!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> யோசனை 7: திருமண மண்டப வாயிலில் வாழை மரங்கள் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, September 02, 2010

யோசனை 7: திருமண மண்டப வாயிலில் வாழை மரங்கள்

(அகவழி 7)

விழாக்களின் போது, வாயிலில் வாழை மரத்தினைக் கட்டுவது, தமிழர் வழக்கம். வீடுகளிலும் ஆலயங்களிலும் திருமண மண்டபங்களிலும் தொழிலகங்களிலும் இன்னும் விழாக்கள் நிகழ்கிற எல்லா இடங்களிலும் இது முக்கிய பங்கினை வகிக்கிறது.

திருமணம் நிகழ்கிற இடங்களில், கன்றுகள் ஈன்று, குலை தள்ளிய வாழையினைக் கட்டுவது, ஒரு குறியீடாகக் கருதப் பெற்றிருக்கலாம். இந்த வாழையினைப் போன்று, மணமக்களும் பிள்ளைகள் பெற்று, வாழையடி வாழையாக வாழ்வாங்கு வாழட்டும் என்ற வாழ்த்தாகவும் அது இருக்கலாம். நாளடைவில் இந்த வழக்கம், திருமணத்தினைத் தாண்டி, அனைத்துச் சுப நிகழ்ச்சிகளுக்குமாக நீண்டிருக்கலாம்.

குலை தள்ளிய வாழையினை கட்ட வேண்டும் என்ற மரபினை மீறி, ஆயுத பூஜையின் போது, இரு சக்கர வாகனங்கள், மகிழுந்து, பொதியுந்து.... உள்ளிட்ட வாகனங்களின் முகப்புகளின் வாழைக் குருத்துகளைக் கட்டி வைக்கிறார்கள். இது, முன்னோரின் நோக்கத்திற்கு மாறானது. இத்தகைய செயல், வாழையை வெறும் அலங்காரப் பொருளாக மாற்றிவிடுகிறது.

வீடுகள், தொழிலகங்களில் எப்போதாவது ஒரு முறைதான் விழா நிகழ்கிறது. ஆனால், திருமண மண்டபங்களில் நாள்தோறும் விழாக்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கே நாள்தோறும் புதிதாக வாழை மரங்களை வெட்டிக்கொண்டு வந்து கட்டி வைக்கிறார்கள். முதல் நாள் கட்டப்பெற்ற வாழை மரமானது, அடுத்த நாள் ஒரு குப்பையாக வீசப்படுகிறது. பெரும்பாலும் தெருவில் திரியும் மாடுகள், அவற்றின் இலைகளைத் தின்னுகின்றன.

இந்த வாழை மரங்களை அவை வளர்ந்த இடத்திலிருந்து வெட்டி, திருமண மண்டபத்திற்குக் கொண்டு வரும் காட்சியை நீங்கள் பல சமயங்களில் பார்த்திருக்கலாம். டிரை சைக்கிள் எனப்படும் மூன்று சக்கர மிதிவண்டிகளில் படுக்கை வாட்டில் வைத்துக் கட்டப்படும். வாழையிலைகள் கொண்ட தலைப்பகுதி, வண்டியை விட்டு வெளியில் தொங்கிக்கொண்டிருக்கும். அவை தரையில் தேய்ந்தபடி, புழுதியில் புரண்டபடி, அலங்கோலமாக வந்து சேரும். பிறகு, அவற்றைத் தூக்கிக் கட்டி, தண்ணீர் தெளித்து விடுவார்கள். இப்படித்தான் அந்த மங்கலச் சின்னம், எல்லோரையும் வரவேற்க வருகிறது.

வாயிலில் துவார பாலகர்களைப் போல நிற்கும் இவை, எவ்வளவு ரணங்களைத் தம்முள் கொண்டிருக்கும் என எளிதில் கணிக்கலாம். கால் வெட்டப்பட்டு, உடல் கட்டப்பட்டு, இலை கிழிந்து நிற்கிற இவை, ஒரு சடங்காக அன்றோ மாறிவிட்டன?

இதற்கு மாற்று வழி என்ன எனச் சிந்தித்தபோது, இந்த யோசனை பிறந்தது.

திருமண மண்டபங்களின் வெளியே, முதன்மை வாயிற் கதவின் ஓரத்தி்ல், நிலையாக இரண்டு வாழை மரங்களை நட்டு வளர்த்து விடலாமே! அவை எல்லா நாட்களிலும் மங்கலச் சின்னமாகத் திகழுமே! தன் கன்றுகளோடு அவை மகிழ்ந்து சிரிக்குமே! இதன் மூலம் அவற்றுக்கு விலை தந்து, வெட்டி, தரதரவென இழுத்துவந்து, வாயிலில் கட்டும் கொடுமையும் நிகழாது; அதற்கென நேரமும் பணமும் உழைப்பும் செலவிடவும் வேண்டாமே!

மாடுகள் வந்து தின்னாவண்ணம், ஒரு வேலியிட்டால் போதும். வாசல் தெளித்துக் கோலம் போடும்போதே, அதற்கும் சிறிது நீர் வார்த்தால் போதும். அல்லது, மண்டபத்தின் கால்-கை கழுவும் தண்ணீரையும் அவற்றில் சேரச் செய்யலாம். இதன் மூலம், கழிவு நீரை அப்புறப்படுத்தும் செலவிலும் சிறிது குறையும். முற்றிய பிறகு அந்த மரத்தின் இலை, பழம், நார்... என அனைத்தையும் மண்டபத்தினரே பயன்படுத்திக்கொள்ளலாம். இது குறித்து மண்டபத்தினர் சிந்திப்பார்களா?

நன்றி: சென்னை லைவ் நியூஸ்

================================
முந்தைய யோசனைகள்:

யோசனை 1 - மழிதகடுகளை என்ன செய்வது?

யோசனை 2 - தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்க

யோசனை 3 - வேட்டியில் சில திருத்தங்கள்

யோசனை 4 - கண்ணாடி ஜன்னலில், சூரியத் தகடுகள்

யோசனை 5 - உயர்ந்த கட்டடங்களின் வெளிப்புறங்களைத் தூய்மையாக்குவது எப்படி?

யோசனை 6 - நடக்க நடக்க மின்சாரம்

4 comments:

yasaru said...

சூப்பர் மாமு எப்படி இப்படி யோசிக்கிறிங்க...

கல்வெட்டு said...

ம்ம்..தவரங்கள் பாவம் என்ற ரேஞ்சில் யோசித்தால் அவை பாவம்தான். சாப்பிடும் பழம்,காய் ,தானியங்கள் முதல்...

அந்த பாவத்தை ஏற்றுக்கொண்டு அடித்ததாகச் சிந்தித்தால்...


1.குலை தள்ளிய வாழையைக் கட்டுவது மரபு

2.நீங்கள் சொல்லும் நிரந்தர வாழை மாதம் 2 என்று நடக்கும் விழாக்களுக்கு வைக்க முடியாது. அனைவரும் குலை தள்ளிய வாழையைத்தான் விரும்புவார்கள்.

3.பிளாஸ்டிக் ஸ்டிக்கர் கோலம் போல கடைசியில் நிரந்தர பிளாஸ்டிக் குலை தள்ளிய வாழையை வைத்துவிடும் அபாயம் உள்ளது.

4.பத்திரமாகக் கொண்டு வரலாம்.

5.விழா முடிந்தவுடன் அதை குப்பையில் மற்றவற்றுடன் எறியாமல் தாவரமாக கருதி மேலும் பயன்பறும் வகையில்....

அதன் தண்டு, பூ, காய் என்றும் ,
கிழிந்துபோன இலைகளை மாடு போன்ற விலங்குகளுக்கும்
மேலும் உள்ள பட்டைகளை நாருக்காகவும் (பூ) பயன்படும் வண்ணம் கொடுக்கலாம்....


சரிதான் ..


கல்யாணம் முடிந்து வீட்டுக்கு போகும் அவசரமும்...அடுத்த விழாவிற்கு பிரஷ்சா அடுத்த வாழை நட வேண்டிய பொறுப்பும் அவசரமும் இதைச் செயல்படுத்தவிடாது.. :-(((


வாழையை இப்படி பத்திரமாக மரியாதையாக அப்புறப்படுத்தி மேலும் பயன்படுத்தாவிட்டால் கல்யாணம் புட்டுக்கும் என்று டக்கால்டி சம்பிரதாயத்தை எந்த மடச்சாமிராவது சொன்னால் நல்லது நடக்கலாம். :-))))

.

a said...

//
கல்வெட்டு சைட்..

வாழையை இப்படி பத்திரமாக மரியாதையாக அப்புறப்படுத்தி மேலும் பயன்படுத்தாவிட்டால் கல்யாணம் புட்டுக்கும் என்று டக்கால்டி சம்பிரதாயத்தை எந்த மடச்சாமிராவது சொன்னால் நல்லது நடக்கலாம். :-))
//
நல்ல ஐடியா...

kargil Jay said...

superb... the truth both I and my brother felt.