!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2009/11 - 2009/12 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, November 18, 2009

தமிழக முதல்வருடன் ஒரு சந்திப்பு



நவம்பர் 11, 2009 நாளிட்ட இந்தியா டுடே வார இதழில் பொன்.மகாலிங்கம் எழுதிய 'இருள் படிந்த கூடாரங்கள்' என்ற கட்டுரை வெளியானது. அதில் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களின் இப்பொழுதைய நிலை குறித்துப் படம் பிடித்துக் காட்டியிருந்தார். அதில் 'இலங்கையில் முகாமிலும் வெளியிலும் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் பெரும்பாலான முகாம்கள் தரமானதாக இல்லை. ஆனால், பாதுகாப்பு உண்டு. என்றாலும் இங்கு மனித உரிமைகள் இல்லாமல் நடைப் பிணங்களாகத்தான் வாழ்கிறார்கள்' என்று மறவன்புலவு க.சச்சிதானந்தன் கருத்துத் தெரிவித்திருந்தார். அத்துடன் 'இந்தியக் குடியுரிமை எங்களுக்குத் தேவையில்லை. நிலையான வாழ்வுரிமைதான் தேவை' என்றும் கூறியிருந்தார்.

இந்தியா டுடே கட்டுரை இதோ:

முதல்வர் கருணாநிதி மனதை கரைந்த கட்டுரை.. இதோ!

இந்தக் கட்டுரையைப் படித்து, அத்துடன் வெளியாகியிருந்த புகைப்படங்களையும் பார்த்த தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, அதிர்ந்தார்; மிக வருந்தினார்; கண்ணீர் பெருகுவதாக எழுதினார். உடனே தமிழக அமைச்சர்களின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அதற்கு முன்னதாக மறவன்புலவு சச்சிதானந்தனை அழைத்து, இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும் எனக் குறிப்புகள் வழங்குமாறு கோரினார். அதை அடுத்து சச்சிதானந்தன், சுமார் 20 கோரிக்கைகள் அடங்கிய வரைவினை உருவாக்கினார். அதனைத் தமிழக முதல்வரிடம் சேர்க்கும் முன்னதாக என்னிடம் அனுப்பி, வாக்கிய அமைப்புகளைச் சரி பார்க்குமாறும் மேலும் சேர்க்க வேண்டியவை இருப்பின் அவற்றைச் சேர்க்குமாறும் கூறினார். அவ்வாறே என் குறிப்புகளையும் சேர்த்து இறுதி வரைவினை உருவாக்கினார்.

அந்த வரைவு இதோ:

தமிழக முகாம்களில் சிறந்த பாதுகாப்புடன் நலிந்து வாழும் ஈழத் தமிழருக்கு என்னென்ன செய்யவேண்டும்?

அந்த வரைவினைப் பெரிய எழுத்துகளில் படியெடுத்தார். தமிழக முதல்வரிடம் அளித்தார். ஒவ்வொரு குறிப்பினையும் முதல்வரிடம் நேரில் விளக்கினார். அவற்றை எடுத்துக்கொண்டு சட்டப் பேரவைக்குச் சென்ற முதல்வர், உடனடியாக ரூ.12 கோடி நிதியுதவியினை அறிவித்தார். அத்துடன் தமிழகம் முழுதும் உள்ள அகதிகள் முகாம்களுக்குத் தமிழக அமைச்சர்களை நேரில் செல்லப் பணித்தார். அகதிகள் முகாம்களின் நிலை குறித்து நவம்பர் 10ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தமிழக அமைச்சர்களும் அனைத்து முகாம்களுக்கும் சென்றனர். நிலைமையை ஆராய்ந்தனர். தங்கள் அறிக்கைகளை முதல்வரிடம் வழங்கினர். அதைத் தொடர்ந்து 12.11.2009 அன்று மீண்டும் அமைச்சரவையைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் மறுவாழ்வுக்காக ரூ.100 கோடியினை ஒதுக்குவதாக அறிவித்தார்.

அந்த அறிவிப்பு இதோ:

இலங்கை அகதிகள் மறுவாழ்வுக்கு ரூ.100 கோடி: கருணாநிதி அறிவிப்பு

இலங்கைத் தமிழ் அகதிகளின் நலவாழ்விற்காக மறவன்புலவு சச்சிதானந்தன் விடுத்த கோரிக்கைகளுள் பெரும்பாலானவற்றை முதல்வர் அப்படியே ஏற்றுக்கொண்டார். மேலும், உடனே நடவடிக்கை எடுத்தார். ரூ.100 கோடியினை ஒதுக்கினார். இதற்காகத் தமிழக முதல்வருக்கு நன்றி கூற, 13.11.2009 அன்று காலை சச்சிதானந்தன் முதல்வரில்லம் சென்றார். வரைவினை உருவாக்க உதவிய என்னையும் உடன் வருமாறு அழைத்தார். இருவரும் அங்கு சென்றதும் முதல்வரிடம் விவரம் தெரிவித்தனர்.

என் இனிய நண்பரும் கவிஞர் சேவற்கொடியோனின் மகனும் இதழாளராய் இருந்து, தமிழக அரசின் செய்தித் துறையில் மக்கள் தொடர்பாளராய் இருப்பவருமான கோவலனை அங்கு கண்டேன். தற்போது, முதல்வருடனே இருந்து, செய்திப் பணி ஆற்றி வருகிறார்.

எம்மைக் கண்ட முதல்வரின் உதவியாளர் சண்முகநாதன், "நீங்கள் கேட்ட அனைத்தையும் முதல்வர் கொடுத்துள்ளார்.. பார்த்தீர்களா?" என்றார்.

நியமனம் பெற்றுப் பார்க்க வந்தவர்களைப் பார்த்த பின்னர், நாங்கள் இருவரும் முதல்வரிடம் சென்றோம். படப்பிடிப்பாளர் எம்மை முந்தி விரைந்தார்.



நாங்கள் இருவரும் அவரைச் சந்தித்து, நன்றிகளைத் தெரிவித்தோம். சச்சிதானந்தன் பூச்செண்டு அளித்து நன்றி தெரிவித்தார். கவிநாயகர் கந்தவனம் எழுதிய நூல்களை முதல்வரிடம் அளித்தார். 1994இல் முரசொலியில் ஈழத் தமிழர் தொடர்பாகச் சச்சிதானந்தன் எழுதிய நீண்ட கட்டுரை வெளியாகியிருந்தது. அதன் படியினையும் அளித்தார். அதில் உள்ள விவரங்கள் முதல்வருக்குப் பயனாகும் எனச் சச்சிதானந்தன் கூறினார்.

தமிழக முதல்வருடன் 10 படங்கள்

கந்தவனம் குறித்து "இவர் ஸ்காலரா?" என விசாரித்த முதல்வர், "இவரை உலகச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ளச் சொல்லுங்கள்" என்றார். 'அத்தாணி அழகர்' என முதல்வரைப் பற்றி விவரித்த கந்தவனத்தின் கட்டுரையைச் சச்சிதானந்தன் காட்டினார். அந்தப் பக்கங்களை முதல்வர் ஆர்வத்துடன் பார்த்தார்.

"இவர் ஐநா சபையில் பணியாற்றியவர். இலங்கை அரசிலும் பணியாற்றியவர். பண்டாரவன்னியன் எழுதியபோது, பல விவரங்களை அளித்து உதவியவர். அது எங்கே இருக்கிறது, இது எங்கே இருக்கிறது எனப் பலவற்றையும் இவரிடம் கேட்டு எழுதினேன்" என அருகில் இருந்த அமைச்சர்கள் பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோரிடம் சச்சிதானந்தனை அறிமுகப்படுத்தினார்.

"பதிப்பகம் (காந்தளகம்) எப்படி நடக்கிறது?" என முதல்வர் கேட்டார். "குறையில்லை" என்றார் சச்சி.

ஈழத் தமிழருக்கு முதல்வர் பெரும் உதவிகளைச் செய்ததற்காகச் சச்சிதானந்தன் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் மாணாக்கர்களாக ஈழத் தமிழர் இருந்ததை நினைவுகூர்ந்த அவர், இன்று தமிழகப் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், பொறியியல் துறைகளுக்கு ஈழத்து மாணவர் சேர இயலாத நிலை இருப்பது குறித்து வருந்தினார். இதற்குப் பதில் அளித்த பொன்முடி, "இலங்கைத் தமிழர்களுக்கான இட ஒதுக்கீடு, மத்திய அரசின் பொறுப்பிற்குச் சென்றுள்ளது. மற்றபடி ஈழத் தமிழர்கள், தமிழகக் கல்வி நிறுவனங்களில் சேருவதில் தடையில்லை" என்றார்.

தமிழக முதல்வருடன் 10 படங்கள்

இலங்கையில் முள்வேலி முகாம்களிலிருந்து ஓர் இலட்சத்து இருபதினாயிரம் தமிழர்கள், சொந்த வாழ்விடங்களுக்கு மீண்டுள்ளதாக இலங்கை அமைச்சர் தொண்டமான் தன்னிடம் தெரிவித்துள்ளதாக முதல்வர் தெரிவித்தார். "இலங்கை அரசு கூறும் செய்தியையே தொண்டமான் கூறுவார்" எனச் சச்சிதானந்தன் கூறினார். "தொண்டமான் சரியானதையே சொல்லுவார்" என முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.

"சேதுக் கால்வாய்த் திட்டத்தில் தடைகள் நீங்குமா?" எனச் சச்சிதானந்தன் வினவினார். "அதுதான் தடை பட்டு நிற்கிறதே!" என முதல்வர் வருந்தினார். "ஈழத் தமிழர்களாகிய எங்களுக்கு இதுவும் பின்னடைவாக இருக்கிறது" எனச் சச்சிதானந்தன் துயருடன் கூறினார்.

"கவிஞர் காசி ஆனந்தன் எப்படி இருக்கிறார்?" என முதல்வர் வினவினார். "நலமுடன் இருக்கிறார். தன் மகள் திருமணத்திற்கு உங்களை அழைக்க இங்கு வந்தார்" என்றார். "அவருக்குத் திருமண அழைப்பு வைக்கும்போதுதான் என் நினைவு வந்ததா?" என முதல்வர் சிரித்தபடி கேட்டார். "காசி ஆனந்தன் இங்கு உங்களிடம் வந்தபோது, அவரால் உள்ளே வரமுடியவில்லை; எனவே உங்கள் மகள் கனிமொழியிடம் அழைப்பிதழை அளித்தார்; இங்கு வந்த போதும் உங்கள் மகளிடம் போனபோதும் நான் அவருடன் இருந்தேன்" எனச் சச்சி கூறினார்.

சச்சிதானந்தன், என்னை முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தார். "இவர் கவிஞர் அண்ணாகண்ணன். திருவாரூரில் நீங்கள் படித்த பள்ளியில் படித்தவர்" என்றார். "அப்படியா? அண்ணாகண்ணனா உங்கள் பெயர்?" என என்னைப் பார்த்து விசாரித்தார். "ஆம், வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான் ஐந்து ஆண்டுகள் படித்தேன்" என்று தெரிவித்தேன்.

தமிழக முதல்வருடன் 10 படங்கள்

"இணையத்தில் குறிப்பிடத் தகுந்த வகையில் பணியாற்றி வருகிறார். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்" என்றார் சச்சிதானந்தன்.

உடனே அடுத்த இணைய மாநாட்டினையும் உலகச் செம்மொழி மாநாட்டுடன் நடத்துவதாக அறிவித்திருப்பதை முதல்வர் குறிப்பிட்டார். "ஆம், அந்த அறிவிப்பை நானும் படித்தேன். நல்ல முயற்சி" என்றேன்.

நான் எனது தமிழில் இணைய இதழ்கள், உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு ஆகிய நூல்களை அளித்தேன். இக்காலத் தமிழின் தேவைகள் என்னென்ன? என்ற கட்டுரை, சென்னை டைஜஸ்ட் வார இதழில் வெளியாகியிருந்தது. அதன் படியினையும் வழங்கினேன். தமிழக அரசின் தளங்களை ஒருங்குறிக்கு (யுனிகோடுக்கு) மாற்ற வேண்டும் என்றும் கோரினேன். செய்வோம் எனப் பொன்முடி தலையசைத்தார்.

அங்கு அமைச்சர்கள் பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர். "இவர்தான் உயர்கல்வி அமைச்சர்" எனப் பொன்முடியை எனக்கு அறிமுகம் செய்வித்த தமிழக முதல்வர், அவரை என்னுடன் தொடர்பு வைத்துக்கொள்ளுமாறு கூறினார். பொன்முடி, "உலகச் செம்மொழி மாநாட்டில் ஒரு கட்டுரை வாசியுங்கள்" என்று என்னிடம் கூறினார். என் முகவரி அட்டையையும் பெற்றுக்கொண்டார்.

முதல் மாடியிலிருந்து கீழே தரைத் தளத்திற்கு நாங்கள் வந்தோம். எம்மை அடுத்து வந்த அமைச்சர் பொன்முடி, "உங்களைப் பார்த்த பின் இன்று தலைவர் மிகவும் உற்சாகத்துடன் இருக்கிறார்" என எங்களிடம் தெரிவித்தார்.

முதல்வர் உதவியாளர்களின் கணினியில் ஒருங்குறி எழுத்துகள் தெரியவில்லை என்ற சிக்கல் இருந்தது. சச்சிதானந்தனின் குறிப்பின்படி என்எச்எம் ரைட்டர், என்எச்எம் கன்வர்ட்டர் (NHM Writer, NHM Converter) ஆகியவற்றைத் தரவிறக்கி, அந்தக் கணினியில் நிறுவினேன்.

அவ்வமயம், தரைத்தளம் வந்த முதல்வர், மீண்டும் சச்சிதானந்தனை அழைத்துக் கவிஞர் காசி ஆனந்தன் குறித்து விசாரித்தார். "அவர் உங்களை வந்து பார்ப்பார்" எனச் சச்சிதானந்தன் கூறினார்.

தமிழக முதல்வரில்லத்துள் நுழைந்தோம், பேசினோம் என்ற உணர்வு குறைவு; நன்றாகத் தெரிந்தவர் ஒருவர் இல்லம் சென்று வந்தோம் என்ற உணர்வே அதிகம். அங்கு எல்லோரும் எம்மீது அன்புடனும் பரிவுடனும் இயல்பாக நடந்துகொண்டனர்.

பொன்.மகாலிங்கம் தொடங்கிவைக்க, மறவன்புலவு சச்சிதானந்தன் அந்தக் கோரிக்கைகளுக்கு உருக் கொடுக்க, அமைச்சர்களின் அறிக்கைகள் சான்றாக, முதல்வரின் 100 கோடி நிதியுதவி அறிவிப்பு வெளியானது. இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு நல்ல வாய்ப்பு உண்டானதை எண்ணி, மகிழ்வுடன் விடை பெற்றோம்