!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2010/08 - 2010/09 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, August 20, 2010

பொதிகைக் கலந்துரையாடலின் விழியப் பதிவு

பொதிகை தொலைக்காட்சியில் செம்மொழி மாநாட்டினை ஒட்டி, 'வாழிய செம்மொழி' என்ற தலைப்பில், 'இளைஞர்களும் தமிழும்' என்ற கருவில், சிறப்புக் கலந்துரையாடல், 15.06.2010 செவ்வாய் அன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது. பங்கேற்பு: ஈரோடு தமிழன்பன், த.இராமலிங்கம், அண்ணாகண்ணன். இதோ அதன் விழியப் பதிவு.


நேர அளவு - 48 நிமிடங்கள் 

நன்றி - பொதிகை தொலைக்காட்சி

Wednesday, August 11, 2010

சங்க இலக்கியத்தில் வானவியல் குறிப்புகள்

2010 ஆகஸ்டு 10 அன்று மாலை, சென்னை, பாரி முனையில், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற வாராந்தர நிகழ்வுக்குச் சென்றேன்.


இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி நெல்லை சு.முத்து தலைமை வகித்தார். சங்க இலக்கியத்தில் வானவியல் குறிப்புகள் என்ற தலைப்பில் முனைவர் ஐயம்பெருமாள், காட்சியுரை நிகழ்த்தினார்.இவர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநராகப் பணிபுரிகிறார்.


“விரி கதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப,
எரி, சடை, எழில்வேழம் தலையெனக் கீழ் இருந்து
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள்தெரி
புந்தி மிதுனம் பொருந்த, புலர்விடியல்
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த
பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
மிதுனம் அடைய, விரிகதிர் வேனில்
எதிர்வரவு மாரி இயைக என இவ் ஆற்றால்
புரைகெழு சையம் பொழிமழை தாழ
நெரிதரூஉம் வையைப் புனல்”

என்ற பரிபாடலின் காலத்தினைக் கணக்கிட முடியும் என்றார். வான மண்டலம் இப்போது எப்படி உள்ளது நம் கண்களுக்குத் தெரிகிறது. இது போல் இறந்த காலத்தி்ல் ஒவ்வொரு நாளும் எப்படி இருந்தது, எதிர்காலத்திலும் எப்படி இருக்கும் எனக் காண முடியும். காட்டும் இந்தக் குறிப்பிட்ட பரிபாடல் காட்டும் வானத் தோற்றத்தைக் கணக்கில் கொண்டு பார்க்கையில், இக்காட்சி,  கி.பி. (பொது ஆண்டு) 634 ஜூன் 17 அன்றைய தேதிக்குப் பொருந்துவதாக உள்ளது என ஐயம்பெருமாள் கூறினார். எனவே பரிபாடல், 3 முதல் 7ஆம் நூற்றாண்டு வரையான காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றார் அவர்.

மேலும் திருவள்ளுவரின் ‘அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து’, இளங்கோவடிகளின் ‘திங்களைப் போற்றுதும்’, ‘ஞாயிறு போற்றுதும்’, மாணிக்கவாசகரின் ‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்’,  ஆண்டாளின் ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’… உள்ளிட்ட பாடல்களையும் மேற்கோள் காட்டிப் பேசினார்.

சிவன் உருவில் பிரபஞ்சத் தோற்றம் வரையப்பெற்றதாகப் படத்துடன் விளக்கினார். கோயில்களில் நவகிரகங்களை உருவாக்கிய பண்டைத் தமிழர்கள், சிறந்த வானவியல் அறிவு பெற்றிருந்தனர் என்றார். தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கூறினார்.

தலைமையுரை நிகழ்த்திய நெல்லை சு.முத்து, தாம் இது வரை 103 நூல்கள் எழுதியிருப்பதாகக் கூறினார். அவற்றுள் 50க்கும் மேற்பட்டவை அறிவியல் நூல்கள் என்றார்.


‘வலவன் ஏவா வான ஊர்தி’ என்ற சங்க இலக்கிய வரிகளைச் சுட்டிய இவர், இந்த ஆளில்லா வானூர்தி என்பது, விமானம் போன்றது என்பதை விட, ஏவூர்தி (ராக்கெட்)யாக இருக்கலாம் என்றார்.

‘அம்மி மிதித்து அருந்ததி பார்த்து’ என்ற தொடரை விளக்கிய இவர், அருந்ததியைப் பகலில் பார்க்க முடியாது என்பதால், அந்தக் காலத்தில் இரவில் திருமணங்கள் நிகழ்ந்துள்ளதை இவ்வரியின் மூலம் அறியலாம். மேலும் அருந்ததி என்ற விண்மீன் மிகச் சிறியது. எனவே அதை ஒருவர் பார்க்க முடியுமானால், அவரின் கண் பார்வை கூர்மையாக உள்ளதை அறிந்துகொள்ளலாம் என்பதற்காக இந்த வழக்கம் தோன்றியிருக்கலாம் என்றார். உடு மண்டலம் உள்ளிட்ட சில நல்ல தமிழ்ச் சொற்களை நினைவூட்டினார்.

பட்டிமன்றத்தின் செயலர் பக்தவத்சலம் வரவேற்புரை ஆற்ற, புலவர் கிருஷ்ணமூர்த்தி நன்றி நவின்றார்.

சிறப்புரை நிகழ்த்திய ஐயம்பெருமாள், ‘சங்க இலக்கியத்தில் வானவியல் குறிப்புகள்’ என்ற தலைப்பினைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால், சங்க காலத்தைத் தாண்டியும் அவர் சான்றுகள் உரைத்தார். இது, தலைப்பினை விட்டுச் சற்றே வெளியே சென்றது போல் இருந்தது.

பரிபாடலின் அந்தப் பாடல், 7ஆம் நூற்றாண்டு என இவர் உரைக்க, இராம.கி. வேறு ஒரு குறிப்பினை அவர் வலைப்பதிவில் காட்டியுள்ளார்.

இந்தப் பாடலில் வரும் வானியல் நிகழ்வு கி.மு.161 ஆம் ஆண்டு, கலியாண்டு 2941, பிரமாதி ஆவணித்திங்கள் 12 ஆம் நா: வியாழக்கிழமை, சதுர்த்தசி திதி அவிட்ட நாள்காட்டு கூடிய நாள் என்று சொல்லுவதாக 1969இல் வெளிவந்த சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக பரிபாடற் பதிப்பு கூறுகிறது.
http://valavu.blogspot.com/2008/01/6.html
எனினும் இத்தகைய ஆராய்ச்சிகளும் விவாதங்களும் வரவேற்கத் தக்கவை.

படங்கள்: அண்ணாகண்ணன்.

Monday, August 09, 2010

திருப்பூர் கிருஷ்ணனின் நகைச்சுவை முத்துகள்

அம்பத்தூர் ரைட்சாய்ஸ் நகைச்சுவை சங்கம் மாதந்தோறும் நகைச்சுவைக் கூட்டத்தினை நடத்தி வருகிறது. இதன் 84ஆவது கூட்டம், 2010 ஆகஸ்டு மாதம் 08.08.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நடந்தது. அம்பத்தூர், வெங்கடாபுரம், வடக்கு பூங்கா தெருவிலுள்ள சத்சங்க மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் புகழ்மிகு எழுத்தாளர், பேச்சாளர், அமுதசுரபி ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் கலந்துகொண்டார். அவர், 'சிலேடைச் செல்வம்' என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் அருமையாகப் பேசினார். ஏராளமான இலக்கிய, வரலாற்று, சமூகக் குறிப்புகள் அவர் உரையில் கிடைத்தன.

"வாமன அவதாரத்தில் இருந்தவர், விஸ்வரூபம் எடுத்த போது, அவர் போட்டிருந்த ஆடைகளும் வளர்ந்தனவா என ஒருவர் கேட்டார். தெரியவில்லையே என அடுத்தவர் கூற, ஆடைகள் வளரவில்லை; உடல்மட்டும்தான் வளர்ந்தது; இதற்கு இலக்கியச் சான்று உள்ளது என்றாராம். என்ன அந்தச் சான்று எனக் கேட்க, 'ஓங்கி உலகளந்து உத்தமன் பேர்பாடி' என்ற பாடலே இதற்குச் சான்று. பேர்பாடி (Bare body) என்பது, வெற்றுடம்பைத்தானே காட்டுகிறது என்றாராம்.

"சிலேடையை மொழிபெயர்க்க இயலாது. கயா கயா கயா என்ற வாக்கியத்திற்குக் கயா என்பவன் கயாவுக்குப் போனான் என்பது பொருள். இதை வேறு எந்த மொழியிலும் பெயர்க்க இயலாது.

"சங்க இலக்கியத்தில் சிலேடை இல்லை. இடைக்காலத்தில் தான் அதன் வீச்சு, உச்சத்தில் இருந்தது. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய திருவேங்கடத்தந்தாதி என்ற நூலில் 100 பாடல்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு பாடலிலும் இரண்டாம் சீர் ஒன்றாகவே இருக்கும். ஆனால், அந்தச் சொல்லைப் பிரித்தால் வெவ்வேறு பொருள் தரும். சிலேடை என்பது, ஒரே சொல்லுக்கு இரு பொருள்கள் தருவது. ஆனால் இதுவோ, ஒரே சொல்லுக்கு நான்கு பொருள்கள் தருவது. இது, சிலேடையில் அசுர சாதனை ஆகும்.

"விநோத ரஸ மஞ்சரி என்ற உரைநடை நூல், நகைச்சுவை அம்சம் கொண்டது. அதன் மறுபதிப்பு வெளிவந்துள்ளது. அதனைப் படித்து மகிழ வேண்டும்.

"ரெயிலில் ஒரு முறை ஒரு பாட்டி, வெற்றிலையைக் குதப்பியபடி பயணி்த்தார். அவருக்கு எதிரில் இளம் பெண் ஒருத்தி அமர்ந்திருந்தாள். சற்று நேரத்தில் அந்தப் பெண் சற்றே கண்ணயர, ஜன்னல் வழியே காற்று வீசியது. அதில் அந்தப் பெண்ணின் துப்பட்டா வெளியே பறக்கத் தொடங்கியது. உடனே அந்தப் பெண்ணை எழுப்பிய பாட்டி, துப்பட்டா, துப்பட்டா எனக் கூறினார். அவர் வெற்றிலை மெல்வதைக் கண்ட பெண், துப்ப வேண்டியது தானே, என்னை ஏன் கேட்கிறீர்கள் என வினவ, அதற்குள் துப்பட்டா பறந்தே போனது."

இவ்வாறு பேசி வந்த அவரது உரையில் காளமேகம், கி.வா.ஜ., நா.பா., நா.காமராசன், சாவி, கண்ணதாசன், கலைஞர், சுப்புடு, செம்மங்குடி சீனிவாச ஐயர்.... உள்ளிட்ட பலரின் சிலேடைகளும் சமத்காரங்களும் ஒளிர்ந்தன. தம் வாழ்க்கை அனுபவங்கள் சிலவற்றையும் எடுத்துரைத்தார்.

காதியில் தள்ளுபடியுடன் கதர் வேட்டி எடுக்கச் சென்ற திருப்பூர் கிருஷ்ணன், வெவ்வேறு நிறங்களில் கறையி்ட்ட 5 வேட்டிகளைத் தேர்ந்தெடுத்தார். அதனைக் கட்டி வைத்தனர். அதே போன்று இன்னொருவரும் 5 வேட்டிகளைத் தேர்ந்தெடுக்க, அவற்றையும் கட்டி வைத்தனர். பணம் கட்டிய பின் தமக்குரிய கட்டுகளை எடுக்கவேண்டிய நேரம். ஒரே அளவான கட்டாக இருந்ததால், திருப்பூர் கிருஷ்ணனின் கட்டினை அந்த நபர் எடுக்கச் சென்றார். உடனே கல்லாவில் இருந்தவர், வேட்டி அவுருதுங்க என்றார். அதற்கு அவர், அடடா, இன்று பெல்ட் சரியாகப் போடவில்லை எனச் சரி செய்யத் தொடங்கினார். பிறகு தான், வேட்டி அவருடையது என விளங்கிக்கொண்டார். இவ்வாறு சொந்த வாழ்விலும் சிலேடைகள் தோன்றுவதுண்டு.

திருப்பூர் கிருஷ்ணன், தம் மனைவி ஜானகி, மகன் அரவிந்த் ஆகியோருடன் வந்திருந்தார். என் பேச்சை என் மனைவி கேட்டார் என நான் சொல்லிக்கொள்ளலாம் இல்லையா? அதற்காகத்தான் அழைத்து வந்தேன் என அதிலும் ஒரு சிலேடையை எடுத்து விட்டார். அவர் மனைவி, கேந்திரிய வித்தியாலயா என்ற பள்ளியில் துணை முதல்வராகப் பணியாற்றுகிறார்.

நகைச்சுவைச் சங்க உறுப்பினர்கள் பலரும் சிரிப்பு வெடிகளை வீசினர். அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. ஜோ என்ற ஒருவர் வந்தார். "திருப்பூர் கிருஷ்ணன், பழம்பெரும் எழுத்தாளர்" என்றார். அடுத்த நொடி, ஒரு வாழைப் பழத்தை எடுத்து, திருப்பூர் கிருஷ்ணன் கையில் கொடுத்து, "இதோ பழம் பெறும் எழுத்தாளர்" எனக் கூறியது ஏகப் பொருத்தம்.

எழுத்தாளர்கள் கே.ஜி.ஜவஹர், நகுபோலியன் என்ற பாரதி பாலு, பழ.பழனியப்பன், கிளிக் ரவி ஆகியோருடன் நானும் நகைச்சுவைக் குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டேன். இந்த நிகழ்வில் என் அம்மா செளந்திரவல்லி, என் அக்கா மகன் அரவிந்த் ஆகியோருடன் சென்றிருந்தேன். கிளிக் ரவி கூறிய நகைச்சுவைக்கு முதல் பரிசு அளித்தனர். நான் கூறிய நகைச்சுவைக்கு இரண்டாம் இடம். நகுபோலியனின் நகைச்சுவையும் பலே.

நகைச்சுவை வழங்கிய அனைவருக்கும் எழுதுகோல் பரிசாக வழங்கப்பெற்றது. இன்னும் சிலருக்கு விளையாட்டுப் பொருட்களும் நூல்களும் பரிசாகக் கிடைத்தன. வந்திருந்த அனைவருக்கும் சூடான சுண்டல் பரிமாறினர்.

இலட்சுமி நாராயணன் கீபோர்டு இசை வழங்க, சரண்யா அழகாகத் தொகுத்து வழங்க, சங்கப் பொறுப்பாளர் சிரிப்பானந்தா கலகலப்புடன் நன்றி நவின்றார். இறை வணக்கத்திற்குப் பதில், அரங்கில் அனைவரும் கூட்டாகச் சிரிக்க, விழா தொடங்கியது. அதே போன்று, அனைவரும் கூட்டாகச் சிரிக்க, விழா இனிதே நிறைவுற்றது.

http://www.vallamai.com/?p=422