!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மூன்றாம் ஆண்டில் தமிழ் பிரவாகம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, May 02, 2009

மூன்றாம் ஆண்டில் தமிழ் பிரவாகம்

தமிழ் பிரவாகம் குழுமம் தொடங்கி, மே 1, 2009 அன்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதை இப்படிச் சொல்வதை விட, மே 2 அன்று மூன்றாம் ஆண்டினுள் நுழைகிறது எனலாம். தொடக்கம் எனும்போது, இன்னும் நேர்மறைத்தன்மை கூடுகிறது.

தமிழ் பிரவாகம், மே 1 அன்று வரை 571 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. 2008 மே முதல் 2009 ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 300 உறுப்பினர்கள் புதிதாக இந்தக் குழுமத்தில் சேர்ந்துள்ளனர். இவர்களுள் சுமார் 70 பேர்கள் மட்டுமே தீவிரமாக இயங்கி வருகிறார்கள். பிறர், மவுன வாசகர்கள். மொத்த உறுப்பினர்களுள் சுமார் 75 விழுக்காட்டினர், புனைபெயர்களில் உலவுகின்றனர். ஒருவரே இரு பெயர்களில் குழுமத்தினுள் நுழைவதும் நடந்துள்ளது.

பொதுவாக இந்தக் குழுமம், தமிழ்ச் சமூகம், நட்பு, இலக்கியம் ஆகியவற்றிலான இடுகைகளை அதிகம் பெற்றுள்ளது. அந்த வகையில், 'இக் குழுமம் முழுக்க முழுக்க நட்பு ரீதியிலும் இலக்கியப் பாதையிலும் மட்டும் பயணப்பட வேண்டுமென்பதே எம் நோக்கம்' என இந்தக் குழுமத்தின் அறிமுகத்தில் குறிப்பிட்டிருப்பதைக் கூர்மையாகப் பின்பற்றி வருகிறது.

ஏப்ரல் 2009 மாதத்தில் மட்டும் சுமார் 500க்கும் மேலான இடுகைகளைக் கண்டேன். ஈழம் தொடர்பான தலைப்புகள், அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடுகைகள், நடப்பு நிலவரங்களைப் பிரதிபலிக்கின்றன. அன்றாடச் செய்திகள் அல்லது சர்ச்சைக்கு உரிய செய்திகளை விவாதிக்கும் போக்கு இயல்பாக உள்ளது. கவிதை தொடர்பான இடுகைகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

தேனு தொடங்கிய கவியிழை என்ற இடுகைக்கு அதிகபட்சமாக 44 மறுமொழிகள் கண்டேன். கருத்துகளுடன் சளைக்காமல் மறுமொழிகள் இடுவதில் வல்லவர்களாக விஜி, தேனுஷா, தமிழ் வாலிபன், காமேஷ் போன்றவர்களைக் குறிப்பிடலாம். பல இடுகைகள், மறுமொழி ஏதுமின்றி உள்ளன.

மூத்த குடிமக்களான வெ.சுப்ரமணியம், சீத்தாம்மா, விசாலம்மா, தமிழ்தேனீ போன்றவர்கள் ஆன்மீகம், உலக அனுபவங்கள் பற்றிய நல்ல நல்ல பதிவுகளை எழுதியுள்ளார்கள். இவர்களோடு எல்லா வகையான பதிவுகளிலும் ஷைலஜா, ரிஷான், நிலாரசிகன் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளார்கள். அண்ணா, தம்பி, அக்கா, தங்கை, அம்மா, அய்யா என உறவுப் பெயர்களைக் கொண்டு அழைக்கிற உறுப்பினர்கள், குழுமத்திற்குள் குடும்ப உணர்வைக் கூட்டுகிறார்கள்.

பாவிலக்கணம், நிலாரசிகனின் கவிதைகள், தமிழினியன் செய்தித் தொகுப்புகள், தினம் ஒரு திருக்குறளுடன் காலை வணக்கம் போன்ற இழைகள் 2 வருடங்களாகத் தொடர்ந்து அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றன. ஈழத்துப் பிரச்சினை பற்றிய விவாதங்கள், அதிக மறுமொழிகளைப் பெற்றுள்ளன. "பொதுவாக குழுமத்தின் செயற்பாடுகள் இன்னமும் நான் எதிர்பார்த்த அளவிற்கு சூடு பிடிக்கவில்லை என்றே நினைக்கிறேன். ஆனால், தனிமனிதக் கீறல்கள் இல்லாத, நாகரிகமான விவாதங்களாயும், நட்பு ரீதியிலான பகிர்வுகளாயும் இருப்பது மனதுக்கு ஆறுதல் தருவதாய் இருக்கின்றது" என்கிறார் இந்தக் குழுமத்தின் நடத்துநர் சுவாதி.

உறுப்பினரின் பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றுக்கு வாழ்த்துரைப்பது உறவு மேம்பாட்டுக்குப் பெரிதும் உதவுகிறது. உறுப்பினர்கள், செய்திகள் பகிர்கிறார்கள்; ஐயங்களுக்குப் பதில் பெறுகிறார்கள்; அறிந்தோர், அறியாதோருக்கு வழி காட்டுகிறார்கள்; இன்பங்களின் போது கூடுதல் உவகை பெறுகிறார்கள்; துன்பங்களின் போது ஆறுதல் பெறுகிறார்கள். இவர்கள், வெவ்வேறு ஊர்களில், நாடுகளில் இருக்கிறார்கள். ஆயினும் குறிப்பிட்ட ஊருக்கு வரும்போது அங்கு நம் குழும உறுப்பினர்கள் யார் யார் இருக்கிறார்கள் எனத் தேடிப் பேசுகிறார்கள்; சந்திக்கிறார்கள்; உதவிகள் புரிகிறார்கள்.

பொதுவாக, ஒருவரே பல்வேறு குழுமங்களில் உறுப்பினராக இருப்பது இயல்பாக உள்ளது. ஒரே இடுகை, பல குழுமங்களில் வெளிவருவதையும் காண முடிகிறது. சிலர் குறிப்பிட்ட குழுமத்தினை மட்டுமே வாசிக்கிறார்கள். அதனால் ஒரே நேரத்தில் ஒரே வகையான செய்திகள், பல குழுமங்களில் இடம் பெறுகின்றன. வலைப்பதிவுகளுக்கு எப்படி ஒரு திரட்டி இருக்கிறதோ, அதே போல் அனைத்து இணையக் குழுமங்களின் இடுகைகளையும் பெறும் வகையில் ஒரு தனித் திரட்டியை உருவாக்கினால் அதற்குப் பயன் மிகுதியாய் இருக்கும்.

உறுப்பினர்கள் பலரும் தங்கள் பற்றிய சுய விவரங்களை முழுமையாகப் பகிர்ந்துகொள்வதில்லை. இதனால் யார், எவர் என முழுமையாக அறிய முடிவதில்லை. குழுமங்களின் மூலம் உறவு பலப்பட, உறுப்பினர்கள் தங்களுக்குள் நல்ல புரிதலைக் கொண்டிருக்க வேண்டும். இடுகை / மறுமொழியை இட்டவர் இன்னார் என்பது தெரியாத நிலையில் இட்டது என்ன என்பது மட்டுமே இங்கே முன்னிலை பெறுகிறது. இது, கருத்துக்கு முக்கியத்துவம் தந்து விவாதிக்கிறது என்ற வகையில் நல்லது. ஆனால், பலரும் முகமூடி அணிந்து, நம்பிக்கையின்மையுடன் உலவும் ஒரு பேட்டையாகவும் குழுமத் தளங்கள் அமைய வாய்ப்புண்டு.

குழுமங்களில் கூட்டுப் பிரார்த்தனை, ஒரு நல்ல தொடக்கம். இது, நம்பிக்கை என்ற குழுமத்தில் முதலில் தொடங்கப்பட்டது. வாரா வாரம் விஜி என்பவர் இந்த இழையைக் கொண்டு செல்கிறார். அவரே பிறகு, அதே இழையைத் தமிழ் பிரவாகம், முத்தமிழ் ஆகிய குழுமங்களிலும் தொடங்கிவிட்டார். இதன் மூலம் பலரின் உணர்வுகள், சில நிமிடங்களாவது ஒற்றை அலைவரிசையில் கூர்மையுற வாய்ப்புண்டு.

குழுமங்களில் சில விளம்பரங்களும் காணக் கிடைக்கின்றன. ஆயினும் தமிழில் அமைந்துள்ள பக்கங்களுக்கு கூகுள் ஆட்சென்ஸ் ஆதரவு இல்லை என்பதால் இதனால் பெரும் பயன் இருக்காது என்றே நினைக்கிறேன். ஆயினும் குழுமங்கள், மாற்று வழிகளில் லாபம் ஈட்டுவது குறித்தும் சிந்திக்கலாம். அதில் ஏதும் தவறில்லை. இதில் கூச்சம் இருக்குமானால், அத்தகைய லாபத்தினைப் பொதுப் பணிக்கு அளிக்கிறோம் என்றாவது கூறலாம்.

வலைப்பதிவுகளில் அரும்பியிருக்கும் வணிக முயற்சிகள், ஒற்றைக் கருப்பொருளில் கவனம், புத்தாக்க வடிவமைப்பு.... உள்ளிட்ட பலவும் குழுமங்களில் காணப்படவில்லை. ஆயினும், ஆர்குட் போன்ற சமுதாய ஊடகங்களை விட இணையக் குழுமங்கள், உறவு மேம்பாட்டுக்குப் பெரிதும் உதவுகின்றன. அன்பு என்ற நறுமணம் வீசும் பூந்தோட்டமாகக் குழுமங்கள் விளங்குகின்றன.

அத்தகைய குழுமங்களில் தமிழ் பிரவாகம், நட்புடன் சேர்த்துத் தமிழுணர்வையும் வளர்க்கிறது. தமிழரிடம் தமிழ் பேசுங்கள் என முழங்கி வருகிறது. சகலவிதமான பங்கேற்புகளையும் முழுக்க முழுக்கத் தமிழ் மொழி மூலமே கையாளும் இலக்கினை நோக்கிப் பயணிக்கிறது. மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் தமிழ் பிரவாகம், வாழ்க! வெல்க! மேலும் வளர்க!

எவ்வளவு இடுகைகள் என்பதை விட, எத்தகைய இடுகைகள் என்பது முக்கியம். அறிந்தவர், அறியாதோருக்குக் கை கொடுங்கள். தமிழ்த் தட்டச்சு கல்லாதோருக்குக் கற்பியுங்கள். தமிழில் பிழைகளைத் தவிருங்கள். கணினி / இணைய நுட்பங்கள் பரவட்டும். வலிவும் பொலிவும் மிக்க ஒரு புதிய அலை புறப்படட்டும். குடும்பம், நட்பைத் தொடர்ந்து, தொழில், வணிக, சமூக, அரசியல் உறவாகவும் வளரட்டும். தமிழ்ச் சமுதாயத்தின் மீது மகத்தான தாக்கம் செலுத்தட்டும்.

1 comment:

butterfly Surya said...

மேலும் மேலும் சிறப்புடன் திகழ / வளர வாழ்த்துகள்.