!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> செல்பேசிக்குள் ஒரு நூலகம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, April 30, 2009

செல்பேசிக்குள் ஒரு நூலகம்

செல்பேசியைப் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்துவது பழங்கதை. அதைக் கொண்டு செய்தி அனுப்பலாம். படம் பிடிக்கலாம். வானொலி கேட்கலாம். தொலைக்காட்சி பார்க்கலாம். இணையத்தில் உலாவலாம். பல்வேறு கட்டணங்களையும் கட்டலாம். ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்..... இப்படி அதன் பயன்பாடுகள் விரிவடைந்துகொண்டே செல்கின்றன. அந்த வரிசையில் இதோ, இன்னொரு வசதி. செல்பேசியில் இனி புத்தகம் படிக்கலாம். அதையும் தமிழில் படிக்கலாம். ஒன்றிரண்டு புத்தகங்கள் அல்ல ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட ஒரு நூலகத்தையே உங்கள் செல்பேசியில் எடுத்துச் செல்ல முடியும். வேண்டிய இடங்களில் வேண்டிய நேரத்தில் படிக்க முடியும்.

பயணங்களின் போது செல்நூல்கள் பெரிதும் பயன்படும். எங்காவது யாருக்காவது காத்திருக்கும் போது இனி நேரத்தை வீணடிக்க வேண்டாம். உங்கள் செல்பேசியைத் திறந்து படிக்கத் தொடங்கிவிடலாம். பாதி படித்திருக்கும் போது, வேறு வேலை வந்துவிட்டதா? செல்பேசியை மூடிவிட்டு, பிறகு மீண்டும் அதே இடத்தைத் திறந்து படிக்கலாம். இதற்கு ஏற்ற பக்கக் குறிப்பீடு (புக் மார்க்) வசதியும் உண்டு. உங்கள் பார்வைத் திறனுக்கு ஏற்ப, எழுத்துகளின் அளவைப் பெரிதாக்கிப் படிக்கலாம். அதன் நிறங்களையும் மாற்றிக்கொள்ளலாம். விரலால் மீண்டும் மீண்டும் அழுத்தி, அடுத்தடுத்த பக்கங்களுக்குப் போக வேண்டுமே என்ற சோர்வா? கவலையை விடுங்கள். நீங்கள் விரும்பும் நேரப்படி, தானே பக்கங்கள் மாறும் வசதியும் இதில் உண்டு.

படிக்கச் சோம்பலாய் இருக்கிறதா? அதற்கும் வழி உண்டு. இனி புத்தகத்தைக் கேட்கலாம். ஆம், ஒரு பாட்டுக் கேட்பது போல் இனி புத்தகத்தைக் கேட்கலாம். செல்பேசியின் செவியிழையை (இயர் போனை) மாட்டிக்கொண்டு விசையை அழுத்தினால் போதும்.

இந்த புத்தகங்களைப் பெறுவது எளிதே. இணைய (இன்டர்நெட்) வசதியுடன் கூடிய செல்பேசி வைத்திருப்பவர்கள், www.fublish.com வலைத்தளத்திலிருந்து சுமார் 300 நூல்களை நேரடியாகத் தரவிறக்கம் (டவுன்லோட்) செய்யலாம். இணைய வசதி இல்லாமல் புளூடூத் (Bluetooth), இன்பிராரெட் (Infrared), டேடா கேபிள் (Data cable) வசதி உள்ளவர்கள் கணினி வழியே இந்தத் தளத்திற்குள் நுழைந்து தரவிறக்கலாம்.

நுண்சில்லிலும் (Memory chip) நூல் பொதிகளைப் பெறலாம். 'சீட்' (SEED) என்ற பெயரில் ஒரே நுண்சில்லில் ஆயிரம் புத்தகங்கள் கிடைக்கின்றன. விலை, ரூ.499 மட்டுமே. இதில் தொல்காப்பியம், திருக்குறள், பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் மேற்கணக்கு நூல்கள், கம்ப ராமாயணம் முதல் தற்கால இலக்கியம் வரையிலான 600 தமிழ் நூல்களும் 400 ஆங்கில நூல்களும் உள்ளன. பத்து ஒலி நூல்களும் உள்ளன. இந்த நுண்சில்லை 27.1.2009 அன்று வேலூரில் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் அதன் வேந்தர் ஜி.விஸ்வநாதன் வெளியிட்டார். இத்தகைய முயற்சி, இந்தியாவிலேயே தமிழில்தான் முதல் முறையாக நடந்துள்ளது.

இதற்கடுத்து, ராஜேஷ்குமாரின் நாவல்கள் அனைத்தும் செல்நூல்களாக உருவாக்க முயன்று வருகிறார்கள். தமிழ், ஆங்கிலம் தவிர மலையாளத்திலும் செல்நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல மொழிகளிலும் இந்த வசதியை விரிவாக்கத் திட்டமிட்டு வருகிறார்கள்.

இந்த வசதிகளை எல்லாம் கண்டறிந்து, மேம்படுத்தி, தமிழில் அறிமுகப்படுத்தி இருப்பவர், கணேஷ்ராம் (30). உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த இவர், இளங்கலை வணிகவியல் பட்டதாரி. தன் சொந்த முயற்சியின் பேரில் கணினி மென்பொருள், வன்பொருள் தொழில்நுட்பங்களைக் கற்றவர். புதிய கண்டுபிடிப்பாளரை அடையாளம் காணும் திட்டத்தின்கீழ் தேர்வுபெற்ற இவர், செல் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தினார். இவருடைய முதல் வணிகரீதியான படைப்பாக, ஆயிரம் நூல்களுடன் 'சீட்' (SEED) என்ற நுண்சில் வெளியிடப்பட்டது. இவருடைய மொபைல்வேதா (Mobilveda) நிறுவனம், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் அடைகாப்பு மையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

கணேஷ்ராமின் முயற்சிகளை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பாராட்டியுள்ளார். 14.4.2009 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின் போது, கணேஷ்ராமுக்கு அவர் கேடயம் வழங்கியுள்ளார்.

கணேஷ்ராமின் முயற்சிகள், பலரது கவனத்தையும் கவர்ந்து வருகின்றன. இவருடைய தொழில்நுட்ப சேவைகளை விகடன் குழுமம் பயன்படுத்தி வருகிறது. தன் செல்நூல்களை ஊர்தோறும் விற்க, பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகிறார்.

அடுத்து, இணையம் நுழையாத கிராமங்களிலும்கூட செல்பேசி வழியே ஒலி-ஒளி வசதியுடன் அடிப்படைக் கல்வியை வழங்கும் வகையில் முன்னோடி முயற்சியை மேற்கொண்டுள்ளார். இந்தத் திட்டத்தின்படி தமிழ், ஆங்கில மொழிகளைக் கற்பிக்க வாய்ப்புண்டு.

புதிய சிந்தனை, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றுக்குக் கணேஷ்ராம், சிறந்த எடுத்துக்காட்டு. தொழில்நுட்ப ஆற்றலுடன், தொழில்முனைவுத் திறனுடன் சாதித்து வரும் இந்தத் தமிழ் இளைஞரை நாம் கொண்டாடி வரவேற்போம்.

==============================

நன்றி: சென்னை டைஜஸ்ட், ஏப்ரல் 17, 2009

No comments: