!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> முத்தத்தை ஏன் போட வேண்டும்? ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, October 06, 2009

முத்தத்தை ஏன் போட வேண்டும்?



தமிழ்த் திரைப் பாடல்கள், எங்கெங்கும் ஒலிக்கின்றன. தொலைக்காட்சிகளில், பண்பலை வானொலிகளில், தெருவோரத் தேநீர்க் கடைகளில், திருமண மண்டபங்களில்.... எனப் பல இடங்களிலும் இவற்றை நாம் கேட்கலாம்.

சில பாடல்களைக் கேட்கையில் அவ்வப்போது எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஆணும் பெண்ணும் காதலுடன் பாடுகையில் 'முத்தம் போடு', 'முத்தம் போடவா' என்றெல்லாம் கேட்கிறார்கள்.

சில படங்களின் பாடல் வரிகளைப் பாருங்கள்:

=====================================
அட kiss என்றால் உதடுகள் பிரியும்!
தமிழ் முத்தம் என்றால் உதடுகள் இணையும்!
தகராறு ஏது.. தமிழ் முத்தம் போடு!!

பல்லவி: பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு.
படம்: வசூல்ராஜா எம்பிபிஎஸ்

=====================================

நகுமோ ஹே சுகமோ
வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ ஹே சுகமோ
வெட்கம் ததுமோ

பல்லவி: நகுமோ
படம்: அருணாசலம்

==========================================

கன்னிப்பூவும் உன்னை பின்னிக்கொள்ள வேண்டும்
முத்தம் போடும் போது எண்ணிக்கொள்ள வேண்டும்

பல்லவி: ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
படம்: சின்னதம்பி பெரியதம்பி

==========================================

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட
ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது
நித்தம் வேண்டும் என்று வேண்டுதே

பல்லவி: எங்கே எனது கவிதை....
படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
வரிகள்: வைரமுத்து

==========================================

முத்தம் போடும் வேளையில் சத்தம் ரொம்ப தொல்லை
பூக்கள் பூக்கும் ஓசைகள் காதில் கேட்பதில்லை

பல்லவி: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே

==========================================

நீ சிக்கனத்தில் முத்தம் தரும் லக்கனத்தில் பொறந்தவனா
முத்தம் ஒண்ணுதானா
மோகம் தீர்க்க இவன் முத்தம் போடும் மெஷினா காம வைத்தியனா
நீ மேடு பள்ளம் கோடு போடும் ஓவியனா


பல்லவி: மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா சொல்லப்போற
மாட்டவா மாட்டு
படம்: தமிழன்

==========================================

ஆராரோ பாட ஆசைதான்.... அங்கங்கே குத்தும் மீசை தான்........ முத்தங்கள் போடும் ஓசை தான்.......மனதை மயக்கும்.....

பல்லவி: முதல் முதல் பார்த்தேன் உயிர் வரை சேர்த்தேன் உயிரே உன்னிள் நான் என்னைத் தேடினேன்..........

==========================================

பூமுத்துப் போல் தேன் முத்தம் ஒன்று
போட சொன்னாள்
..

பல்லவி:
நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
நடத்தும் நாடகம் என்ன
காதலால் கால்கள் பின்னப் பின்ன


படம் : சி.ஐ.டி.சங்கர்
பாடல் : கண்ணதாசன்

==========================================

இவை தவிர நிறைய பேரும் முத்தங்களைப் போட்டிருக்கலாம். என் கண்ணில் பட்டவை, காதில் விழுந்தவை இவையே.

தாராளமாக முத்தம் கொடுக்கட்டும். என் கேள்வியே, ஏன் இவர்கள் முத்தத்தைப் போட வேண்டும்?

முத்தம் இடலாம்; தரலாம்; கொடுக்கலாம்; பொழியலாம்; முத்தலாம்; தேடினால், இன்னும் நிறைய சொற்களும் கிட்டலாம். சந்தத்திற்காக எனில், முத்தம் பாடலாம்; நாடலாம்; கூடலாம்; ஏந்தலாம்; ஊறலாம்; சேரலாம்... எப்படியே நெடில் சொற்களும் நிறைய தோன்றலாம்.

ஆனால், முத்தம் போடுதல் என்பது அவ்வளவு உயர்வாக இல்லையே. மேலிருந்து ஒன்றைக் கீழே போடுவதையே போடு எனச் சொல்வது பெருவழக்கு. 'தேங்காயை மேலிருந்து வெட்டிப் போடு' எனலாம். அங்கிருந்து கீழே விழுந்தாலும் அதற்கு ஒன்றும் ஆகாது. மென்மையான பொருள்கள் என்றால் வைப்பதே நல்லது. போட்டால் உடைந்துவிடும். முத்தம் போன்ற மலரினும் மெல்லிய செயலைப் போடு, போடு என்றால் பொருந்துமா?

குப்பைத் தொட்டியில் தூக்கிப் போடு, கேரம் பலகையின் துளையில் காயைப் போடு... எனச் சில இடங்களில் போடு எனப் பயன்படுத்துவது பொருந்தும். ஆனால், இந்தக் காலத்தில் எல்லாச் சொற்களுடனும் போடு என்ற சொல் சேர்ந்துகொள்கிறது.

ஓட்டுப் போடு, திட்டம் போடு, சண்டை போடு, மொக்கை போடு, மருந்து போடு, கையெழுத்துப் போடு, கண்டிஷன் போடு, வழக்குப் போடு, ஊசி போடு, ஆட்டம் போடு, கூறு போடு, அசை போடு............ என எல்லாச் சொற்களுடனும் போடு சேர்ந்துகொள்கிறது. போட்டுத் தாக்கு என்றும் அப்படிப் போடு போடு போடு என்றும் பாடல்களே வந்துவிட்டன.

வாக்கு அளி, திட்டம் இடு, நிபந்தனை விதி, மருந்தினைச் செலுத்து என ஒவ்வொரு செயலுக்கும் தனித் தனியே சொற்கள் நம்மிடம் உண்டு.

மொழியாளுகையில் நாம் மிக மேலோட்டமான நிலையில் இருக்கிறோம். எந்தச் சொல்லையும் எதனோடும் சேர்க்கும் ஒரு வழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கியுள்ளோம். நீண்ட கால நோக்கில் இது ஆபத்தானது.

ஒவ்வொரு சொல்லுக்கும் இருக்கும் அழகினை உணர்ந்து பயன்படுத்தினால், மொழி இன்னும் கூர்மை அடையும். அந்தத் திசையில் நடை போடாமல், நடை பழகுவோம். முத்தத்தைப் போட்டது போது. இனி இடுவோம்; அதில் புதிய பயிர் நடுவோம்.

'முத்தமிழே, முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன' என ஒரு பாடல் கேட்டேன். அடடா! முத்தச் சந்தம் என்பதே அழகான பதமாக இருக்கிறதே! ஓசை தொடர்ந்து வரும்போதுதான் இசை ஆகிறது. தொடர்ச்சியான ஒத்த இசையே சந்தம். 'முத்தச் சந்தம்' என்பது தரும் பொருளழகைப் போற்றுகிறேன்.

==================================
படத்திற்கு நன்றி: சென்னை ஆன்லைன்

2 comments:

சென்ஷி said...

:-)

நல்ல ரொமாண்டிக் பதிவுன்னு நெனைச்சேன். இப்படி கேள்வி தூக்கிப் போட்டுட்டீங்களே?!

அன்புடன் நான் said...

அதெல்லாம் தெரியாதுங்க... நானும் முத்தம் போட்டிருக்கேன் வேனா போய் பாருங்க....
http://anbudannaan.blogspot.com/search/label/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

ஆனா உங்க கேள்வி மிக நியாயமானதுங்க.