கவிஞர் காசி ஆனந்தன் குறித்து விசாரித்தார். "அவர் உங்களை வந்து பார்ப்பார்" எனச் சச்சிதானந்தன் கூறினார்.

தமிழக முதல்வரில்லத்துள் நுழைந்தோம், பேசினோம் என்ற உணர்வு குறைவு; நன்றாகத் தெரிந்தவர் ஒருவர் இல்லம் சென்று வந்தோம் என்ற உணர்வே அதிகம். அங்கு எல்லோரும் எம்மீது அன்புடனும் பரிவுடனும் இயல்பாக நடந்துகொண்டனர்.

பொன்.மகாலிங்கம் தொடங்கிவைக்க, மறவன்புலவு சச்சிதானந்தன் அந்தக் கோரிக்கைகளுக்கு உருக் கொடுக்க, அமைச்சர்களின் அறிக்கைகள் சான்றாக, முதல்வரின் 100 கோடி நிதியுதவி அறிவிப்பு வெளியானது. இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு நல்ல வாய்ப்பு உண்டானதை எண்ணி, மகிழ்வுடன் விடை பெற்றோம்

Tuesday, October 27, 2009

காந்திய விழாவில் பங்கேற்றேன்


தோ.தெ.திருமலை நினைவு பரிசுகள் & விருதுகள் வழங்கும் விழா, சென்னை தி.நகர், தக்கர் பாபா வித்யாலயத்தில் 26.10.2009 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு, புகழ்மிகு காந்தியத் தலைவர் பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் தலைமை வகித்தார்; மாணவர்களுக்குப் பரிசுகளையும் வழங்கினார்.

காந்திய மாமணி தோ.தெ.திருமலை நினைவாக ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்குக் காந்தி தொடர்பான தேர்வுகளைக் காந்தி கல்வி மையம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு காந்தியின் 'சத்திய சோதனை' புத்தகத்தைத் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு அளித்தது. அதனைப் படித்தபின் மாணவர்களுக்கு 31.8.2009 அன்று அந்த நூல் தொடர்பான தேர்வினை நடத்தியது. அதில் 16,243 மாணவர்கள் கலந்துகொண்டனர். இவற்றுள் சிறப்பாகப் பதில்களை அளித்த 13 மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பெற்றன. இந்தப் போட்டிக்கு அதிக மாணவர்களை அனுப்பிய பள்ளிகளுக்கும் கேடயங்கள் வழங்கப்பெற்றன.இந்த நிகழ்வில் குறும்பட இயக்குநர் பி.சிவகுமார், தக்கர் பாபா வித்யாலயத்தின் செயலாளர் வி.கே.ஸ்தாணுநாதன் ஆகியோருடன் நானும் (அண்ணாகண்ணன்) கலந்துகொண்டேன்.

நான் என் உரையில், சத்தியத்தைப் பின்பற்றுவதில் காந்தி கொண்ட உறுதியை - பிடிவாதத்தை எடுத்துரைத்தேன். அவரது தோற்றமே எப்படி ஒரு செய்தியைச் சொல்கிறது என்பதைச் சுட்டிக் காட்டினேன். 21 நாள் தொடர்ச்சியான உண்ணாவிரதம் இருந்ததைப் போன்று ஒவ்வொரு முறையும் தம் உயிரைப் பணயம் வைத்து, சிக்கல்களைத் தீர்த்த தீரத்தைப் போற்றினேன். அவர் வழிகாட்டுதலை மீறி, மக்கள் வன்முறையில் ஈடுபட்ட போது, அதற்குத் தாமே பொறுப்பு ஏற்று, அதற்குத் தண்டனையாக 3 நாள் உண்ணாவிரதம் இருந்த உயர்ந்த தலைமைத்துவத்தைப் பாராட்டினேன். அவர் வலியுறுத்தியபடி இந்தியாவைப் பிரிக்காதிருந்தால், இன்றைய அநேக சிக்கல்களைத் தவிர்த்திருக்கலாம் என்பதையும் கோடிட்டுக் காட்டினேன்.

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், தீபாவளிப் பண்டிகையின்போது இரண்டே நாளில் ரூ.220 கோடிக்குத் தமிழ்நாட்டில் மது விற்பனை நிகழ்ந்து சாதனை படைக்கப்பட்டிருப்பது குறித்து, அவர் வேதனை தெரிவித்தார். காந்தியின் வழிகாட்டுதல்படி நடக்க வேண்டும் என்பதை அழுத்தமாக வலியுறுத்தினார்.

பி.சிவகுமார், காந்தி தொடர்பான தம் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த நிகழ்வுக்குக் காந்தி கல்வி மைய இயக்குநர் அ.அண்ணாமலை, தலைவர் என்.டி.இராதாகிருஷ்ணன், செயலாளர் எஸ்.பாண்டியன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

முந்தைய செய்தி: தோ.தெ.திருமலை நினைவு பரிசுகள் & விருதுகள் வழங்கும் விழா

இந்த நிகழ்வு தொடர்பான தினமணி, தினகரன் செய்திகளை இங்கே இணைத்துள்ளேன். அந்த இதழ்களுக்கு நன்றி.

Friday, October 23, 2009

தோ.தெ.திருமலை நினைவு பரிசுகள் & விருதுகள் வழங்கும் விழா

தோத்தாத்திரி தெய்வநாயகம் திருமலை என்பதன் சுருக்கமே, தோ.தெ.திருமலை (1921-1993); இவரை டி.டி.திருமலை என்றும் அழைப்பர். இவர், காந்தியத் தொண்டர். 1942இல் கல்லூரியில் படித்தபோது, காந்தியின் அழைப்பை ஏற்று, கல்லூரிப் படிப்பைத் துறந்து, 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் சேர்ந்தார். இந்திய விடுதலைக்குப் பிறகு, திருவில்லிபுத்தூர் நகராட்சியில் துணைத் தலைவராகச் சிறிது காலம் இருந்தார். பின்னர், மதுரையில் 1969இல் காந்திய தத்துவ பிரசாரகர் ஆக நியமிக்கப்பெற்றார். அப்போது காந்தியைப் பற்றிக் கற்பிக்கும் நோக்குடன், 'காந்தியின் வாழ்வும் வாக்கும்' என்ற தலைப்பிலான பாடங்களுடன் தொலைதூரக் கல்வி மையத்தைத் தொடங்கினார். டி.கே.சி., அ.சீ.ரா., ஜஸ்டிஸ் மகராஜன் உடன் தோ.தெ.திருமலை நெருங்கிப் பழகியவர்; காந்தி கல்வி நிலையப் பணிகளுடன் கலை - இலக்கியப் பணிகளையும் மேற்கொண்டு வந்த இவர், தம் 72ஆம் வயதில் மறைந்தார்.

இவர் நினைவாக ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்குக் காந்தி தொடர்பான தேர்வுகளைக் காந்தி கல்வி மையம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு காந்தியின் 'சத்திய சோதனை' புத்தகத்தைத் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு அளித்தது. அதனைப் படித்தபின் மாணவர்களுக்கு 31.8.2009 அன்று அந்த நூல் தொடர்பான தேர்வினை நடத்தியது. அதில் 16,243 மாணவர்கள் கலந்துகொண்டனர். இவற்றுள் சிறப்பாகப் பதில்களை அளித்த 13 மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பெறுகின்றன. இந்தப் போட்டிக்கு அதிக மாணவர்களை அனுப்பிய பள்ளிகளுக்கும் கேடயங்கள் வழங்கப்பெறுகின்றன.

தோ.தெ.திருமலை நினைவு பரிசுகள் & விருதுகள் வழங்கும் விழா, சென்னை தி.நகர், தக்கர் பாபா வித்யாலயத்தில் 26.10.2009 அன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்வுக்கு, புகழ்மிகு காந்தியத் தலைவர் பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தலைமை வகிக்கிறார்; மாணவர்களுக்குப் பரிசுகளையும் வழங்குகிறார்.

இந்த நிகழ்வில் குறும்பட இயக்குநர் பி.சிவகுமார், தக்கர் பாபா வித்யாலயத்தின் செயலாளர் வி.கே.ஸ்தாணுநாதன், சென்னை ஆன்லைன் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியர் அண்ணாகண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

இந்த நிகழ்வுக்குக் காந்தி கல்வி மைய இயக்குநர் அ.அண்ணாமலை, தலைவர் என்.டி.இராதாகிருஷ்ணன், செயலாளர் எஸ்.பாண்டியன் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.

விழா அழைப்பிதழ்

Gandhi,T.D.Tirumalai

பரிசு பெறும் மாணவர்களும் பள்ளிகளும்

Gandhi,T.D.Tirumalai

அனைவரும் வருக.

Monday, October 12, 2009

உறவுகள் வளர்க்கும் உன்னத இணையம்

எனது தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் (2009 அக்.5 முதல் 11 வரை) 20 இடுகைகளை இட்டுள்ளேன். இந்த ஒரு வார காலத்தில் மூவாயிரத்திற்கு மேலானோர் வந்துள்ளதாகக் கூகிள் ஆட்சென்ஸ் கூறுகிறது. இந்த இடுகைகளுக்கு இதுவரை சுமார் 70 பின்னூட்டங்கள் வந்துள்ளன.

என் வலைப்பதிவுகளில் அவ்வப்போது எழுதி வந்தேன். வேறு இணைய தளங்களில் எழுதியதை என் வலைப்பதிவில் பல முறைகள் மீண்டும் பதிந்துள்ளேன். புதிது புதிதாக எழுதுவதற்கு ஒரு புறத் தூண்டுதல் தேவையாக இருந்தது.

இந்நிலையில் தமிழ்மணத்தின் நட்சத்திர அழைப்பு வந்தது, எனக்குள் மீண்டும் எழுதும் ஆர்வத்தைத் தூண்டியது. ஏற்கெனவே எழுதியதை எடுத்து மீண்டும் வெளியிடாமல் புதிதாக எழுத வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த இடுகைகளை எழுதினேன்.

எனக்குள் ஊறும் யோசனைகள் பலவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுள்ளேன். இப்படியான ஒரு முகம் எனக்கு உண்டு என்பதைப் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆயினும் சிபியில் பணியாற்றிய போது, தினந்தோறும் ஏதேனும் புதிய புதிய யோசனைகளை அங்குள்ள நண்பர்கள் சிலரிடம் தெரிவித்தது உண்டு. என் தொழில், துறை காரணமாக இந்தச் சிந்தனைகளைக் கண்டுபிடிப்புகளாக மாற்றும்வண்ணம் இவற்றில் முழு நேரத்தையும் செலவிடுவது கடினம். இந்த யோசனைகள் யாரையாவது உசுப்பிவிடும். அவர், இந்தச் சிந்தனையின் தொடர்ச்சியாக அந்தப் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்துவார் என நம்புகிறேன்.

என்னை இந்த வார நட்சத்திரமாக்கிய தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நன்றிகள். என்னை வாழ்த்தியும் என் இடுகைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்தும் பின்னூட்டங்கள் இட்ட அனைவருக்கும் நன்றி. தனி அஞ்சலிலும் மின் அரட்டையிலும் தொலைபேசியிலும் இந்த இடுகைகள் குறித்து மிகுந்த ஆர்வத்துடன் கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி. இன்னும் எழுதவேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன. உரிய தருணத்தில் அவற்றையும் பதிவேன்.

திருவாரூரில் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்னுடன் 10ஆம் வகுப்புப் படித்த ஹாஜா என்பவர், கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு , தமிழ்மணத்தில் என்னைப் பார்த்துவிட்டு, 09.10.2009 அன்று சிங்கப்பூரிலிருந்து தொடர்புகொண்டார். இதே போல் இதே பள்ளியில் என்னுடன் 11, 12 வகுப்புகள் படித்த ரவிசங்கர் என்பவர், என் ஏதோ ஒரு வலைப்பதிவைப் பார்த்துவிட்டு, 2006இல் சைப்ரஸ் நாட்டிலிருந்து தொடர்புகொண்டார். அவர் மூலமாக அதே வகுப்பில் உடன் படித்த பிரேம் என்ற நண்பருடனும் பேச வாய்ப்பு கிட்டியது. இணையத்தின் இந்த வலிமை, எண்ணி எண்ணிப் போற்றத்தக்கது.

பழைய நண்பர்கள் மட்டுமின்றி, இணையத்தின் மூலம் புதிய நண்பர்களும் கிடைப்பார்கள். புதிய கூட்டாளிகள் வாய்ப்பார்கள். புதிய உறவுகள் கிட்டும். யாருக்குத் தெரியும்? என் வாழ்க்கைத் துணைவியும் இங்கே கிட்டலாம். அன்போடும் பண்போடும் புன்னகை பூத்த முகத்தோடும் சைவ உணவினராகவும் உள்ள அவரை நீங்கள் எங்காவது பார்த்தால் எனக்குத் தனி மடலில் தெரிவியுங்கள் :-)

Sunday, October 11, 2009

யோசனை 6 - நடக்க நடக்க மின்சாரம்

(அகவழி 6)

நாம் 50 கிலோவோ, 100 கிலோவோ எவ்வளவு எடை இருந்தாலும் அதைத் தாங்குபவை நம் கால்கள். அந்தக் கால்களைத் தாங்குபவை காலணிகள். எனவே உடல் அழுத்தத்தின் மூலம் கிட்டும் ஆற்றலை மின் ஆற்றலாக மாற்ற முடியும் என்பது என் நம்பிக்கை. எனவே காலணிகளில் சில திருத்தங்களைச் செய்தால் அவற்றின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பது என் யோசனை.

இந்தப் பிரத்யேக காலணிகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தைச் சேகரிக்கவும் நான் யோசனை தெரிவித்தேன். அலுவலகத்திலும் வீட்டிலும் வாசலில் உள்ள மிதியடியில் இதற்கான அமைப்பினை உருவாக்க வேண்டியது. காலணியை அணிந்தவர், அந்த மிதியடியில் காலை வைத்துத் தேய்க்கும்போது அதிலிருக்கும் மின்சாரத்தை மிதியடி உள்ளிழுத்துக்கொள்ளும். பின்னர் அந்த மிதியடியிலிருந்து அது மின்கலனுக்கு மாறும். இதன் மூலம் அலுவலகங்களில் மின்சாரத்திற்கு ஆகும் செலவினைக் கட்டுப்படுத்த முடியும். இதற்கு ஏற்ற வகையில் அலுவலகமே ஊழியர்களுக்கு இத்தகைய காலணிகளை வழங்கலாம்.

இதனை 2008ஆம் ஆண்டில் சிஃபியில் பணியாற்றிய போது சிந்தித்தேன். உடன் பணியாற்றும் நண்பர்களிடத்திலும் விவரித்தேன். அவர்களும் மகிழ்ந்து பாராட்டினார்கள். ஆனால் அடுத்த ஓரிரு மாதங்களில் இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்பட அனைத்து முன்னணி நாளிதழ்களிலும் ஒரு செய்தி வெளியானது. நடப்பதன் மூலம் கிட்டும் ஆற்றலினால் மின்சாரம் தயாரிக்கும் காலணிகளை ஜப்பானில் ஒருவர் உருவாக்கி இருப்பதாக அந்தச் செய்தி கூறியது. உங்கள் யோசனையை ஒருவர் கருவியாக மாற்றிவிட்டார் என அவர்கள் தெரிவித்தார்கள்.

அந்தச் செய்தி இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

http://news.shoe-shop.com/news/2288/japan-developing-electricity-generating-shoes

என் யோசனையிலிருந்து அவர் செய்த ஒரே திருத்தம், காலணிக்குள் தண்ணீரை வைத்து, அழுத்தத்தின் மூலம் ஒரு சிறு டர்பைனைச் சுழலச் செய்து, அதன் மூலம் மின்சாரம் உருவாக்கியதே. இதன் மூலம் 1.2 வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். அதைக் கொண்டு ஒரு ஐபாடினை இயக்க முடியும் என அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாகப் பல்வேறு கோணங்களில் நான் யோசித்திருக்கிறேன். காலணிகள் மூலமாக மின்சாரம் உருவாக்குவது அதில் ஒன்று. இன்னொன்று, உருவாக்கிய பிரத்யேக தளங்களில் நடப்பதன் மூலமும் இதே போன்று அழுத்தத்திலிருந்து மின்சாரத்தினை உருவாக்க முடியும்.

உதாரணத்திற்கு நகரில் பல்வேறு பூங்காக்கள் உள்ளன. ஒவ்வொரு பூங்காவிலும் உள்ள நடைபாதைகளில் காலையிலும் மாலையிலும் நூற்றுக்கணக்கானோர் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள். இந்த நடைபாதையைப் பிரத்யேகமாக உருவாக்கினால், காலிலிருந்து கிடைக்கும் அழுத்தத்தின் மூலம் மின்சாரத்தை உருவாக்க முடியும்.

பூங்காக்களில் மட்டுமின்றி, கடற்கரைகளிலும் இத்தகைய சிறப்பு நடைபாதைகளை உருவாக்கலாம். சென்னை, தி.நகர், ரங்கநாதன் தெரு போன்ற நெரிசல் மிகுந்த சாலைகளிலும் இவற்றை உருவாக்கலாம். Pedestrian Crossing எனப்படும் சாலைகளின் பாதசாரிகள் கடக்கிற பகுதிகளிலும் இவ்வாறு அமைக்கலாம். கட்டடங்களின் படிக்கட்டுகளை இவ்வாறு அமைக்கலாம். இதன் மூலம் உறுதியாக மின்சாரத்தினை உருவாக்க முடியும் என்பது என் நம்பிக்கை.

இது, ஒரு வகையில் காந்திய வழிமுறையாகும். கைராட்டையைக் கொண்டு தமக்குத் தேவையான ஆடையை ஒருவர் உருவாக்கிக்கொள்ள முடியும் என அவர் செய்து காட்டினார். அதே போன்று நடப்பதன் மூலம் ஒருவர் தமக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என நான் சிந்திக்கிறேன்.

காலணிகள், நடைபாதைகளில் இவற்றைச் செய்ய முடியுமானால், இருக்கைகளில் நாம் அமர்கிறோமே, அவற்றிலிருந்தும் மின்சாரத்தை உருவாக்க முடியுமா? ஆம், நிச்சயமாக முடியும். ஆனால், நம்மை விடப் பலரும் வேகமாக இருக்கிறார்கள். பாருங்கள்:

Shock-absorbable electricity-producing apparatus

இணையத்தில் முத்திரை பதிக்கும் தமிழர்கள்

2008ஆம் ஆண்டு தமிழ் பிரவாகம் இணையக் குழுமத்தின் ஆண்டு விழாவில் அப்துல் ஜப்பாருடன் இணைந்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 'இணையத்தில் முத்திரை பதிக்கும் தமிழர்கள்' என்ற பொருளில் உரையாற்றினேன். அந்தத் தொகுப்பில் பின்னர் மேலும் சிலரையும் சேர்த்தேன். அந்த உரையின் சுருக்க வடிவம் இங்கே:

வரலாற்றில் நாம் வாழும் இந்தக் காலமானது, தமிழுக்கு மிகப் பெரிய பொற்காலம் என்பேன். இது வரையான காலக்கட்டத்தில் இப்போதுதான் நான்கில் மூன்று பேர் எழுத்தறிவு பெற்றவர்களாய் இருக்கிறார்கள். தமிழ்த் தரவுகள் வேறு எப்போதையும் விட இப்போதுதான் மிக அதிகமாகச் சேமிக்கப்படுகின்றன. அச்சிதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையம், திரைப்படம்.... என இவ்வளவு அதிகமான ஊடகப் பரவல், வரலாற்றில் இப்போதுதான் முதன்முதலில் நிகழ்ந்துள்ளது. நுணுக்கமான பற்பல துறைகள் தோன்றியுள்ளன. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியினால் இலட்சக்கணக்கான புதிய கருவிகள் பிறந்துள்ளன. இவற்றினால், தமிழர்கள் தங்கள் ஆளுமையை உலகம் முழுவதும் நிலைநிறுத்தி உள்ளார்கள்.

இந்தப் பின்னணியில் இணையத்திலும் தமிழர்கள் முத்திரை பதித்து வருகிறார்கள். அவர்களுள் சிலரை இங்கு எடுத்துக் காட்டுவதில் மகிழ்கிறேன்.

தமிழில் தனித்துவமான முதல் முயற்சிகள்:

* நா.கோவிந்தசாமி (இணையத்தில் தமிழைக் கொணர்ந்தவர்)
* கிருஷ்ணமூர்த்தி (பொன்விழி ஓசிஆர், பொன்பென் - கையெழுத்து உணரி உள்ளிட்ட கருவிகள்)
* டி.நாகராஜன் (எழுத்திலிருந்து குரலுக்கு மென்பொருள்)
* சந்தோஷ் தொட்டிங்கல் (எழுத்திலிருந்து குரலுக்கு மென்பொருள்)
* ஏ.ஜி.ராமகிருஷ்ணன் (எழுத்திலிருந்து குரலுக்கு மென்பொருள்)
* நாகராஜன் (இணையவழியில் இலவசக் கல்வி)
* பத்ரி சேஷாத்ரி (ஒலி நூல்கள் உருவாக்கியவர்)
* காசி ஆறுமுகம் (தமிழ்மணம்.காம் - திரட்டி)
* கணேஷ்ராம் (செல்பேசியில் நூலகம், இதர செல்பேசிச் சேவைகள்)
* கணேஷ் பத்மநாபன் (http://www.voicesnap.com)
* விஜயதீபன் (தாயம், பல்லாங்குழி ஆகியவற்றைக் கணினியில் விளையாடும் வழியில் ஆக்கியவர்)

தமிழில் மின்னாக்கம்:

* கல்யாணசுந்தரம் குழுவினர் (மதுரைத் திட்டம்)
* பொள்ளாச்சி நசன் (1000க்கும் மேற்பட்ட மின்னூல்கள் ஆக்கியவர் - ஆங்கிலம் வழி தமிழ் கற்பிப்பவர்)
* நூலகம்.ஆர்க் குழுவினர் (http://noolaham.org)
* மறவன்புலவு க.சச்சிதனந்தன் (தேவாரம்.ஆர்க், தமிழ்நூல்.காம்)
* நா.கண்ணன் குழுவினர் (தமிழ் மரபு அறக்கட்டளை)
* கோ.சந்திரசேகரன் (சென்னை லைப்ரரி.காம் - தமிழ் நூல்கள் மின்னாக்கம்)
* 'விருபா' குமரேசன் (http://www.viruba.com)

தமிழில் எழுதி, எழுத்துரு மாற்றிகள்:

* சுரதா யாழ்வாணன் (பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றி)
* முத்தெழிலன் நெடுமாறன் (அஞ்சல் எழுதி)
* விஸ்வநாதன் (அழகி - ஆங்கில ஒலிபெயர்ப்புவழி தமிழ்த் தட்டச்சு)
* முகுந்தராஜ் (இ-கலப்பையில் பங்களித்தவர்)
* ஹாய் கோபி (எழுத்துரு மாற்றி, பல்வகை தமிழ் மென்பொருள்கள்)
* சர்மா (ஃபிரெஞ்சு - தமிழ் அகராதி, பல்வகை தமிழ் மென்பொருள்கள் )
* நாகராஜன் (என் எச் எம் எழுதி, எழுத்துரு மாற்றி)
* முத்து நெடுமாறன் (செல்லினம்)

தமிழில் ஒருங்குறி எழுத்துருக்கள்

'தேனீ' உமர்தம்பி மற்றும் பலர்

தமிழில் பிழை திருத்திகள்

* தெய்வசுந்தரம் (மென்தமிழ்ச் சொல்லாளர்)
* நீச்சல்காரன் (நாவி, வாணி)

கணிணித் தமிழ் எழுத்தாளர்கள்

* ஆண்டோ பீட்டர்
* காம்கேர் புவனேஸ்வரி
* மு.சிவலிங்கம்
* 'தமிழ் கம்ப்யூட்டர்' ஜெயகிருஷ்ணன்
* நித்யா ஸ்ரீநிவாசன்

தமிழ் இணையப் பயிலரங்குகள்

* மு.இளங்கோவன்
* துரை.மணிகண்டன்

கட்டற்ற மென்பொருள்கள்

* ஆமாச்சு (கட்டற்ற மென்பொருள்கள்)
* ஸ்ரீநிவாசன் (Freetamilebooks)

விக்கிப்பீடியா

இ. மயூரநாதன்
* மு.இரவிசங்கர்
* செ.இரா.செல்வக்குமார்
சுந்தர்
நற்கீரன்
 சிவகுமார்
உமாபதி
கனக சிறீதரன்
குறும்பன்
கார்த்திக்பாலா
டானியேல் பாண்டியன்
தேனி. எம். சுப்பிரமணி
அருண்
செல்வம்
பரிதிமதி
சந்தோஷ்குரு
கலாநிதி
மயூரேசன்
மு. மயூரன்
கோபி
நிரஞ்சன் சக்திவேல்
டெரென்ஸ்
சந்திரவதனா
வினோத்
சிந்து
விஜய ஷண்முகம்
பாலாஜி
வைகுண்டராஜா
பாலச்சந்திரன்
வேர்க்லோரம்

தொழில்நுட்ப நிறுவனங்கள் / அமைப்புகள்

* கூகுள்
* அண்ணா பல்கலை
* ஐஐடி, சென்னை
* மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை
* உத்தமம்
* கணித்தமிழ்ச் சங்கம்


அரசு சார்ந்து இயங்குபவர்கள்:

* எல்காட் குழுவினர் (http://www.elcot.in)
* தமிழ் இணையப் பல்கலைக் குழுவினர் (http://tamilvu.org)
* தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை (http://www.textbooksonline.tn.nic.in)
* தமிழகச் சுற்றுலாத் துறை (http://www.tamilnadutourism.org/virtualtour/index.html)
* தமிழகப் பத்திரப் பதிவுத் துறை (http://www.tnreginet.net)... உள்ளிட்ட துறைகள்.

தனி நபர்களுடன் நிறுவனங்களையும் அரசுத் துறைகளையும் குறிப்பிடக் காரணம், அவற்றின் முயற்சிகள், வலுவான பயன்களை அளித்துள்ளமையாலேயே.

மேலும் பலரும் இருப்பினும் என் நினைவில் இப்போது உள்ள சிலரை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன். தமிழ் இணையத்தில் இயங்கும் பலரும் ஏதோ ஒரு வகையில் ஆக்கபூர்வமான பங்களிப்புகளை அளித்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் நான் பெரிதும் போற்றுகிறேன். வாழ்த்துகிறேன். நன்றி பாராட்டுகிறேன். அவர்களின் முயற்சிகளால் தமிழ், பல மடங்குகள் முன்னேறியுள்ளது என உறுதியாக நம்புகிறேன். இந்த முயற்சிகள் நீளட்டும். இவர்களைப் பார்த்து மேலும் பலரும் இந்தத் திசையில் பயணிக்கட்டும். ஒவ்வொருவரிடமிருந்தும் புதுமைகள் உதிக்கட்டும்.

இவர்களின் உதவியோடு, 100% எழுத்தறிவு; கல்வியில் உயரிய நிலை; பண்பாட்டில் செழுமை, தகவல் தொடர்பில் முதலிடம், அறிவியல் - நுட்பங்களில் அகிலம் வியக்கும் புத்தாக்கம், வரலாற்றுப் பதிவுகளில் கூர்மை, வாழ்க்கைத் தரத்தில் உன்னத நிலை, பன்னாட்டு உறவில் புதிய அத்தியாயம், மக்களாட்சிப் பண்புகளை மதிக்கும் பக்குவம்.... ஆகிய இலக்குகளை விரைவில் எட்டுவோம்.

பிறந்த நாள் கொண்டாடுவது எப்படி?


தமிழ்நாட்டில் பிறந்த நாள் கொண்டாடுவது, மெழுகுவத்திகளை அணைத்து, கேக் வெட்டுவதுதான் என்பது போல் ஒரு பொதுவான நியதி ஆகிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. கடந்த பல ஆண்டுகளாக நான் கண்டுவரும் ஒரு காட்சி இது. கொஞ்சம்கூட மாறவில்லை. ஒவ்வொரு பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் கொண்டாடுபவர் மாறுவார். அவரின் புத்தாடை மாறியிருக்கும். ஆனால் இந்த கேக் வெட்டுவது மட்டும் மாறாது. அந்த கேக்கில் அவரின் பெயர் வரையப்பட்டிருக்கும். அதுவும் ஆங்கிலத்தில். கேக் வெட்டும்போது Happy birth day to you என்ற பாடலைப் பாடுவார்கள். மெழுகுவத்தியை அணைப்பார். கத்தியை எடுத்து கேக்கை வெட்டுவார். அதைத் தன் அன்புக்கு உரியவருக்கு ஊட்டுவார். அல்லது சிலர் அவருக்கு ஊட்டுவார்கள்.

நிறுவனங்களில் மட்டுமின்றி, கிறிஸ்தவ வீடுகளில் மட்டுமின்றி, சாமானியர் வீடுகளிலும் இந்த நடைமுறை புகுந்துள்ளது. பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஒருவரை அழைக்கிறீர்கள் என்றால், அவர் கேட்பது 'எத்தனை மணிக்கு கேக் வெட்டுறீங்க?' என்பதைத்தான். 'நேத்து எங்க வீட்டுப் பையனுக்குப் பிறந்த நாள் கொண்டாடினோம்' என யாரிடமாவது சொன்னால், உடனே, 'அப்படியா, கேக் எல்லாம் வெட்டினீங்களா?' என்றுதான் கேள்விகள் அமைகின்றன. தமிழரின் பிறந்த நாள் கொண்டாட்டம், கேக் வெட்டுவதுதானா?

முன்பு வீடுகளில் இனிப்பு தயாரித்து வழங்குவர்; பாயசம் செய்து பரிமாறுவர்; பெரியவர்களிடம் ஆசி பெறுவர்; ஆலயங்களுக்குச் செல்வர்; அன்ன தானம் செய்வர்; பெரிய செல்வந்தர்கள் வேறு பல தானங்களும் செய்வர்; ஏதேனும் திரையரங்குக்கோ, சுற்றுலாத் தலத்திற்கோ செல்லுவர்; அன்பளிப்புகள் வழங்குவர்.

ஆனால், இப்போது பெருகியுள்ள இந்த கேக் கலாசாரத்தில் மது அருந்துவதும் புகை பிடிப்பதும் ஆபாச நடனங்களும் பெரிய உணவு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று விருந்து அளிப்பதுமாக உடல்நலக் குறைவும் ஆடம்பரமும் காலூன்றி வருகிறது. 'என்ன மச்சி, பார்ட்டி எப்போ?' எனக் கேட்கிற நண்பர்கள், 'பார்ட்டி'யின் போது முட்ட முட்டக் குடித்துவிட்டு, அத்துடனே வாகனத்தை ஓட்டி, விபத்தில் உறுப்புகளையும் உயிரையும் இழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

கேக் வெட்டியபின் சுற்றியுள்ள நண்பர்கள், அந்த கேக்கை எடுத்து, பிறந்த நாளுக்கு உரியவரின் முகத்திலும் தலையிலும் தேய்த்துவிடுகிறார்கள். இப்படித்தான் தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்களாம். எவ்வளவோ ஏழைகள் பசித்திருக்க, கடவுள் சிலைக்குப் பாலபிஷேகம் செய்வதற்கும் இதற்கும் வேறுபாடு இல்லை. உணவுப் பொருளை எந்த வடிவில் வீணடித்தாலும் அது கண்டிக்கத்தக்கதே.

காதல் ஜோடிகள், ஒருவர் முகத்தில் இன்னொருவர் கேக்கைத் தடவி, பின்னர் தங்கள் நாவால் அதைத் துடைத்து உண்பது என்பதை என்னால் ஒரு வகையில் புரிந்துகொள்ள முடிகிறது. அதில் உள்ள பயனே, இன்பமே வேறு. இப்படி நண்பர்கள் கேக்கைத் தடவிவிடுவதால் என்ன பயன்? சிலர், சட்டையிலும் தேய்த்து விடுகிறார்கள். அதைத் தூய்மைப்படுத்துவது இன்னொரு சிக்கல்.

வெகு சிலரே அநாதை இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவற்றுக்குச் சென்று அவர்களுக்கு இனிப்பு வழங்குகிறார்கள். ஒரு பொழுது உணவை வழங்குகிறார்கள். அல்லது அதற்கான செலவை ஏற்றுக்கொள்கிறார்கள். இன்னும் சிலர், மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை, வேலை வாய்ப்புப் பயிற்சி, தொழிற்கருவிகள் வழங்குதல்.... எனப் பல நற்பணிகளையும் ஆற்றுகிறார்கள். நம்மால் முடிந்த வரை, இப்படி பிறந்த நாள்களைக் கொண்டாடினால், நல் உள்ளங்கள் மகிழ்ந்து வாழ்த்துமே.

==========================
படத்திற்கு நன்றி: http://www.theinsider.com

விபேகேஷ்: இணையவழி வர்த்தகத்தில் ஒரு புதிய முயற்சி


ஒரு பொருளை வாங்கும்போது அல்லது சேவையைப் பெறும்போது நாம் செலுத்திய தொகையில் ஒரு பகுதியை நமக்கே திரும்பத் தருகிறார்கள். விபேகேஷ் (http://www.vpaycash.com) இணையதளத்தில்தான் இந்தப் புதுமை. இந்த மொத்த திட்டமும் இணையம் வழி பணம் செலுத்திப் பொருள் வாங்கும் வாடிக்கையாளருக்கு கமிஷன் தொகையைத் திருப்பி அளிப்பதை அடிப்படையாகக் கொண்டது.

2007இல் இணையம் வழி வர்த்தகம், ரூ.10 ஆயிரம் கோடிக்கும் மேல் நிகழ்ந்துள்ளது. இதில் போக்குவரத்துக்கு மட்டும் ரூ. 7,040 கோடி வர்த்தகம் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள தொகை, இதர வகைகளில் செலவிடப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையைப் பொறுத்த அளவில் 6% மதிப்பிலான பணத்தை கமிஷன் தொகையாகத் திரும்பப் பெற முடியும். அந்த வகையில் விபேகேஷ் (Vpaycash) மூலம் இந்த வர்த்தகம் நடைபெற்றால் ரூ.422.4 கோடி ரூபாய்களை வாடிக்கையாளரால் திரும்பப் பெற முடியும். இதர துறைகளில் சராசரியாக 10% மதிப்பிலான பணத்தைக் கமிஷன் தொகையாகத் திரும்பப் பெற முடியும். அந்த வகையில் ரூ.300 கோடியைத் திரும்பப் பெறும் வாய்ப்பு உள்ளது. ஆக மொத்தம் ஆண்டுக்கு ரூ.700 கோடிக்கும் மேலான தொகையைத் திரும்பப் பெற வாய்ப்புள்ளது.

விபேகேஷ் (Vpaycash) இணையதளம், இந்தியாவிலும் இங்கிலாந்திலும் உள்ள நிறுவனங்களை முதலில் தம் தளத்தில் சேர்த்து வருகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 300 இணைய வழி வர்த்தக நிறுவனங்கள், விபேகேஷின் பட்டியலில் உள்ளன. ரீடிஃப் ஷாப்பிங், ஜெட் ஏர்வேஸ், ஷாப்பர்ஸ் ஸ்டாப், யாத்ரா, மேக் மை டிரிப், சூரத் டையமண்ட்ஸ், இந்தியா டைம்ஸ், 10பைசா.காம், A1Books India, Travelocity, Travelguru, Bharti Airtel Ltd, Cleartrip, ICICI Lombard Motor Insurance, Indiavarta.com, Kotak Mahindra Bank Ltd, Monginis Foods Private Limited, Monster India, Tata Sky, yourbillbuddy.com, Big Flix, TopperLearning உள்ளிட்ட நிறுவனங்களின் சேவையை விபேகேஷ் மூலம் பெறலாம். மேலும் பலரையும் இணைக்க முயன்று வரும் விபேகேஷ் (Vpaycash), 2009, ஜூன் 27 அன்று தன் சேவையைத் தொடங்கியது.

விபேகேஷ், வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு பணத்தைத் திரும்பத் தருகிறது?

இணையதள வர்த்தக நிறுவனங்களுக்கு விபேகேஷ் (Vpaycash) மூலம், வாடிக்கையாளரின் வரத்து அதிகரிக்கும். இந்த வாடிக்கையாளர் வரத்துக்காக வர்த்தக நிறுவனங்கள் கமிஷன் தொகை அளிக்கும். அந்த கமிஷன் தொகை முழுவதையும் (100%) விபேகேஷ் (Vpaycash), வாடிக்கையாளருக்கே திருப்பி அளித்துவிடும்.

இந்தக் கமிஷன் தொகையை ஈட்ட, வாடிக்கையாளர் விபேகேஷ் (http://www.vpaycash.com) இணையதளத்தில் உறுப்பினராகச் சேர வேண்டும். அதன் பிறகு இணையதளத்தில் அவர் பெயரில் உள்நுழைந்து அங்கு பட்டியலிடப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்களின் பெயரைச் சொடுக்கி, பொருளை / சேவையைப் பெற வேண்டும். விபேகேஷ் (Vpaycash) இணையதளத்தில் உறுப்பினராகச் சேருவதற்குக் கட்டணம் எதுவும் இல்லை.

ஆண்டிற்கு ஒரு முறை விபேகேஷ் (Vpaycash) ரூ.499/- மட்டும் சேவைக் கட்டணமாக, வாடிக்கையாளர் சம்பாதித்த தொகையிலிருந்து எடுத்துக்கொள்கிறது. மீதித் தொகையை அவரது வங்கியில் உள்ள சேமிப்புக் கணக்கில், ரிசர்வ் வங்கி பரிந்துரைக்கும் NEFT Transfer மூலம் அல்லது காசோலை அல்லது Paypal, இதில் வாடிக்கையாளர் எந்த வகையை விரும்புகிறாரோ அந்த வகையில் அவருக்குக் கொடுக்கப்படுகிறது.

வாடிக்கையாளர் ஆண்டு முழுவதும் எந்தத் தொகையையுமே இணையதள வழியாகச் சம்பாதிக்கவில்லை என்றால் அவர் விபேகேஷூக்கு (Vpaycash) எந்த வகையிலுமே பணம் செலுத்த வேண்டியதில்லை. இந்த வசதியின் காரணமாக, வருவாய் ஈட்டினால் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். விபேகேஷ் (Vpaycash), தனக்கு வரும் 100% கமிஷன் தொகையையும் வாடிக்கையாளருக்கே திருப்பி அளிக்கிறது. இதில் பணம் ஈட்டக்கூடிய மறைமுக வருவாய் வாய்ப்பு ஏதும் இல்லை என்பதால் தான் இந்தச் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்கிறார் இந்தத் தளத்தைத் தொடங்கியுள்ள ந. சங்கர்.

இணைய வாசி ந. சங்கர், இலண்டனில் வசிக்கும் இந்தியர். இவர், விபேகேஷ் இணையதளத்தை நடத்தி வரும் ஈவே இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. இவர், இங்கிலாந்தில் இணையம்வழி பொருள்களையும் சேவைகளையும் பெற்று வந்தார். அவர், தாம் பெற்ற அனுபவத்தை இந்திய மக்களும் பெற வேண்டும் என விரும்பி, இந்தத் திட்டத்தைச் சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம் கார்ப்பரேட்டுகள் போன்ற பெருநிறுவனங்களும் வருவாய் ஈட்ட முடியும். இதன் மூலம் நிறுவனங்கள் தங்கள் இணையவழிச் செலவினத்தில் 10% தொகையைச் சேமிக்க முடியும். அத்துடன் ஏராளமான காகிதப் பணிகள், ஒப்பந்தப் புள்ளிகள் கோருதல், நுகர்வோரின் வேலைப் பளு ஆகியவற்றையும் சேமித்துக் கூடுதல் ஆதாயம் அடையலாம்.

விபேகேஷ் தொடக்க விழாவில் பேசிய சென்னை காவல் துறை இணை ஆணையர் மு.ரவி ஐ.பி.எஸ்., "விபேகேஷ் இணையதளத் திட்டத்தின்படி மாதம் 2 ஆயிரம் ரூபாய்க்குப் பொருள் வாங்குவோர் கூட மாதம் ரூ. 100 சேமிக்கலாம். வருடத்திற்கு ரூ.1200 சேமிக்கலாம். மிக அற்புதமான சேவை" என்று பாராட்டினார்.

இந்த இணையதளத்தைத் தொடங்கிவைத்த காவல் துறை டி.ஜி.பி., ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ்., பேசுகையில், "விபேகேஷ் மூலம் பணம், நேரம், சக்தி, எரிபொருள் ஆகியவை மிச்சமாகின்றன. ஷாப்பிங் செல்வதே ஒரு பொழுதுபோக்கு போல் ஆகி வருவதால், சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாநகரத்தை நிர்வகிக்கவும் பராமரிக்கவும் அரசுக்கு உள்ள சிரமங்களைக் குறைக்கவும் இத்தகைய இணையதளங்கள் உதவும்" என்றார்.

இந்தத் தளத்தைத் தொடங்கியுள்ள ந.சங்கரை அண்மையில் சென்னையில் சந்தித்து உரையாடினேன். இந்தத் தளத்தின் தொடக்க விழாவிலும் பங்கேற்றேன். சாதாரணமாகக் கடையில் சென்று ஒரு பொருளை வாங்குவதைவிட அதே பொருளை இணையத்தின்வழி பெற்றால், அதனால் 10% தொகை குறையுமானால், இது, இணையப் பயன்பாட்டை ஊக்குவிக்குமே! இணையவாசிகளே, இந்தத் தளத்தைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

புகைப்படங்களுக்குப் பெயர் இடும்போது கவனிக்க வேண்டியவை

இணையத்தில் நம் நடவடிக்கைகள் நாளும் பெருகி வருகின்றன. இணைய இதழ், வலைப் பதிவு, இணையக் குழுமம்.... எனப் பலவும் நடத்துகிறோம். இணைய இதழ்கள் வேண்டுமானால் நூற்றுக்கணக்கில் இருக்கலாம். ஆனால், வலைப்பதிவுகள் இன்றே 6134 என்ற எண்ணிக்கையில் உள்ளன. நாளை இன்னும் பல மடங்குகள் பெருகும். இவற்றில் இடப்படும் இடுகைகள் நாள்தோறும் பெருகியவண்ணம் உள்ளன. ஒவ்வோர் இடுகையுடனும் ஏதேனும் ஒரு புகைப்படத்தையாவது இணைக்க வேண்டும் எனப் பலரும் நினைக்கின்றனர். அதுவும் சரியே. ஆனால், புகைப்படங்களுக்குப் பெயர்கள் இடுவதில் நாம் இன்னும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

எணினி நிழற்படக் கருவியிலும் (டிஜிட்டல் கேமரா) செல்பேசியிலும் எடுத்த படங்களைக் கணினிக்கு மாற்றும்போது அவை பெரும்பாலும் ஒவ்வொரு படத்திற்கும் எண்களையே பெயராக அளிக்கின்றன. அவற்றைத் தம் வலைப்பதிவிலோ, இணைய இதழிலோ இணைக்கும் நண்பர்கள் அதே பெயருடன் இணைக்கிறார்கள்.

இன்னும் பலர், ஒரு திரைப்படம் அல்லது சம்பவத்தின் புகைப்படத் தொகுப்பு எனில் அதற்கு 1, 2, 3, 4, 5 என எண்களையே பெயராக அளிக்கின்றனர். அல்லது a, b, c, d, e எனப் பெயர் இடுகின்றனர். அல்லது இரண்டையும் கலந்தும் கொடுப்போர் உண்டு. இவ்வாறு அல்லாமல் ஏதோ ஒரு பெயர்தானே என நினைத்து, sdjbs எனக் கைக்கு வந்த பெயர்களைக் கொடுத்து விடுகிறார்கள்.

இவற்றால் தேடுபொறிகளில் படத்தைத் தேடும்போது இந்தப் படங்கள் கிடைக்காமல் போகின்றன.

சிலர் தம் பெயரையோ, ஊர்ப்பெயரையோ, பொருளின் பெயரையோ அடையாளப் பெயராகக் கொடுத்துவிடுகிறார்கள். அவர்களும் ஒரே கருவிலான ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை ஒரே பெயருடன்தான் அளிக்கிறார்கள். அதாவது ஊட்டிக்குப் போய்வந்த போது எடுத்த படங்கள் என்றால் ooty1, ooty2, ooty3 எனப் பெயர் வைக்கிறார்கள். இதனால் ஊட்டி என்று தேடினால் மட்டுமே அந்தப் படங்கள் கிட்டும். அதற்கு மாறாக, ooyt_botanical_garden, ooty_boating என்பது போல் ஒவ்வோர் இடம் குறித்தும் தெளிவாக, முழுமையாகப் பெயரிட்டால், தேடுபொறியில் சிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, பெயர்களை முழுமையாக, அதற்கு உரிய எழுத்துகளுடன் எழுத வேண்டும் என்பதையே. சிலர் ooyt_botanical_garden என்பதை ootybg எனச் சுருக்கி எழுதுகிறார்கள். கருணாநிதி என்பதையும் mk எனக் குறித்துவிடுவார்கள். இதனால் பெரிதும் பயனில்லை. mk என எவரேனும் தேடினால் அப்போதுதான் இந்தப் படம் சிக்கும். கருணாநிதியைப் பற்றி மட்டுமே 10 படங்களைத் தரவேற்றப் போகிறீர்கள் என்றால், karunanidhi_yellow_shawl, karunanidhi_sitting, karunanidhi_smile, karunanidhi_kanimozhi எனப் பெயர் இடுங்கள். புகைப்படத்தின் பெயர் நீளமாக இருப்பது குறித்துக் கவலை வேண்டாம். தெளிவாக, கூர்மையாக, சரியான உச்சரிப்புடன் இருக்கிறதா எனப் பார்த்தால் போதும்.

இன்னும் சில படங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருப்பார்கள். இத்தகைய படங்களில் முடிந்தால் நால்வர் படத்தையுமே அளிப்பது நல்லது. ஒரு படத்தில் கமல், ரஜினி, ஐஸ்வர்யா, ஷங்கர், அமிதாப் ஆகியோர் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் படத்திற்கு rajinikanth_Aishwaryarai_shankar_Amithab_bachchan எனப் பெயர் வைப்பது நல்லது. நான்கு பெயர்களில் யார் பெயரைத் தேடினாலும் இந்தப் படம் கிடைக்கும்.

இதில் இன்னொன்றையும் கவனிப்பது நல்லது. இப்போது ஷங்கர் என ஒரு படத்திற்குப் பெயரிடுவதைக் காட்டிலும் director_shankar என வைப்பது நல்லது. இதன் மூலம் அந்தப் படத்தினைத் தேடி எடுப்பது இன்னும் எளிதாகும்.

புகைப்படங்களுக்குக் குறிச் சொற்கள் அளிக்கும் வாய்ப்பு, Photo Bucket போன்ற சில இணைய தளங்களில் உள்ளது. முன்னணி இணைய இதழ்கள் பெரும்பாலும் Tags, Keywords ஆகியவற்றை அளித்துவிடுகின்றன. ஆயினும் இவற்றை முழுமையாகப் பயன்படுத்தாதவர்களே அதிகம்.

வலைப்பதிவில் படம் உள்ளிடும் முறைகளில் ஒன்றைக் கவனித்திருப்பீர்கள். நேரடியாக உங்கள் கணினியிலிருந்து தரவேற்றுவது ஒரு முறை. வேறு எங்காவது உள்ள படத்தை அதன் சுட்டியை மட்டும் எடுத்துவந்து URL என உள்ள இடத்தில் இட்டும் தரவேற்றலாம். இப்படிச் செய்யும்போது, அந்தப் படத்திற்கு, முன்பு இட்ட அதே பெயர், அதைப் பயன்படுத்தும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து செல்லும். நாளை நாம் இடும் படத்தையும் யாராவது இப்படி தம் பதிவில் தரவேற்றலாம். அப்போது நாம் இடும் இதே பெயர், அங்கும் இருக்கும். இதனால் நம் பொறுப்பு, கூடுகிறது.

இப்போது தமிழிலும் படங்களுக்குத் தலைப்பு இடலாம். அவ்வாறு இடும்போதும் முன்கூறியதைக் கவனத்தில் கொள்ளுவது நல்லது. தொடர்புடைய பெயரை முழுமையாக இடுங்கள். அந்தப் படத்தின் தனித்த அடையாளத்தை வெளிப்படுத்தும் வண்ணம் உங்கள் பெயரிடல் அமைய வேண்டும். தேடுநரின் உளப் போக்கினை உள்வாங்கி, தேடுபொறிகளுக்கு இசைவாக அவை இருத்தல் நலம்.

Saturday, October 10, 2009

யோசனை 5 - உயர்ந்த கட்டடங்களின் வெளிப்புறங்களைத் தூய்மையாக்குவது எப்படி?

(அகவழி 5)


சென்னையிலேயே 20 மாடிகள் கொண்ட கட்டடங்கள் வரத் தொடங்கிவிட்டன. மக்கள் நெருக்கடி மிகுந்த மாநகரங்களில் 100 மாடிகளைத் தாண்டியும் கட்டடம் கட்டுபவர்கள் உண்டு. கட்டடம் மட்டுமல்லாது, உயர் கோபுரங்கள் பலவும் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றின் கட்டுமானமே மிகப் பெரிய சவால்தான். எனினும் கட்டி முடித்த பின் இவற்றின் வெளிப்புறங்களைத் தூய்மையாக்குவது இன்னொரு சவால்.

பலரும் இப்போது செய்வது என்ன? அந்தக் கட்டங்களின் உச்சியிலிருந்து இரும்புக் கயிறு ஒன்றினைத் தொங்கவிடுவர்; அதில் ஓர் இருக்கையையும் அமைப்பர். அதில் தொழிலாளி ஒருவரை உட்காரவைப்பர்; அவர் கையில் வழிக்கும் குச்சி ஒன்றைத் தருவர்; அந்த இரும்புக் கயிற்றினைக் கொஞ்சம் கொஞ்சமாக இறக்குவர்; ஏற்றுவர்; ஒவ்வொரு தளமாக அவரும் தூய்மை செய்வார். முழு உயரத்தையும் தூய்மை ஆக்கியதும் அவர் தரையில் இறங்கலாம்; அல்லது மீண்டும் கயிற்றினை மேலே இழுத்துக்கொண்டு, அவர் கட்டட உச்சியில் போய் இறங்கலாம்.

அடுத்த வாய்ப்பு, ஒருவர் மட்டுமின்றி, பலர் ஒரே நேரத்தில் தூய்மைப் பணி புரியலாம். இதிலும் இரும்புக் கயிறு உண்டு. அதே நேரம் மனிதர் நிற்பதற்கு அகண்ட தளம் கொண்ட தொட்டி போன்ற அமைப்பு இணைக்கப்பட்டிருக்கும். இதிலிருந்தும் அதே மாதிரி வழிப்பானைத் தண்ணீரில் நனைத்துத் துடைக்க வேண்டும்.

இன்னொரு வாய்ப்பு, கிரேன் போன்ற மின் தூக்கியில் ஒருவரை ஏற்றி, அவரைத் தேவையான இடத்தில் எல்லாம் நிறுத்தித் துடைக்க விடுவது. இது, பெரும்பாலும் தரையிலிருந்து சில மாடிகள் உயரம் கொண்ட கட்டடங்களுக்கு உதவும்.

இந்தப் பணியில் தொழிலாளியின் பாதுகாப்பு ஒரு கேள்விக் குறி. அவர் சற்று கவனக் குறைவாக இருந்தாலும் கீழே விழ வாய்ப்பு உள்ளது. அதே போன்று இதற்கு ஆகும் நேரமும் செலவும்கூட அதிகம்தான்.

இதற்கு நான் ஒரு மாற்று யோசனையை முன்வைக்கிறேன்.இதற்குச் சிலந்தி எந்திரம் (Spider Robot) ஒன்றினைப் பயன்படுத்த வேண்டும். இதற்குக் குறைந்தபட்சம் எட்டுக் கால்கள் இருக்க வேண்டும்; அதற்கு மேலும் இருக்கலாம்; அவை எந்தத் தளத்தையும் இறுகப் பற்றிக் கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். சுற்றியுள்ள நான்கு கால்கள் பற்றிக்கொள்ளவும் நடுவில் உள்ள நான்கு கால்கள் சுழன்று தூய்மைப்படுத்தலாம். அடுத்து, நடுவில் உள்ளவை பற்றிக்கொள்ள, சுற்றிலும் உள்ளவை சுழன்று தூய்மைப்படுத்தலாம்.ஒவ்வொரு காலும் ஒரு தூரிகை (பிரஷ்) போல் இருக்க வேண்டும். அவை, இடப்புறமும் வலப்புறமும் சுழலும்வண்ணம் அமைய வேண்டும். மார்பிள் கற்களைப் பாலிஷ் செய்யும் எந்திரத்தை நினைவுகொள்ளுங்கள். அவற்றின் தன்மையுடன் இந்தச் சிலந்தியின் கால்கள் அமைய வேண்டும். இது, மிக மிக எடைக் குறைவாகவும் இருக்க வேண்டும்.

இந்தச் சிலந்தியானது எவ்வளவு உயரமான கட்டடத்தையும் தூய்மைப்படுத்தப் போதுமானது. குறிப்பிட்ட ஒரு திசையில் நேர்க்கோட்டிலோ, படுக்கை வாட்டிலோ இந்தச் சிலந்தியை ஏவிவிடலாம். கற்களால், கண்ணாடியால், பிளாஸ்டிக்கால், அலுமினியத்தால் கட்டப்பட்ட எந்த ஒரு கட்டுமானத்தையும் இத்தகைய சிலந்தியால் தூய்மைப்படுத்த முடியும். ஒருவேளை கட்டடத்தின் நடுவில் சில மேடுகள், பள்ளங்கள் இருக்குமானால், அதில் இந்தச் சிலந்தி ஏறி இறங்குமாறு செய்யலாம். திரட்டிய அழுக்குகளைச் சேகரித்து வைக்க இந்தச் சிலந்தியின் முதுகில் தனியே ஒரு கூடு இருக்க வேண்டும். அந்த அழுக்குகளையும் அழுத்தி(compress), மேலும் அதிக இட வசதியைப் பெற வைக்கலாம். ஒரு கூட்டில் அழுக்குகள் நிறைந்தவுடன், இன்னும் சில கூடுகள் புதிதாக பலூன் போல் முளைக்குமாறு செய்யலாம். அல்லது, இன்னொரு சிலந்தி சென்று அந்த அழுக்குக் கூட்டினைத் தன் முதுகில் ஏற்றிக்கொண்டு, தன்னிடம் உள்ள ஒரு வெற்றிடமான கூட்டினை அதற்குத் தரலாம்.

கட்டட வெளிப்புறம் மட்டுமில்லாது, சமதளத்தையும் தூய்மைப்படுத்த இந்தச் சிலந்திகள் உதவும்.

=======================================

படத்திற்கு நன்றி:

http://guangzhou.yoolk.com

http://www.lattaequipment.com

http://www.technostuffs.com

யோசனை 4 - கண்ணாடி ஜன்னலில், சூரியத் தகடுகள்

(அகவழி 4)


சென்னையில் உள்ள டைடல் பூங்காவில் உள்ள சிஃபி அலுவலகத்தில் மூன்றரை ஆண்டுகள் பணியாற்றினேன். மதிய உணவு முடிந்ததும் அந்தக் கட்டடத்தை வலம் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் அந்தக் கட்டடத்தைப் பார்க்கையில் எனக்கு இந்த எண்ணம் எழுந்தது.

கிட்டத்தட்ட 14 மாடிகள் கொண்ட அந்தக் கட்டடத்தினைச் சுற்றிக் கண்ணாடி ஜன்னல்களை வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான நிறுவனங்கள் இந்த ஜன்னல்களைத் திறக்காமலே வைத்திருக்கும். மேலும் உள்பக்கமாக ஒரு திரையையும் வைத்திருக்கும். எப்போதாவது மழை நின்றுவிட்டதா எனப் பார்க்க மட்டுமே அந்தத் திரையை விலக்குவார்கள். மற்றபடி இவை மூடியே இருக்கும்.

இப்படி கண்ணாடி ஜன்னல்களை வைத்திருப்பதற்கு, அவற்றைச் சூரிய ஒளித் தகடுகளாய் வைக்கலாம். அவற்றைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். அப்போது இவை அழகுக்கும் உதவும்; அதே நேரம், பயனும் மிகும். சூரிய ஒளித் தகடுகளைப் பொருத்துவது, ஒரு முறை ஆகும் செலவினம். ஆனால், அவற்றிலிருந்து தினமும் மின்சாரம் கிடைக்கும்.


இப்படி சூரிய ஒளித் தகடுகளைக் கொண்டு மூடிவிட்டால், தேவைப்படும்போது திறக்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலை வேண்டாம். தேவைப்பட்டால் ஜன்னலைத் திறப்பதுபோல் இவற்றையும் திறக்க வழி செய்யலாம். நமக்கு ஏற்றாற்போல் இவற்றை வடிவமைத்துக்கொள்ளலாம். ஒரு கட்டடத்தின் ஒரு பக்கத்தில் ஆயிரம் கண்ணாடி ஜன்னல்கள் இருப்பதாகக் கொள்வோம். அதில் 10 கண்ணாடிகளுக்கு ஒரு கண்ணாடியை வழக்கமான கண்ணாடியாக வைக்கலாம்.

அல்லது, இன்னொரு வழியும் உண்டு. ஒரு கண்ணாடி ஒரு அடி உயரமும் அகலமும் கொண்டு இருப்பதாகக் கொள்வோம். இதன் நான்கு புறமும் மூன்று அங்குலம் இடம் விடலாம். இந்த மூன்று அங்குலம் மட்டும் ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட சாதாரணக் கண்ணாடி; மீதப் பகுதிகள், சூரிய ஒளித் தகடுகள். இவ்வாறு செய்தால், இயற்கையான ஒளியில் அலுவலகத்தை இயக்க நினைக்கிறவர்களுக்கு எந்தச் சிக்கலும் இருக்காது. இந்த மூன்று அங்குலத்திலிருந்து தாராளமாக வெளிச்சம் பரவும். இப்படியான நிறுவனங்கள் மிகவும் குறைவு என்ற போதிலும் அவற்றுக்கும் நாம் இடம் அளிக்கலாம்.

டைடல் பூங்கா மட்டுமின்றி, இத்தகைய கண்ணாடி ஜன்னல்களைக் கொண்டுள்ள பெரிய கட்டடங்கள் அனைத்தும் இந்த உத்தியைப் பின்பற்றலாம்.

இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் விழும் சுட்டெரிக்கும் வெயிலை இயற்கையின் வரமாகக் கருதிப் பயன்படுத்த வேண்டும்.

==============================
படத்திற்கு நன்றி:

http://www.sunandclimate.com

http://travel.webshots.com

ஒருங்குறியில் கல்கி, மங்கையர் மலர்


பரதன் பப்ளிகேஷன்ஸ் சார்பில் வெளிவரும் கல்கி, மங்கையர் மலர் இதழ்கள், ஒருங்குறிக்கு மாறிவிட்டன.

முன்பு இவை, திஸ்கி எழுத்துருவில் இயங்கிவந்தன.

இந்த இதழ்கள் சார்பில் அந்த இணையதளங்களைச் சென்னை ஆன்லைன் வடிவமைத்துப் பராமரித்து வருகிறது.பாருங்கள்:
http://www.kalkionline.com

http://www.mangayarmalaronline.com

Friday, October 09, 2009

பாரக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு!!???அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு 2009ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பெற்றுள்ளது, பலருக்கும் வியப்பையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

உலக நாடுகளுக்கு இடையே அரசுமுறை உறவை வலுப்படுத்துவதிலும், மக்களிடையே நல்லுறவை வளர்ப்பதிலும் அவரது அசாதாரண முயற்சிகளுக்காக இந்தப் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு அறிவித்திருக்கிறது. அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்குவதில் அவரது முயற்சிகளையும் இந்தக் குழு பாராட்டியுள்ளது.

இதற்காகப் பரிந்துரைக்கப்பெற்ற 205 பெயர்களிலிருந்து ஒபாமாவைப் பரிசுக் குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர். 20.01.2009 அன்று அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற ஒபாமாவுக்கே இந்தச் செய்தி, வியப்பை அளிக்கலாம்.

அவர் சில முயற்சிகளை முன்னெடுத்தார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. குவான்டனோமோ பே என்ற சிறைச்சாலையை மூடுவதற்கு உத்தரவிட்டார். ஈரானுடன் நட்புறவு பாராட்டினார்; ஆப்கானிஸ்தானில் இராணுவத் தலைவரை மாற்றினார்; மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேலியர்களைக் குடிவைப்பதை நிறுத்தும்படி அவர் கூறினார்; இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தார்...... எனப் பன்னாட்டு உறவுகளை வலுப்படுத்த அவர் சில நல்ல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், இந்த முயற்சிகளுக்குப் போதிய பயன் கிட்டவில்லை என்பதே உண்மை.

அவர் கூறினார் என்பதற்காக எந்த நாடும் எந்தத் தலைவரும் செவிசாய்க்கவில்லை. அவருடன் பல சிக்கல்களில் அவரின் நாட்டினரே சரியாக ஒத்துழைக்கவில்லை. வெளியுறவுத் துறையைப் பொறுத்த வரையில் அவர் செயல்களை மிகப் பெரிய சாதனை என்று குறிப்பிட இயலாது. சில முன்னெடுப்புகள் மட்டுமே. இதற்காகவா அமைதிக்கான நோபல் பரிசு?

விழிப்புணர்வு ஊட்டுதல், நல்லுறவை வளர்த்தல் போன்ற சிலவற்றை அளவிடுதல் கடினம். எவ்வளவு பேர் இதனால் பயன் பெற்றனர்? பயன் பெற்றவர்கள் எவ்வளவு நேரத்திற்கு அல்லது காலத்திற்கு அந்த விழிப்புணர்வுடன் விளங்கினர்? இவற்றை எல்லாம் அவ்வளவு எளிதில் அளவிட இயலாது. இந்த நிலையில் பரிசுக் குழுவினர் ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தோராயமான மதிப்பீடுகளைக் காட்டிலும் தெளிவான மதிப்பீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

ஜக்கி வாசுதேவின் ஈஷா யோக மையத்தின் பசுமை கரங்கள் திட்டத்தின் மூலம் தமிழகச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தமிழகம் முழுவதும் 11 கோடியே 4 லட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டத்தில் 2009 ஜூலை வரை 71 லட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன.

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பும் பல நாட்டு மக்களைக் கவர்ந்துள்ளது; லட்சக்கணக்கானோரின் மனத்தில் அமைதியைக் கொணர்ந்துள்ளது.

இத்தகைய முயற்சிகள், தெளிவான மதிப்பீடுகளைக் கொண்டவை. இவ்வளவு ஆண்டுகளில் இவ்வளவு பேரைப் பாதித்துள்ளது என்ற விவரம் கிடைக்கும். இத்தகைய முயற்சிகளுக்குத் தேர்வுக் குழுவினர் முன்னுரிமை அளித்திருக்கலாம்.

ஒபாமா பதவியேற்ற ஒன்பதே மாதங்களில் இந்தப் பரிசினை வழங்கியது, ஒரு மிகையான அங்கீகாரம். இதனை அவர் ஆற்றிய பணிகளுக்கு வழங்குவதாக நான் கருதவில்லை; இனி ஆற்றவிருக்கும் பணிகளுக்கு முன்கூட்டியே வழங்கியதாக வேண்டுமானால் கருதலாம் (Many Nobel watchers believed it was too early to award the president.)

இப்படி ஒரு விருது வழங்கியதால், இனி அவர் எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்கத் தயங்குவார்; போர்களுக்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்துவார்; இன்னொரு நாட்டிற்கு ஆயுதங்களை விற்கும்போது கொஞ்சம் யோசிப்பார்; பிற நாட்டின் இறையாண்மையை மதிப்பார்; சமத்துவம், சமாதானம், சகோதரத்துவம் ஆகிய உயரிய நெறிகளுடன் தொடர்ந்து பயணிப்பார் என எதிர்பார்க்கலாம்.

இந்தப் பரிசின் மூலம் ஒபாமாவுக்குப் பொறுப்பு கூடியிருக்கிறது. அவருக்கு மட்டுமின்றி, அமெரிக்க அரசுக்கும் உளவு அமைப்புகளுக்கும் பொறுப்பு கூடியிருக்கிறது. இனியாவது அவை, அடக்குமுறைகளை ஏவாமல் இருக்க வேண்டும். பிற நாட்டின் வளங்களைக் கொள்ளையிடாமல் இருக்க வேண்டும். 'உலக அமைதி' என்ற அடர்த்தியான சொல்லுக்கு உரிய பொருளை, மிகுந்த பொறுப்புடன் தேடத் தொடங்க வேண்டும்.

மகாத்மா காந்தியைத் தம் மனம் கவர்ந்த தலைவர் என்று ஒபாமா குறிப்பிட்டார்; அவர் வழியில் தொடர்ந்து நடை பயில, ஒபாமாவிற்கு இந்த விருது உற்சாகம் ஊட்டட்டும்.

==================================

படத்திற்கு நன்றி: விக்கிப்பீடியா

சிரிப்பான்கள்: இணையத்தின் புதிய மொழிசில ஆண்டுகளுக்கு முன்பாகவே மின் அரட்டையிலும் மின்னஞ்சலிலும் ஒரு புதிய மொழி, சத்தமின்றிப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஒரு கருத்தினை அல்லது உணர்வினை எழுத்துகளில் வெளிப்படுத்துவது பழைய பாணி. அதற்குப் பதிலாக அடையாளக் குறியீடுகள், சிரிப்பான்கள், சுருக்கெழுத்துகள் மூலமாக அவற்றை வெளிப்படுத்துவது, புதிய பாணி.

மின் அரட்டைகளில் மகிழ்ச்சி என்பதைக் குறிக்க :-) என்ற அடையாளக் குறியை நீண்ட காலமாக இணையவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர். சோகம் என்பதைக் குறிக்க :-( எனக் குறிப்பர். மிக அதிக மகிழ்ச்சி, சோகம் எனில் :-)))), :-(((( எனக் குறிப்பது அடுத்த கட்ட வளர்ச்சி. இத்தகைய குறியீடுகளை மொத்தமாகச் சிரிப்பான்கள் (smileys) என்கிறார்கள்.

உரையாடலில் சிரிப்பான் போன்ற அடையாளங்களை அனுப்புவதை நான் குறைத்து மதிப்பிடவில்லை. சிரிப்பான்களும் மிக முக்கியமான கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. எழுத்தில் மகிழ்ச்சி என இட்டால், அதற்கு ஒரு பொருள் மட்டுமே உண்டு. ஆனால் அதையே :-) என்ற குறியீடாக அனுப்பினால், அதற்கு ஒற்றை அர்த்தம் கிடையாது. எழுத்துகள் வெளிப்படுத்துவதைக் காட்டிலும், சிரிப்பான் போன்ற குறியீடுகள் அதிகமாக வெளிப்படுத்துகின்றன. மகிழ்ச்சி, பாராட்டு, ஏளனம், நகைச்சுவை, சும்மா... என அனைத்துப் பொருள்களையும் ஒரே சிரிப்பான் வெளிப்படுத்தக் கூடும். அதே நேரம், துன்பம், கவலை, ஏக்கம், விரக்தி, விமர்சனம், ஏமாற்றம்.... என அனைத்துப் பொருள்களையும் ஒரே அழுவான் குறியீடு வெளிப்படுத்தக் கூடும். -))))) என இடும் போது மிகப் பெரிய சிரிப்பாக நாம் பார்க்கிறோம். ஆனால், இதற்குள் அடுக்கடுக்கான முகங்கள் ஒளிந்திருப்பதையும் நாம் காணலாம்.

யாஹூ மின் அரட்டையில் பற்பல உணர்வுகளையும் வெளிப்படுத்தச் சிரிப்பான்கள் இருக்கின்றன. இவற்றின் மூலம் அழலாம்; சிரிக்கலாம்; நகத்தைக் கடிக்கலாம்; கவலைப்படலாம்; கோபப்படலாம்; கைத்தட்டிப் பாராட்டலாம்; சுடச்சுட காஃபி, தேநீர் கொடுக்கலாம்; கண்ணடிக்கலாம்; முத்தம் இடலாம்; கட்டி அணைக்கலாம்; இன்னும் இதுபோல் பற்பல உணர்வுகளையும் ஒரு சிரிப்பான் மூலமே வெளிப்படுத்திவிடலாம். (பார்க்க: http://messenger.yahoo.com/features/emoticons)

ஆனால், கூகுளின் ஜிமெயிலிலோ, ஜிடாக்கிலோ உள்ள சிரிப்பான்கள், அவ்வளவு கவர்ச்சிகரமாக இல்லை. அவற்றை இன்னும் மேம்படுத்த வேண்டும். அசைவூட்டம் உள்ள சிரிப்பான்கள் (animated smileys) அதிக அளவில் வெளிவருகின்ற காலம், இது. யாஹூவில் மின் அரட்டைச் சூழலையும் நம் மன நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள வாய்ப்புகள் மிகுந்துள்ளன. ஒற்றைச் சொடுக்கில் பூத்துக் குலுங்கும் மலர்வனத்தில் நம் உரையாடல் நடக்கலாம்; அதே போல் பனிபொழியும் குளிர்ப் பகுதியிலும் நடைபெறலாம். இவ்வாறு மின்வெளி, நம் விருப்பத்திற்கு ஏற்றவாறெல்லாம் வளைந்து கொடுக்கத் தொடங்கியுள்ளது.

இக்கால இளைய தலைமுறையினர், புதிய புதிய சுருக்கெழுத்துகளையும் அடையாளக் குறிகளையும் சொந்தமாகக் கண்டுபிடித்து வருவது கவனிக்கத்தக்கது. மின் அரட்டைகளில் இரு கை குவித்து வணங்குவதைக் குறிக்க _/\_ என்ற அடையாளக் குறியை நான் உருவாக்கி, சில ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறேன். இது என்ன கோபுரமா? தொப்பியா? எனக் கேட்டவர்களும் உண்டு :-)

குறுஞ்செய்திகளில் அனுப்பும் மொழிக்கும் இந்தக் கணினி மொழிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனால், இரண்டுக்கும் மெல்லிய வேறுபாடுகளும் உண்டு. ஒரு செல்பேசியில் உள்ள அடையாளக் குறிகளின் எண்ணிகையை விட, கணினியில் உள்ள அடையாளக் குறிகளின் எண்ணிக்கை அதிகம். ஆக, கணினியின் குறுமொழி அதிக ஆற்றல் மிக்கது. ஆனால், அதனை முழுதும் பயன்படுத்துவோர் மிகக் குறைவே.

செல்பேசிகளிலேயே இணையத்தினை அணுகும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. இவை மேலும் மலிவாகும் போது, செல்பேசிக்கும் கணினிக்கும் இடையில் உள்ள இடைவெளி குறைந்து, ஒரு கட்டத்தில் மறைந்துவிடும். அப்போது கணினியின் சிரிப்பான்கள் அனைத்தையும் செல்பேசி வழியாகவே பயன்படுத்த முடியும்.

சிரிப்பான்கள், அசைவூட்டச் சிரிப்பான்கள், உரையாடற் களங்கள் ஆகியவற்றை அந்தந்த நாட்டுக்கும் வட்டாரத்திற்கும் ஏற்ப, தனித்த அடையாளங்களுடன் வெளியிட வேண்டும். இப்போதைய நிலையில் இதில் மேற்கத்திய ஆதிக்கம் மிகுதியாக உள்ளது. அந்த நாட்டுக் காட்சிகளே அதிகம் முன்வைக்கப்படுகின்றன. இவை யாவருக்குமான குறியீடுகளை வழங்கும்போது இயல்பாகவே இவற்றின் பயன்பாடு பெருகும்.

செல்பேசியில் காவல் துறை, தீயணைப்புத் துறை, மருத்துவ ஊர்தி போன்றவற்றுக்குப் படக் குறியீடுகள் அமைக்கலாம். இதன் மூலம் அவசர தருணங்களில் அந்தப் படத்தை அழுத்தியதும் அவர்களுக்கு அழைப்புச் செல்லுமாறு அமைக்கலாம். அதுபோல் நண்பரை, காதலியை, மனைவியை, ஆசிரியரை அழைப்பதற்குத் தனிப் படக் குறியீடுகள் அமைக்கலாம். இப்போது ஒருவரின் புகைப்படத்துடன் அழைப்பு வரும் வசதிகள் உள்ளன. ஆயினும் இவற்றில் நம் படைப்புத் திறனைக் காட்டினால், இன்னும் செய்வதற்கு எவ்வளவோ உள்ளன.

zoozoo போல் புதிய உருவங்களை அறிமுகப்படுத்தலாம். எல்லாக் கார்ட்டூன் பாத்திரங்களையும் சிரிப்பான்களுக்குள் கலந்துவிடலாம். அவற்றை விளம்பரங்களுக்கும் பயன்படுத்தலாம். கையில் புரூ காஃபியுடன் ஒரு சிரிப்பான் தோன்ற, கட்டணம் விதிக்கலாம். சுதந்திர தினத்தன்று அனுப்பும் சிரிப்பானின் கையில் மூவர்ணக் கொடியைக் கொடுக்கலாம். காதலர் தினமா? கையில் ரோஜா.

இந்த உருவங்களை நடிக்க வைத்து, குறும்படங்கள், திரைப்படங்கள் எடுக்கலாம். குழந்தைகளைக் கணினி - இணையம் நோக்கி ஈர்க்க, இந்தச் சிரிப்பான்கள் பெரிதும் பயன்படும். ஒரு கட்டத்தில் நம் உருவங்களையே இந்தச் சிரிப்பான்களுக்குக் கொடுக்கலாம். நம் முகத்தோடு கூடிய ஒரு சிரிப்பான், நம் நண்பருக்கு வாழ்த்துச் சொன்னால் எப்படி இருக்கும்? தேர்தல் பிரசாரத்திற்கும்கூட இவை பயன்படும். புதிய சாத்தியங்களுக்கு வானமே எல்லை.

=============================
படத்திற்கு நன்றி: http://manaskumar.com

Thursday, October 08, 2009

புள்ளிக் கவிதைகள் - பகுதி 8

Photo Sharing and Video Hosting at Photobucket

நாணயம் சுண்டினேன்.
நீ கேட்டபடி
தலை விழுந்தது.

====================

படபடக்கிற பட்டாம்பூச்சி,
மலரில் அமர்கிறது...
தேனருந்தும் வேளையில்
சிறகுகள் அசைவதில்லை...

====================

கடிக்கிற கொசுவை
அடிப்பதா? விரட்டுவதா?
விரட்டினால் மீண்டும் வருமே!
அடித்தால் செத்துவிடுமே!

====================

விரல் பிடித்துன்னைத்
தொடர்கிற என்னை
உயரே தூக்க மாட்டாயா?

====================

Dancing doll my singing soul!
Diving bird in shining sky!
Sleeping beauty speaking less!
Smiling darling making life!

====================
படம்: அண்ணாகண்ணன்
இடம்: கோனாரக் சூரிய கோயில்

யோசனை 3 - வேட்டியில் சில திருத்தங்கள்

(அகவழி 3)


இக்கால நகர்ப்புற இளையோர் வேட்டி அணிவதில்லை. பெரியோரும் பொங்கல், புத்தாண்டு போன்ற சிறப்பு தினங்களில் மட்டும் அணிகிறார்கள். வேட்டி, பழைமையான தோற்றம் தரும் ஆடையாகிவிட்டது. தமிழ்நாட்டின் நட்சத்திர விடுதிகள் சிலவற்றில் வேட்டி அணிந்துவர அனுமதிக்காத சம்பவங்களும் நடைபெற்றன. இப்படி 50 ஆண்டுக் காலத்தில் தமிழர்களிடமிருந்து திடீரென வேட்டி அந்நியமாகிவிட்டது ஏன்?

தமிழக அரசு பல்வேறு தருணங்களில் இலவச வேட்டி, சேலைகளை வழங்கி வருகிறது. இன்றும் தமிழகத்தின் கிராமப்புறங்களில் வேட்டியே ஆண்களின் முதன்மை ஆடையாகத் திகழ்கிறது. ஆனால், நகர்ப்புறங்களில் அலுவலக ஆடையாக முழுக்கால் சட்டையே விளங்குகிறது. பெரும்பாலான இளைஞர்கள், இதையே உடுத்துகிறார்கள்.

வேட்டி, காற்றோட்டமாக இருப்பது உண்மை. கம்பீரமான தோற்றத்தையும் தருகிறது. மிகவும் வியர்த்தால் அந்நேரம் கையில் கைக்குட்டை, துண்டு எதுவும் இல்லாவிட்டால், குனிந்து, வேட்டியிலேயே முகம் துடைக்கலாம். தேவையான நேரங்களில் (தண்ணீர் தேங்கிய பகுதியைக் கடக்கும்போது; வேகமாக நடக்கும்போது, ஓடும்போது....) மடித்துக் கட்டலாம். படுக்கும்போது குளிரடித்தால், வேட்டியைக் கழற்றிப் போர்வையாகப் போர்த்திக்கொள்ளலாம். வேட்டி, நெகிழ்வுத் தன்மை உடையது; பல்நோக்குப் பயன்பாடு உடையது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், அதில் சில வசதிக் குறைவுகளும் இருக்கின்றன. முக்கியமானது, அதில் பைகள் இல்லை. கிராமத்தில் வெற்றிலைப் பாக்கு போடுகிறவர்கள் அவற்றை இடுப்பில் சுருட்டி வைத்துக்கொள்வார்கள். இதனால் வேட்டியில் தேவையில்லாத சுருக்கங்கள் ஏற்படுகின்றன. இதனால் அதன் வாழ்நாளும் குறைகிறது. சாதாரண முழுக் கால் சட்டையில் குறைந்தபட்சம் 3 பைகள் உண்டு. அதிகபட்சம் 8 பைகள் உண்டு. அதில் பணப் பை, சீப்பு, கைக்குட்டை, சாவிக்கொத்து, அடையாள அட்டைகள்... உள்ளிட்டவற்றைத் தாராளமாக, பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம். செல்பேசியை இடுப்பில் செருகி வைக்கலாம். புகைப்படக் கருவியை இடுப்புப் பட்டையில் செருகலாம். இவற்றை எல்லாம் வைக்க வேட்டியில் இடமில்லை. சட்டையிலும் கைப்பையிலுமாக வைத்துச் சமாளிக்க வேண்டியிருக்கிறது.

வேட்டிக்குள் அண்டர்வேர் எனப்படும் அரைக்கால் சட்டையை அணிந்தால் அதன் பைக்குள் சிலவற்றை வைக்கலாம். ஆனால், அதற்குள் பொருளை எடுக்கவும் வைக்கவும் வேட்டியை மடித்துத் தூக்க வேண்டியிருக்கும். அப்படிச் செய்தால் பொது இடங்களில் பார்க்க நன்றாய் இராது. சட்டையை வேட்டிக்குள் உள்வைத்துக் கட்டுவது (இன் செய்வது) கடினம்.

வேட்டிகள் பெரும்பாலும் வெள்ளையாக இருப்பதால், அவை அழுக்காகும் வாய்ப்புகளும் அதிகம். விவசாயிகள், கட்டடத் தொழிலாளர்கள்... உள்ளிட்ட உழைக்கும் தொழிலாளர் பலரும் வீட்டிலிருந்து பணியாற்றும் இடம் வரை வேட்டியில் சென்றுவிட்டு, அங்கு அதைக் கழற்றி வைத்துவிட்டு, கால் சட்டையுடன் பணியாற்றுவதைப் பார்த்திருக்கிறேன். மீண்டும் மாலையில் வீட்டுக்குக் கிளம்பும்போது வேட்டியை அணிந்துகொள்வார்கள். அழுக்கு ஆவதிலிருந்து தற்காத்துக்கொள்ளவே இந்த ஏற்பாடு.

வேட்டியில் எளிதில் அவிழ்ந்துகொள்ளும் ஆபத்தும் உண்டு. அதுவும் கூட்ட நெரிசலில் இத்தகைய சிக்கல் அதிகமாகவே உண்டு.

மிதிவண்டி ஓட்டும்போது வேட்டியை மடித்துக் கட்ட வேண்டி இருக்கிறது. இல்லாவிட்டால் கால்களைத் தடுக்கிறது.

இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் என்ன தான் தீர்வு?

முதலாவது வேட்டியை வெள்ளை நிறத்தில் மட்டுமின்றி, பல நிறங்களிலும் நிறக் கலவையிலும் தயாரிக்கலாம். வேண்டுவோர், வேண்டிய நிறத்தில் உடுத்தலாமே. இப்போது காவி, பச்சை, நீல நிறங்களில் வேட்டிகளில் இருந்தாலும் அவை மிகவும் பழைய தோற்றத்தைத் தருகின்றன. நவீன ஆடையாக வேட்டியை மாற்ற வேண்டும். ஃபேஷன் ஆடை வடிவமைப்பாளர்கள், வேட்டியின் மீது தங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டும். டி சட்டையின் முன்னும் பின்னும் விளம்பரம், வாக்கியம் எழுதுவது போல் வேட்டியிலும் செய்யலாம். வேட்டியில் உள்ள அகண்ட பரப்பினை விளம்பரதாரர்கள் இன்னும் விட்டு வைத்திருப்பது வியப்பே.

வேட்டியை இடுப்பைச் சுற்றி மட்டும் கட்டும் வகையில் இல்லாமல் வேறு வடிவங்களிலும் கட்ட வழி காண வேண்டும். முஸ்லிம்கள், வேட்டியின் இரு முனைகளையும் தைத்து, பாவாடை போன்ற வட்ட வடிவ ஆடையாகப் பயன்படுத்துகிறார்கள். இதில் நடுவில் ஆடை விலகும் சிக்கல் இல்லை.
பஞ்சகச்சம் கட்டுவோரும் வட இந்தியர் சிலரும் வேட்டியையே முழுக்கால் சட்டையை ஒத்துக் கட்டுவார்கள். இது காற்றோட்டமாக இருக்கும்; அதே நேரம் எளிதில் அவிழ்ந்தும் விழாது. இவற்றை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தலாம்.

வட்ட வடிவமாகத் தைப்பதோடு நடுவே ஒரு ஜிப்பையும் வைத்துவிட்டால் இது, இரட்டைப் பயனுள்ள ஆடையாக (Two in one) மாறிவிடும். நிறைய ஜிப் வைத்து ஒரு வேட்டியைத் தயாரித்தால் பல சிக்கல்கள் தீரும். எடுத்துக்காட்டிற்கு இடுப்பிலிருந்து பாதம் வரை இரு கால்களுக்கும் தலா ஒரு ஜிப் வைக்க வேண்டும். முதலில் வேட்டியாகக் கட்டிக்கொள்ளலாம். பிறகு, தேவைப்பட்டால் ஜிப்பை இழுத்து முழுக்கால் சட்டை ஆக்கிக்கொள்ளலாம். இதே போன்று வேட்டியின் இடுப்புப் பகுதியில் தனி வடிவமைப்புடன் இடுப்புப் பட்டை தயாரிக்க வேண்டும். அது எல்லா வகையான பொருள்களையும் வைக்கும் வண்ணம் விரிந்து, சுருங்கும் தன்மையுடன் இருக்க வேண்டும்.

இன்னொரு வழியும் உண்டு.

நாலு முழ வேட்டி, எட்டு முழ வேட்டி, பதினாறு முழ வேட்டி... என வேட்டியில் பல வகைகள் உள்ளன. இவற்றில் நாலு முழத்தைத் தவிர பிற வேட்டிகள் அனைத்தும் ஒன்றுக்கு மேற்பட்ட சுற்றுகள் உள்ளன. இவற்றில் உள்சுற்றுகள் பெரும்பாலும் பயன்படுத்தபடுவதே இல்லை. இவற்றில் பைகளை வைத்து, வெளியிலிருந்து பொருளை வைத்து எடுக்க முயன்று பார்க்கலாம். இதற்கு ஏற்ப வெளிச் சுற்றில் ஒரு திறப்பு வைக்க வேண்டும்.

தைத்த சட்டைக்கு ஏற்ப நாம் உடலைச் சுருக்கிக்கொள்வதில்லை. நம் உடலுக்கு ஏற்ற வண்ணமே ஆடை தைக்கிறோம். காலம் மாறிக்கொண்டிருக்கிறது. நம் தேவைகளும் அதிகரித்துச் செல்கின்றன. இந்தச் சூழலில் நம் பாரம்பரிய உடைகள், நம் தேவைகளுக்கு ஏற்ப உருமாற வேண்டும். இல்லாவிட்டால் நம் தேவையை நிறைவேற்றும் பிற ஆடைகளை நோக்கி நம் இளைய தலைமுறை நகர்ந்து சென்றுவிடும். ஏற்கெனவே சில தலைமுறைகள் அப்படி மாறிவிட்டன.

வேட்டியைத் தமிழரின் அடையாளச் சின்னமாக, வணிகத் திறனுள்ளதாக மாற்ற வேண்டுமானால் நவீன காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப அது வளைந்து கொடுக்க வேண்டும். இதனை ஆடை உற்பத்தி நிறுவனங்களும் ஆடை வடிவமைப்பாளர்களும் பண்பாட்டு ஆர்வலர்களும் தீவிரமாக ஆராயுமாறு அழைக்கிறேன்.

முந்தைய பதிவு: வேட்டி துண்டுடன் நான்

Wednesday, October 07, 2009

இக்காலத் தமிழின் தேவைகள் என்னென்ன?

9ஆவது உலகத் தமிழ் மாநாட்டினைக் கோவையில் நடத்தத் தமிழக அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. இத்தகைய மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரை என்பது ஒரு சிறு பகுதியாகி, கலை - இலக்கிய நிகழ்ச்சிகள், அலங்கார வாகன அணிவகுப்பு, ஊர்வலம்.... உள்ளிட்ட பல்வேறு கூறுகள் முக்கியத்துவம் பெற்றுவிட்டன. பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இத்தகைய நிகழ்ச்சிகளால் மக்கள் பங்கேற்பு கூடலாம். சுற்றுலாவுக்குச் செல்வது போல் அவர்கள் புறப்பட்டு வரலாம். ஆனால், இத்தகைய மாநாட்டினால் தமிழுக்கு என்ன பயன் என்பது ஒரு கேள்விக் குறியே.

என் கண்ணோட்டத்தில் இக்காலத் தமிழின் தேவைகள் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.

1. தமிழக அரசின் அனைத்து இணையதளங்களையும் ஒருங்குறிக்கு மாற்றிட வேண்டும். ஒருங்குறியைத் தமிழக அரசு தன் அதிகாரபூர்வ குறியீட்டு முறையாக ஏற்க வேண்டும். அதற்கு உலக மொழிகள் பட்டியலில் உரிய இடங்களைப் பெறத் தொடர்ந்து முயல வேண்டும்.

2. தமிழக அரசு அலுவலகங்கள் அனைத்தையும் கணினிமயம் ஆக்க வேண்டும். அத்துடன் அந்தக் கணினிகளில் கட்டற்ற மென்பொருள்களின் பயன்பாட்டினை அதிகரிக்க வேண்டும். இவற்றைப் பயன்படுத்தும் வண்ணம் அரசு ஊழியர்களுக்குத் தொடர்ச்சியாகப் பயிற்சிகள் அளிக்க வேண்டும். அரசுப் பள்ளிகள், கல்லூரிகளிலும் இது குறித்த பயிற்சிப் பட்டறைகளை நடத்த வேண்டும். அதன் தொடர்ச்சியாகத் தமிழில் மென்பொருள்களை உருவாக்கிடவும் ஏற்கெனவே உள்ள மென்பொருள்களைத் தமிழில் பெயர்க்கவும் ஆயிரக்கணக்கான தன்னார்வக் குழுக்களை உருவாக்க வேண்டும்.

3. ஒலி பெயர்ப்பு முறைகளைத் தரப்படுத்த வேண்டும். சமஸ்கிருதம், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, உருது........ எனப் பற்பல மொழிகளின் சொற்களைத் தமிழில் எழுதும் போது, எவ்வாறு எழுத வேண்டும் என்பதற்குப் பொதுவான நெறிமுறைகளை வகுத்திட வேண்டும். அதே போன்று தமிழிலிருந்து வேறு மொழிகளுக்கு ஒலிபெயர்க்கும் போது எவ்வாறு பெயர்க்க வேண்டும் என்பதற்கும் மொழிவாரியாக வழிகாட்டு நெறிமுறைளை வகுக்க வேண்டும்.

4. துறைவாரியாக, தொழில்வாரியாகப் புதிய கலைச்சொற்களை உருவாக்கி, ஒத்த தரத்துடன் நிலைநிறுத்த வேண்டும். சொற்களுக்கு வரிசை முறையை அளிக்க வேண்டும். புதிய சொல்லாக்கங்களை வெகுமக்களிடம் எடுத்துச் செல்ல, நீண்ட கால நோக்கில் திட்டங்களை வகுக்க வேண்டும். முதலில் அரசு அவற்றைத் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும். பிறகு பள்ளி / கல்லூரிகளின் பாடத் திட்டங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள், நற்றமிழில் எழுதுவதுடன் இவ்வாறுதான் பேச வேண்டும் என வலியுறுத்தலாம். எடுத்துக் காட்டிற்கு, பேருந்தில் நடத்துநர் 'டிக்கெட், டிக்கெட்' எனக் கூறாமல், 'பயணச் சீட்டு எடுங்கள்' எனக் கேட்க வழிகாட்ட வேண்டும். ஆசிரியர்களையும் இவ்வாறு பேசச் செய்யலாம். இதற்கென துறைவாரியாக அரசு ஊழியர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கலாம்.

5. CM, PM, CEO, CFO, BM, Oz, NZ, WI.......... என ஆங்கிலத்தில் எண்ணற்ற சுருக்கெழுத்துகள் உள்ளன. இவற்றை மொழிபெயர்க்கையில் தமிழில் நீளமாக எழுத வேண்டியிருக்கிறது. Chief Minister என்பதை ஆங்கிலத்தில் CM என்பர். ஆனால், தமிழில் முதல்வர் என்றே எழுத வேண்டியுள்ளது. இதனால் தலைப்பில் அதிக இடம் ஒதுக்க வேண்டியிருக்கிறது. எனவே, புதிய சுருக்கெழுத்துகளைத் தமிழில் உருவாக்கி, நிலைநிறுத்த வேண்டும். தமிழக அரசு என்பதை மாத்திரைகளில் 'த/அ' என எழுதினர்; சென்னை மாநகராட்சி என்பதைச் 'செ/மா' என எழுதினர். இவ்வாறு, ஒவ்வொரு பதவிக்கும் இடத்திற்கும் முக்கிய நபர்களுக்கும் தமிழில் சுருக்கெழுத்துகளை உருவாக்க முயல வேண்டும். அவ்வாறே அடையாளக் குறிகளையும் பிரபலப்படுத்த வேண்டும்.

6. தமிழில் வெளிவந்துள்ள அனைத்து நூல்களையும் மின்னணு வடிவில் மாற்றி, இணையத்தில் சேமிக்க வேண்டும் (காப்புரிமை உள்ளவற்றைத் தனியே வகைப்படுத்திச் சேமிக்கலாம். அவற்றை வாசிக்க மட்டும் கட்டணம் விதிக்கலாம்). அந்த நூல்களை ஒலி வடிவில் மாற்றிச் சேமிக்கவும் திட்டங்கள் வகுக்க வேண்டும். நூலகத்தைப் படிப்பதற்கு மட்டுமின்றி, கேட்பதற்கும் பார்ப்பதற்கும் வசதியானதாக மாற்றிட வேண்டும்.

7. தமிழில் உள்ள ஓலைச் சுவடிகள், பட்டயங்கள், கல்வெட்டுகள்... இன்னபிற தொல்லியல் சான்றுகள் அனைத்தையும் இணையத்தில் ஏற்றிட வேண்டும். தமிழின் அனைத்து வகை கலை - இலக்கிய - மரபுச் செல்வங்களையும் காத்திடத் தனித் துறை உருவாக்கப்பட வேண்டும். ஆவணக் காப்பகத்தைப் பெரிய அளவில் விரிவாக்க வேண்டும்.

8. தமிழகத்தில் உள்ள சிதிலம் அடைந்துள்ள, அடைந்து வருகிற கோயில்கள் அனைத்தையும் காத்திடச் சிறப்புத் திட்டங்களை வகுக்க வேண்டும். பெரிய கோயில்களை மட்டுமின்றி, பழைமை வாய்ந்த சிறிய கோயில்களையும் கவனிக்க வேண்டும். அவற்றினைப் புதுப்பித்து, தொடர்ச்சியாகத் தூய்மையும் அழகும் மரபும் பேண, ஊக்கமுள்ள குழுக்களை அமைக்க வேண்டும்.

9. தமிழில் பெயர் சூட்டும் வழக்கத்தை மக்களிடம் அதிகரிக்க வேண்டும். இதற்காக அவர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கலாம். முக்கியமாக, முதலெழுத்துகளையும் தமிழில் வைத்துக்கொள்ளும் வழக்கத்தை மீண்டும் கொணர வேண்டும்.

10. தமிழ் வரிவடிவங்களைச் சீரமைக்க வேண்டும். தமிழ் எழுத்துகளில் ங, ஞ வர்க்க எழுத்துகளில் பல பயன்பாட்டில் இல்லை. அதே நேரத்தில் அயல் மொழிகளில் உள்ள சில ஒலிகளை உச்சரிப்பதில் தமிழுக்குச் சிக்கல் இருக்கிறது. இந்தப் புதிய தேவைகளை நிறைவுசெய்ய, தமிழ் வரி வடிவங்களை மறுசீரமைக்கலாம். தேவையெனில் சில புதிய எழுத்துகளையும் ஓசைகளையும் அறிமுகப்படுத்தலாம்.

11. இக்காலச் சூழலுக்கு ஏற்ப இலக்கண விதிகளைத் திருத்த வேண்டும். முக்கியமாக அயல் மொழிச் சொற்களுடன் சேர்த்துத் தமிழ்ச் சொற்களை எழுதும்போது எவ்வகையில் புணர்ச்சி விதிகள் அமைய வேண்டும்? வட்டார வழக்குச் சொற்களை எழுதுகையில் பின்பற்ற வேண்டிய இலக்கண விதிகள்? பேச்சுத் தமிழில் கொச்சையாக எழுதுகையில் பின்பற்ற வேண்டிய விதிகள் ஆகியவற்றை ஆராய வேண்டும்.

12. தமிழர்கள் புலம்பெயர்ந்ததன் காரணமாக, உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நிலப் பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். (பார்க்க: http://tinyurl.com/nlcbbo) தமிழரின் நிலங்கள், திணைகள், காலங்கள், தெய்வங்கள் உள்ளிட்ட பலவற்றில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இவற்றைக் கூர்ந்து கவனித்து, புதிய இலக்கண நூல் ஒன்றினை உருவாக்க வேண்டியது, காலத்தின் கட்டாயம்.

13. பயன்பாட்டுத் தமிழ் என்ற பாடத்தில் கூடுதல் அம்சங்களைச் சேர்க்க வேண்டும். ஊடகம், மொழிபெயர்ப்பு, சொற்பொழிவு... உள்ளிட்ட சிலவற்றுடன் அறிவியல் - நுட்பங்களை மிக அதிக அளவில் சேர்க்க வேண்டும். அறிவியல் தமிழ் என்ற பதம், தமிழின் புதிய முகத்தினைக் காட்டக் கூடியது. அதையொட்டி, தமிழ் சார்ந்த வேலைவாய்ப்புகளை மிக அதிகமாக உருவாக்க வேண்டும்.

14. தமிழ் - தமிழ், தமிழ் - ஆங்கிலம், தமிழ் - இந்தி, தமிழ் - பிரெஞ்சு... ஆகிய அகராதிகளுடன் இன்னும் ஒரு 100 மொழிகளுக்காவது தமிழ் அகராதிகளை உருவாக்க வேண்டும். இந்திய மொழிகள் அனைத்திற்கும் தமிழ் அகராதிகளை உருவாக்க வேண்டும்; அதே போன்று இதர ஐரோப்பிய, ஆப்பிரிக்க, ஆசிய மொழிகளுக்கும் அகராதிகளை உருவாக்க வேண்டும். இந்த மொழிகளுக்கான அறிஞர்களைக் கண்டறிந்து விரிவான திட்டமிடலுடன் இந்தப் பணியை நிறைவேற்ற வேண்டும். இத்தகைய முயற்சிகளின் மூலமாக அந்த நாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள் தமிழகத்திற்கு வர வாய்ப்புண்டு. அதே போன்று தமிழகத் தொழிலதிபர்களும் அங்கு செல்ல வாய்ப்பு உண்டு. தொழில் மட்டுமின்றி, கல்வி, கலை, மருத்துவம், ஆன்மீகம்.... போன்ற பல துறைகளில் பரிமாற்றங்கள் நிகழ, இந்த அகராதிப் பணிகள் பெரும் உதவி புரியும்.

15. தமிழகத்தின் இலக்கியம், ஓவியம், இசை, நடனம், சித்த மருத்துவம், ஆன்மீகம், யோகா.... உள்ளிட்ட பற்பல செவ்வியல் கூறுகளுக்கு உலகளாவிய சந்தையை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு புதிய முயற்சியும் உலகம் முழுவதையும் உடனே எட்டும் விதத்தில் வலைப் பின்னலை வலுவாக்க வேண்டும்.

16. தமிழகம் முழுவதும் அதிவேக இணைய இணைப்பினை உருவாக்கிட வேண்டும். கம்பியில்லா இணைய மண்டலமாகத் தமிழகத்தை மேம்படுத்த வேண்டும். அதனை இலவசமாகவும் அளிக்க வேண்டும். தமிழர் ஒவ்வொருவருக்கும் மின்னஞ்சல் முகவரி இருக்க வேண்டும். இந்த இலக்கினை கி.பி.2020க்குள் அடைய அரசு இலக்கு நிர்ணயிக்க வேண்டும்.

17. அனைத்து மொழிகளுக்குமான மொழிமாற்ற மென்பொருள்களை உருவாக்கத் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் எந்த மொழியில் வரும் எந்தச் செய்தியையும் தமிழர்கள் உடனே தமிழிலேயே அறிய முடியும்.

18. செல்பேசிகளில் தமிழ்த் தட்டச்சினை ஒத்த தரத்துடன் நிலைநிறுத்த வேண்டும். அதன் மூலம் தமிழில் குறுஞ்செய்திகள் அனுப்ப ஊக்குவிக்க வேண்டும். செல்பேசி மூலமாகவே வங்கி, அரசு, தனியார் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளையும் தமிழில் பெற ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

19. பேருந்து, தொடர்வண்டி, மகிழுந்து உள்ளிட்ட வாகனங்களில் தானியங்கி தமிழ் அறிவிப்புகள் இடம்பெற வேண்டும். புவியிட அமைவு முறைப்படி (GPS - Global Positioning System) செயற்கைக்கோள் மூலமாக நாம் இருக்கும் இடத்தைத் தமிழில் எழுத்திலும் குரலிலும் அறிய வகை பிறக்க வேண்டும். செல்பேசிகளிலும் இந்த வசதியை அளிக்க வேண்டும். இதற்கேற்பத் தமிழக அரசே இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்துடன் இணைந்து, புதிய செயற்கைக் கோளை ஏவி, தமிழக நிலப் பரப்புகளைத் துல்லியமாகப் படம் பிடிக்க வேண்டும்; இடப் பெயர்களை ஒலியிலும் எழுத்திலும் பதிய வேண்டும்; அரசு நினைத்தால் இன்னும் இரண்டே ஆண்டுகளில் இதை நிறைவேற்றிட முடியும்.

20. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த் துறைகளைத் தமிழ் மொழியியல் ஆய்வகம் என அழைத்திடல் வேண்டும். அங்கு உள்ளோர், மொழியின் பன்முகப் பரிமாணங்களைக் கூர்ந்து ஆராய்ந்து, ஆய்வறிக்கைகளை அளிக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களும் இணையதளங்களையும் குழுமங்களையும் உருவாக்க வேண்டும். மாணவர்களுக்குத் தனியாகவும் ஆசிரியர்களுக்குத் தனியாகவும் இந்தக் குழுமங்கள் அமையலாம். இதில் பழைய மாணவர்களும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களும்கூட கலந்துகொள்ள வழிவகை காணலாம்.

21. கல்வியைப் பள்ளிகளிலும் கல்லூரிகளில் நேரில் சென்றுதான் கற்க வேண்டும் என்ற முறையை மாற்றிட வேண்டும். எந்தக் கல்வியையும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலிருந்தும் கற்கலாம் என்ற வசதியை அளிக்க வேண்டும். ஒரு கல்லூரியில் பேராசிரியர் எடுக்கும் பாடங்களை இதர கல்லூரிகளில் காண வழிவகை செய்ய வேண்டும். உலகின் இரு கோடிகளில் உள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் ஒற்றைச் சொடுக்கில் ஊடாட வேண்டும். இதற்கு http://openmentor.net போன்ற தளங்கள் உதவும். இது தொடர்பான எனது முந்தைய கட்டுரை: http://annakannan.blogspot.com/2009/09/blog-post_29.html

22. நேனோ தொழில்நுட்பம் உள்பட அனைத்து அறிவியல் - நுட்பங்கள் குறித்தும் தமிழில் கற்பிக்க ஏற்ற நூல்களை உடனுக்குடன் விரிவாக எழுத வேண்டும்.

23. எழுத்தினைக் குரலாக மாற்றுகின்ற மென்பொருளைத் தமிழில் விரைவில் மேம்படுத்த வேண்டும். ஒரே எழுத்தினைப் பல்லாயிரம் குரல்களில் கேட்கிற வாய்ப்பு, இதில் உள்ளது. முன்னுரிமைப் பணிகளின் பட்டியலைத் தயாரித்து, அதில் இதற்கு இடம் அளிக்க வேண்டும்.

24. தமிழரின் உணவு முறையை மேம்படுத்த வேண்டும். தமிழரின் பண்டைய உணவுகளை, வட்டார ரீதியான உணவுகளைப் புதிய முறையில், சரிவிகித உணவாக மீண்டும் அறிமுகப்படுதத வேண்டும். தமிழர்கள் உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டு, கட்டான உடலமைப்பினைப் பெறும் வகையில் திட்டங்கள் வகுக்க வேண்டும். அப்படிச் செய்தால், இவற்றின் தாக்கம், மரபணுக்கள் ரீதியில் அடுத்தடுத்த தலைமுறைகளிலாவது வெளிப்படும்.

25. தமிழரின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த வேண்டும். இது, மறைமுகமாக மொழியுடனும் தொடர்பு உடையது. தமிழ் என்பது மொழி மட்டும் இல்லை; பண்பாடு, கலை, அறிவியல், நுட்பங்கள்.... உள்ளிட்ட 360 பாகை கோணங்கள் உடைய கரு இது. இதனை அவ்வளவு ஆழமாகவும் விரிவாகவும் அணுகினால்தான் உறுதியான பயன்களை எதிர்பார்க்க முடியும்.

வேதியியல் நோபல் பரிசு: தமிழர் இராமகிருஷ்ணன் சாதனை


2009ஆம் ஆண்டு, வேதியியல் துறைக்கான நோபல் பரிசினை வெ.இராமகிருஷ்ணன் (57) என்ற தமிழர் வென்றுள்ளார். ரிபோசோம் குறித்த ஆய்வுக்காக அவருக்கு இந்தப் பரிசு அறிவிக்கப்பெற்றுள்ளது. புதிய நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்குவதில் இந்த ஆய்வு பயன்படும்.

1952இல் சிதம்பரத்தில் பிறந்தவர் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன். 1976இல் அமெரிக்காவின் ஓஹியோ பல்கலையில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.ஆர்.சி. மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தின் அமைப்பியல் கல்விப் பிரிவில் குழுத் தலைவராகப் பணியாற்றுகிறார்.

இவர், இந்தப் பரிசை வேறு இருவருடன் பகிர்ந்துகொள்கிறார். அவர்களுள் ஒருவர்: அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் உள்ள ஹோவர்ட் ஹூக்ஸ் மருத்துவக் கழகத்தில் (Yale University, Howard Hughes Medical Institute) பணியாற்றும் தமஸ் ஏ.ஸ்டீட்ஸ் (Thomas A. Steitz); இன்னொருவர்: இஸ்ரேலில் உள்ள வீஸ்மன் அறிவியல் கழகத்தில் (Weizmann Institute of Science Rehovot, Israel) பணியாற்றும் அடா ஈ.யோனத் (Ada E. Yonath) என்ற பெண்.

இராமகிருஷ்ணனின் ரிபோசோம் ஆய்வு குறித்து ஜெர்மானிய இணையதளம் தரும் தகவல், இது:

His research into the atomic structure of the ribosome, the large protein-RNA complex that translates the genetic codes into proteins, has shed light on antibiotic function, and the mechanism of tRNA and mRNA recognition and decoding by the ribosome.

சாதனை படைத்துள்ள இராமகிருஷ்ணனைப் பெரிதும் வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும் விவரங்களுக்கு:

http://www.webnewswire.com/node/469548

http://nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2009/

http://www.mrc-lmb.cam.ac.uk/ribo/homepage/ramak/index.html

========================================
படத்திற்கு நன்றி: http://www.cef-mc.de

யோசனை 2 - தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்க

                                                                     (அகவழி 2)
மும்பை தாஜ், டிரைடன்ட் நட்சத்திர விடுதிகள், சி.எஸ்.டி. தொடர்வண்டி நிலையம் ஆகியவற்றில் 26.11.2008 அன்று தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள், காவல் துறையினர் உள்பட 180 பேர் பலியானார்கள். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுள் பெரும்பாலோனோர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அதில் உயிர் தப்பிய ஒரே ஆள், அஜ்மல் கசாப். தாக்குதல் நடத்தியவர்களுள் இவரும் ஒருவர் என்பதை வீடியோ ஆதாரம் மூலம் காவல் துறையினர் காட்டியுள்ளனர். இவர் தாமாகவே முன்வந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததால் காவல் துறையினருக்குக் கூடுதல் விவரங்கள் கிடைத்துள்ளன. ஆயினும் அந்த வாக்குமூலத்திலும் நிறைய ஐயங்கள் உள்ளன.

ஒருவேளை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 10 பேரும் உயிருடன் பிடிக்கப்பட்டிருந்தால் நிலைமை இவ்வளவு சிக்கலாக இருக்காது. ஒவ்வொருவரையும் தனித் தனியாக விசாரித்து, நிறைய தகவல்களைப் பெற்றிருக்கலாம். அவர்களை அனுப்பியவர்கள், பின்னணியில் இருப்பவர்கள், எதிர்காலத் திட்டங்கள்... எனப் பலவற்றையும் தெரிந்துகொண்டிருக்கலாம். ஆனால், சம்பவ இடத்திலேயே அவர்களைச் சுட்டுக் கொன்றது, காவல் துறைக்குப் பெரும் இழப்பே.

இப்படியான தருணங்களில் தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்க முடியும் என நான் நம்புகிறேன். அவர்களைத் துப்பாக்கிக் குண்டுகளைக் கொண்டு சுடுவதைக் காட்டிலும் மயக்க ஊசியை அவர்கள் உடலில் தொலைவிலிருந்தே செலுத்தலாம். மதம் பிடித்த யானையைப் பிடிக்க மயக்க ஊசியைத்தான் செலுத்துகிறார்கள்.

ஒருவேளை தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்கும்போது இந்த மயக்க ஊசியை அவர்கள் உடலில் செலுத்த வாய்ப்பில்லை எனக் கருதினால், மயக்கக் குண்டுகளைப் பயன்படுத்தலாம். இப்போது மும்பை தாஜ் விடுதிக்கு உள்ளிருந்து தீவிரவாதிகள் தாக்குகிறார்கள் என்றால் தாஜ் விடுதியின் சுற்றளவிற்கு ஏற்ப, மயக்கக் குண்டுகளை வீசலாம். 100 மீட்டர் சுற்றளவு முதல் ஒரு கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் என இதை விரிவுபடுத்தலாம். அந்த எல்லைக்குள் அதை நுகரும் எவரும் உடனே மயக்கம் அடையும் விதத்தில் அந்த மயக்கக் குண்டு அமைய வேண்டும். அந்த மயக்கம், 2 மணி நேரம், 4 மணி நேரம், 6 மணி நேரம் என எவ்வளவு நேரம் நீடிக்க வேண்டுமோ அவ்வளவு வீரியமுள்ள மயக்கக் குண்டுகளை வீசலாம்.

ஒருவேளை தீவிரவாதிகள், கைக்குட்டை போன்றவற்றால் மூக்கை மூடிக்கொண்டாலும் லேசாக நுகர்ந்தாலும் பாதிப்பு அடையும் வகையில் இந்த மயக்கக் குண்டு சக்தியுடையதாக இருக்க வேண்டும்.

அதே நேரம், மயக்கக் குண்டினை வீசிய 15 நிமிடம் கழித்துக் காவல் துறையினர் அந்தப் பகுதிக்குள் நுழையலாம். அவர்கள், மயக்க மருந்தினால் பாதிக்கப்படாமல் இருக்க, ஆக்சிஜன் முகமூடி ஒன்றைப் பயன்படுத்தலாம். இப்போது, ஒரு துப்பாக்கி குண்டினைக் கூட பயன்படுத்தாமல் ஒட்டுமொத்த தீவிரவாதிகளையும் நாம் கைது செய்துவிடலாம். யாரேனும் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்தால் அவர்களையும் எளிதாக மீட்கலாம். இதனால் தேவையற்ற உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம்.

என்கவுன்டர் கொலைகளையும் இந்த வகையில் தவிர்க்கலாம். எந்தத் துப்பாக்கிக் குண்டினைக் கொண்டு அவர்களைச் சுடப் பயன்படுத்துகிறீர்களோ, அதே குண்டினை மயக்க ஊசியாக மாற்றிவிட்டால் போதும். அந்த மயக்க மருந்து, உடல்நலத்திற்குக் கேடாக அமையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எல்லைப் பகுதிகள், போர்க்களங்கள் ஆகியவற்றிலும் கூட இதைப் பயன்படுத்தலாம். யார் மயக்கக் குண்டுகளைப் பயன்படுத்துகிறார்களோ, அவர்கள் அதற்கு ஏற்ற வகையில் ஆக்சிஜன் முகமூடிகளைத் தயார் நிலையில் வைத்திருந்தால் போதும்.

=================================
படத்திற்கு நன்றி: ராஜா சபை

Tuesday, October 06, 2009

காமேஷ் - யாங் திருமண வைபவம்

இணைய நண்பர் காமேஷ் - யாங் திருமணம், சென்னையின் எல்லையில் உள்ள காட்டுப்பாக்கத்தில் 04.10.2009 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்திய - சீன உறவின் நிகழ்கால அடையாளமாக இது விளங்கியது.

முன்னதாக, 27.09.2009 அன்று காமேஷ் தம் நண்பர் மகேஷூடன் அம்பத்தூரில் உள்ள எமது இல்லத்திற்கு வந்து தமிழ், ஆங்கிலம், சீன மொழிகளில் திருமண அழைப்பிதழை அளித்தார். அவர்களுடன் நானும் பதிவர் கீதா சாம்பசிவம் வீட்டிற்குச் சென்று அவரைத் திருமணத்திற்கு அழைத்தோம்.

சீனாவில் இவர்களுக்கு ஏற்கெனவே பதிவுத் திருமணம் நடைபெற்றுவிட்டது. இது தொடர்பாக அங்குள்ள நண்பர்களுக்கு விருந்தும் வைத்துள்ளனர். இப்போது, மணமகன் சார்பில் சென்னையில் திருமணம் நடைபெற்றது. தெலுங்கு முறைப்படி திருமணச் சடங்குகள் நிகழ்ந்தன. காமேஷ், தலைப்பாகை, வேட்டி, துண்டுடன் கம்பீரமாகத் தோன்றினார். சீனத்து மணமகள் யாங், சேலை, பொட்டு, நெற்றிச் சுட்டி உள்ளிட்ட அணிகலன்கள், மருதாணி அல்லது மெஹந்தி ஆகியவற்றுடன் தென்னகப் பெண் போன்றே விளங்கினார். இருவரின் கழுத்திலும் மலர் மாலைகள், கைகளில் பூச்செண்டு ஆகியவை அழகு சேர்த்தன.

பஞ்ச பூதங்களின் சாட்சியாக, வேதியர் மந்திரங்கள் ஓத, மேளமும் நாகஸ்வரமும மங்கள் இசை முழங்க, உற்றார், சுற்றத்தார், நண்பர்கள் அட்சதை தூவ, காமேஷ், யாங்கின் கழுத்தில் மங்கல நாண் பூட்டினார். இருவருக்கும் நடுவிலிருந்த துணியாலான திரை விலகியது. யாங் அம்மி மிதிக்க, காமேஷ், அவர் கால் விரல்களில் மெட்டி அணிவித்தார்.

திருமணச் சடங்குகள், நமக்கு எப்படி இருந்த போதிலும், மணமகள் யாங்கிற்கு இவை அனைத்துமே புதியவை. ஒவ்வொரு சடங்கிலும் குறுஞ்சிரிப்புடன் அவர் கலந்துகொண்டார்.

இந்தத் திருமணத்தின் இன்னொரு சிறப்பு, இதில் வலைப்பதிவர்கள், இ-குழுமத்தினர் பலரும் கலந்துகொண்டதே. விழியன் தம் மனைவி, மகளுடன் வந்திருந்தார். அப்துல் ஜப்பார், தம் மகன் ஆசிப் மீரானுடன் வந்திருந்தார். கீதா - சாம்பசிவம் தம்பதியர், ருக்மிணியும் அவர் கணவரும், புனிதவதி இளங்கோவன், நட்சத்திரா, அதியமான், தேவர் பிரான் கிருஷ்ணன், சஹாரா தென்றல், கல்பகம், அ.கி.ரா. தம் மனைவியுடனும் மகளுடனும் வந்திருந்தனர். இன்னும் ஏராளமானோர் கலந்துகொண்டு புதிய மணமக்களை வாழ்த்தினர். இணைய உறவானது, எவ்வளவு ஆழமானது என்பதை இத்தகைய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. பதிவர் பலரின் பெயர்கள் விடுபட்டிருக்கின்றன. அவர்கள் என்னை மன்னிப்பார்களாக.

இந்தத் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாதது குறித்து, தற்சமயம் அமெரிக்காவில் இருக்கும் சீதாலட்சுமி, ஷைலஜா ஆகியோரும் இன்னும் பலரும் வருந்தினர். அவர்களுக்காகவும் பிறருக்காகவும் சில நிழற்படங்களை இங்கே இடுகிறேன்.

எல்லைச் சிக்கலைத் தீர்க்க முடியாத இந்தியாவும் சீனாவும் அரசு ரீதியாக எவ்வளவுதான் முயன்றாலும் இரு நாட்டு உறவினைப் பலப்படுத்திவிட முடியாது. ஆனால், இப்படியான திருமணங்கள் மூலம் ஆயிரம் மடங்கு உறவு பலப்படும். இந்த உறவின் மூலம், புதிய அத்தியாயத்தை இவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். இவர்களுக்குப் பிறக்கும் குழந்தை, இயல்பாகவே உலகக் குடிமகவாக மலரும். மணமக்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.