!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, December 09, 2005

கண்ட நாள் முதல் - திரை விமர்சனம்

பிரசன்னாவுக்கும் லைலாவுக்கும் குழந்தைப் பருவத்தில் இருந்தே மோதல். அந்த வயதில் லைலா, பிரசன்னாவின் கன்னத்தைக் கடித்துக் காயப்படுத்தி விடுகிறார். அந்த மோதல், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரிப் பருவத்திலும் தொடர்கிறது. பாட்டுப் போட்டிக்கு வந்த லைலாவைத் தற்செயலாக நாய்வண்டியில் அழைத்துவருவதும் சிறப்பாகப் பாடிய அவருக்கு ஆறுதல் பரிசு தந்து வெறுப்பேற்றுவதும் சுவையான காட்சியமைப்புகள்.

பிரசன்னாவின் நண்பர் கார்த்திக் குமார், அமெரிக்காவில் பணியாற்றுகிறார். அவருக்காகப் பெண்பார்க்க வரும் பிரசன்னாவுக்கு திடீர் அதிர்ச்சி. அங்கு நின்றவர், லைலா. அந்தப் பெண் வேண்டாம் என்று பிரசன்னா வத்தி வைத்துப் பார்க்கிறார். ஆனால், அது பத்திக்கொள்ளவில்லை. கார்த்திக்கைக் கவிழ்ப்பதற்காக லைலா, சாந்த சொரூபியாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறார். அதை உடைத்து, லைலாவின் முரட்டுத்தனத்தையும் பிடிவாதக் குணத்தையும் வெளிப்படுத்த பிரசன்னா முயல்கிறார். அந்தக் காட்சிகள் அருமையாக வந்துள்ளன.

லைலாவுடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் கார்த்திக், அந்தத் திருமணம் வேண்டாம் என்று அமெரிக்கா சென்றுவிடுகிறார். இப்பவே எனக்காகச் சாந்தமாக நடிக்கும் இவள், வாழ்க்கை முழுவதும் எப்படி ஹானஸ்ட்டாக இருப்பாள்? என்ற கேள்வி கேட்டதோடு அவளுக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி இல்லை என்கிற போது, அமெரிக்க ஆணின் பிரதிநிதியாகவே கார்த்திக் நிற்கிறார்.

கார்த்திக் நகர்ந்ததும் லைலாவின் தங்கை, தன் காதலனுடன் ஓடிப் போகிறாள். அதைக் கேட்டு லைலாவின் அம்மா(ரேவதி), மயங்கி விழுகிறார். அந்த நேரத்தில் பிரசன்னா, ஓடி வந்து உற்ற வழிகளில் எல்லாம் உதவுகிறார். லைலாவின் மனத்தில் இடம் பிடிக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். ஆனால், வெளியே சொல்லிக்கொள்ளவில்லை. இருவருக்கும் ஈகோ. அவன் / அவள் முதலில் சொல்லட்டும் என்று இருவருமே நினைக்கிறார்கள்.

இந்த நேரத்தில் ஒரு திடீர் திருப்பம். கல்யாணம் வேண்டாம் என்று சென்ற கார்த்திக், திரும்பி வந்து லைலாவைப் புரிந்துகொண்டதாகவும் அவளைக் கல்யாணம் செய்துகொள்ளப் போவதாகவும் கூறுகிறார். முதலில் சண்டை போட்டுக்கொண்டு, இப்போது காதலித்துக்கொண்டிருக்கும் பிரசன்னாவும் லைலாவும் என்ன செய்கிறார்கள்? அதுதான் படத்தின் இறுதிக் கட்டம்.

படம், மிக இயல்பாக இருக்கிறது. அநாவசிய சண்டைக் காட்சிகள், நகைச்சுவைக்கு எனத் தனி டிராக், சென்டிமென்ட், என எதுவும் இல்லை. குறும்பும் கேலிப் பேச்சும் ஜாலிப் பேச்சுமாகப் படம் இளமைத் துடிப்போடு இருக்கிறது.

பிரசன்னா, ஜெயராமின் தம்பி போல் இருக்கிறார். மிகவும் பொறுப்போடு நடித்திருக்கிறார். ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் பிரகாஷ்ராஜின் நடிப்புப் பாதிப்பு தெரிகிறது. தெனாலி படத்தில் ஜெயராம், கமலை விரட்டச் செய்த முயற்சிகள் நினைவுக்கு வருகின்றன. மற்றபடி தூள் கிளப்பியிருக்கிறார். லைலாவைப் பழிவாங்க அவர் போடும் திட்டங்கள் சுவாரசியமாக உள்ளன.

லைலா, விளையாட்டுப் பெண்ணாகக் கலக்கியிருக்கிறார். பிரசன்னாவே சொல்வதுபோல் அவள் சிரிக்கும் போது விழும் கன்னக் குழி மிகவும் அழகாக இருக்கிறது. கோபத்திலும் அவர் அழகாகத்தான் இருக்கிறார்.

'கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி' என்ற தாமரையின் முதல் பாடலே, உருக்குகிறது. மென்மையான இசையால் யுவன்சங்கர் ராஜா வருடி விடுகிறார். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, படத்தோடு ஒன்றவைக்கிறது. ஈ. ராமதாசின் வசனம், தனியே துருத்திக்கொண்டு இல்லாமல் அந்தந்தப் பாத்திரங்களோடு ஒத்துப் போகிறது. தோட்டா தரணியின் கலையமைப்புகள், சிறப்பு. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர், பிரியா வி. இவரை அறிமுக இயக்குநர் என்றே சொல்ல முடியாத அளவுக்குப் படம் இயல்பாய், துடிப்பாய், இளமையாய் உள்ளது.

பிரகாஷ்ராஜ், படத்தின் தயாரிப்பாளர். இளைஞர்களின் மீதும் புதிய திறமையாளர்களின் மீதும் அவர் வைத்துள்ள நம்பிக்கை பாராட்டத்தக்கது. பொழுதுபோக்கை நோக்கமாகக் கொண்டிருந்தாலும் அதிலும் இவ்வளவு அழுத்தமான படத்தைக் கொடுத்ததற்காக அவரையும் இயக்குநரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். தான் தயாரிக்கும் படம் என்பதால் தானே நடிக்கவேண்டும் என்று நினைக்காமல் மற்றவருக்குச் சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்.

'அதிகாலை காஃபி போல அழகான சினிமா' என்ற அடைமொழியுடன் இந்தப் படம் வந்திருக்கிறது. உண்மையிலேயே காஃபி சூடாக, சுவையாக இருக்கிறது.

நன்றி: தமிழ்சிஃபி

No comments: