!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, January 11, 2005

** நம்மைச் சுற்றி... **

என்
இளமைத் தேன்கூட்டின் மீது
நீ பார்வைச் சிறுகல் வீசினாய்.
நம்மைச் சுற்றி
எத்தனை கனவுகள்...

** உன் இன்னிசை **

காலம் விரைந்தோடுகிறது.
அந்த முத்தத்தின் ஈரம்
இன்னும் காயவில்லை.
அந்த மெளனத்தின் ஓசை
இன்னும் ஓயவில்லை.

நகரெங்கும் எதிரொலிக்கும்
தேவாலய, திருக்கோயில் மணியோசைபோல்
என் மனமெங்கும்
உன் பெயர்
எதிரொலிக்கிறது.

மசூதியின் பாங்கோசைபோல்
என் உள்ளத்தில்
உன் பெயரால் ஒரு
நீண்ட ஆலாபனை
நிகழ்கிறது.

இடைவிடாது கதறும்
ஆலைச் சங்கொலிபோல்
உனக்காக என் உயிர்
கூக்குரல் இடுகிறது.

என் இதயத்திற்கு இணையாக
விரைந்தோடுகிறது ரெயில்.

சிணுங்கும் இந்தத் தொலைபேசி
நான் மிக விரும்பும் பொருள்களில்
ஒன்றாகி விட்டது.

எல்லா ஓசைகளிலும்
உன் இன்னிசை
நிரம்பி வழிகிறது.

கண்ணே,
என் சுவாசம்
உன் வாசத்துக்காகக் காத்திருக்கிறது.

** ஒன்றுக்குள் ஒன்று **

அவிழ்ந்து சுருள்விரிந்து
உன் இடைதழுவும் கூந்தல்
என் விரல்களின் நீட்சியென்று அறிவாயா?

உன் இமைகளுக்கிடையே
என் லப்டப் ஒசை கேட்பது தெரிகிறதா?

நிறமிழந்த என் குருதியே
உன் திருவாய்க்குள் ஊற்றெடுக்கிறது.

செல்லச் சிணுங்கலுடன்
சிரிக்கும் உன்
வளையல்களுக்கிடையே
என் நாக்கு நர்த்தனமிடுகிறது.

செழித்திருக்கும் உன் இளமையை
என் கனவுகள்
காத்து நிற்கின்றன.

இறுக்கி அனைத்து
முனை படபடக்கும் அந்தச் சேலை
என் தேகமேயன்றி வேறில்லை.

உன் உயிரின்
அத்தனை வாசலிலும்
யாழ்மீட்டி நிற்கிறது
என் ஆன்மா.

** தலைகீழ் மாற்றம் **

அவளை
ஒரு விளையாட்டுப் பெண்ணாகப் பார்த்தேன்.
கடைசியில்
நானே அவளது விளையாட்டுப் பொருளானேன்.

அவள் பேச்சை
மழலை எனச் சிரித்தேன்.
பிறகு அவள் பாடுவதற்காக
நானே ஒரு பாடலாகி நின்றேன்.

அவளுக்குச் சொல்ல
நிறைய அறிவுரைகள்
என்னிடம் இருந்தன.
இப்போது
என் விரல்பிடித்து
அவள் அழைத்துச் செல்வதையே
விரும்பி நிற்கிறேன்.

** குழந்தையிடம் சிற்றாடு **

பூகம்பத்துக்குப் பிந்தைய ஆற்றைப்போல
உன்னைப் பார்த்தபிறகு
நான் திசைமாறிவிட்டேன்.

நீ சிரிக்கும்போது
மாலைநேர நிழல்போல
நீள்கிறது என் மகிழ்ச்சி.
நீ சினக்கையில்
உச்சிநேர நிழலாய்
பாதத்தின் கீழே
பதுங்குகிறது என் இன்பம்.

எந்தப் பக்கம் திரும்பினாலும்
மறிக்கிறது உன் நினைவு.
திராட்சைச் சாற்றின் போதையை
உன் விழித்திராட்சைகள் தருகின்றன.

சிறு குழந்தையிடம் சிக்கிய
ஆட்டுக் குட்டிக்குக்
கவலையில்லை.
எனக்கினி ஏது கவலை?

** அது மட்டுமா? **

முன்னொரு நாளுனைக் கண்ணுறும் போதெனை
மோகனம் அள்ளியது.
பின்னொறு நாளிவன் பேச்சுறும் போதெனைப்
பேய்மழை கவ்வியது.
என்னொரு நாளையும் உன்னுரு ரொப்ப
இறக்கை முளைக்கிறது.
இன்னொரு நாளிதைப் போலிலை யாய்தினம்
என்மனம் சொல்கிறது.

சொப்பனம் என்றால் சுகம்மட்டுமா அது
காலத்தின் முன்னோட்டமும்.
சோபனம் என்றால் முகம்மட்டுமா அது
சிந்தையின் கண்ணோட்டமும்.
அர்ப்பணம் என்றால் சரண்மட்டுமா இன்று
அதைநான் அணுகட்டுமா?
அம்மணம் என்றால் உடல்மட்டுமா இன்று
அதைநான் அணியட்டுமா?

** உப்பு நீரும் உதட்டு நீரும் **

உன் மூச்சுக்காற்றின் வெப்பத்தில் - என்
ஆசை அணையின் நீர்ப்பரப்பு
ஆவியாகிறது.

உப்புநீர் குடித்தவனின் தாகம் எனக்கு உன்
உதட்டுநீர் கொடுப்பாயா?

உன் மலர்வனத்தின் மடியில் இளைப்பாறி
உன் கனிமரத்தின் கிளையில் பசியாறி
உன் நறுமணத்தில் உள்ளம் களியேறி
நிற்கிறேன் கண்ணே பித்தம் தலைக்கேறி!

காட்டாறு போலநான் பாய்ந்திருந்தேன் - என்னைக்
கைக்குழாய் போலநீ கட்டிவிட்டாய்.
காற்றாக எங்கெங்கும் தவழ்ந்திருந்தேன் - என்னைக்
காற்றாடி ஆக்கி நீ இயக்குகின்றாய்.

உலகத்தை ஒருகை பார்க்கவந்தேன் - உன்
உள்ளங்கைக் குள்ளேயே சிக்கிவிட்டேன்.
திலகமே இருகைகள் அணைப்பதற்கே - அர்த்தம்
தெரிந்துகொள் அடிக்கடிநான் கணைப்பதற்கே.

No comments: