!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, December 06, 2004

கவிதாயினி வத்ஸலா


கவிதை என்பது எது? விளக்க விளக்க விரியும் இக்கேள்விக்கு ஒரே சொல்லில் பதில் சொல்லவேண்டும் எனில் 'உண்மை' என்பேன். 'அவர் ஒரு கவிதையைப் போல் வாழ்ந்தார்' என்பதற்கு 'உண்மையாக வாழ்ந்தார்' என்றே பொருள்கொள்ள முடியும். எழுதுபவர், வேறொருவரின் விருப்பத்தை நிறைவேற்றவோ, பாராட்டுகளைக் குறிவைத்தோ, உலகாயத பயன்களுக்காகவோ எழுதும்போது, உண்மையிலிருந்து கவிதை விலகிச் செல்கிறது. நிகழ்வையோ, உணர்வையோ, அலங்காரங்களோடு உயர்வு நவிற்சியில் சொல்லும்போதும் இந்த விலகல் நிகழ்கிறது. முழு உண்மையை எந்தப் படைப்பும் வெளிப்படுத்திவிட இயலாது. உண்மைக்கு எவ்வளவு அருகில் அது இருக்கிறது என்பதே கவிதையின் சிறந்த அளவீடு.

அப்படியானால் உண்மை மட்டுமே கவிதையாகிவிடுமா? அதே உண்மை, உரைநடையிலோ, ஓவியத்திலோ, வேறு கலை வடிவத்திலோ, ஏன், செய்திப் பகுதியிலோ வருமாயின் அப்போது அதற்கு என்ன பெயர்? செய்திப் பகுதியில் வரும் ஒன்று, உண்மையாய் இருக்குமாயின் அதை உண்மையான செய்தி எனலாம். எப்போது உண்மையும் கலைநயமும் இணைகின்றனவோ, அப்போது கவிதை அங்கே புத்துயிர் பெறுகிறது.

கலைநயம் என்பது என்ன? செய்தியைப் போன்று நேரடியாக அது பேசக்கூடாது. நமது மனத்தைச் சுண்டி இழுக்கும் தன்மை அதற்கு இருக்கவேண்டும். எதிர்பாராத ஒரு புதிய கோணத்திலிருந்து அது வெளிப்பட வேண்டும். உடனடிப் பயன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன்னை நுகர்வோரிடம் அது வலிமையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இன்னும் பல முகங்கள், கலைநயத்திற்கு உண்டு. இந்தக் கலைநயத்தையும் உண்மையையும் ஒரு புள்ளியில் இணைப்பது, மிகக் கடும் சவால். ஏனெனில், ஒன்றைப் பிடிக்கும்போது மற்றொன்று நழுவிச் சென்றுவிடும். இச்சவாலைச் சமாளிப்பதற்காகத்தான் கவிஞருக்குக் கவிதா நீதி என்ற சிறப்புச் சலுகையை உலகம் வழங்கியுள்ளது.

இந்த அடிப்படையில் பார்த்தால், தமிழில் கவிதை என்ற பெயரில் உலவும் பலவற்றை நாம் இரக்கமின்றி நிராகரிக்க வேண்டி வரும். வெகு சிலவே கவிதையின் பெயரைக் காப்பாற்றும். வத்ஸலாவின் சில ஆக்கங்கள், கவிதையாகப் பரிசீலிக்கத் தகுந்தவை.

....இரண்டடித் தொட்டிக்குள் அடங்கினாலும்
நான் ஆலமரம்தான்.
...வேரை ஒடுக்கி, கிளையை ஒடித்து
என்னைத் தொட்டிக்குள் சிறைவைத்து
வளரவிடாது தடுக்கப்பட்ட
குட்டை மரமானாலும் நானும்
ஒரு ஆலமரம்.

...என் குட்டித்தனம்தான்
என் கவர்ச்சி.
அந்தக் கவர்ச்சியை ரசிக்க வருவர்
ஓராயிரம் பேர்.
ஒரு சிறுமி கேட்கிறாள்,
'இந்த குட்டை மரத்தை
ஏன் பூமியில் வளரவிடவில்லை?'
பதில் வருகிறது.

'அதற்கு வளர்ச்சிப் போதாது
பூமியில் வைத்தால் பிழைக்காது'
சிறுமி கைக்கொட்டிச் சிரித்தாள்,
'பூமியில் வைத்தால்தானே வளர முடியும்'
நான் இலையசைத்து
அவளை
ஆசீர்வதிக்கிறேன்.
'பெண்ணே நீ ஆலமரமாவாய்!'

இலக்கணப் பிழைகள் இதில் இருந்தாலும் கருப்பொருளாலும் வெளிப்பாட்டினாலும் இது, கவிதை என்ற தகுதியை அடைந்துவிடுகிறது.

நான்
சொத்தில்லா லக்ஷ்மி
கல்வியில்லா சரஸ்வதி
அச்சமுள்ள துர்க்கை
...நான்மாதவம் செய்துவிட்டேன்.
தவப்பயனை எப்படி அழிப்பது?
மங்கையராய்ப் பிறப்பதற்கே- நல்ல
மாதவம் செய்திட வேண்டு மம்மா


என்ற கவிமணியின் வரிகளை இவர், கடும் கோபத்துடன் புரட்டிப் போட்டிருக்கிறார்.

வந்து சேர்ந்தன
முன்னூற்றி இருபத்தி ஏழு கடிதங்கள்...
நான் பரிசளித்த மோதிரத்தை
ஒரு ஏழைபெண்ணிற்கு மொய்யெழுதிவிட்டதாக...
எல்லாவற்றையும்
திருப்பிவிட்டதாக
எழூதியிருக்கிறாய்.
எல்லாவற்றையுமா?
அன்றொருநாள்
என் கூந்தலில்
பட்டுத் தெறித்த மழைத்துளிகள்
உன்னில் ஏற்படுத்தியதே
அந்த சிலிர்ப்பு
..ஒரு சமயம்
நிலவை ரசிக்கையில்
சில்லிட்டுப்போன உன் கையை
என் கைக்குள் வைத்து
நான் அளித்தேனே
அந்த வெப்பம்
இப்படி விட்டுப் போன
சிலவற்றையும்
பட்டியல் போட்டு
திருப்பி விடு.

வத்ஸலாவின் பெரும்பாலான ஆக்கங்கள், சோக ராகம் பாடுபவை. இயலாமையும் ஆற்றாமையும் இவரைச் சினமூட்டியுள்ளன. தன் சோகங்கள், தன்னுடையவை மட்டுமல்ல; பெண் இனத்தின் மிகப் பெருஞ்சோகத்தின் ஓர் அங்கமெனப் புரிந்துகொண்டதாக எழுதியுள்ளார். ஆயினும் இவருடைய பல ஆக்கங்கள், வெறும் நிகழ்வாக, காட்சியாக நின்று விடுகின்றன. பிரச்சினைகளைச் சொல்லவேண்டும் என்ற முனைப்பு, கவித்துவத்தைக் கைவிட்டாலும் பரவாயில்லை என இவரை நகர்த்தியுள்ளது. எனினும் பல காட்சிகள், வலிமையான தாக்கத்தை ஏற்படுத்துவதை மறுக்க முடியாது.

...அம்மா சொன்னதெல்லாம்
'சித்தி வருவா
அவகிட்ட சமத்தாயிரு
சீக்கிரமா பெரியவனாயிடு
ஸாரி கண்ணா, நா போயிட்டு வரேன்'
பந்தை உருட்டிக்கொண்டே
நான் தலையாட்டிய பிறகே
அவள் நாற்காலியை உதைத்தாள்
வயிற்றிலிருந்த என் தங்கச்சி பாப்பா அதிர
கயிறு கழுத்திலிறுக
எனக்கு கயிறு பிடிக்காது

- இப்படிப் பல காட்சிகள். சுருக்கமான சொற்களில் பரந்த வாழ்வைப் படம் பிடிப்பவை.

வத்ஸலா, 1943-இல் பிறந்து இயற்பியலிலும் கணிப்பொறியியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கணிப்பொறி மையத்தில் 25 ஆண்டுகள், கணினிப் பொறியியலாளராகப் பணியாற்றியவர். நாற்பத்தெட்டாவது வயதில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதத் தொடங்கியவர். சுயம் என்ற கவிதைத் தொகுப்பைப் படைத்துள்ளார். இவருடைய வரிகளைக் குறிப்பிட்டு, 'ஒரு புதிய பெண் கவிஞரின் குரல் தெளிவாக ஒலிக்கிறது' என்கிறார், ஞானக்கூத்தன்.

வடசொற் கலப்பு, இலக்கணப் பிழைகள், வளவளப்பு போன்ற சில குறைகளைக் களைந்தால், இவர் , கவிதையின் மேலும் சில சிகரங்களைத் தொட முடியும்.

No comments: