!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, May 08, 2005

"நான் நாஸ்டர்டாம்ஸ் இல்லை'' - கார்ட்டூனிஸ்ட் மதி

சந்திப்பு : அண்ணாகண்ணன்

தினமும் மணியான கேலிச் சித்திரங்களை வரைந்து, மக்களின் மதிநிறைந்தவர், கார்ட்டூனிஸ்ட் மதி. தமிழின் விரல்விட்டு எண்ணக்கூடிய கார்ட்டூனிஸ்டுகளில் மிக இளையவர் (35 வயது), பத்தாயிரம் கார்ட்டூன்களுக்கு மேல் வரைந்துள்ள இவர், "தினமணி'யில் சேர்ந்து கடந்த 6 ஆண்டுகளில் மூவாயிரம் கேலிச் சித்திரங்களைத் தீட்டியுள்ளார். இயற்பெயர், சு.மாரியப்பன். நெல்லைக்காரர். இவரின் தாயார் மரகதகோமதி. தாயார் பெயரின் முதல்-கடைசி எழுத்துகளை இணைத்து "மதி' எனப் பெயர் சூட்டிக்கொண்டார். சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அசாதாரண பணியை ஆற்றிவரும் மதி பாராட்டுக்குரியவர்.
அவருடன் ஒரு சந்திப்பு

Image hosted by Photobucket.com

அ.க.: ஜோக்குக்கும் கார்ட்டூனுக்கும் என்ன வேறுபாடு?
மதி : ஜோக்கில் செய்தி இருக்காது. நகைச்சுவை மட்டுமே இருக்கும். அதில் பிரச்சினைகளுக்கு இடமில்லை. ஆனால், கார்ட்டூன், பிரச்சினைகளைப் பேசும். கார்ட்டூன், கசப்பு மருந்தைத் தேன் கலந்து கொடுக்கிற மாதிரி.

அ.க. : பிரச்சினைகளைப் பேசும் ஜோக், கார்ட்டூன் அந்தஸ்தை அடையுமா?
மதி : தானாகவே அந்நிலையை அடைந்துவிடும்.

அ.க.: பிரச்சினைகளைப் பேசாத கார்ட்டூன், ஜோக் ஆகிவிடுமா?
மதி : ஜோக் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். தீபாவளிக்குத் துணியெடுப்பது, மருமகன், மாமியார் வீட்டில் தங்கிவிடுவது... இதுமாதிரி பொதுவான விஷயம்தான் ஜோக்கில் இருக்கும். கவுண்டமணி - செந்தில் நகைச்சுவையில் பிரச்சினை பேசப்படுகிறதா?

அ.க. : விவேக் பேசுகிறாரே?
மதி : கலைவாணருக்குப் பிறகு விவேக் புது முயற்சி செய்கிறார். அது, நன்றாக 'கிளிக்' ஆகிவிட்டது. கார்ட்டூன் என்பது ஏற்கெனவே காயப்பட்டவருக்கு மன ஆறுதல் தரும் முயற்சி.

அ.க. : உங்கள் கார்ட்டூன்களில் இருக்கும் செய்தி, உங்களுடையதா? உங்கள் நிறுவனத்துடையதா?
மதி : நூறு சதம் என்னுடையது. இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் எனக்கு முழுச் சுதந்திரம் உள்ளது.

அ.க. : அப்படியானால் தினமணி - எக்ஸ்பிரஸ் தலையங்கத்துக்கு எதிர்க்கருத்தை உங்கள் கார்ட்டூன் சொல்லியிருக்கிறதா?
மதி : தலையங்கத்துக்கும் கார்ட்டூனுக்கும் சின்னச் சின்ன வேறுபாடு இருக்கலாம். பெரிய வேறுபாடு இல்லை. தலையங்கம் எழுதுபவரின் கோணம் வேறு. என் கோணம் வேறு. பத்திரிகை அச்சாகி வெளிவந்த பிறகுதான் நான், தலையங்கத்தைப் பார்க்கிறேன். நான் இன்ன விஷயத்தைப் பற்றிக் கார்ட்டூன் போடவேண்டும் என்று இதுவரை எந்த நாளும் யாரிடமிருந்தும் குறிப்பு வந்ததில்லை.
கார்ட்டூனுக்கான தலைப்பு, சிந்தனை, படம் அனைத்தும் என்னுடையதே. சில சினிமாக்களின் கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம் அனைத்துக்கும் ஒருவர் பெயரே இருப்பது போன்றது. இது.

அ.க. : ஊழல் என்ற சொல்லில் பாம்புப் படம் வரைந்து அது, இந்தியாவை விழுங்குவதாகப் போட்டுள்ளீர்கள். "ரைசிங் சன்'' என்று ஸ்டாலினையும் உதயசூரியனையும் இணைத்துப் போட்டிருக்கிறீர்கள். கார்ட்டூனில் மொழியின் பங்கு என்ன?
மதி : சில கார்ட்டூன்களுக்கு அது ரொம்ப நல்லா அமையும். பாக்கெட் கார்ட்டூன்களில் மொழியின் வீச்சு அதிகமிருக்கும். பிரதான கார்ட்டூனில் படத்தில்தான் செய்தி இருக்கும்.

அ.க. : எக்ஸ்பிரசில் வரும் கார்ட்டூன்களுக்கு ஆங்கில வசனம் எழுதுபவர் யார்?
மதி : நான் தான்

அ.க. : "கழுதை தேய்ந்து கட்டெறும்பாவது' போன்ற கார்ட்டூன்களை ஆங்கிலத்தில் எப்படிக் கொடுப்பீர்கள்?
மதி : அதுமாதிரி கார்ட்டூன்கள், தமிழுக்கு மட்டும்தான். ஆங்கிலத்துக்கு வேறு கொடுத்துவிடுவேன்.
Image hosted by Photobucket.com

அ.க. : அப்படியானால் 'ரைசிங் சன்' கார்ட்டூனை அப்படியே ஏன் தமிழில் கொடுத்தீர்கள்? தமிழர்களுக்கு அது புரியும் என்று நினைக்கிறீர்களா?
மதி : பஸ், கார் என்றுதானே பேசுகிறோம். புரியும். புரியாவிட்டால் பக்கத்தில் இருப்பவரிடம் கேட்டுப் புரிந்துகொள்வார்கள். அதுவுமின்றி 'ரைசிங் சன்' படத்தில் ஸ்டாலினையும் வரைந்துள்ளேன். படத்தைப் பார்த்தாலே நான் சொல்வது புரிந்துவிடும். கூடுமானவரை புரியறா மாதிரிதான் போட முயற்சி செய்யிறேன்.

அ.க. : உங்கள் கார்ட்டூன்களில் நடுத்தர வயது மனிதர்களையே அதிகம் காட்டுவதேன்?
மதி : பாக்கெட் கார்ட்டூன்களில் மட்டும்தான் அப்படி இருக்கும். ஏனெனில், அவர்களுக்குத்தான் குடும்பம் சார்ந்த பிரச்சினைகள் அதிகமிருக்கு.

அ.க. : பிரச்சினைகளை நீங்கள், நடுத்தர வயதினரின் கோணத்தில் மட்டும்தான் பார்க்கிறீர்கள். ஒரு குழந்தையின் பார்வையிலோ, முதியோரின் பார்வையிலோ பார்ப்பதில்லை?
மதி : குழந்தைகளுக்குப் பிரச்சினை முழுமையாய்ப் புரியாது. பெரியவர்கள், அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்த்து இருக்கிறார்கள். நடுத்தர வயதினர்தான் பிரச்சினையை முழுமையாகச் சந்திக்கிறார்கள்.

அ.க. : குழந்தை வேண்டுமானால் பிரச்சினையைப் புரிந்துகொள்ளத் தவறலாம். 21 வயது இளைஞருக்குப் பிரச்சினை புரியுமே.
மதி : இளைஞரில் - மாணவரில் நூற்றுக்குப் பத்துப் பேருக்கு அந்தப் புரியும் தன்மை இருக்கலாம். ஆனால் நடுத்தர வயதினர் அனைவரும் பிரச்சினையைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள். அவர்களுக்குத்தான் எல்லாப் பிரச்சினையும் இருக்கு.
Image hosted by Photobucket.com

அ.க. : "புஷ் பின் லேடன்' கார்ட்டூனில் லேடன் முகத்தில் புஷ் புகைப்படத்தை வைத்தது ஏன்?
மதி : புஷ் முகத்தை வரைவதைவிட போட்டோவாக வைத்தால் எளிதில் புரியும் என்று அப்படிச் செய்தேன்.

அ.க. : புஷ் முகம், கார்ட்டூன் வரைய ஏற்றதாய் இல்லையா?
மதி : அப்படி இல்லை. இங்கு உள்ள வாசகர்களுக்கு அவர் முகம் பிரபலமானதில்லை. எனவே நினைவில் இருக்காது. இதுவரை நான் போட்டோவைப் பயன்படுத்தியது, அந்த ஒரே கார்ட்டூனில்தான். அப்படியும் பலர், 'பின்லேடனை நல்லாப் போட்டிருக்கீங்க' என்று சொன்னார்கள்.

அ.க. : காங்கிரஸ் என்ற விமானம், தரையில் மோதி மூக்குடைப்பட்ட பிறகு சோனியா காந்தி அதன் பைலட் பொறுப்பேற்றதாகப் போட்டுள்ளீர்கள். அதன்பிறகு காங்கிரஸ் 14 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளதே?
மதி : கார்ட்டூன், அன்றாட நிலைமையை மட்டுமே காட்டும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்வதற்கு நான் ஒன்றும் நாஸ்டர்டாம்ஸ் இல்லை.
Image hosted by Photobucket.com

அ.க. : 'பொது இடங்களில காதலிக்கறதுக்கும் தடை கொண்டுவரப் போறாங்களாம்' என்று நீங்கள் கார்ட்டூன் போட்ட மாதிரி, இப்ப அண்ணாநகர் கோபுரப் பூங்கா ரெய்டு மூலமா ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கு.
மதி : "பொது இடங்களில் காதலிக்கத் தடை' கார்ட்டூன், இரண்டு ஆண்டுக்கு முன் போட்டது. இப்படியும் நடக்கலாமோ என்று கிண்டலாகச் சொன்னது, பலது நடந்தது.

அ.க. : வேறு என்ன நடந்தது?
மதி : தி.மு.க.வில் பெரியார், அண்ணா, கலைஞர் மூவர் படமும் அடுத்தடுத்து வைப்பது, ரொம்ப பிரபலம். நான் அடுத்து, ஸ்டாலின் படத்தையும் வச்சு கார்ட்டூன் போட்டேன். ஆச்சரியம் என்னன்னா, விழுப்புரம் மாநாட்டில் அதே மாதிரி நால்வர் படத்தையும் போட்டு ஒரு பேனர் வைத்தார்கள். அது தினமணியில் போட்டோச் செய்தியாக வந்தது. கார்ட்டூனும் செய்தியும் ஒரே நாளில் வெளிவந்தன. எனக்கே மறுநாள்தான் தெரியவந்தது. இப்படி நடந்துவிட்டால், அதுகுறித்து மகிழ்ச்சியோ வருத்தமோ அடைவதில்லை. நான் ஜோதிடன் இல்லை.

அ.க. : கார்ட்டூனைப் பார்த்துட்டு உங்களுக்கு மிரட்டல் வந்துள்ளதா?
மதி : எதுவா இருந்தாலும் ஆசிரியருக்கு போன் பண்ணுவாங்க. அதனால் நான் தப்பித்துவிடுவேன். யாரையும் காயப்படுத்திவிடக் கூடாது என்பதே என் கொள்கை. ஒரு தலைவரின் கொள்கையையோ செயலையோதான் நான் விமர்சிக்கிறேனே தவிர தனி மனிதரை இல்லை.

அ.க. : கார்ட்டூனிஸ்டாக உங்கள் எல்லை எது?
மதி : நீதிபதி, ஜனாதிபதி, மதத் தலைவர்களைக் கார்ட்டூனினில் கொண்டுவருவதில்லை. மற்றவர்களின் தனிமனித வாழ்க்கையில் நான் தலையிடுவதில்லை.

அ.க. : ஓவிய உலகில் கார்ட்டூனிஸ்டுகள் மதிக்கப்படுகிறார்களா?
மதி : எனக்கு அது பற்றித் தெரியாது. நான் என் வேலையைச் செய்கிறேன்.
கார்ட்டூனிஸ்டாக நகைச்சுவை உணர்வு, ஓவியம் வரையும் திறமை, உலகத்தைப் பற்றிய அடிப்படை அறிவு என்ற மூன்று விஷயங்கள் தேவை.
இது ஓர் அரிய கலை. கடவுள் கொடுத்திருக்கிறார். இதைக் கொண்டு எவ்வளவு குஷிப்படுத்த முடியுமோ அவ்வளவு செய்கிறோம். அதற்கு மரியாதை கிடைக்கிறதா என்பதை எண்ணிச் செய்வதில்லை. 'கடமையைச் செய் பலனை எதிர்பாராதே' என்ற கீதை வாசகத்தைப் பின்பற்றுகிறோம்.


(அமுதசுரபி தீபாவளி மலர் - 2003)

No comments: