!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, June 29, 2005



கானல் காட்டில் கவிதைக் கருத்தரங்கம்

கொடைக்கானல் மலைத் தொடரில் கானல் காடு என்ற தோட்டப் பகுதியில் கவிதைக் கருத்தரங்கு ஒன்று, அண்மையில் நடந்தது. திசைகள் இயக்கமும் சிவகாசி பாரதி இலக்கியச் சங்கமும் இணைந்து ஜூன் 18, 19 ஆகிய நாட்களில் இதனை நடத்தின. மிகவும் இயற்கை எழில் சூழ்ந்த இந்தப் பகுதியில், மெல்லிய குளிரில், சுடாத வெய்யிலில் கவிதை குறித்து உரையாடினோம்.

பொன்னீலன் (மணிகட்டிப் பொட்டல்), தொ.பரமசிவம் (திருனெல்வேலி), பிரம்மராஜன் (தருமபுரி), திலகபாமா (சிவகாசி), தேவேந்திர பூபதி (மதுரை), ரெங்கநாயகி (ஆழ்வார் குறிச்சி), லட்சுமிஅம்மாள் (சிவகாசி), நித்திலன் (கோவை), பெரியசாமி (மதுரை), கண்ணன் (தருமபுரி), சிவக்குமார் (மதுரை), மதுமிதா (இராஜபாளையம்), பா.வெங்கடேசன் (ஓசூர்), த. பழமலய் (விழுப்புரம்), ஜெயச்சந்திரன் (விழுப்புரம்) பா.சத்தியமோகன்(நெய்வேலி), சென்னையிலிருந்து மாலன், இந்திரன், ஆர்.வெங்கடேஷ், வைகைச்செல்வி, கிருஷாங்கினி, இராதாகிருஷ்ணன், தேசபந்து ஆகியோருடன் நானும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டேன்.
யுகபாரதி, அய்யப்ப மாதவன் ஆகியோர் முதலில் வர இசைந்திருந்து, பின்னர் வரவில்லை.

நன்கு திட்டமிட்டு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒவ்வோர் ஊரிலிருந்தும் யார் யார், எப்படி எப்படி வருகிறார்கள், அவர்களுக்கான வாகன வசதி, அவர்களை எப்படி குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் ஒன்று கூட்டுவது, உணவு, உறையுள், பானங்கள்... என அவர்களுக்கான வசதிகள், நிகழ்ச்சிக்கான ஒழுங்குகள், பேசப்படவேண்டிய கருப்பொருட்கள், எதை எதை எவ்வளவு நேரம் பேசுவது என்பவை தொடங்கி, எழுவது, உறங்குவது வரை ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துக் கவனித்துச் செய்திருந்தார்கள்.

அறைக்குள் தூங்குவோருக்கு அதற்கேற்பவும் கூடாரத்தில் தங்குவோருக்கு அதற்கு ஏற்பவும் உதவத் தயாராய் இருந்தார்கள். உணவைப் பொறுத்தவரை சைவ / அசைவ விரும்பிகளுக்கு அவரவர்க்கு ஏற்ற உணவை வழங்கினர். அதுவும் மலைப்புறத் தோட்டப் பகுதியில் 'டாண் டாண்' என்று குறித்த நேரத்தில் உணவு வழங்கியது, உரையாடலுக்கு உதவியாக அமைந்தது. காலை, நண்பகல், இரவு என மூன்று வேளை உணவு மட்டுமின்றி, மணிக்கு மணி கொறிப்பதற்கும் ஏதாவது கொடுத்து, வயிற்றைக் குளிர வைத்துவிட்டார்கள். குளிர்ப் பகுதி ஆயிற்றே! வேண்டுவோருக்கு, காலையில் எழுந்ததும் குளிப்பதற்கு வெந்நீர் வழங்கினர். மிகவும் நடுக்கும் குளிர் இல்லை என்றாலும் வந்திருப்பவர்கள் மீதான அவர்களின் அக்கறை வெளிப்பட்டது.

திலகபாமாவின் பிறந்த ஊரான பட்டிவீரன்பட்டியில் ஜூன் 18 அன்று காலை செளந்திரபாண்டியனார் இலக்கியச் சந்திப்பு என்ற நிகழ்ச்சி நடந்தது. அதில் மாலன், பொன்னீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், தாம் பிறந்த நாடார் குலம் உயரப் பாடுபட்டு, பின்னர் அந்த நாடார் பட்டத்தைத் துறந்து, சாதி நல்லிணக்கத்துக்கு உழைத்த செந்திரபாண்டியனாரைப் பற்றி இருவரும் பேசினர். உள்ளூர்ப் பேச்சாளர்களும் கவிஞர்களும் கலந்துகொண்டனர்.

மதியம் அங்கிருந்து கிளம்பி, கானல் காட்டிற்குப் பயணித்தோம். மாலை போய்ச் சேர்ந்தோம். மலையும் காடுமான பகுதி வழியே நடந்து சென்றோம். இதுவரை பார்த்திராத ஏராளமான மரங்கள், செடிகொடிகள், கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து அளித்தன. அங்கு உலவிய அடர்த்தியான - கலவையான நறுமணம், இன்னும் நாசியில் நிற்கிறது.

முதலில் சுய அறிமுகமும் கவிதை வாசிப்பும் நிகழ்ந்தன. அதைத் தொடர்ந்து கவிதை, தற்காலக் கவிதை, கவிஞர்களிடம் வாசிப்புக் குறைவு, பொருள் புலப்பாடு, இருண்மை... எனப் பலவற்றைப் பற்றியும் கலந்துரையாடினோம். தனிக் கவிதை, பொதுக் கவிதை என்பது பற்றி உரத்த விவாதம் நிகழ்ந்தது. குறிப்பிட்ட கட்டத்தில் தனிக் கவிதையும் பொதுக் கவிதையாகிவிடும் என்ற கருத்து முன்வைக்கப்பெற்றது.

இரவு உணவிற்குப் பிறகும் விவாதம் தொடர்ந்தது. நள்ளிரவில் தொ.பரமசிவன் எப்படியோ வந்து சேர்ந்தார். அவரும் உரையாடலில் சேர்ந்துகொண்டார். படுக்கச் சென்ற சிலர், உரையாடலைக் கேட்டு மீண்டும் எழுந்து வந்தனர். பாலியல் சொற்களைப் பெண்கள் கையாளும் முறை குறித்து, பிரம்மராஜன் ஆதரவான கருத்துத் தெரிவிக்கவில்லை. "கலிங்கத்துப் பரணியின் காதல் பாடல்களில் காமம் மிதமிஞ்சி இருந்தாலும் அவை, கவிதைகளாக இருந்தன. இக்காலத்தவர் எழுதுபவை, கவிதைகளாக இல்லை" என்றார்.

காலையில் trecking என்று அழைக்கப்பெறும் மலைநடைக்குச் சென்றோம். இரவில் முன்பின்னாக உறங்கியதில் எல்லோரும் ஒரே நேரத்தில் இப்படி நடந்து செல்லவில்லை. நான் கொஞ்சம் பின்னதாகத்தான் நடந்தேன். காலையில் மெல்லிய குளிரில் நடந்தது, நல்ல அனுபவம்.

காலை உணவிற்குப் பிறகு, பேரா. தொ.பரமசிவம், இதுவரை கவிதை என்ற தலைப்பில் ஒன்றரை மணிநேரம் அருமையான உரை நிகழ்த்தினார். "ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒரு செவ்வியல் இலக்கியம் தலைமை இடத்தை வகித்தது", "மது என்ற ஒரு சொல்லைக் குறிக்கப் பல சொற்கள் உள்ளன. இது, தமிழர்கள் மதுவை எந்த அளவு பயன்படுத்தினார்கள் என்பதைக் காட்டுகிறது", "பண்பாடு மட்டுமின்றி மொழியும் பெண்களின் வழியேதான் தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச் செல்கிறது. பெண்கள் பயன்படுத்தாததால்தான் சமஸ்கிருதம் அழிந்தது".... போன்ற பல கருத்துகளைத் தெரிவித்தார். "சங்க காலத்துப் பாடல்களில் எட்டுத் தொகையை மட்டும் குறிப்பிட்டது ஏன்?" என்று உரைக்குப் பின் பழமலய் கேட்டார். பத்துப் பாட்டு, காலத்தால் சற்றே பிந்தையது என்ற கருத்து இருப்பதாகத் தொ.ப. கூறினார்.

அவரைத் தொடர்ந்து பிரம்மராஜன், ஐரோப்பியக் கவிதைகளுடனான தம் அனுபவங்களையும் தம்மைக் கவர்ந்த கவிஞர்களையும் தாம் மொழிபெயர்த்தவற்றையும் பற்றிச் சுருக்கமாகப் பேசினார். அவரை அடுத்து இந்திரன், ஆப்பிரிக்கக் கவிதைகளுடன் தமக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது, அவற்றை மொழிபெயர்த்தது எப்படி?, அவை எத்தகைய வரவேற்பைப் பெற்றன? என்று கூறிவிட்டு, தாம் மொழிபெயர்த்த ஒரு கவிதையையும் வாசித்தார்.

அதன் பிறகு, பாலுக்கும் அப்பால்: சமகாலக் கவிதைகள் என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. அதில் பல விமர்சனங்களை முன்வைத்தனர். வழக்கம்போல் திலகபாமா, வைகைச்செல்வி, மதுமிதா, ரெங்கநாயகி ஆகியோர் பால்மொழிகளைக் கண்டித்தனர். "எங்களைப் பலரும் ஒரு மாதிரியாகப் பார்க்கின்றனர்" என வைகைச்செல்வி குறிப்பிட்டார். "அது, அவர்களின் விடுதலைக்கான குரல் எனில் அதை முன்வைப்பதில் என்ன தவறு?" என இந்திரன் கேள்வி எழுப்பினார். மாலன் உள்பட பலரும், பால்மொழியானது கவன ஈர்ப்புக்கான கருவி, வணிகத்திற்கு உதவும் உத்தி என்ற கருத்துகளைக் கொண்டிருந்தனர்.

"பெண்களின் பால்மொழி, சமூகத்தின் சகல விதமான அடக்குமுறைகளுக்கும் (பாலியல் உள்பட) எதிரான ஆயுதம். மொழி, ஆண்களால் கட்டமைக்கப்பெற்றுள்ளது. அதை உடைக்கப் பெண்கள், பாலியல் சொற்களை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். பாலுணர்வை எழுதுவதைத் தவறாகக் கருதுகிற சமூகக் கண்ணோட்டத்திற்குப் பதிலடி கொடுக்கும் முயற்சியாகவும் இதைக் கருதலாம். இது இப்போதுதான் அரும்பு விட்டுள்ளது. இதற்கே இப்படி உணர்ச்சி வயப்பட்டால் பெண்கள், உண்மையிலேயே தங்கள் பாலுணர்வை வெளிப்படுத்தத் தொடங்கினால், அதை உங்களால் தாங்க முடியாது" என்ற கருத்தை நான் முன்வைத்தேன். கிருஷாங்கினியும் இக்கருத்தை ஆதரித்தார். பலரும் உரத்த குரலில், ஆவேசமாகக் கருத்துரைத்தனர். அனைவரும் தங்கள் கருத்தை முன்வைக்கும் தன்மையில் விவாதம் அமையவில்லை. "எனக்கு மனநிலை பாதிக்கப்பெற்ற மூன்று குழந்தைகள் இருந்தால் நான் கவிதை எழுதிக்கொண்டிருக்க மாட்டேன்" என்று கிருஷாங்கினி கூறினார்.

பெரும்பாலும் பெண் கவிஞர்களின் படைப்புகள் குறித்தே விவாதம் சென்றது. விக்ரமாதித்யன், மகுடேஸ்வரன் ஆகியோரின் பெயர்களைச் சிலர் குறிப்பிட்டாலும் விவாதமாக அது வளரவில்லை. எனினும் கவிதையைக் குறித்துப் பலரும் பல்வேறு கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்தவும் யார் யார் என்னென்ன கருத்துகள் உடையவர்கள் என்பதைச் சிறிது அறியவும் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் தங்கவும் நல்ல காற்றை நுகரவும் இந்த நிகழ்ச்சி, ஒரு வாய்ப்பாக அமைந்தது.

கவிதையை எவ்வாறு புரிந்துகொள்வது, கவிதைக் கலையின் நுணுக்கங்கள், உத்திகள் எனப் பல, இந்த நிகழ்வில் இடம்பெறவில்லை. பிரம்மராஜன், இந்திரன் போன்றோர், இந்தப் பணியைச் செய்வார்கள் என மாலன் நினைத்திருக்கலாம். ஆனால், அவர்கள் வேறு கோணத்தில் உரை நிகழ்த்தினர்.

பல நூறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளதால், எனக்கு ஒரு கருத்து உறுதிப்பட்டு வருகிறது. கவிதை போன்ற நுண்கலைகளைப் பேச்சின் மூலம் அல்லாது எழுத்தின் மூலம் அறிவதே சிறந்ததோ என்று தோன்றுகிறது. பேசும்போது கவிதைகளை அப்படியே மேற்கோள் காட்டுவது கடினம். வெறும் வாய்மொழியிலேயே அனைத்தையும் ஆற்றொழுக்காக, எதையும் விட்டுவிடாமல், முழுமையாகக் கருத்துரைக்கும் அளவுக்கு நம்மவர்கள் திறனை வளர்த்துக்கொள்ளவில்லை. அதற்கு அளப்பரிய நினைவாற்றல் தேவை.

திறந்த வெளியில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோர், ஒலிவாங்கி ஒன்றை அவசியம் வைத்திருப்பது நல்லது. திறந்த வெளி என்பதால் அதில் ஒலி இழப்பு அதிகம் ஏற்படுகிறது. 'நானும்' என்பது 'ஞானம்' எனச் சிலருக்குக் கேட்கிறது. வாக்கியத்தின் முடிவில் குரல் தேயும்போது, இறுதிச் சொற்களைச் சரியாகக் கேட்க முடியவில்லை. அறைக்குள்ளாவது ஒலிஇழப்புக் குறையும். பதிவு செய்வதிலும் ஒவ்வொருவரும் ஒவ்வோர் ஒலிஅளவில் பேசுவதால் பொது இடத்தில் வைத்திருக்கும் ஒலிப்பதிவுக் கருவியால் துல்லியமாக அவர் பேச்சைப் பதிய இயலாது. கழுத்துப் பட்டை ஒலிவாங்கி போன்றவை இருந்தால் இந்தப் பதிவு, இன்னும் சிறந்ததாக இருக்கும்.

வைகைச்செல்வியுடன் வந்த இராதாகிருஷ்ணன் என்ற வில்விஜயன், சுற்றுச் சூழல் கலைக்குழுவில் பணியாற்றி வருபவர். இவர், இரண்டு நாள்களும் 'மிமிக்ரி' என்ற பல்குரல் கலையின் மூலம் அபாரத் திறமையை வெளிப்படுத்தினார். மு.கருணாநிதி, வைரமுத்து, கமலகாசன், எம்.ஆர்.ராதா, ஜனகராஜ், எம்.ஜி.ஆர்., கிருபானந்த வாரியார்.. எனப் பலரின் குரலில் அன்றைய விவாதத்தில் பேசிய கருத்துகளுக்கு மறுமொழி போல் பேசியமை, அவரின் கவனிப்புக்கும் நினைவாற்றலுக்கும் ஆற்றொழுக்குத் தன்மைக்கும் சான்றாக விளங்கியது.

இலக்கிய நண்பர்களின் அணுக்கத்துடன் கவிதை குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பாக, இந்நிகழ்வு அமைந்தது. அந்த மட்டில் இந்த நிகழ்ச்சி, வெற்றிதான். இதே போன்று சென்னைக் கடற்கரையில் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்தலாம் என்று மாலன் கூறியுள்ளார். இது தொடர்ந்தால், தமிழுக்கு நல்லது.

No comments: