!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> எதிர்ப்பைக் காட்ட, காலணியை வீசலாமா? ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, April 14, 2009

எதிர்ப்பைக் காட்ட, காலணியை வீசலாமா?

07.04.2009 அன்று தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கியச் செய்தியாளர் ஜர்னைல் சிங், தன் காலணியை வீசியது, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது, 2008ஆம் ஆண்டு பாக்தாதில் அந்நாளைய அமெரிக்க அதிபர் புஷ் மீது இராக்கியத் தொலைக்காட்சிச் செய்தியாளர் முன்தாதர் அல்-ஜைதி தன் ஷூவை வீசியதோடு ஒப்பிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து 10.04.2009 அன்று ஹரியானா மாநிலம் குருஷேத்ரா தொகுதியில் தேர்தல் பேரணியின்போது காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் ஜின்டால் மீது காலணி வீச்சு நடந்தது. காங்கிரஸ் கொள்கைகளில் வெறுப்புற்ற ராம்குமார் என்கிற ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர், இந்தச் செயலில் ஈடுபட்டார்.

ஆந்திராவில் கடந்த வாரத்தில் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் மீது சிலர் செருப்பும் முட்டையும் வீசியுள்ளனர். சில மாதங்களுக்கு முன் சிரஞ்சீவியின் மீதும் முட்டை வீசப்பட்டது.

1984இல் இந்திராகாந்தி படுகொலையைத் தொடர்ந்து 2700 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, காங்கிரஸ் பிரமுகர் ஜெகதீஷ் டைட்லர் மீதும் குற்றம் சாற்றப்பட்டது. ஆனால், மத்திய புலனாய்வுக் கழகம், அவரைக் குற்றமற்றவர் எனக் கூறியது. இதற்குத் தன் எதிர்ப்பைத் தெரிவிக்கவே ஜர்னைல் சிங், தன் காலணியை வீசியதாகக் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் நடந்த போது ப.சிதம்பரம் நடந்துகொண்ட முறை, மெச்சத்தக்கதாய் இருந்தது. அந்த நிருபாரின் செயலைத் தாம் மன்னித்துவிட்டதாகவும் அவரை விட்டுவிடும்படியும் அவர் கேட்டுக்கொண்டார். அதன்படி அவர் மீது எந்த வழக்கும் பதிவாகவில்லை. மேலும் பத்திரிகையாளர் சந்திப்பை நாம் தொடர்வோம். உணர்ச்சிவசப்பட்ட ஒருவரின் செயல், ஒட்டுமொத்த பத்திரிகையாளர் சந்திப்பையும் கடத்திச் சென்றுவிடக் கூடாது என்று அவர் நிதானத்துடன் கூறினார்.

ஜர்னைல் சிங், 'தைனிக் ஜாக்ரன்' என்ற இந்தி நாளிதழில் பணியாற்றுகிறார். அந்த நாளிதழ், இந்த அவமானகரமான செயலுக்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

இதற்கிடையே ஜர்னைல் சிங்குக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அகாலி தளம் அறிவித்துள்ளது. கடந்த 24 ஆண்டுகளாக நீதி மறுக்கப்படுவதால் சீக்கிய சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தையே அவர் வெளிப்படுத்தினார். ஆதலால், அவருக்கு ரூ.2 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அகாலி தளத் தலைவரும், தில்லி கவுன்சிலருமான மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறினார். இந்தப் பணத்தை அளிக்க பல்வேறு சீக்கிய அமைப்புகள் முன்வந்துள்ளன என்றும் அவர் கூறினார். முன்பு புஷ் மீது வீசப்பட்ட ஷூவுக்கும் கோடிக்கணக்கில் விலை பேசப்பட்டது. இப்படியான ஊக்குவிப்புகள், மிகவும் கவலை தருகின்றன. நாளை இதே போக்கில் பலர் கிளம்புவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஆனால் உண்மையில் தன் செயலுக்காக ஜர்னைல் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார். ப.சிதம்பரத்தை அடுத்த முறை சந்தித்தால் மன்னிப்பு கேட்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். வீடியோவை நன்றாகப் பாருங்கள், என் இலக்கு சிதம்பரம் கிடையாது. திறந்த வெளியை நோக்கித்தான் நான் வீசினேன். என் எதிர்ப்பைக் காட்டவே அவ்வாறு செய்தேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தச் சமயத்தில் வேறொன்றும் நினைவுக்கு வருகிறது. முன்பு ஒரு சமயம் தந்தை பெரியார் மீது ஒருவர் ஒரு செருப்பை வீசினார். அதற்கு அவர் கோபப்படாமல், 'ஒரு செருப்பை வைத்து நான் என்ன செய்வது? இன்னொரு செருப்பையும் வீசுங்கள். பயன்படுத்திக் கொள்கிறேன்' என்றார்.

செருப்பு வீசுவது போல், முட்டை வீச்சும் போராட்ட முறைகளில் ஒன்றாக விளங்குகிறது. அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வந்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது அழுகிய முட்டை வீசப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களால், பல வாரங்கள் நீதிமன்றப் பணிகள் முடங்கின.

சத்யம் நிறுவன அதிபர் ராமலிங்க ராஜூ, நிதி மோசடியில் ஈடுபட்டுக் கைதான சமயம். 'ராஜூ மீது முட்டை வீசுங்கள்; ஐபாட் பரிசு பெறுங்கள்' என ஓர் இணைய தளம், புதிய இணையவழி விளையாட்டை அறிமுகப்படுத்தியது. அதன்படி கணினித் திரையில் ராஜூவின் படம் அசைந்தபடி தெரியும். அங்கு, ராஜூ மீது குறிபார்த்து முட்டை வீச வேண்டும். அதிக முறைகள் சரியாக வீசி, அதிகப் புள்ளிகள் எடுத்தால், ஐபாட் பரிசு கிடைக்கும். இது, குறி பார்த்து வீசும் திறனைக் கூர்மைப்படுத்தும் விளையாட்டுதான் என்றாலும், ஒருவர் தன் கோபத்தை வெளிப்படுத்தவும் வாய்ப்பாகிறது. இதிலும் எதிர்ப்பு காட்டப்படுகிறது. அநாகரிகமாகத்தான். ஆனால், முதல் ஆதாயம், முட்டை மிச்சமாகிறது.

எதிர்ப்பைக் காட்ட எவ்வளவோ வழிகள் இருக்கும்போது, காலணியையும் முட்டையையும் வீசலாமா? நாம் கற்ற கல்வி இதுதானா? நம் பண்பாடு, ஒழுக்கம், நாகரிகம் ஆகிய அனைத்தும் எங்கே போயின?

துணிவிருந்தால் எதிர்ப்பு வாசகத்துடன் கையில் ஓர் அட்டையை ஏந்தி நிற்கலாமே! சிலர் போல், 'டி' சட்டையில் வாசகத்துடன் வலம் வரலாமே! கருப்புச் சட்டை அணிவது முதல் வாயைத் துணியால் கட்டிக்கொள்வது வரை எவ்வளவோ முறைகள் இருக்கத்தானே செய்கின்றன. பிறகு ஏன் இப்படி கோழைத்தனமான, வன்முறையான, அநாகரிக எதிர்ப்பு முறைகள்?

இந்தச் சூழ்நிலையில் காந்திய போராட்ட முறைகளின் ஆழமும் அர்த்தமும் நினைவுகூரத்தக்கவை. அறப் போராட்டம், ஒத்துழையாமை இயக்கம், மறியல், உண்ணா நோன்பு, கையொப்ப இயக்கம், அன்னியப் பொருட்கள் புறக்கணிப்பு.... என ஒவ்வொன்றிலும் பண்பு இருந்தது. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் சிறையிலிருந்து வெளியே வந்த போது தன்னைச் சிறையில் அடைத்த அதிகாரி ஜெனரல் ஸ்மட்சுக்குத் தான் தைத்த செருப்பைப் பரிசாக அளித்தார்.

இன்னும் எவ்வளவு காலம் நாம் பின்னோக்கியே செல்வது?

======================================

நன்றி: சென்னை டைஜஸ்ட், ஏப்ரல் 10-26 2009

5 comments:

இரா.ஜெகன் மோகன் said...

/நினைவுகூரத்தக்கவை/

நினைவுகூ'ற'த்தக்கவை !?

முனைவர் அண்ணாகண்ணன் said...

இங்கு 'நினைவுகூரத்தக்கவை' தான் சரி.

நினைவுகூர்தல் வேறு; நினைவினைக் கூறுதல் வேறு.

நினைவுகூர்தல் என்பது, நினைவினைக் கூர்மைப்படுத்திக்கொள்வது (ஞாபகப்படுத்திக்கொள்வது).

நினைவு கூறுதல் என்பது, நாம் நினைத்ததை கூறுதல்.

கல்வெட்டு said...

//எதிர்ப்பைக் காட்ட எவ்வளவோ வழிகள் இருக்கும்போது, காலணியையும் முட்டையையும் வீசலாமா? நாம் கற்ற கல்வி இதுதானா? நம் பண்பாடு, ஒழுக்கம், நாகரிகம் ஆகிய அனைத்தும் எங்கே போயின?//

ஆகா..ஆகா..ஆகா
நம் கல்வி
நம் பண்பாடு
நம் நாகரிகம்
நம் ஒழுக்கம்...இதெல்லாம் என்ன?

சினிமா தியேட்டரில் எல்லாரும் வரிசையில்தான் நிற்கிறார்களா? நாகாரீகமா ரோட்டில் ஒண்ணுக்குப் போகிறார்களா? சாலை ஒழுங்குகளை பின்பற்றுகிறார்களா...?

இதில் எல்லாம் கோவம் வருவது இல்லை யாருக்கும்.

//துணிவிருந்தால் எதிர்ப்பு வாசகத்துடன் கையில் ஓர் அட்டையை ஏந்தி நிற்கலாமே! சிலர் போல், 'டி' சட்டையில் வாசகத்துடன் வலம் வரலாமே! கருப்புச் சட்டை அணிவது முதல் வாயைத் துணியால் கட்டிக்கொள்வது வரை எவ்வளவோ முறைகள் இருக்கத்தானே செய்கின்றன. பிறகு ஏன் இப்படி கோழைத்தனமான, வன்முறையான, அநாகரிக எதிர்ப்பு முறைகள்?
//

ம்ம்ம்ம்ம்ம்... நீங்கள் வாழும் நாடு மிகவும் நல்ல நாடு என்று நினைக்கிறேன்.
நாகரீகமாக எதிர்ப்பை தெரிவிக்க வழியுள்ளது என்று சொல்கிறீர்கள்.

எங்கள் நாட்டில், மாநிலத்தில் அப்படி இல்லை கண்ணன். கருணாநிதியின்(ஜெயலலிதா/சோனியா...என்று போட்டுக் கொள்ளவும் வசதிப்படி) கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க அவர்கள் வரும் வழியில் அல்லது பொதுக்கூட்டம் நட‌க்கும் இடத்தில் கறுப்புக்கொடியோ அல்லது விமர்சன வாசகங்களோ எழுதிய அட்டையை பிடித்துக் கொள்ள எந்த அனுமதியும் கிடையாது. ஒன்று போலிசால் தூக்கி எறியப்படுவீர்கள் அல்லது கழக (அல்லது தேசிய அல்லது உடன்பிறப்பு அல்லது இரத்தம் என்று வசதிப்படி போட்டுக் கொள்ளுங்கள்) அசிங்கப்படுவீர்கள்.

****

சமூகப்பண்புகள் தலைவனிடமும் இல்லை, தொண்டனிடமும் இல்லை, சாதாரண மக்களிடமும் இல்லை. எதற்கு உணர்ச்சிவசப்பட்டு //நாம் கற்ற கல்வி இதுதானா? நம் பண்பாடு, ஒழுக்கம், நாகரிகம் ஆகிய அனைத்தும் எங்கே போயின?// டென்சன் ஆகிறீர்கள் :‍-)))

Anonymous said...

என்ன legalese ஆ ?

அவர் கருப்பு சட்டை அணிந்து வன்திருந்தால் ஜகதீஷ் டைட்லரை தேர்தலில் நிற்பதில் இருந்து தடுத்திருப்பார்களா?

சிலருக்கு லேசா சொன்னா புரியும். சிலருக்கு அதட்டி சொன்னா புரியும். சிலருக்கு மண்டையில் ஓங்கி குட்டினால் தான் புரியும்.

மரமண்டையாக இருந்தது யாருடைய தவறு?

pinnoottam said...

காறித் துப்புவதும் காலனியை வீசுவதும் கணிணி யுகத்திலும் மாறாத கருத்துரிமை