!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2010/04 - 2010/05 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, April 27, 2010

திரிசக்தி பதிப்பகத்தின் 12 நூல்கள் வெளியீட்டு விழா

திரிசக்தி பதிப்பகத்தின் 12 நூல்கள் வெளியீட்டு விழா, 30.04.2010 வெள்ளி அன்று மாலை 5.45 மணிக்கு நிகழ உள்ளது. இதில் என் 'நினைவில் நிற்கும் நேர்காணல்கள்' என்ற நூலும் வெளியாகிறது. அனைவரும் வருக.'நினைவில் நிற்கும் நேர்காணல்கள்' என்ற நூலினை இணையம் வழியாக வாங்கிட, இந்தப் பக்கத்திற்குச் செல்லுங்கள்: http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=135&osCsid=a25f84408bdb7245d37fc2b8cb9d4b3a

திரிசக்தி பதிப்பகத்தின் இதர நூல்களையும் இங்கு வாங்கலாம்: http://www.ezeebookshop.com/eshop/index.php

Tuesday, April 20, 2010

நங்கநல்லூரில் ஒரு மாலைப் பொழுது

திரிசக்தி குழுமமும் நல்லூர் இலக்கிய வட்டமும் இணைந்து, 10.04.2010 அன்று சென்னை நங்கநல்லூரில் கவியரங்கத்தை நடத்தியதோடு இரண்டு புதிய நூல்களையும் வெளியிட்டன.

கவிமாமணி இலந்தை இராமசாமியின் “படைத்தளித்த பதிமூன்று”, பல்கலைச் செல்வர் ஆர்.எஸ். மணியின் “Idle Tears - விழியோரம் துளி ஈரம்” ஆகிய நூல்கள் வெளியிடப்பெற்றன.

கவிமாமணி இளையவன் தலைமையில் நடந்த கவியரங்கில் நல்ல பல கவிதைகளைக் கேட்க முடிந்தது. ஆர்.எஸ். மணியின் பாடலும் ரமணனின் பாடலும் மனத்தை உருக்குவதாக அமைந்திருந்தன. கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் நான் பார்வையாளராகக் கலந்துகொண்டு, நண்பர்கள் பலரைச் சந்தித்து மகிழ்ந்தேன்.


இந்தப் படத்தில் உள்ளோர் (இடமிருந்து வலமாக): ரமணன், ஹரிகிருஷ்ணன், வீரராகவன், திரிசக்தி சுந்தரராமன், ஆர்.எஸ். மணி, அண்ணாகண்ணன்.

இந்த நிகழ்வின் விரிவான படங்களை இங்கே காண்க.

(படத்திற்கு நன்றி: ரமணன்).

Monday, April 19, 2010

வெங்கட் சாமிநாதனின் தனித்துவம்

வெங்கட் சாமிநாதன், அநேகச் சிறப்புகளைக் கொண்டவர்.

நல்ல படைப்புகளைக் கொண்டாடுவது மட்டுமின்றி, அவ்வாறு இல்லாத படைப்புகளைச் சுட்டிக் காட்டவும் தயங்காதவர். முக்கியமாக, ஜோடனைகள், துதி, வெற்றுப் புகழ்ச்சி, ஆடம்பரம், மமதை, அதிகார போதை, செயற்கைத்தனம்..... உள்ளிட்ட அடையாளங்களுடன் வரும் படைப்புகளை வெளிப்படையாக விமர்சி்த்து வருபவர்.

திராவிடம், கம்யூனிசம் ஆகிய முழக்கங்களுடன் வந்த படைப்புகள், அவரின் விமர்சனக் கணைகளுக்கு அதிகம் ஆளாகின. காக்காய் பிடித்துக் காரியம் சாதிப்பவர்கள், திட்டமிட்டுப் பரிசு பெறுபவர்கள் ஆகியோரை எப்போதும் ஒரு பிடி பிடிப்பவர்.

எளிமையும் சி்க்கனமும் அவரின் வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டன. ஒரு பக்கக் காகிதங்களைக் கூட வீணாக்க மாட்டார். அதில் தன் அடுத்த படைப்புகளையும் கடிதங்களையும் எழுதுபவர். தமக்கு வந்த கடித உறைகளையும் பிரித்து, உட்புறம் வெளித்தெரிவது போல் மடித்து, மீண்டும் ஒட்டி, இன்னொருவருக்கான கடித உறைகளைத் தயாரிப்பார். இதில் அவர் காந்தியச் செல்வராகவே திகழ்கிறார்.

70 வயதுக்கு மேல் கணினியில் தமிழ்த் தட்டச்சுக் கற்றுக்கொண்டு, இன்று முழுக்க முழுக்க அதிலேயே எழுதி வருகிறார். இது, இதர எழுத்தாளர்களுக்கும் முதியவர்களுக்கும் வழிகாட்டும் செயலாகும். எந்த வயதிலும் எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் கூர்மையும் அவரிடம் உண்டு.

இலக்கிய விமர்சகராக மட்டுமின்றி, ஓவியம், இசை, கூத்து... எனப் பற்பல கலைகளையும் அவர் கவனித்து, தம் கோணத்தில் நல்லனவற்றைப் பாராட்டி, அல்லனவற்றைச் சுட்டிக் காட்டி வருபவர். தமிழில் மட்டுமின்றி, இதர மொழிப் படைப்புகள் குறித்தும் இவ்வாறு எழுதியுள்ளார். தமிழில் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

கலை மட்டுமின்றி, அரசியல், சமுதாயம், திரைப்படம், தனி ஆளுமைகள்.... எனப் பல துறைகளிலும் அவரின் ரேடார் சுழன்று சுழன்று படம் பிடித்துள்ளது. தயவு தாட்சண்யம் இன்றி, தரத்தினை மட்டுமே முதன்மையாகக் கொண்டு அவர் இடைவிடாமல் இயங்கி வருகிறார்.

வெங்கட் சாமிநாதனைப் பலரும் விமர்சகராக மட்டுமே அறிவார்கள். அவருக்குள் அற்புதமான படைப்பாளி மறைந்திருக்கிறார். நினைவுச் சுவடுகள் என்ற அவரின் வாழ்க்கை வரலாற்றுத் தொடரினைத் தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன் ஆகியவற்றில் தொடர்ந்து வெளியிட்டவன் என்ற வகையில் புதினம் எழுதக்கூடிய ஆற்றல் அவருள் இருப்பதை நான் கண்டுகொண்டேன். ஆயினும் ஏற்ற வாய்ப்புகள் இன்மையினால், அவர் அத்திசையில் பயணிக்கவில்லை.

உண்மை, நேர்மை, தரம் எனப் பல கொள்கைகளை இந்தச் சமுதாயத்திற்கு அவர் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி வருகிறார். எல்லா நெறிகளையும் ஊதித் தள்ளி, லௌகீக லாபங்களே முக்கியமாகக் கொண்டு, ஒட்டுமொத்த சமுதாயமும் மாறிவிட்ட நிலையில் வெங்கட் சாமிநாதனின் குரல், தனித்து ஒலி்க்கிறது.

ஒருவர் செய்த குற்றத்தினை அல்லது தவறினை, அது நிகழ்ந்து எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் மீண்டும் மீண்டும் குத்திக் காட்டும் தன்மையினைச் சில நேரங்களில் வெ.சா.விடம் காண்கிறேன். ஒரு நபரின் குறைகளைக் காணும்போது, அவரின் நன்மைகளையும் கணக்கில் எடுக்கலாமே. குற்றங்களை மட்டும் ஏன் கிளற வேண்டும் என நான் சில நேரங்களில் நினைப்பதுண்டு.

ஆயினும் அவரிடம் குற்ற உணர்வை ஊட்டுவதன் வழி, அவர் தொடர்ந்து அதே செயலில் ஈடுபடாமல் வெ.சா. தடுக்கிறார். இது ஒரு நல்ல விளைவு. அதே நேரம், குற்றம் சாட்டப்பட்டவர், அதை நேர்மறையாக எடுக்காமல் வெ.சா. மீது பகை வளர்க்கும் விதமாகவும் சில நேரங்களில் காட்சிகள் திரும்பி விடுகின்றன.

கனிவுடன் சுட்டிக் காட்டுவது ஒரு விதம், ஏளனத்துடன் குற்றம் சாட்டுவது இன்னொரு விதம். இரண்டிற்கும் வெவ்வேறு விளைவுகள் உண்டு. இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது அவரவர் விருப்பம்.

எது எவ்வாறாயினும் வலுவான எழுத்தாற்றல், கூர்மையான கருத்துகள், இளையோர் - முதியோர், செல்வர் - வறியோர், இன்னார் - இனியார், செல்வாக்கு உள்ளோர் - இல்லார்... எனப் பேதம் பார்க்காமல், நடுநிலையுடன் தன் மனத்திற்குப் பட்டவற்றைக் கூறும் தன்மையினால் வெ.சா. தனித்துவத்துடன் மிளிர்கிறார். அவரின் இருப்பு, தமிழுக்குச் சிறப்பு.

-----------------------------------------------------------------------------------
மேலுள்ள படம், வெங்கட் சாமிநாதன் மருத்துவமனையில் இருந்தபோது எடுத்தது. எடுத்தவர், வெ.சா. மனைவி சரோஜா சாமிநாதன்.

Friday, April 09, 2010

முனைவர் பட்ட ஆய்வேட்டினைச் சமர்ப்பித்தேன்

'தமிழில் மின்னாளுகை' (e-Governance in Tamil) என்ற தலைப்பில், சென்னை
பச்சையப்பன் கல்லூரியில், முனைவர் வா.மு.சே.ஆண்டவர் வழிகாட்டுதலில் நான், முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டு வந்ததை அறிவீர்கள்.


இந்தத் தலைப்பிலான எனது முனைவர் பட்ட ஆய்வேட்டினை 05.04.2010 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்துள்ளேன்.


இந்த ஆய்வுக்குத் தரவுகள் அளித்து, ஆலோசனை வழங்கி, வழிகாட்டி, ஊக்குவித்து, ஒத்துழைத்து, உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

முத்துராமனுக்கு உதவுங்கள்

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ள நண்பரும் எழுத்தாளரும் இதழாளருமான முத்துராமனை 08.04.2010 அன்று அவரது இல்லத்தில் சந்தித்தேன். என் அப்பா குப்புசாமியும் உடன் வந்திருந்தார்.

முத்துராமன் உடல் மெலிந்திருந்தார். ஆனால், இன்னமும் அதே அமைதி. கண்களி்ல் அதே கூர்மை. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்த அவருடனான சந்திப்புகளும் உரையாடல்களும் நினைவுத் திரையி்ல் ஒரு கணம் அசைந்தன.

முத்துராமன் (வயது 33), படைப்பூக்கம் கொண்டவர். கிழக்குப் பதிப்பகத்திலும் 'தமிழக அரசியல்' வார இதழிலும் பணியாற்றியவர். 'சதுரங்கச் சிப்பாய்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர். மேலும் 'சிரிப்பு டாக்டர்' (என்.எஸ்.கிருஷ்ணன் பற்றியது), 'பகத்சிங்' ஆகிய வாழ்க்கை வரலாற்று நூல்களையும் இயற்றியுள்ளார். இவற்றைக் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

'சதுரங்கச் சிப்பாய்கள்' நூலின் அணிந்துரையில் அசோகமித்திரன், "இத்தொகுப்பிலுள்ள கதைகள், ஓர் எழுத்தாளனின் விரிந்து வரும் பார்வைக்கு அடையாளமாக உள்ளன. இந்த இளம் எழுத்தாளரிடம் தமிழ் வாசகர்கள் எதிர்பார்க்க நிறையவே இருக்கிறது" எனக் கூறியுள்ளார். முத்துராமனின் நூல்களைக் குறித்து முழுமையாக அறிய: http://nhm.in/shop/Muthuraman.html

முத்துராமன், தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவர் சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். அறுவை சிகிச்சை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இங்கே:
http://farm5.static.flickr.com/4013/4499757814_eeed62c7d2_o.jpg

இந்த உடல்நலப் பாதிப்பினை எதிர்கொள்வதில் உள்ள சவால்களை முத்துராமன் விளக்கினார். இரண்டு சிறுநீரகங்களும் முழுமையாகச் செயலிழந்த நிலையில் கழிவுப் பொருட்கள் குருதியிலிருந்து பிரிக்கப்படவில்லை. உடலினுள் கழிவுகளுடன் கூடிய குருதி சுழல்வதால், மூச்சிரைப்பு உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகின்றன.
(பார்க்க: http://ta.wikipedia.org/wiki/சிறுநீரகம்; http://en.wikipedia.org/wiki/Kidney)

இந்தச் சிக்கலுக்காக, கடந்த நான்கு மாதங்களாக, நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் என்ற குருதிச் சுத்திகரிப்புச் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுநீரகம் செய்ய வேண்டிய வேலையை இந்த டயாலிஸிஸ் கருவி செய்கிறது (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Dialysis). வாரத்திற்கு இரண்டு முறைகள் டயாலிஸிஸ் செய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறை செய்வதற்கும், போக்குவரத்துச் செலவு உள்ளிட்ட இதர செலவுகளைச் சேர்க்காமல், குறைந்தபட்சம் ரூ.2500 ஆகிறது.

முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரின் தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இவருக்குத் தாயாரின் சிறுநீரகம் பொருந்துமா என்ற சோதனைக்கே ரூ.70 ஆயிரம் செலவாகியுள்ளது. அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து, சுமார் நான்கு முதல் ஆறு லட்சம் ரூபாய் வரை ஆகும் எனக் கணித்துள்ளனர்.

அரசு மருத்துவமனையில் இந்த அறுவையை ஏன் செய்ய இயலவி்ல்லை என்றும் அவர் கூறினார். அரசு மருத்துவமனையிலும் சிறுநீரக மாற்று அறுவை செய்யப்படுகிறது. ஆயினும் அங்கு நிகழ்த்தப்படும் 10 அறுவைகளில் 6 அறுவைகள் தோல்வி அடைகின்றன. மீதமுள்ள நான்கில் இரண்டில் சில மாதங்களிலும்  மேலும் இரண்டில் ஓரிரண்டு ஆண்டுகளிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அங்கு 100% வெற்றிகரமாகச் சிறுநீரக அறுவை செய்ய முடியும் என அவர்களாலேயே உறுதிகூற முடியவில்லை என்றார் முத்துராமன்.

உடலுறுப்பு மாற்று அறுவையில் உள்ள சட்ட நடைமுறைகளும் நிர்வாக நடைமுறைகளும் எவ்வளவு கடினமாக இருக்கின்றன என்றும் எடுத்துரைத்தார். இதற்கு வட்டாட்சியர் முதல் நீதிபதி வரை கையொப்பம் பெற வேண்டியிருந்தது. இவை அனைத்தையும் பெற்று அளித்தாகிவிட்டது.

மாற்றுச் சீறுநீரகம் தயார்; சட்ட அனுமதி தயார்; பணமும் நல்லோரின் வாழ்த்துகளும் கிடைக்கும் பட்சத்தில், 2010 ஏப்ரல் மாதத்திலேயே சிறுநீரக மாற்று அறுவை நிகழ்த்த வாய்ப்புகள் உண்டு.

என்னால் இயன்ற தொகையை முத்துராமனிடம் அளித்தேன். அவர் விரைவில் உடல்நலம் பெறுவார்; புத்துணர்ச்சியுடன் இயல்பு வாழ்வுக்குத் திரும்புவார் என்ற நம்பிக்கையை அவருடனும் அவர் அம்மாவுடனும் பகிர்ந்துகொண்டேன். சிகிச்சைக்குத் தேவையான தொகை விரைவில் கிடைத்துவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்தேன்.

முத்துராமனுக்கு நீங்கள் உதவ விரும்புகிறீர்களா?

முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண்:

SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBIN0005090

MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / வங்கி வரைவோலைகள் வழங்கலாம்.

முகவரி :

முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com

அல்லது கிழக்குப் பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.

முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018.
044 – 4200 9601 / 03/ 04.

முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :

ஜெ. ராம்கி – ramkij@gmail.com
பாலபாரதி – kuilbala@gmail.com
முகில் – mugil.siva@gmail.com – 99400 84450

இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் முத்துராமனுக்குத் திருமணம் நிகழ்ந்தது. வாழ்வில் இன்னும் அவர் பயணிக்க வேண்டிய தொலைவு மிக நீண்டது. 33 வயதே ஆன இந்த இளம் தோழர், நலம்பெற வேண்டும். விடைபெறும்போது இவரின் அன்னையின் கண்கள் கலங்கியிருந்தன. அந்த அன்னையின் கண்ணீரைத் துடைக்க, நம் அனைவரின் கரங்களும் நீள வேண்டும்.

படத்திற்கு நன்றி:  http://nhm.in