!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> காந்திய விழாவில் பங்கேற்றேன் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, October 27, 2009

காந்திய விழாவில் பங்கேற்றேன்


தோ.தெ.திருமலை நினைவு பரிசுகள் & விருதுகள் வழங்கும் விழா, சென்னை தி.நகர், தக்கர் பாபா வித்யாலயத்தில் 26.10.2009 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு, புகழ்மிகு காந்தியத் தலைவர் பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் தலைமை வகித்தார்; மாணவர்களுக்குப் பரிசுகளையும் வழங்கினார்.

காந்திய மாமணி தோ.தெ.திருமலை நினைவாக ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்குக் காந்தி தொடர்பான தேர்வுகளைக் காந்தி கல்வி மையம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு காந்தியின் 'சத்திய சோதனை' புத்தகத்தைத் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு அளித்தது. அதனைப் படித்தபின் மாணவர்களுக்கு 31.8.2009 அன்று அந்த நூல் தொடர்பான தேர்வினை நடத்தியது. அதில் 16,243 மாணவர்கள் கலந்துகொண்டனர். இவற்றுள் சிறப்பாகப் பதில்களை அளித்த 13 மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பெற்றன. இந்தப் போட்டிக்கு அதிக மாணவர்களை அனுப்பிய பள்ளிகளுக்கும் கேடயங்கள் வழங்கப்பெற்றன.



இந்த நிகழ்வில் குறும்பட இயக்குநர் பி.சிவகுமார், தக்கர் பாபா வித்யாலயத்தின் செயலாளர் வி.கே.ஸ்தாணுநாதன் ஆகியோருடன் நானும் (அண்ணாகண்ணன்) கலந்துகொண்டேன்.

நான் என் உரையில், சத்தியத்தைப் பின்பற்றுவதில் காந்தி கொண்ட உறுதியை - பிடிவாதத்தை எடுத்துரைத்தேன். அவரது தோற்றமே எப்படி ஒரு செய்தியைச் சொல்கிறது என்பதைச் சுட்டிக் காட்டினேன். 21 நாள் தொடர்ச்சியான உண்ணாவிரதம் இருந்ததைப் போன்று ஒவ்வொரு முறையும் தம் உயிரைப் பணயம் வைத்து, சிக்கல்களைத் தீர்த்த தீரத்தைப் போற்றினேன். அவர் வழிகாட்டுதலை மீறி, மக்கள் வன்முறையில் ஈடுபட்ட போது, அதற்குத் தாமே பொறுப்பு ஏற்று, அதற்குத் தண்டனையாக 3 நாள் உண்ணாவிரதம் இருந்த உயர்ந்த தலைமைத்துவத்தைப் பாராட்டினேன். அவர் வலியுறுத்தியபடி இந்தியாவைப் பிரிக்காதிருந்தால், இன்றைய அநேக சிக்கல்களைத் தவிர்த்திருக்கலாம் என்பதையும் கோடிட்டுக் காட்டினேன்.

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், தீபாவளிப் பண்டிகையின்போது இரண்டே நாளில் ரூ.220 கோடிக்குத் தமிழ்நாட்டில் மது விற்பனை நிகழ்ந்து சாதனை படைக்கப்பட்டிருப்பது குறித்து, அவர் வேதனை தெரிவித்தார். காந்தியின் வழிகாட்டுதல்படி நடக்க வேண்டும் என்பதை அழுத்தமாக வலியுறுத்தினார்.

பி.சிவகுமார், காந்தி தொடர்பான தம் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த நிகழ்வுக்குக் காந்தி கல்வி மைய இயக்குநர் அ.அண்ணாமலை, தலைவர் என்.டி.இராதாகிருஷ்ணன், செயலாளர் எஸ்.பாண்டியன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

முந்தைய செய்தி: தோ.தெ.திருமலை நினைவு பரிசுகள் & விருதுகள் வழங்கும் விழா

இந்த நிகழ்வு தொடர்பான தினமணி, தினகரன் செய்திகளை இங்கே இணைத்துள்ளேன். அந்த இதழ்களுக்கு நன்றி.

No comments: